Monday, June 12, 2017

குழந்தைகளும் குட்டிகளும் - ஒல்கா பெரோவ்ஸ்கயா

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

அப்பாவை பற்றிய நினைவுகள் என்று சில புகைமூட்டமான பிம்பங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. எனது எட்டாவது வயதில் அவர் எங்களை விட்டு பிரிந்தார். அப்பாவை பற்றிய நினைவுகளை மீட்பது இன்றும் எனக்கொரு மிகப்பெரிய சிக்கல். அசல் நினைவுகளும் புகைப்பட- செவிவழி செய்தி கற்பனைகளும் இணைந்து ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டது. அப்பாவின் நினைவுகளை மீட்க முயலும் போதெல்லாம் நினைவில் தவறாமல் வரும் நபர்கள், அவர் வளர்த்த ஜான்சியும், டாக்கியும், ப்ரூசியும், முயல்களும், புறாக்களும், கிளிகளும், மீன் தொட்டியும் தான். 


டாக்கியும் ப்ரூசியும் போமேரனியன் நாய் குட்டிகள். டாக்கி நோய்மை பட்டு மரண தருவாயை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், அதை காண சகிக்காமல் அப்பா அதை முப்பது கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள முந்திரி காட்டில் விட்டுவிட்டுவந்தார். அழுது கொண்டே இருந்தேன். ஓரிரு நாட்களுக்கு பின்னர் காலை எழுந்து வீட்டு வாசலுக்கு வந்த போது டாக்கி அங்கு படுத்திருந்தது. வயிறு மட்டும் சீறுவதும் ஒடுங்குவதுமாக இருந்தது. வாயிலிருந்து மஞ்சள் நிற வலனை. டாக்கி மரணத்தை தழுவுவதற்காக முப்பது கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள வீட்டு வாயிலை வந்தடைந்தது. ஜான்சி நான்கடி உயரத்திற்கு வளர்ந்த கொடுஞ்சிவப்பு கண்களும் காரிருள் திருமேனியும் கொண்ட டாபர் மேன் நாய், அப்பா சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமரும் அமைதியான அந்திப் பொழுதுகளில் இரண்டு கால்களை அப்பாவின் தோளில் புதைத்துக்கொண்டு சாய்ந்து உறங்கும் ஜான்சியின் சித்திரம் அப்பாவின் பிம்பத்துடன் பின்னி பிணைந்தது. அப்பாவின் மரணத்திற்கு பின்னர் ஒரு வாரம் உண்ணா நோன்பு இருந்து உன்னத நிலையை எய்தியது. நான் இப்போது எந்த பிராணிகளையும் வளர்ப்பதில்லை, மூர்க்கமான தூய அன்பை வெளிப்படுத்தும் அந்த ஜீவன்களின் பிரிவு நினைவெனும் பெரும் சுமையை கிடத்தி விட்டு செல்கின்றன.     

ஒல்கா பெரோவ்ஸ்கயா எழுதிய குழந்தைகளும் குட்டிகளும் எனும் நூலை வாசித்து முடித்த போது அப்பாவின் நினைவுகளும், சக ஜீவன்களுடன் நான் கழித்த பால்ய காலம் பற்றிய நினைவுகளும் கிளர்ந்து எழுந்தன. ஒல்காவின் இந்த நூலில் அவரது இளமை கால நினைவுகளை நம்முடன் பகிர்கிறார். அவர் குடும்பத்துடன் வளர்ந்த வளர்ப்பு பிராணிகளை பற்றி எழுதுகிறார்.

என்னிடம் உள்ள புத்தகம் 1976 ஆம் ஆண்டு ருசிய பதிப்பகமான முன்னேற்ற பதிப்பகத்தால் அச்ச்சிடப்பட்டுள்ளது. வழவழப்பான தாளில் அழகான ஓவியங்களுடன் புத்தம் புதிய புத்தகம் போல் மிளிர்கிறது. ருசிய எழுத்தாளர் ஒல்கா, எழுதியதை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் ருக்மிணி. கசாக்கிஸ்தான் அல்மா- அத்தா பகுதியில் இளமை காலத்தை கழித்த ஒல்கா, ‘எனது அருமை தாய் தந்தையரின் மங்காத நினைவுக்கு அஞ்சலியாய் இந்தப் பிள்ளை பருவ மனப்பதிவுகளை அர்ப்பணிக்கிறேன்’ என்று எழுதுகிறார். சிறுவர் இலக்கியத்தில் ஒல்காவிற்கு மிக முக்கியமான இடமுண்டு. ருசிய அரசியலின் களையெடுப்பு காலகட்டத்தில் இவரும் சிலகாலம் சிறையில் அடைக்கப்பட்டார் என்று இவரை பற்றிய விக்கி பக்கம் தெரிவிக்கிறது.  

ஒல்காவும் அவருடைய சகோதரிகளும் வளர்க்கும் குட்டிகளை பற்றியது தான் இதிலுள்ள ஆறு அத்தியாயங்கள். ஆறு அத்தியாயங்களும் வெவ்வேறு பிராணிகளை சூட்டுகின்றன. ஈஷ்கா – மீல்க்கா கழுதைகளும், சுபாரி எனும் குதிரையையும் வேண்டுமானால் நாம் வளர்ப்பு பிராணிகள் என கூறலாம். தியான்காவும், தோம்ச்சிக்கும்- இரண்டு ஓநாய்கள், மீஷ்கா- ஒரு மறால் மான், வாஸ்கா- ஒரு புலி, பிராந்திக்- ஒரு நரி- இவைகளை வழமையான வளர்ப்பு மிருகங்கள் என ஏற்றுக்கொள்ள முடியாது என்றே எண்ணுகிறேன்.  ஒவ்வொரு அத்தியாத்தையும் தனித்தனி சிறுகதையாக கொள்ளலாம். அல்லது ஒட்டுமொத்தமாக நினைவு குறிப்பாகவும் வாசிக்க இடமுண்டு. சில போது அம்சங்களை கவனிக்க முடிந்தது- காட்டு விலங்குகளை பொறுத்தவரை, ஒவ்வொரு குட்டியும் மனிதர்களுடன் பழகுவதில் தொடக்க்கத்தில் மிகுந்த தயக்க உணர்வு கொண்டவையாக இருக்கின்றன. உணவு வழங்கும் கரங்களையே அவைகள் முதலில் நேசிக்க தொடங்குகின்றன. மீஷ்கா எனும் மானுக்கு ஒல்காவின் அன்னை பாத்திரத்தில் பாலூற்றிவிட்டு விரல்களை சப்பக்கொடுப்பார், மெல்ல விரல்களை பாலுக்குள் இறக்கி அதற்கு உணவூட்டுவார். மனிதர்களுடன் பழக தொடங்குகின்றன, நேசிக்க பழகுகின்றன. அவைகளின் இயல்பு குணங்கள் வெளிப்படாமல் இருப்பதுவரை எந்த சிக்கலும் இல்லை. அவைகளின் இயல்பு குணங்கள் வெளிப்படும் போது, மனிதன் அவைகளை ரசிப்பதில்லை. அதை தொடர்ந்து கண்டிக்கிறான். அந்த கண்டனங்களை அவைகள் சிலவேளையில் மிக மூர்க்கமாக எதிர்கொள்கின்றன, சில வேளைகளில் குற்ற உணர்வில் கூனி குறுகுகின்றன. ஒரு எல்லைக்கு மேல், அது அவர்களுடன் வாழ முடியாத நிலைக்கு வரும்போது மரணத்தையோ அல்லது பிரிவையோ எதிர்கொள்கின்றன. எஞ்சி இருப்பது அவைகளை பற்றிய அன்பான நினைவுகள் மட்டுமே. 

மற்றொரு முக்கியமான கோணம், காட்டு விலங்குகளின் மீது அன்பிருந்தாலும், அவைகள் காட்சி பொருள்கள் தான். நரி வளர்ப்பதும், புலி வளர்ப்பதும், ஓநாய் வளர்ப்பதும் அவர்களுக்கு கொஞ்சம் பெருமை அளிக்கலாமே தவிர அவைகளால் அவர்களுக்கு பெரிய பயனேதும் இல்லை. ஒல்கா கழுதைகள் மீதும் சுபாரி (குதிரை) மீதும் அளவுகடந்த நேசம் கொண்டிருந்ததாக சொல்வதற்கு இது காரணமாக இருக்கக்கூடும். முட்டைகளை பதுக்கும் நரி, உண்டவுடன் பெருத்த வயிறுடன் செரிமானத்திற்காக தரையில் உருளும் ஓநாய், பனிச்சரிவை முன்னரே கண்டுகொண்டு பயணத்தை தவிர்க்கும் குதிரை என பிராணிகளை பற்றிய மிகக்கூரிய அவதானிப்புகள் புத்தகம் முழுவதும் நிரம்பி வழிகின்றன. அதேப்போல் வைன் அருந்தி உறங்க செல்லும் ஓநாய், மாமிச உருண்டைகளை உண்ணும் குதிரை, துண்டு பீடிகளை விரும்பி உண்ணும் மான், ஆல்பகொரா பழங்களை விரும்பி உண்ணும் ஓநாய், தலை முடி முழுவதும் எச்சில் படுத்தி சிகை அலங்காரம் செய்யும் புலி என அவர் அறிந்த விலங்குலகின் சில விநோதங்களையும் படம்பிடித்து காட்டுகிறார் ஒல்கா.      
தியான்காவும் தோம்சிக்கும் ஒல்காவின் தந்தையால் வேட்டைக்கு சென்ற இடத்திலிருந்து கொண்டு வந்து பரிசளிக்கப்பட்ட இரண்டு ஓநாய் குட்டிகள். தொடக்கத்தில் பழக தயங்கும் குட்டிகள் பின்னர் மெல்ல குழந்தைகளுடன் விளையாட தொடங்குகின்றன. நாய்களுடன் நட்புறவு கொள்கின்றன. வேறு வீடுகளில் சென்று கோழி பிடிக்கும் போது தோம்ச்சி சுடப்படுகிறது. தியான்கா போலீஸ் நாய்கள் குழுவில் கொண்டு விடப்படுகிறது. தியான்கா ஒரு பெண் நாய் என்றே கருதப்படுகிறது. தியான்கா ஓநாய்க்கும் – வூல்ஃப் போலீஸ் நாய்க்கும் பிறந்த வாரிசுகள் தலை சிறந்த நாய்கள் என அணிவகுப்பில் அங்கீகரிக்கப்படுகின்றன. மீஷ்கா துள்ளி குதித்தோடும் மான், கண்டதையும் மென்று தின்னும் பழக்கம் அதற்கு உண்டு. மெல்ல குருதியோடும் இரு மொட்டுக்கள் முளைத்து கொம்பாகிறது. கொம்புடைய சமயத்தில் மீஷ்காவின் நடத்தை முற்றிலும் வேறுவகையாக மாறிவிடும். இறுதியில் ஒரு பெரும் கலைமான் கூட்டத்துடன் தன்னை கரைத்துக்கொண்டது. 

குழந்தைகள் காசு சேர்த்து சந்தைக்கு சென்று தங்களுக்காக ஒரு பெண் கழுதையை வாங்கி வந்தனர். அது தான் ஈஷ்கா. குளிப்பதென்றால் ஈஷ்காவிற்கு சுத்தமாக பிடிக்காது. “தக்கடா பிக்கடா” நடை நடக்கும் ஈஷ்காவின் மீது சவாரி செய்தனர் குழந்தைகள். ஈஷ்கா ஈன்ற முதல் குட்டி இறந்துவிடுகிறது. அதன்பின்னர் அதற்கு பிறந்த குட்டி தான் மீல்க்கா. வேட்டைக்காரர் ஒருவர் தூக்கிக்கொண்டு வந்த குட்டிகளில் ஒன்றை ஒல்காவின் தந்தைக்கு பரிசளித்தார் அப்படி அவர்கள் இல்லம் புகுந்தது தான் வாஸ்கா. ஏனைய வேட்டை நாய்கள் குட்டியாக இருந்த போதே புலியை கண்டு அஞ்சி நடுங்கிய சூழலில் காட்டை பார்க்காத மாய்லிக் எனும் நாய் மட்டும் இயல்பாக வாஸ்காவுடன் பழகியது. யாரையும் தொந்திரவு செய்யாத சாது வாஸ்கா, பசித்தால் முற்றிலும் உக்கிரமாக மாறிவிடும். வாஸ்கா குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டு தோழன் ஆனது. பொம்மைகளை கவ்விக்கொண்டு ஓடும். குழந்தைகள் அந்த பொம்மைகளை மீட்பார்கள் மெல்ல வேலி தாண்டி வேட்டையாட தொடங்கியதும் சிக்கல் தொடங்குகிறது. ஒரு வேட்டை விலங்கு நம்முடன் இருக்கிறது எனும் பிரக்ஞை அப்போது தான் அவர்களுக்கு உதிக்கிறது. மிருக காட்சி  சாலைகளுக்கு மிருகங்களை விற்கும் வியாபாரியிடம் வாஸ்கா கொடுக்கப்படுகிறது. அந்த பிரிவு வாஸ்காவிற்கும் சரி குழந்தைகளுக்கும் சரி அப்பிரிவு கொடுமையாக இருந்தது. கூண்டுக்குள் அடைபட்ட வாஸ்கா, நன்றாகவே கவனிக்கப்பட்டது.  அவ்வப்போது குழந்தைகள் சென்று பார்த்துவிட்டு வருவார்கள். கூண்டுக்குள் அடைபட்டு பிரிவின் தவிப்பில் வாடிக்கொண்டிருந்த புலி ஒருநாள் இதைய கோளாறால் மரணமடைகிறது. 


சுபாரி எனும் குதிரை பற்றிய நினைவுகளையே இந்த நூலின் சிறந்த பகுதி என கூறலாம். சுபாரி கடுமையான குளிரில் தன் எஜமானருக்கு அடிபணியாமல் தன்னுயிரை பணையம் வைத்து அவரை காத்தது. மூன்று நாள் பனிப்பொழிவின் இடையில் சிக்கி உயிர்பிழைத்து மீண்டு வருகிறது. குழந்தைகளின் பராமரிப்பில் மரணத்தருவாயில் இருந்து மீண்டு எழுகிறது. குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிசெல்வதும், அவர்களை வண்டியில் இழுத்துக்கொண்டு சந்தைக்கு செல்லவும் அந்த உயர்ந்த குதிரை பயன்பட்டது. சுபாரியில் இருந்து குழந்தைகள் பலமுறை விழுந்து காயப்பட்டாலும், அவர்கள் ஒரு போதும் சுபாரியை அதற்காக குறை சொன்னதில்லை. இறுதியில் செயலிழந்து சுபாரியும் மரணத்தை தழுவுகிறது.   

    
கதைகளின் முக்கிய பாத்திரங்களான வளர்ப்பு பிராணிகளை தவிர்த்து மாய்லிக் எனும் நாய், கினோ தாய் எனும் குதிரை போன்றவைகளின் ஆளுமைகளும் ஆங்காங்கு வெளிப்படுகின்றன. நான்கு சகோதரிகளில், வயதில் மூத்த சகோதரிகளான ஒல்கா- சோன்யா மற்றும் இளைய சகோதரிகளான நத்தாஷா- யூலியா ஆகியவர்களுக்குள் இருந்த நெருக்கத்தையும், பிணைப்பையும் உணர முடிந்தது. கழுதையின் மீதிருந்து கீழே விழும் யூலியா பிறர் கேலியில் இருந்து தப்பிக்க சொல்லும் காரணம் “மேலிருந்து கீழே விழும்போது அப்படியொன்றும் வலிக்காது, ஏனென்றால் காற்று நம்மை தாங்கி பிடிக்கும்.” குழந்தைகளின் உலகில் மட்டுமே செயல்படக்கூடிய மாய விதிமுறைகள், பெரியவர்களுக்கு புரியாத தர்க்கங்கள் இருக்கக்கூடும் போல. குழந்தை பருவத்து காயங்கள் ஆருவதே இல்லை. இன்றும் நம்முடலில் எஞ்சி இருக்கும் ஏதோ ஒரு தழும்பு வழியாக அன்றைய தினத்து குறும்பின் நினைவுகள் வழிந்துகொண்டிருக்கின்றன.  கசாக்கிஸ்தான் பகுதிகளின் கால சுழற்சியை பற்றியும் இயற்கை வளங்களை பற்றியும் அற்புதமான விவரணைகளை அளிக்கிறார். அரசியல் சீற்றங்களில் பொங்கிக்கொண்டிருந்த ஒரு தேசத்தின் கொந்தளிப்பான காலகட்டங்களை கடந்து வாழ்ந்த ஒல்கா (1902-61), சிறுவர் சிறுமியர் பங்குபெறும் ஒரு மே தின அணிவகுப்பை தாண்டி எந்த சிறிய அரசியல் அசைவையும் பதிவு செய்யவில்லை.  ஒவ்வவொரு கதையை பற்றி இன்னும் கூட நுண்மையாக எழுத வேண்டும். 

மனிதன் vs மிருகங்கள், அல்லது மனிதன் vs இயற்கை என நாம் சந்திக்கும் முரண்பாடுகளை பற்றிய சிந்தனைகளை கிளருகிறது. சுவாமி விவேகானந்தர்,  மனிதன் இயற்கையை வென்றாக வேண்டும். இத்தனை நூற்றாண்டுகளாக மானுட வரலாறு என்பதே இயற்கையுடனான போராட்டம் தான் என்கிறார்.  காந்தி நேரெதிராக வேறொன்றை சொல்கிறார். இயற்கை ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்தி செய்யும் வல்லமை கொண்டது, ஒரு போதும் எந்த ஒரு மனிதனின் பேராசையையும் பூர்த்தி செய்ய அதனால் இயலாது என்கிறார். இந்த இரண்டு எதிரெதிர் கோணங்களிலுமே உண்மை இருப்பதாக நம்புகிறேன். இரண்டையும் முழுமையாக பின்பற்றுவது சாத்தியமா என்று தெரியவில்லை. இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையிலான ஒரு புள்ளி இருக்கக்கூடும், அதுவே இனி உலகை தழைக்க செய்யும் எனும் எண்ணம் வலுப்பெறுகிறது. அந்த மைய்ய புள்ளி என்பது வேளாண்மை சார்ந்த கிராம வாழ்க்கையாக இருக்கக்கூடும் என தோன்றியது. நாம் சாமானியமாக வளர்க்கும் நாய்களை பற்றியும், பூனைகளை பற்றியும், பசுக்களை பற்றியும் அவர் பேசவில்லை. ஓநாய், நரி, புலி, மறால் மான் ஆகியவைகளை பற்றி பேசுகிறார். வளர்ப்பு பிராணிகளுக்கு உரிய குணாதிசயங்கள் அற்ற இப்பிராணிகளை மனிதர்கள் எப்படி பழக்கி இயைந்து வாழமுடிகிறது? ஆதி மனிதன் இப்படித்தான் நாயையும், பசுவையும் பழக்கி இருப்பான் என்று தோன்றியது. ஒருவகையில் அவன் அப்படித்தான் இயற்கையை வெற்றிக்கொள்ள தொடங்கினான், ஆனால் அவன் அதன் மூலம் தான் இயற்கையுடன் இயைந்து வாழவும் தொடங்கினான். குழந்தைகளும் குட்டிகளும் 

ஒல்கா பெரோவ்ஸ்கயா
ருஷ்ய இலக்கியம்
சிறுவர் இலக்கியம்
தமிழ் மொழியாக்கம்

No comments:

Post a Comment