Thursday, April 9, 2026

வாழும் தமிழ் இலக்கிய விழா நினைவுகள்-1





A Church at NewYork 



நியூயார்க் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் ஏப்ரல் 3, 4 தேதிகளில் நிகழ்ந்த வாழும் தமிழ் இலக்கியத் திருவிழாவின் கதையை எங்கிருந்து தொடங்குவது? உடலும் மனமும் அமெரிக்க நேர இயைவிலிருந்து விடுபடவில்லை. அநேக தருணங்கள் மனத் திரையில் ஒடியபடி உள்ளன. எத்தனை முகங்கள், எத்தனை இடங்கள்! சரியாக சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவிற்கு விசா பெற தூதரகத்திற்கு சென்றதிலிருந்து இந்த கதையை தொடங்க வேண்டும். ஜனவரி 8 ஆம் தேதி எனக்கும் சாம்ராஜுக்கும் திருச்செந்தாழைக்கும் விசா நேர்காணல். சாம் எங்களுக்கு அரைமணிநேரம் முன்னரே சென்று விட்டார். நானும் செந்தாழையும் பையை லாக்கரில் வைத்துவிட்டு தூதரகம் சென்றோம். புத்தகங்கள், அழைப்பு கடிதம் , வங்கி விவரங்கள், ஆவணங்கள் என என்னென்ன கொண்டு வரவேண்டும் என ஒரு பட்டியலை மகேஷ்வரி முன்னரே அளித்திருந்தார். நான் ஒரே ஒரு கோப்பை தூக்கிக்கொண்டு வந்தால் செந்தாழை ஒரு பெரிய பை நிறைய தாள்களோடு  வந்தார். மூன்று மாத வங்கி வரவு செலவு கணக்கு மட்டும் முன்னூறு பக்கமிருக்கும். செந்தாழை தமிழில் நேர்காணல் கோரியிருந்தார் அவரை காத்திருக்கச் சொன்னார்கள். எதற்காக போகிறீர்கள், எங்கு தங்குவீர்கள், எத்தனை நாட்கள், யார் செலவு செய்கிறார்கள், நீங்கள் மருத்துவரா, என்னென்ன எழுதியிருக்கிறீர்கள், செலவை யார் ஏற்கிறார்கள் போன்ற கேள்விகளை கேட்டார்கள். நற்பயணம் வாய்க்கட்டும் எனும் வாழ்த்தோடு ஐந்து நிமிடத்தில் நேர்காணல் நிறைவடைந்தது.

வெளியே வந்து சுமார் ஒரு மணிநேரம் காத்திருந்தேன். திரு வேறு வழியாக வெளியே வந்துவிட்டாரோ என்று சந்தேகம் . வைப்பறை வரை சென்றுவிட்டு திரும்பினேன். ஒன்றேகால் மணிநேரத்திற்கு பின்னர் ஒருவழியாக களைத்துப் போய் வெளியே வந்தார். தனியாக அழைத்துச் சென்று விசாரித்திருக்கிறார்கள். நிறைய கேள்விகள், புத்தகங்களை  கேட்டிருக்கிறார்கள்.  ஆயுத பூஜைக்கு வைத்த பிரதியை பார்த்து இதென்ன சிகப்பு பொட்டு என்று சந்தேகப்பட்டு விசாரித்தார்கள். ‘நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை என்று எப்படியோ விளங்கவைத்துவிட்டார்’. இணையத்தில் பெயரை தேடி எழுத்தாளர் என்று உறுதிபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். 'விசா கொடுக்கலைன்னாலும் பரவால்ல வெளிய விடுங்கடான்னு தோணிருச்சு சுனில்' என்றார் அயர்ச்சியாக. ரம்யாவின் விசா நேர்காணலில் திருக்குறள் சொல்லச் சொல்லி கேட்டிருக்கிறார்கள் என்றறிந்தேன். பள்ளி காலத்தில் எப்போது அரசு பேருந்துகளில் ஏறினாலும் பேருந்தில் எழுதப்பட்டுள்ள திருக்குறள்களை வாசித்து மனப்பாடம் செய்யும் வழக்கம் உள்ளதால் சில குரல்கள் மனப்பாடமாக தெரியும். ஆனால் அந்த நேரத்தில் நினைவுக்கு வர வேண்டுமே. ஏதேனும் இரண்டு கண்ணதாசன் பாடல் வரியை சொன்னால் என்ன குறைந்துவிடும்! யாருக்கு தெரியும்! ஆனால் இவ்வளவு ஆர்வமாக கேட்கிறார் என்பதால் உள்ளதை சொல்லும் பொறுப்பு வேறு நமக்குண்டு. எப்படியோ பெரும்பாலோருக்கு விசா கிட்டியது. என்னைப் பொறுத்தவரை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சரிதான் எனும் மனப்பாங்கை கொண்டிருந்தேன். நான் பெரிதும் மதிக்கும் சில மூத்த எழுத்தாளர்களுக்கே மறுத்திருக்கிறார்கள் என்பதால் ஆனது ஆகட்டும் எனும் மனநிலையில் தான் இருந்தேன். விசா கிடைத்தபிறகு தான் புதிய நிலத்திற்கு செல்லப்போகிறோம் எனும் கிளர்ச்சி .தொற்றிக்கொண்டது. இந்த விழா அறிவிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலிருந்தாலும், விசா இழுபறி காரணமாக  யாரெல்லாம் வருகிறார்கள் என்பது குறித்து தெள்ளிய சித்திரம் என்னவோ கிளம்புவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னர் தான் கிட்டியது. 

Departure from Chennai

  கத்தார் ஏர்வேஸில் பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்தார்கள். போர் காரணமாக அதை ரத்து செய்துவிட்டு எல்லோருக்கும் வேறு வேறு விமான வழித்தடத்தில் பதிவு செய்தார்கள். என்னோடு சு. வேணுகோபால், பாவண்ணன், அஜிதன், தன்யா, சாம்ராஜ் ஆகியோருக்கு ஹாங்காங் வழி கேத்தே பசிபிக் விமானத்தில் பதிவு செய்யப்பட்டது. சு.வேணுகோபால், பாவண்ணன், எனக்கு ஒரே பயணச்சீட்டு. அடுத்தடுத்து அமர்ந்து பயணித்தோம். பாவண்ணனுக்கு கால் வலி. எனினும் சமாளித்து கொண்டார். 16 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பயணிப்பது எளிதல்ல. 


எனது அரங்கில் பங்கேற்கும் எஸ்தர் ஆலனை பரிச்சயம் செய்து கொள்ள அவர் மொழியாக்கம் செய்த  ஆந்தோனியோ பெனிட்டோ எழுதிய  Zama எனும் நாவலையும் மற்றோரு விருந்தினரான சாட் போஸ்ட் மொழியாக்கம் செய்த 3% பிராப்ளம் எனும் நூலையும் காரைக்குடி - சென்னை ரயில் பயணத்தின் போது வாசித்து வந்தேன். சென்னையில் ஜாஜா வீட்டிற்கு சென்றேன். அமெரிக்க பயணத்திற்கு ஏதாக ஷு அணிந்து வந்தால் சென்னை வெயிலில் புழுங்கி விட்டது. நூல் வனம் மணிகண்டன் விழாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய நிகழ்ச்சி நிரலை அச்சடித்து கொடுத்து விட்டிருந்தார். மீதமிருக்கும் எடைக்கு தகுந்தாற்போல்  ஜீவாவிடம்  அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல  சில புத்தகங்கள் கொண்டு செல்ல கேட்டிருந்தேன். கொடுத்துவிட்டார். ஜாஜா வீட்டிலிருந்து வேணுகோபால் தங்கியிருந்த விடுதி அறைக்கு சென்று அவரோடு சேர்ந்துகொண்டு விமான நிலையம் சென்று சேர்ந்தேன். பாவண்ணன் குடும்பத்தோடு காத்திருந்தார்.  அஜிதன், தன்யா, சாம்ராஜ் சேர்ந்து கொண்டார்கள். நள்ளிரவுக்கு மேல் விமானம் புறப்பட்டது. பெரிய விமானம். அலுங்கல் குலுக்கல் இல்லை.  கேத்தே பசிபிக் விமானத்தில் வழங்கப்பட்ட உணவு பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும். எல்லா வேளையும் ருசியான தரமான உணவு. விமானத்தில் வாசிக்க ஜாஜாவுடைய தெய்வ நல்லூர் கதைகளை கொண்டு வந்தேன். ஆனால் விமானத்தில் வாசிக்க எளிதாக இல்லை. உறக்கச்சடவு. ஸ்டீபன் கிங்கின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட டிஸ்டோபிய திரைப்படம் ‘’தி ரன்னிங் மேன்” பார்த்தேன். ‘எஞ்சி பிழைத்தல்’ புனைவு வகை.  ஹங்கர் கேம்ஸ் மாதிரியான கதைக்களம். டிஸ்டோபிய கதைகள் வெறும் கற்பனை புனைவு என்பதை தாண்டி நிகர்வாழ்வாக பரிணாமம் கொள்ளும் காலமிது. ஏதோ ஒருவகையில் வாழ்வின் உள்ளீடற்றத்தன்மை அதிகார வேட்கையால் நிரம்புவது குறித்து எச்சரிக்கையை டிஸ்டோபிய கதைகள் மீள மீள விடுக்கின்றன என்று தோன்றியது. 

At Hongkong

ஹாங்காங் வந்து சேர்ந்தோம். ஏழு மணி நேரம் காத்திருக்க வேண்டும். விமான நிலையத்தை சுற்றி வந்தோம். ‘ ஸ்கை கார்டன்' செல்லும் வழி என ஆங்காங்கு வழிகாட்டி பதாகை வைத்திருந்தார்கள். ஆவலோடு போய் பார்த்தால் அது ஒரு புகைக்கும் இடம். எல்லோரும் வரிசையாக அமர்ந்து புகைத்து கொண்டிருந்தார்கள். கோர்டான் ராம்சே உணவகத்தில் ரிசோட்டோ உண்டோம். ஏறத்தாழ வெண்பொங்கல். நெய்க்கு பதிலாக சீஸ், மிளகிற்கு பதிலாக காளான். எனினும் நல்ல சுவை.  டாலர் மாற்றிக்கொள்ளவில்லை. கைச்செலவிற்கு ஆகட்டும் என மாமனாரின் கடன் அட்டையை கடனாக பெற்று வந்தேன். ஹாங்காங்கில் உணவிற்கு செலவிட்டதை தவிர வேறெங்கும் எதுவும் செலவில்லை. சாம்ராஜ், வேணுகோபால், பாவண்ணன் என மூவரும் தேடிப்பிடித்து ஒரு கடையில் காப்பி குடித்தார்கள். காப்பி என்று சொல்லக்கூடாது.  ஸ்பானிஷ் லாத்தே. 

Supposed to be the Sky Garden

ஹாங்காங்கில் திடீரென்று தனிமைப்படுத்தி சோதனை செய்தார்கள். எவரையாவது ஒருவரை சோதிப்பது வழக்கமான வழிமுறைதான் என்று சொல்லப்பட்டது. ஏதோ ஒரு திரவத்தை தொட்டு பெல்ட்டிலும் காலணியிலும் வைத்தார்கள். நேரத்திற்கு புறப்பட்டு நியுயார்க் வந்திறங்கினோம். விமானத்தின் பாதை, பயணத்தொலைவு, பறக்கும் உயரம் போன்றவற்றை காண முடியும். பகலிலிருந்து பகலுக்கு  பறந்தோம். சாளரங்கள் அடைபட்டிருந்ததால் என்ன நேரம் என்று தெரியவில்லை‌. காலம் உறைந்திருந்தது. குறித்த நேரத்தைக் காட்டிலும் முன்னரே நியுயார்க் ஜே.எப். கே விமான நிலையத்தின் எட்டாவது டெர்மினலில் விமானம் தரையிறங்கியது. சாலை மீதிருந்த பாலத்தில் எல்லாம் விமானத்தின் ஓடுபாதை அமைக்கப்பட்டிருந்தது சற்று வினோதமாக இருந்தது. எனக்கே அது அவ்வளவு பாதுகாப்பாக தென்படவில்லை.  குடிவரவுக்கு பெரிய வரிசை நின்றது. எதற்காக வருகிறீர்கள் என்று கேட்ட போது தமிழ் மொழிக்கான இலக்கிய விழா என்றேன். என்ன என்பது போல திரும்ப கேட்டார். சரி என்னவோ என்பது போல அனுமதி வழங்கினார். பெட்டிகளை எடுத்துக்கொண்டு வந்தபோது மகேஷ்வரி எங்களுக்காக காத்திருந்தார். லண்டனில் இருந்து கிரி வரவேண்டி இருந்ததால் நாங்கள் காத்திருந்தோம். முதல் வண்டியில் அமெரிக்க வாசகர் மயிலப்பனோடு சிலர் புறப்பட்டனர். இடையே சிலர் காபி குடித்தார்கள். சிங்கப்பூரிலும் கவனித்திருக்கிறேன். அவர்கள் அருந்தும் ஒரு காபி என்பது நாம் அருந்தும் மூன்று பில்டர் காபி அளவிற்கு சமம். முன்னொரு மில்லி கோப்பைகளில் கடுங்காப்பியை அருந்துவது இங்கு வழக்கம். கிரி வந்ததும் நாங்களும் புறப்பட்டோம். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் தான் அங்கே எவ்வளவு  குளிர் என்பது உறைத்தது. ஏழு டிகிரி. தொப்பி , ஜாக்கேட்டைத் தாண்டி முகத்தில் ஊதல் காற்று அறைந்தது.  சாலையோரத்தில் கட்டுமான குப்பை, சற்றே குண்டும் குழியுமான சாலை போன்றவற்றை கண்டபோது இதுவும் நம்மூரைப் போலதான் எனும் ஆசுவாசம் ஏற்பட்டது. ஹட்சன் நதியில் சில பழைய பாட்டில்கள் மிதந்த போதும், மிக பழமையான செட்டிநாட்டு தூண்கள் போன்ற அமைப்பு கொண்ட, எஸ்கலேட்டர் கூட இல்லாத இருண்ட அடிநகரம் மாதிரியான  ரயில் நிலையத்தை கொண்டதும் உடைமையுணர்வே ஏற்பட்டது. கடுங்குளிரில் வெறும் பணியனோடு வீடற்றவர்கள் பர்கரை தின்று கொண்டிருந்ததை பார்க்கும் போது நாம் கொஞ்சம் பரவாயில்லையோ என்று கூட தோன்றியது. சுமார் ஒருமணிநேரம் பயணித்து நியுஜெர்ஸியில் உள்ள எங்கள் தங்கும் விடுதியான கோர்ட்யார்ட் மரியாட்டை வந்தடைந்தோம். நண்பர் ஸ்ரீதர் நாராயணன் எங்களை காண்பதற்காக விடுதியில் காத்திருந்தார். அவரோடு அரைமணிநேரம் மட்டுமே பேச முடிந்தது.கடைசியாக வந்து சேர்ந்த குழு நாங்கள் தான். முன்னரே எல்லோரும் குழுமியிருந்தார்கள். நல்ல பசிக்கு பரிட்டோ பரிமாறினார்கள். சோறு வெஞ்சனம் குழம்பு போன்றவற்றின் கலவையான மெக்சிக கூட்டாஞ்சோறுக்கு பரிட்டோ என்று பெயர். அபாரமான ருசி. 

With Chad Post and Prabhu 

தங்கியிருந்த ஆறு நாட்களும் வழங்கப்பட்ட உணவைப் பற்றி சொல்ல வேண்டும். எனக்கு எப்போதும் வயிற்று உபாதைகள் உண்டு. பித்த உடல் வாகின் சிக்கல்களில் ஒன்று. சற்று சரியில்லை என்றாலும் நெஞ்செரிச்சல் வர ஆரம்பித்துவிடும். எப்போதும் காபி தேனீரை தவிர்ப்பேன். இரவு உறங்குவது பெரும்பாடு. சாய்ந்த மாதிரி உறங்க வேண்டும். அதற்கு தகுந்த மருந்துகளுடன் தான் கிளம்பினேன். ஒரு வேளை கூட அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் அமையவில்லை.  உணவின் தரம் பற்றி அறிய வேண்டும் என்றால் நான் தான் சோதனை எலி. உண்டு பத்து பதினைந்து நிமிடங்களில் விளைவு தென்படும். இப்படியான நுண்ணிய குடலை வைத்துக்கொண்டு சமாளிப்பது கடினம். விழா அரங்கில் வழங்கப்பட்ட மதிய உணவு, இடைவேளை உணவு, இரவுணவு போன்றவையும் சரி விடுதி அறைக்கு தருவிக்கப்பட்ட உணவுகளும் சரி, வெளியே அழைத்துச் சென்று வாங்கிக்கொடுத்து உணவும் சரி உண்மையில் மிக சிறப்பாக இருந்தது. அமேரிக்க பதிப்பாளரும் எழுத்தாளருமான சாட் போஸ்ட் ‘இங்கே இத்தகைய இலக்கிய கூடுகைகளில் விருந்தினர்களுக்கு மட்டும் தனியாக உணவு கூப்பன் அளிப்பது மட்டுமே வாடிக்கை. இப்படி இங்கு பங்கேற்பாளர்கள் அனைவரும் சேர்ந்து உண்பது மிக நல்ல விஷயம்' என்றார். விஷ்ணுபுரம் விழாவில் விஜய சூரியன் தலைமையில் கைப்பட வேளைக்கு அறுநூறு பேருக்கு பரிமாறுவார்கள் என்றேன். இந்த உணவு முறை இலக்கியவிழாவில் நம் இந்திய பண்பாட்டின் பங்களிப்பாக ஒருகால் மாறக்கூடும். 

A poster in the Time square

எனக்கு ஒதுக்கப்பட்ட அறை எண் 820 ல்  பிரபுவும் பாலாஜியும் இருந்தார்கள். பிள்ளையார்பட்டி பிரபுவிலிருந்து  போர்ட் லாண்ட் பிரபுவாக பரிணாமம் கொண்டிருந்தான்.  இரண்டு அல்லது மூன்று மணிநேரம் மட்டுமே உறங்கி இருப்பேன். படுக்கையில் படுத்தபடி பேசிக்கொண்டிருந்தோம். என்னோடு சேர்ந்து அவர்களுடைய தூக்கமும் கெட்டது. எனக்கு என் பள்ளிக்கால நண்பனின் அம்மா நினைவுக்கு வந்தார். என் நண்பன் பல ஆண்டுகள் அமெரிக்காவில் வாசித்துவிட்டு இப்போது கனடாவிற்கு குடிபெயர்ந்திருக்கிறான். அம்மாவை காணும்போதெல்லாம் ‘நீ மட்டும் இன்ஜினியர் படிச்சிருந்தா இந்நேரம் அவன்கூட அமேரிக்கா போயிருப்ப’ என்று சொல்லி அங்கலாய்ப்பார். எனக்கு தொடக்கம் முதல் பொறியியலில் ஆர்வம் இருந்ததில்லை. மருத்துவத்திலும் நான் கற்ற ஆயுர்வேத மருத்துவத்தின் வழி அமெரிக்கா வர வாய்ப்பு இல்லை. ஆனால் இலக்கியம் என்னை கூட்டிக்கொண்டு வந்து கரை சேர்த்திருக்கிறது. ஏதோ ஒருவகையில் இலக்கியத்தின் மீது கொண்ட தீவிர நம்பிக்கைக்கான அங்கீகாரம் என்று சொல்லலாமா என்று தோன்றியது. எனினும் என்னை விடவும் தீவிர நம்பிக்கை கொண்ட பலர் இங்கே உள்ளார்கள். இது ஒரு வாய்ப்பு. இன்னும் சரியாக, தீவிரமாக இயங்குவதற்கு என்று எண்ணிக்கொண்டேன். இலக்கியத்தை விடவும் ஹாலிவுட் வழிதான் அமெரிக்காவை அதிகமும் அறிந்திருக்கிறேன். நியூயார்க் நகரம் ஏறத்தாழ பேட்மானின் கோத்தம் சிட்டி தான். ஸ்பைடர்மேனும் இதே ஊர்தான். போதாக்குறைக்கு கிங்காங் வேறு அட்டகாசம் செய்திருக்கும். அதிநாயகர்களின் நகரம் என்று சொல்லலாம் அல்லது இத்தனை அதிநாயகர்கள் வந்த பின்னரும் ஆபத்துக்கள் நீங்காத, மீட்கப்பட மனிதர்கள் காத்திருக்கும் நகரம் என்றும் சொல்லலாம். நகரத்தை பிரம்மாண்டமாக எழுப்பும் தோறும் அது அழிந்து விடும், அது இயற்கைக்கு அல்லது இறைவனுக்கு எதிரானது எனும் அச்சமும் பெருகுகிறது. சுதந்திர தேவி சிலை விழும் எத்தனை சினிமா காட்சிகள் நம் நினைவில் எழுகின்றது. இந்நகரம் தடுக்கப்பட்ட கனியை உண்டு சாத்தானின் வழியை தேர்ந்து ஆதி பாவத்தின் விளைவு எனும் நம்பிக்கை எங்கோ ஆழமாக இருக்கிறதோ? டைம்ஸ் சதுக்கத்தில் அத்தனை கேளிக்கைகளுக்கும் மத்தியில் ஒருவர் கர்த்தரிடம் இப்போதே பாவமன்னிப்பு கேளுங்கள் என்று எழுதிய பதாகையை தாங்கி நின்றது நினைவுக்கு வருகிறது. இப்படியாக அமெரிக்க மண்ணில் என் முதல் நாள் கழிந்தது. 

 


No comments:

Post a Comment