![]() |
| Courtyard Marriot, where we stayed |
பாலாஜியும் பத்மநாப பிள்ளையும் வேலைகளை இழுத்து போட்டு செய்தார்கள். காபி, காலை உணவு வாங்கி வருவது தொடங்கி நிறைய பணிகள். விடுதியருகே இருந்த ஸ்டார்பக்ஸுக்கு பிரபு அழைத்து சென்றான். ஏறத்தாழ கசாயம் போலிருந்த மின்ட் தேநீர் அந்த ஊர் குளிருக்கு இதமாக இருந்தது. அமெரிக்கர்கள் செல்வது போல் ஜாக்கெட் மட்டும் அணிந்து கொண்டு ஹட்ஸன் நதிக்கரையோரம் இருந்த ஸ்டார் பக்ஸ் கடைக்கு சென்றேன். கைகள் குளிரில் விறைத்து விட்டது. எதற்கும் இருக்கட்டும் என எடுத்து வந்திருந்த கையுறையை அணிந்து கொண்டேன். சிதம்பர ரகசியத்தின் டெல்லி கணேஷ் கொலை செய்வதற்கு அணிவாரே அத்தகைய கையுறை. காலை பொங்கல் இட்லி வடை கொடுத்தார்கள். அறையில் ஓவன் இருந்ததால் சூடு செய்து உண்டோம்.
ஹோட்டல் லாபியில் விறகிற்கு பதிலாக எரிவாயுவில் எரியும் சிறிய கணப்பறை இருந்தது. உணவிற்கு பின் ஜெயும் நண்பர்களும் நதிக்கரையோரம் காலை நடை சென்றார்கள். கரைக்கு மறுபுறம் நியூயார்க். நியூ ஜெர்சி கரையோரம் நியூயார்க்கை அமைதியாக இருக்கச் சொல்லும் பெண்ணின் பெரிய சிலை அமைந்திருந்தது. வசந்தம் என்பதால் மரங்கள் பூத்திருந்தன. நாய்களை நடைக்கு அழைத்து செல்லும் பகுதி என்று ஆங்காங்கு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. நாய்களின் மலத்தை உடமையாளர்களே அப்புறப்படுத்த வேண்டும். அதற்கென ஆங்காங்கு பெட்டிகள் வைத்திருந்தார்கள். விதவிதமான நாய்கள். சிறிதும் பெரிதுமாக, சிலவற்றுக்கு ஆடை அணிவித்திருந்தனர். தொப்பி, கையுறை, ஜாக்கெட் என சர்வ ஜாக்கிரதையாக நடைக்கு சென்றாலும் இம்முறை குளிர் முகத்தை அறைந்தது. இதைவிட தீவிர குளிரை அனுபவித்த அமெரிக்க வாசிகளுக்கு லண்டன் வாசியான கிரிக்கும் பெரிதாக உறைக்கவில்லை. அருணா அக்கா பாதியில் கால்வலியென அமர்ந்துவிட்டார். கரையோரத்தில் ஹட்ஸன் நதியில் சற்றே பெரிய ஆக்ரோஷமான அலைகள் மோதி அடங்கின.
![]() |
| Newyork Spring |
இதற்கு மேலிருந்தால் முகம் இழுத்துக்கொள்ளும் என்று அஞ்சியதால் விடுதிக்கு திரும்பினோம். கணப்பில் முகத்தை காட்டினேன். அறையிலிருந்த கெட்டிலில்நீர் கொதிக்க வைத்து முகத்திற்கு ஆவி பிடித்தேன்.
மதிய உணவிற்கு எங்கள் விடுதிக்கு எதிரே இருந்த மாலில் உள்ள நயா எனும் உணவகத்திற்கு பழனி ஜோதி அழைத்து சென்றார். பழனியின் அலுவலகம் அங்கு தான் உள்ளதால் அவருக்கு அங்கிருக்கும் கடைகள் நன்கு தெரிந்திருந்தன. ஃபலாபில், ஏறத்தாழ பருப்புருண்டை போலிருந்தது. கொண்டக்கடலையும் எள்ளும் சேர்த்து அரைத்து பொறித்திருந்தார்கள். அத்தோடு காய்கறிகள், துவையல்கள் என நல்ல உணவு. ஜலபினோஸ் எனும் மிளகாய் வகையை இங்கே நாம் பிஸாவில் பயன்படுத்துகிறோம். அமெரிக்காவில் காரத்திற்கு அதுதான் சேர்க்கிறார்கள். கண்ணீர் வரவழைக்கும் அளவிற்கு காரம். நாங்கள் எல்லாம் புதிய உணவுகளை உண்டு கொண்டிருக்கும்போது சத்தமில்லாமல் ஒரு எழுத்தாளர் செட் தோசை வாங்கிக்கொண்டு வந்தார். ஐரோப்பாவில் இருக்கும் சயந்தனுக்கு தோசை தான் அபூர்வம்.
அமெரிக்க நண்பர்கள் நிறைய பேர் விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள். தாமஸ் ஹிடோஷி ப்ருக்ஷிமா வந்திருந்தார். சிங்கப்பூரில் இருக்கும்போது தாமஸுடைய வகுப்பில் நான் பங்கெடுத்திருக்கிறேன். அவரிடம் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் பேச முயன்றால் அவர் சரளமாக எல்லோருடனும் தமிழில் பேசினார். பார்க்கும் எழுத்தாளர்களை எல்லாம் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். திருச்செந்தாழையுடன் அவருக்கு பதினெட்டு வருட நட்பு உண்டு. ந. ஜயபாஸ்கரன் கவிதைகளை தமிழில் வாசித்திருக்கிறார். தாமஸ் எனக்கு பிடித்த ஆசிரியர்களில் ஒருவர். மாயாஜாலம், பாட்டு என அவருடைய வகுப்பு களைகட்டும். மதியத்திற்கு மேல் இரண்டு பெரிய பேருந்துகளில் எல்லோரும் சுதந்திர தேவி சிலை பார்க்கப் புறப்பட்டோம். இம்முறை தொப்பி, கொலைகாரா கையுறைக்கு மேலதிகமாக முகக்கவசமும் அணிந்தேன். ஆகவே குளிர் சற்றே தாளமுடிந்ததாக இருந்தது.
![]() |
| With Lakshmi, Vennila Thiru and Thomas ticket counter of Liberty Statue |
பின்வரிசையில் நான் லக்ஷ்மி வெண்ணிலா, தமிழ் பிரபா அமர்ந்து கொண்டோம். வெய்யில், சந்திரா, இளங்கோ, ரம்யா, தாமஸ் எங்கள் வண்டியில் ஏறிக்கொண்டார்கள். வெய்யில் நன்றாக பாடுவார். ஆனால் எல்லோரும் கூட சேர்ந்து பாடி அவரை பாடவிடாமல் செய்துவிட்டோம். இசையில் தனக்கு வெய்யில் தான் குருநாதர் என்றார் பிரபா. சற்றே ஆச்சரியம் லக்ஷ்மிக்கு நல்ல குரல்வளம் இருந்ததுதான். என்ன, ஒரு பாட்டை கூட முழுமையாக பாடவில்லை. அமெரிக்க தெருக்களில் இளையராஜாவின் இசையோடு பயணித்தோம். வரும்போது தாமஸ் பாடினார். குழுவில் எல்லோரும் சுமாராக பாடும்போதிருக்கும் தைரியம் ஒரேயொரு நல்ல பாடகரால் இல்லாமல் போகிறது. தாமஸ் பாடியபிறகு நாங்கள் பாட சற்று நாணியிருக்க வேண்டும். ஆனால் அதெல்லாம் நடக்கிற காரியமா என்ன! திரும்பும்போதும் பாடினோம்.
முன்பு ரயில் நிலையமாக இருந்த கட்டிடத்தில் இப்போது சுதந்திரதேவி சிலையை காண்பதற்கான அனுமதி சீட்டு வழங்குகிறார்கள். பத்து நிமிட பயணம். முதலில் எல்லிஸ் தீவிற்கு செல்கிறது. நாங்கள் அங்கு இறங்கவில்லை. முன்பு வெளிநாட்டிலிருந்து வரும் அடிமைகளை இந்த தீவில் தனிமைப்படுத்தி ஏதேனும் தொற்று நோய் இருக்கிறதா என்று பரிசோதித்துவிட்டு (அதாவது சாகவிட்டு எஞ்சியவர்களை) ஊருக்குள் அனுமதிப்பார்கள் என்று விசு கூறினார். அமெரிக்க கனவு என்பது இங்கே எல்லாருக்கும் இடமுண்டு என்பதுதான். சுதந்திர தேவி இங்கே எல்லோரும் வரலாம் என அழைப்பு விடுக்கிறாள். இப்போதும் அப்படித்தானா? தெரியவில்லை. தாமிரம் சேர்ந்திருந்ததால் அவளுடைய நிறம் பச்சை ஆகிவிட்டது. முன்பு சிலையில் ஏறமுடியும். இப்போது அதன் பீடத்தில் ஏறவே பல மாதங்களுக்கு முன்பு அனுமதி வாங்க வேண்டும் என்றார்கள். சிலையை சுற்றி வந்தோம். அருங்காட்சியகம் மூடிவிட்டார்கள். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பினோம். இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு ஒரு நினைவுச்சின்னம் எழுப்பட்டிருந்தது. ‘வெற்று வானம்’ என்று பெயரிட்டிருந்தார்கள். இரு உலோக செவ்வக கட்டுமானத்தில் இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது. இந்திய, ஆப்ரிக்க, ஸ்பானிய, ஆங்கில, சீன, ஜப்பானிய என எல்லா இனத்து பெயர்களும் இருந்தன. இதுதான் அமெரிக்கா என்று தோன்றியது. ஆறுமணிக்கு மேல் தலை கனத்து உடல் ஆடத்தொடங்கியது. நேர இயைவு தொந்திரவு செய்தது. சுமார் 10 மணிநேரம் வேறுபாடு. சீன உணவகத்தில் இரவுணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாட் போஸ்ட் அவர்களுடன் உரையாடியபடி உணவு உண்டேன். ஆனால் பதினைந்து நிமிடங்கள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. உடல் அயர்ந்துவிட்டது. தவறாக எண்ணவேண்டாம் என்று சொல்லிவிட்டு அறைக்கு வந்து எட்டுமணிக்கு எல்லாம் உறங்கிவிட்டேன்.
![]() |
| Libertarian and Liberrty Statue |
நள்ளிரவு இரண்டு மணிக்கு முழிப்பு வந்தது. வாட்சப்பில் அரவிந்தனின் மரண செய்தி வந்து சேர்ந்தது. அதற்குப்பின் உறங்க இயலவில்லை. கடந்த இரண்டு இரண்டரை ஆண்டுகளாக தான் எனக்கு அவரோடு பழக்கம். உண்மையில் அணுகுவதற்கு பழகுவதற்கு இனிமையானவர். மெய்யான கனவான். சத்திய சோதனை மொழியாக்கம் சார்ந்து அவரோடு நிறைய பேசியிருக்கிறேன். மொழியாக்கத்தில் அவருக்கு நல்ல நிபுணத்துவம் உண்டு. திருநெல்வேலி புத்தகக்கண்காட்சியில் அவரோடு ஒருமணிநேரம் பேசிக்கொண்டிருந்தது தான் கடைசி. வலக்கால் விபத்தின் காரணமாக உயரம் குன்றியிருப்பதால் அதற்கு உகந்த காலணியை நீங்கள் அணிய வேண்டும் இல்லையென்றால் பிற்காலத்தில் இடுப்பு வலிவரும் என்றார். ஒரு இரண்டு நாட்கள் நாகர்கோவில் வந்து தங்கி இருங்களேன் என்று அழைத்தார். சென்றமுறை அவரோடு சுசீந்திரம் கோவிலுக்கு சென்று வந்தது நினைவுக்கு வந்தது. ஜூன் மாதம் பெருந்தேவி இந்தியா வரும்போது கும்பகோணத்தில் நான் போகன் அரவிந்தன் சென்று அவரை சந்திப்பதாக இருந்தோம்.அறக்கல்வி பற்றி அவரோடு பேசியிருக்கிறேன். மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பு ஏதும் இருந்தால் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டிருந்தார். எங்களுக்குள் வேறு சில புத்தக உருவாக்கம் குறித்த திட்டங்கள் இருந்தன. எல்லாம் பாதியில் அறுந்துவிட்டது. ஓர் அந்நிய நாட்டில் நமக்கு தெரிந்தவரின் அகால மரணச்செய்தி நம்மை இன்னும் அதிகமாக வெருட்டுகிறது. சென்று துக்கம் விசாரிக்க கூட வாய்ப்பில்லாத நிலை. கண்ணனுக்கு மட்டும் வருத்தத்தை தெரிவித்து செய்தி அனுப்பினேன். எஸ். செந்தில்குமார் அரவிந்தனோடு பணிபுரிந்தவர். பெருந்தேவிக்கு மிக நெருங்கிய நண்பர். அவர்களை இந்த செய்தி என்ன செய்திருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. காலை உணவிற்கு இறங்கி வந்த பெருந்தேவி செய்தி அறிந்து ஒருமாதிரி உடைந்து அழுதுவிட்டார். அங்கிருந்து தன்னை மீட்டுக்கொண்டு விழாவில் பங்கெடுக்க அபார மனதிடம் வேண்டும்.
![]() |
| Banks of Hudson, near Light house |
விதவிதமான கிராய்சண்டுகள் காலை உணவிற்காக வாங்கி வைத்து விடுவார் பத்மநாபன். டேனிஷ் வகையில் நிறைய சீஸும் க்ரீமும் உண்டு. இரண்டு கிராய்சண்டுகள் உண்டுவிட்டு மின்ட் தேநீர் உண்டுவிட்டால் வயிறு நிறைந்துவிடும். இரண்டு பேருந்துகளில் விருந்தினர்களை அழைத்து சென்றார்கள். சாலையில் வேடிக்கை பார்த்தபடி வந்தேன். பாதாள சாக்கடை துளைகளில் இருந்து புகை புறப்பட்டது. ஏதோ தூய்மை செய்கிறார்கள் என்றார் பாலாஜி. இந்த நகரம் அடுக்குகளால் ஆனது. நாம் காணும் நகரத்திற்கு அடியில் ரயில்களின் நகரம், அதற்கு அடியே குழாய்களின் நகரம் இருக்கிறது. அழகிய பழைய கட்டிடங்கள் வரிசையாக நின்றிருந்தன. நமது இஷ்டத்திற்கு எதையுடம் இடித்து புதிதாக கட்டிவிட முடியாது. உள்ளே எப்படி அலங்கரிக்க வேண்டும் என்பது கூட அரசாங்கத்தின் திட்டப்படி தான் என்று பிரபு கூறினான். சுமார் ஒருமணிநேர பயணத்திற்கு பின் நிகழ்விடம் வந்து சேர்ந்தோம். மருத்துவ புத்தகங்கள் சூழ் அழகிய அரங்கம். நான் எனது திருமணத்திற்கு என்று வாங்கிய கோட்டை அணிந்திருந்தேன். அதுவே என்னிடம் இருக்கும் ஒரே கோட். என்னோடு சிங்கப்பூர் வந்தது, இப்போது அமெரிக்காவிற்கும் வந்துவிட்டது. காற்சட்டை பழசாகிவிட்டதால் அது மட்டும் புதிதாக தைத்துக்கொண்டேன். நண்பர்கள் அனைவரையும் கோட் சட்டையில் பார்க்க சற்று விநோதமாகவும் நன்றாகவும் இருந்தது. தமிழ் பிரபா அசத்தலாக உடுத்தி தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். அரவிந்தன் கன்னையனும் வண்ண வண்ண சட்டைகளை அணிந்து வந்தார். இவர்களின் உந்துதலில் நானும் இரண்டாம் நாள் பூ போட்ட வெள்ளை சட்டையை கோட்டுக்குள் அணிந்து கொண்டேன். சண்முகவேல் வடிவமைத்திருந்த மேடை பின்னணி பதாகைகளில் புதுமைப்பித்தனும் , கநாசுவும், சுந்தர ராமசாமியும் அசோகமித்திரனும் மிளிர்ந்து கொண்டிருந்தார்கள். மடித்து எடுத்துவரப்பட்டு இருந்தால் சற்று சுருங்கி இருந்தது. ஆனாலும் அங்கே அந்த சூழலில் அவர்களுடைய படங்களை காணும்போது மனம் உணர்வெழுச்சி கொண்டது.
சரியாக பத்து மணிக்கு தொடக்க நிகழ்வு. ஸ்ரீநிதி ஸ்ரீராம் தொகுத்து வழங்கினார். டாமியன் சேர்ல்ஸ் ஜெயமோகன் ஆஸ்டின் சவுந்தர் ஜெகதீஷ் குமார் பழனி ஜோதி ஆகியோர் உரையாடினார்கள், நிகழ்வுகள் எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதால் அவை குறித்து எதுவும் எழுத போவதில்லை. ஒரே சமயத்தில் இணை அமர்வுகள் என்பதால் மாறி மாறி கலந்துகொள்வது போலாகிவிட்டது. ஒரு அரங்கில் பெருந்தேவி என்றால் இன்னொன்றில் ஜெயமோகன். ஒரு அரங்கில் யுவன் என்றால் இன்னொன்றில் தாமஸ். மாற்றி மாற்றி ஓடிக்கொண்டிருந்தோம். எனினும் வேறு வழியில்லை. நிகழ்வை தொகுத்த அமெரிக்க இளம் தலைமுறையினர் பற்றி சொல்ல வேண்டும். இந்நிகழ்வில் எனக்கு பெரும் உவகை அளித்தது அவர்களின் பங்களிப்பு தான். மிக நேர்த்தியாக, நகைச்சுவை மிளிர தன்னம்பிக்கையோடு கையாண்டார்கள். எங்கள் அரங்கை வழிநடத்திய சஹாவை ‘குழந்தை’ என்று சொல்ல முடியாது. காலம் செல்வம் அவர்களின் மகள் ஆன் கஸ்தூரியையும் சஹாவையும் தவிர்த்து பிற அனைவரும் பள்ளி- கல்லூரி செல்பவர்கள். ஓரிருவரிடம் கொஞ்சம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. சாம்ராஜ், எஸ். செந்தில்குமார், தமிழ் பிரபா அமர்வை நிர்வகித்த நிவேதா கல்லூரியில் கணினி பயின்று வருகிறார். தாத்தாவின் உதவியோடு சாம்ராஜின் கொடைமடம் நாவலை வாசித்து முடித்திருக்கிறார். கழுதை பாதை, கோசலை, பேட்டை போன்ற படைப்புகளை பாதி படித்திருக்கிறார். தாமஸ், கல்யாணராமன், பிரியம்வதா அரங்கை நிர்வகித்த சித்தார்த் செந்தில் எழுத்தாளராக விரும்புவதாக சொன்னார். நீங்கள் படித்த இளையோர் புனைவுகள் என்ன என்று கேட்டால் ‘எனக்கு பதிமூன்று வயதிருக்கும்போதே அவற்றை வாசிப்பதை நிறுத்திவிட்டேன்’ என்றார். டீன் ஏஜ் அப்போது தானே தொடங்குகிறது! எனக்கு சில அமெரிக்க ஆங்கில புத்தகங்களை வேறு பரிந்துரைத்தார். கிளம்புவதற்கு முதல் நாள் இரவு வர்ஷா என்றொரு பன்னிரண்டு வயது சிறுமியோடு உரையாடினேன். பத்து வயதில் அறம் தொகுப்பின் ஆங்கில மொழியாக்கத்தை வாசித்திருக்கிறார். நூறு நாற்காலிகளும் யானை டாக்டரும் மிகப்பிடித்த கதைகள் என்று கூறினார். இதுவரை இரண்டு கதைகள் எழுதியுள்ளதாகவும் பிறந்தநாள் அன்று ஒரு கதை வெளியானதாகவும் சொன்னார். என்னளவில் இந்த பயணத்தின் மிக முக்கியமான பகுதி என்பது இவர்களுடன் உரையாடியது தான்.
என்னோடு அரங்கில் பங்கெடுத்த எஸ்தர் ஆலனிடம் உங்கள் மொழியாக்கத்தை வாசித்திருக்கிறேன் என்று சொன்னபோது உங்கள் கதையை வாசிக்கும் வாய்ப்பு இதுவரை எனக்கில்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது என்றார். ஜெகதீஷ்குமார் தொகுத்த நூலில் ‘எப்போதும் முடிவிலே இன்பம்’ மற்றும் ‘அம்புப் படுக்கை’ ஆகிய கதைகள் இடம்பெற்றுள்ளன என்று அவரிடம் கூறினேன். நீங்கள் தலாய் லாமாவை சந்தித்ததாக அறிகிறேன், உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் என்று கேட்டார். முதல் நாள் முதல் அமர்வு என்பதால் சற்று பதட்டம். ஆங்கிலம் நாக்கில் புரள வேண்டும். ஆங்கிலத்தில் உரையாற்றும் திறன் இலக்கியத்தை பொறுத்தவரை பழக்கம் சார்ந்தது என்பதற்கு அப்பால் வேறேதும் இல்லை. சிங்கப்பூரில் சிங்கிலிஷ் என்று ஒரு வழக்கே உள்ளது. பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் மட்டுமே கொண்ட பேச்சு முறை. நன்றாக புரிந்து கொள்ள முடியும். ஆங்கில எழுத்தாளர் என்றால் ஆங்கில இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு நியாயமானது. சிங்கிலீஷில் கதை எழுதும் சிங்கப்பூர் ஆங்கில எழுத்தாளர்கள் கூட சிலர் உருவாகி வந்திருக்கிறார்கள். அமர்வு நன்றாக இருந்ததாக சொன்னார்கள். மூவரும் அவரவர் கேள்விகளுக்கு நல்ல பதில்களை சொன்னோம், ஆனால் இடையீட்டு புள்ளிகள் இல்லாததால் உரையாடலாக ஆகாமல் போனதாக ஒரு எண்ணம் ஏற்பட்டது. சஹா நல்ல வாசிப்புடையவர். தொழில்முறை எடிட்டர் என்பதால் எல்லாம் நேர்த்தியாக நடந்தேறியது. கீழே அஜிதன், சயந்தன் பங்குபெற்ற அமர்வு இன்னொரு அரங்கில் நிகழ்ந்தது.
பெருந்தேவி தனது அரங்கில் பதிலை அரவிந்தனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தான் தொடங்கினார். இரண்டாம் நாள் காலை இரண்டு அரங்குகளிலும் அரவிந்தனுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜெ எழுதிய அஞ்சலி குறிப்பை வாசித்தபோது ஏமாற்றமாக உணர்ந்தேன்.தமிழ் சூழலில் ஏன் அவர் எனக்கு முக்கியமானவர் என்பதை நான் தான் எழுத முடியும். அதுதான் உரையாடலின் வழி. இவற்றை எல்லாம் கடந்து கண் முன் நிகழும் ஒரு பெருநிகழ்வை காணவும் அங்கீகரிக்கவும் ஒரு மனம் வேண்டும். இதுவொரு வரலாற்று நிகழ்வு. அங்கே வந்திருந்த அமெரிக்க ஆங்கில எழுத்தாளர்களிடம் உரையாடிய வரை அவர்களுக்கு இப்படியான மொழிச்சூழல் குறித்து வியப்பும் மகிழ்ச்சியும் இருந்தது. தாமஸ் போன்ற ஒருவரை தமிழ் பேசும் வெள்ளைக்காரர் என்பதை தாண்டி சமானமாக நோக்கும் ஆரோக்கியமான இடம் உள்ளது. அ. முத்துலிங்கத்தை சந்திக்காமல் செல்வது இந்த பயணத்திற்கு நிறைவளிக்கவில்லை என்று திருமூர்த்தியிடம் புலம்பினேன். திருமூர்த்தி உடனே முத்துலிங்கத்திற்கு அழைத்து பேச கொடுத்தார். நல விசாரிப்பு தான். ஆனால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
![]() |
| with Sijo and Korea Sathish inside Newport station |
நிகழ்விடத்திலேயே இரவு உணவு உண்டு, விடுதிக்கு பேருந்தில் வந்து இறங்கினோம். இரண்டாம் நாள் காலை சிஜோவோடும் கொரியா சதீஷோடும் சேர்ந்து பொது போக்குவரத்தில் செல்வதாக முடிவு செய்து கொண்டேன். நியூபோர்ட் பாதாள ரயில் நிலையத்தில் ஏறி முப்பத்தி மூன்றாம் தெருவில் இறங்கி அங்கிருந்து இன்னொரு ரயில் மாற வேண்டும் என்றார் சிஜோ. ஆனால் வழியிலேயே கூகிள் வேறொரு பேருந்து வழித்தடத்தை சுட்டிக்காட்டியது என்பதால் கொஞ்சம் நடந்து சென்று பேருந்தில் ஏறினோம். ஒரு ஊரை, நாட்டை, பண்பாட்டை அறிவதற்கு சிறந்த தொடக்கம் என்பது அங்கே நடந்து செல்வது தான். நியூயார்க் தெருக்களில் நிறைய வீடற்றவர்களை பார்த்தேன். சாலையோரம் அமர்ந்து பர்கர் உண்டு கொண்டிருந்தார்கள். குளிர்காலத்தில் அவர்களுக்கு அரசு வசிப்பிடங்கள் ஒதுக்கித்தரும் என்றார் சிஜோ. ரயில் நிலையங்களில் கூட நீளவாக்கில் இருக்கைகள் இல்லை. படுப்பதற்கு எதுவாக இருக்கக்கூடாது என்பதில் கவனம் கொண்டிருந்தார்கள். பத்தடிக்கு ஒரு பேருந்து நிறுத்தம் இருந்தது. நாங்கள் 102 ஆவது அவென்யூவில் இறங்கி நிகழ்விடம் வந்து சேர்ந்தோம்.
ராலே ராஜனைப் பற்றி சொல்ல வேண்டும். முதல் நாள் தொடக்க நிகழ்வின் போது தேவதேவனின் ‘அசையும் போது தோணி’ கவிதைக்கு இசையமைத்து பாடினார். யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலை தாமஸ் ஆங்கிலப் படுத்தி வெஸ்டர்ன் பாணியில் பாடியபோது ராஜன் அத்தோடு தனது இசையமைப்பையும் இணைத்து பாடினார். தவிர ஒரு கம்பன் பாடலுக்கும் இசையமைத்து அரங்கேற்றினார். இறுதியாக நிகழ்வின் நிறைவு விழாவில் எமிலி டிக்கின்சனின் ‘ஹோப்’ கவிதையை மூவர் இணைந்து அகப்பெல்லோ வடிவத்தில் அரங்கேற்றினர். அத்தனையும் அபாரம். எந்த கவிதைகளை இசையாக யாக்க முடியும், அதற்கு உரிய வடிவத்தை எப்படி தேர்ந்தெடுத்தேன் என்று விரிவாக உரையாடினார். அவரது இசை அறிவும் மொழி அறிவும் இயைந்து தனித்தன்மை கொண்டு வருகிறது. வேதாந்த கருப்பொருளை கொண்ட கவிதைகளுக்கு மரபான கர்நாடக, இந்துஸ்தானி ராகங்களை கொண்டு இசையமைக்க முடியும், அதுவே ஞானக்கூத்தன் கவிதைகளை அப்படி இசையமைக்க கூடாது என்றார். லிவிங் தமிழ் லிட்பெஸ்ட் விழாவிற்கு என்று ஒரு ஆல்பத்தை அவரால் உருவாக்க முடியும். அவர் இசையமைத்து சத்யபிரகாஷ் பாடிய பாரதியின் ‘ஊழி கூத்து’ அபாரமான இசைக்கோவை. நான் அடிக்கடி விரும்பி கேட்கும் பாடல்களில் ஒன்று.
விசு, நம்பி, பாஸ்டன் பாலா, கனடா இந்துமதி, விஞ்ஞானி வெங்கட், நிர்மல், ஜெகதீஷ், அருள்ஜோதி, காரைக்குடி சுபா, சாரதி, விவேக், அருண் என இன்னும் பலரோடு அவ்வப்போது உரையாடினேன். கொண்டு சென்ற புத்தகங்கள் எல்லாம் தீர்ந்து விட்டன. பெருந்தேவி நிறைவு விழாவிற்கு முன்னரே புறப்பட்டுச் சென்றார். விழா முடிந்த அன்று ஒருவித நிறைவோடு எல்லோரும் விடுதி திரும்பினோம். ஜெ அதற்குள் அடுத்த ஆண்டு குறித்து தனது திட்டங்களை பகிர தொடங்கினார். இரண்டாம் நாள் கடைசியில் தான் உடலும் மனமும் அமெரிக்க நேரத்திற்கு இயைந்தது. நண்பர்கள் சூழ இருந்தாலும் மிகவும் தனியனாக உணர்ந்தேன். கூட்டத்தில் தனித்திருத்தல் எனும் சொல்லும் உணர்வும் மட்டும் மனதிற்குள் ஓடியது. இந்த உணர்வை எப்படி விளக்குவது என்று எனக்கு தெரியவில்லை. மலைப்பா, அயர்ச்சியா, விலகலா, வெறுமையா என்று அதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அல்லது இதில் எல்லாம் எதிலும் தோய்ந்து விடாதே, உவகையை முழுமையாக அனுபவித்திடாதே என்று மனத்தை எச்சரிக்கும் வழிமுறையா என்றும் தெரியவில்லை. ஈடுபடும் தோறும் விலகளும் விலகும் தோறும் ஈடுபாடும் மாறிமாறி விசைகொள்கின்றன. ஏப்ரல் 6 நாற்பது வயது நிறைவடைகிறது. சட்டென ஒரு முச்சந்தியில் நிற்கும் உணர்வு. நெடுநேரம் நண்பர்களோடு பேசிவிட்டு உறங்க சென்றேன். மறுநாள் நியூயார்க்கை சுற்றிப்பார்க்க வேண்டும்.
.jpeg)


.jpeg)


No comments:
Post a Comment