Monday, July 20, 2020

மானுடத்தை துப்பறிபவன்

(சொல்வனம் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரை)
ரொபெர்த்தோ பொலான்யோவின் 2666, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்தது. பெரு நாவல்களை இடைநிறுத்தாது வாசிக்கும்போது சில மாற்றங்கள் ஏற்படுவதைக் கவனித்திருக்கிறேன். நம் அத்தனை அன்றாடச் செயல்களுக்கும் பின்னணி இசையாக, நாவல் அறுபடாமல் ஓடிக்கொண்டிருக்கும். புலன்கள் விழித்துக்கொண்டு துல்லியமாகும். நிகழ்வுகளை, அனுபவங்களை நாவலுடன் பொருத்திப் பார்க்க மனம் துடிக்கும். இப்போது நாவலைவிட, நாவல் வாசித்த காலகட்டம், அப்போது கண்ட சில காட்சிகள் துல்லியமாக நினைவில் இருக்கின்றன. அப்போது புதுகோட்டைக்குப் பேருந்தில் தினமும் சென்றுவரும் சூழல். போவதற்கும், வருவதற்குமான பயண காலம் தலா ஒரு மணி நேரம். ஆயிரம் பக்க நாவலை ஏறத்தாழ இப்படி இரண்டு மணிநேர பயணங்களின் ஊடாகக் கிட்டத்தட்ட ஒரு மாதம் வாசித்தேன். இப்போது நாவலை நினைவுகூரும்போது, அத்துடன் இணைந்து இந்த தினசரிப் பயணக் காட்சிகளும் நினைவுக்கு வருகிறது. 

தமிழ் இலக்கிய உலகில், பொலான்யோவைக் ‘கல்குதிரை’ இதழில் அறிமுகம் செய்துவைத்த சித்திரன் வழியாகவே எனக்கும் பொலான்யோ பரிச்சயம் ஆனார். பின்னர் ஓர் ஊட்டி சந்திப்பின் மாலை நடையின்போது ஜெயமோகனும் இந்நாவல் குறித்துப் பேசினார். 2666 வாசித்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய மற்றொரு பெருநாவலான ‘சாவேஜ் டிடெக்டிவ்ஸ்’-ஐ இச்சிறப்பிதழின் பொருட்டு வாசித்து முடித்தேன். வாசித்து முடித்தவுடன் பொலான்யோவின் நேர்காணல்கள் கொண்ட தொகுப்பான ‘ரொபெர்த்தோ பொலான்யோ: த லாஸ்ட் இண்டெர்வ்யூ அன்ட் அதர் கான்வெர்ஸேஷன்ஸ்’ எனும் சிறு நூலையும் வாசித்து முடித்தேன். இக்கட்டுரை அந்த மூன்று நூல்களையும் அடிப்படையாகக் கொண்டது.

பொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் சற்றே சுயசரிதைத் தன்மையுடையது எனக் கூறலாம். பொலான்யோவும், அவருடைய நண்பரான மரியோ சாண்டியாகோவும் சேர்ந்து ‘இன்ஃப்ரா ரியலிஸ்ட்’ என்றொரு கவிதை இயக்கத்தை இளமையில் நடத்தினார்கள். இருவரும் 1977-ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்குச் செல்கிறார்கள். சாவேஜ் டிடெக்டிவ்ஸ் மொத்தம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அர்டுரோ பெலனோ மற்றும் உலிசஸ் லிமா எனும் இரு கவிகளின் வாழ்வைப் பின்தொடர்கிறது. பெலனோவும் லிமாவும் இணைந்து ‘விஸரல் ரியலிஸம்’ என்றொரு கவிதை இயக்கத்தைத் தொடங்குகிறார்கள். சாண்டியாகோ 1998-ஆம் ஆண்டு விபத்தில் மரணமடைகிறார். அதற்கு முன் அவருக்கு எழுதிய கடிதத்தில் பொலான்யோ, தனது நாவலில் உலிசஸ் லீமா எனும் பாத்திரம் சாண்டியாகோவின் வார்ப்பில் உருவானது என அவருக்கு எழுதுகிறார். முதல் பகுதி முழுவதும் இக்கவிதை இயக்கத்தின் செயல்பாடுகளை, நட்புகளை, அதன் பகுதியாகச் செயல்பட்ட கவிஞர்களின் வாழ்வைச் சொல்கிறது. மூன்றாம் பகுதி முதல் பகுதியின் நேர்த் தொடர்ச்சி. கார்சியா மாதேரொ எனும் இளம் கவி விஸரல் ரியலிஸ்ட் ஆகப் புதிதாக இணைந்துகொள்பவன். அவனுடைய குரலில் இவ்விரு பகுதிகளும் சொல்லப்படுகிறது. இரண்டாம் பகுதி முழுவதும் பல்வேறு நபர்கள் வழியாக நாவல் பயணிக்கிறது. கதை மாந்தர்கள் தத்தமது வாழ்க்கைக் கதைகளைக் கூறுகிறார்கள். தங்கள் வாழ்வினில் அர்டுரோவும் லீமாவும் நுழைந்து வெளியேறும் சித்திரத்தை அளிக்கிறார்கள். 70-களின் மத்தியில் தொடங்கித் 90-களின் மத்திவரை,  இரு இளம் லத்தீன் அமெரிக்கக் கவிகளை, நாவலின் இப்பகுதி தொடர்கிறது. இவர்கள் இருவரைத் தவிர அதே கவிதை இயக்கத்தைச் சேர்ந்த வேறு கவிகளின் வாழ்க்கையையும் பின்தொடர்வதன் வழியாக அந்தக் கவிதை இயக்கத்தின், எழுச்சியையும் வீழ்ச்சியையும் பேசுகிறது எனச் சொல்லலாம். மறுபக்கம், அர்டுரோவும் லீமாவும், தாங்கள் முன்னோடியாகக் கருதும் செஸாரீயா தினாஹேரோ (லத்தீன் அமெரிக்கப் பெயர்கள், அவற்றின் உச்சரிப்புகளை அறிவது ஒரு பெரும் வேலைதான்) எனும் அடையாளமற்றுப் போன ஒரு முன்னோடி எழுத்தாளரை மிகக் குறைவான குறிப்புகளில் வழியாகத் தேடுவதும் ஒரு சரடாக வருகிறது. மூன்றாம் பகுதி சொனோரா பாலைவனங்களில் நிகழ்கிறது. செசாரியாவின் தேடல் மற்றும் மெக்சிகோ சிட்டியிலிருந்து தப்பிய இவர்களைத் துரத்துவது என இரு சரடுகளும் பிணைந்து நாவல் முடிவுக்கு வருகிறது. ஒரு துப்பறியும் கதைக்கான விறுவிறுப்புக் கொண்ட சிறிய பகுதி. பொலான்யோ, நேர்காணலில் தானொரு எழுத்தாளனாக இல்லையென்றால், கொலைக் குற்றங்களைத் துப்பறிபவனாக ஆகவே விரும்பியிருப்பேன் எனக் குறிப்பிடுகிறார். 2666 நாவலிலும் ஒரு துப்பறியும் தன்மை உண்டு. ஒரு பக்கம் ஆர்சிம்பால்டி எனும் எழுத்தாளரை விமர்சகர்கள் கண்டுபிடிக்க முயல்வார்கள். மறுபக்கம் தொடர் கொலைகள் செய்த குற்றவாளியைத் துப்பறிய முயல்வார்கள்.  

முதல் பகுதி முழுக்க, எழுபதுகளின் மெக்ஸிக இலக்கிய உலகம் துலங்கி வருகிறது. இலக்கியக் கூட்டங்கள், கவிதை வாசிப்புகள், கலகங்கள், கட்டற்ற பாலியல் களியாட்டுகள், வன்முறைகள் என விரிகிறது. தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலுடன் சில சரடுகளைப் பொருத்திப் பார்க்க முடியும் எனத் தோன்றியது. பெற்றோர்களற்ற, சட்டக் கல்லூரி மாணவனான, கார்சியா மாதேரோதான் கதை சொல்லி. கவிதைக் கருத்தரங்கில் ஏற்பட்ட இப்படியான ஒரு கலகத்தில்தான் நாவலின் நாயகர்களான அர்டுரோ மற்றும் லீமாவை அறிந்து கொள்கிறான். அந்த முதல் சந்திப்பே அவனுடைய ஒழுங்கைக் குலைத்து விடுகிறது. கல்லூரிக்குச் செல்லாமல் ஒவ்வொரு நாளும் அவர்களைத் தேடி அலைகிறான். இளம் கவிஞர்களாக பொலான்யோவும், நண்பர்களும் கவிதை வாசிப்பு அரங்குகளுக்குள் புகுந்து இடைமறித்துத் தங்களது கவிதைகளை வாசித்துக் கலகம் ஏற்படுத்துவது இன்ஃப்ரா ரியலிஸ்ட்களின் வாடிக்கை. நேர்காணல் தொகுப்பில் பொலான்யோவை நேர்காணல் செய்யும் கார்மன் பூயோசா, தமது முதல் கவிதை வாசிப்பின்போது அக்கூட்டத்தில் இன்ஃப்ரா ரியலிஸ்ட்-கள் புகுந்து கலகம் செய்துவிடக்கூடாது என அஞ்சி நடுங்கியபடியே கவிதை வாசித்ததை நினைவுகூர்கிறார். முதல் பகுதி முழுவதும் மரியா/ ஆன்ஹெலிகா ஃபான்ட் சகோதரிகளின் குடும்பத்தை மையமிட்டு நாவல் நகர்கிறது. அவர்களுடைய தந்தை கிம் ஒரு கட்டிட வடிவமைப்பாளர். விஸெரல் ரியலிஸ்ட்-களின் இதழை வடிவமைத்துக் கொடுப்பவர். மாதேரோ ஒவ்வொரு விஸெரல் ரியலிஸ்ட் ஆகச் சந்திக்கச் சந்திக்க, அவர்களை அறிமுகம் செய்தபடி வருகிறான். லீமாவும் அர்டுரோவும் போதை மருந்துகளை விற்றுப் பணம் சேர்க்கிறார்கள். மெக்ஸிகோ சிட்டியின் கலை ஆளுமைகள் அனைவரையும் அப்படித்தான் சென்று அடைகிறார்கள். அந்தப் பணத்தில் ஐரோப்பாவைச் சுற்றி வரவேண்டும் எனக் கனவு காண்கிறார்கள். மரியாவின் தோழி லூபெ ஒரு பாலியல் தொழிலாளி. அவளுடைய தரகன் ஆல்பெர்டோ ஒரு முரடன். தனது குறியை அளக்க நீளமான கத்தியை வைத்திருப்பவன். அவனிடமிருந்து அவளை மீட்க முயன்று, கிம் ஃபாண்டின் இம்பாலா காரில் சொனோராவிற்குத் தப்புவதுடன் முதல் பகுதி நிறைவுறுகிறது.      

இந்தப் பகுதியைப் புரிந்துகொள்ள பொலான்யோவின் நேர்காணலில் உள்ள இந்த மேற்கோள் உதவக்கூடும். “நான் ஒரு கவிஞனைப்போல் வாழவே விரும்பினேன், இன்று கவிஞனைப்போல் வாழ்வது என்றால் என்ன என்பதை என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் போகலாம். எப்படியாயினும் எனது அடிப்படை ஆர்வம் என்பது ஒரு கவிஞனைப்போல் வாழ்வது என்பதில்தான். என்னை பொருத்தவரை, கவிஞனாக இருப்பது என்றால், புரட்சியாளனாக இருப்பது, எல்லா விதமான பண்பாட்டு வெளிப்பாடுகளுக்கும், எல்லா விதமான பாலியல் வெளிப்பாடுகளுக்கும் முழுமையாகத் தன்னைத் திறந்து வைப்பது, இறுதியாக லாகிரி வஸ்துகளின் எல்லா அனுபவங்களுக்கும் தயாராக இருப்பது…. கலையில் புரட்சியை ஏற்படுத்தி வாழ்க்கையை மாற்றி அன்பை மறுகண்டுபிடிப்பு செய்வது என்பது ராம்போவின் (Rimbaud) லட்சியம். சாரத்தில், வாழ்க்கையையே ஒரு கலைப் படைப்பாக ஆக்குவது.” பொலான்யோவிற்கு ராம்போவின் இந்த லட்சியத்தின்மீது பெரும் ஈர்ப்பு இருந்தது. “இந்த லட்சியம் அதன் அத்தனை மிகைகளுக்கு அப்பாலும், பலரை அழித்துச் செறித்த பின்னரும்கூட ஈர்ப்புடையதாகவே இருந்திருக்கிறது,” என எழுதுகிறார்.  

 பொலான்யோ தன்னை இந்த அலையிலிருந்து ‘தப்பிப் பிழைத்தவன்’ என்றே கருதுகிறார். மேலும்,  ‘இந்த லட்சியம் நம்பமுடியாத அளவிற்குக் கற்பனாவாதத் தன்மை கொண்டது, புரட்சிகரமானது, இந்த லட்சியத்தை அடைய முடியாமல் தோற்ற பல கலைஞர்களின் குழுக்களை, கலைஞர்களின் தலைமுறையைப் பார்த்திருக்கிறது. எனினும்கூட மேற்கில் கலையைப் பார்க்கும் பார்வையை வடிவமைத்ததற்கு இந்த லட்சியத்திற்கு நாம் கடன்பட்டிருக்கிறோம்,’ எனச் சொல்கிறார். இந்நாவலின் முதல் பகுதியில் பொலான்யோ காட்டும் சித்திரம் இதுவே. கவிதை எழுதுவதற்கும், கவிஞனாக வாழ்வதற்கும் இடையிலான இடைவெளி நாவலில் துலங்குகிறது. கவிஞனின் கட்டற்ற வாழ்க்கை முறை மீதிருக்கும் வசீகரம், கவிதை எழுதுவதில் எல்லோருக்கும் இருப்பதில்லை. 

இரண்டாவது பகுதி, அர்டுரோ மற்றும் லீமாவின் இருபது ஆண்டுக் கால வாழ்க்கையின் குறுக்குவெட்டுச் சித்திரம் எனக் கூறலாம். நாற்பது கதைசொல்லிகள் வழியாக அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை நாவல் பின்தொடர்கிறது. முதல் பகுதிகளில் அறிமுகமாகும் விஸெரல் ரியலிஸ்ட்-கள் பலருடைய வாழ்க்கைக் கதைகள் இப்பகுதியில் பதிவாகிறது. பலகுரல் தன்மை எனும் வடிவம் மிகச் சிறப்பாக வெளிப்பட்ட நாவல் என நிச்சயம் சொல்லலாம். மூத்த தலைமுறை எழுத்தாளராக இருந்து எழுத்தைக் கைவிட்டவர் தொடங்கிப் பதிப்பாளர், எதிர் முகாமின் கவிஞர், விமர்சகர், இலக்கியப் பரிச்சயம் ஏதுமற்ற பெண் பாடி பில்டர், அர்டுரோ மற்றும் லீமாவின் காதலிகள், தனது சாதாரணத்துவத்தை உணரும் இலக்கியப் போலிகள், ஓவியன், புகைப்படக் கலைஞன், ஆக்டாவியோ பாசின் செயலர்  என பிரமிக்கத்தக்க வகைமாதிரிகளைச் சேர்ந்த கதைசொல்லிகள். மெக்ஸிகோ, நிகராகுவா, சிலே, அமேரிக்கா, இத்தாலி, ஃபிரான்ஸ், ஸ்பெயின், இஸ்ரேல் மற்றும் ஆப்பிரிக்கா என வெவ்வேறு நிலப்பரப்புகளில் கதை நிகழ்கிறது. இதற்கு முன் இப்படியான பலகுரல் தன்மை வெளிப்பட்ட ஆக்கம் என்றால், ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச் எழுதிய ‘செகண்ட் ஹாண்ட் டைம்’ நூலைச் சொல்லலாம். அது நூற்றுக்கணக்கான சோவியத் ரஷ்யர்களின் வாழ்வை ஆவணப்படுத்தியது. அவை அசல் கதைகள். காலத்தால் பிந்தியதும்கூட. ஆனால், இவை புனைவுகள். லிமா மற்றும் அர்டுரோவை நிராகரிக்கும், உள்ளூரக் கொண்டாடும், புரிந்துகொள்ள இயலாமல் தவிக்கும், கசப்பான நினைவுகளைச் சுமந்து அலையும் எனப் பல்வேறு தரப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. தங்களைப் பாதுகாப்பாக வைத்துகொள்ள முனையும் கவிஞர்களைக் கேலி செய்கிறது, விமர்சிக்கிறது. “அவர்கள் வணிகர்களைப்போல அல்லது கேங்க்ஸ்டர்கள்போல நடந்துகொள்கிறார்கள். மேலும் அவர்கள் எதையும் துறப்பதில்லை அல்லது எதை எளிதாகத் துறக்க இயலுமோ அதை மட்டுமே துறக்கிறார்கள். எதிரிகளை உருவாக்கிக்கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள் அல்லது பலவீனமானவர்களில் இருந்து தங்கள் எதிரியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்,” என இளம் தலைமுறை எழுத்தாளர்கள்மீது நாவலுக்குள் ஒரு கதைசொல்லி விமர்சனத்தை முன்வைக்கிறார். ஸ்பெயினில் ஒரு முகாமிடத்திற்குக் காவலனாக அர்டுரோ இருக்கும்போது, அங்கிருக்கும் ஆழமான கிணற்றுக்குள் சிக்கும் குழந்தையை மீட்கிறான். இதைப் பார்க்கும் ஓர் உயர் வர்க்க ஸ்பானிய வழக்கறிஞரின் பார்வையில் சொல்லப்படும் பகுதி, நாவலின் மிகச் சிறந்த பகுதிகளில் ஒன்று. பிலத்திற்குள் சாத்தான் வாழ்கிறது என்றொரு நம்பிக்கை. அதன் உறுமலை வெளியே கேட்க முடியும். காட்சிப்பூர்வமான சித்திரிப்பு. அர்டுரோவை அவர் பணியமர்த்திக் கொள்கிறார். அவருக்கென ஓர் இலக்கிய இதழும் உண்டு. அதில் பெரும் புகழ்பெற்றவர்கள் எழுதுவார்கள். அர்டுரோ தன்னுடைய மகளுடன் உறவில் இருப்பதை அறிந்துகொள்கிறார். தன்னையே அவர் பிரம்மாண்டமாகக் கற்பனை செய்துகொள்கிறார். அப்படியே அர்டுரோவையும் மகளையும் எதிர்கொள்கிறார். அர்டுரோவின் தன்னம்பிக்கையை உடைத்துவிட முடியும் எனத் தமது ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பத்தைக் கொண்டு கற்பனை செய்கிறார். ஆனால், அர்டுரோவின் ஏதோ ஒன்று அவருடைய விஸ்வரூபத்தை கவிழ்த்துச் சிறுத்துப் போகச் செய்கிறது. அவருடைய மகள் அவனைவிட்டு விலகுகிறாள். எனினும் தன்னுடைய சாதாரணத்துவத்தை உணர்ந்து அழிவின் பாதையில் பயணிப்பதை உணர்கிறார். அர்டுரோ மற்றும் லீமாவின் இலக்கியப் பாணியை விமர்சிக்கும் குரல்கூட உள்ளேயே ஒலிக்கிறது. சற்றே பெரிய மேற்கோள், ஆனால் பொருத்தம் கருதி மொழியாக்கம் செய்கிறேன். ‘’இப்போது ஒரு நம்பிக்கை இழந்த வாசகரை எடுத்துக்கொள்வோம், நம்பிக்கை இழக்கச் செய்யும் இலக்கிய வகைக்கு அவன் தானே வாசகராக இருக்க முடியும். நாம் என்ன காண்கிறோம்? முதலில்: வாசகர் பதின்ம வயதுடையவன் அல்லது முதிர்ச்சியற்ற பெரியவன், பாதுகாப்பற்றவன், பதட்டமானவன். வெர்தரை (கூடாவின் (Goethe) த ஸாரோஸ் ஆஃப் யங் வெர்தர்) வாசித்ததும் தற்கொலை செய்துகொள்ளும் முழு முட்டாள் அவன். இரண்டாவதாக, அவன் குறுகிய எல்லையுடைய வாசகன். ஏன் எல்லையுடையவன்? அது எளிதானது; நம்பிக்கையை இழக்கச் செய்யும் இலக்கிய வகைமையை மட்டுமே அவனால் வாசிக்க முடியும் அல்லது நம்பிக்கை இழந்தவர்களுக்கு உரிய புத்தகங்களை மட்டுமே வாசிக்க முடியும், எப்படியும் இரண்டுமே ஒன்றுதான். தொலைந்த நேரத்தைத் தேடி (இன் ஸர்ச் ஆஃப் லாஸ்ட் டைம்) அல்லது மாய மலை (மாஜிக் மௌண்டென்) அல்லது போரும் அமைதியும் அல்லது லெ மிஸராப்ல – இந்த எதையும் அவனால் முழுவதுமாக வாசிக்க முடியாது… ஒருவன் தன்னுடைய முழு வாழ்க்கையையும் நம்பிக்கை இன்மையுடன் வாழ்ந்துவிட முடியாது. இறுதியில் உடல் ஒத்துழைக்காது, கலகம் செய்யும். நம்பிக்கை இழந்த வாசகன் இறுதியில் புத்தகங்களை விட்டு விலகிவிடுவான். நம்பிக்கை இழந்தவனாக மட்டுமே நீடிப்பான். அல்லது அவன் குணமடைந்து விடக்கூடும். அப்போது அவன் அலட்டல் இல்லாத, அமைதியான வாசகர்களுக்கு எழுதப்பட்டதை நோக்கித் திரும்பக்கூடும்.” அர்டுரோ கலகம் எல்லாம் வடிந்து, குடியையும் பெண்களையும் தவிர்க்கத் தொடங்குகிறான். கணையத்திலும் கல்லீரலிலும் அவனுக்குச் சிக்கல்கள் பெருகத் தொடங்கி அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்லத் தொடங்குகிறான். கிட்டத்தட்ட சாவதற்காக ஆப்பிரிக்காவிற்குள், ஆனால் எப்படியோ வாழும் இச்சையை வளர்த்துக்கொண்டு, வாழ்கிறான். பொலான்யோ இறுதிக் காலத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருந்தவர். ஆனால் அதற்குள்ளாகவே மரணித்துவிட்டார். பொலான்யோவிற்கு எழுத்தாளரின் மரணமின்மையின்மீது பெரும் நம்பிக்கை உண்டு. இந்த நாவலில் வரும் ஒரு வரி, “ஆனால், கவலைகொள்ள வேண்டாம், கவிஞன் இறப்பதில்லை, அவன் எல்லாவற்றையும் இழக்கக்கூடும், ஆனால் இறப்பதில்லை.” இது பொலான்யோவிற்கும் பொருந்தும்.  

பொலான்யோவின் மொழி தீவிரமானது, அலங்காரம் ஏதுமற்றது. துளைக்கும் மொழி எனச் சொல்லலாம். அதிகமும் நீண்ட தன்னுரையாடல் தன்மை கொண்டது. அவசியமான இடங்களில் புறக்காட்சிகளை மிகத் துல்லியமாகச் சித்திரிப்பது. பொலான்யோ அவருடைய நாவல்களுக்காக இன்று அறியப்பட்டாலும்கூட, தம்மை ஒரு கவிஞன் என்றே அதிகமும் உணர்ந்தார். “இல்லை ஆமதியோ, ஒரு கவிதைக்கு ஏதவாது பொருள்  இருந்துதான் ஆகவேண்டும் என்பதில்லை, அது கவிதையாக இருந்தால் மட்டும் போதும்,” என நாவலுக்குள் அர்டுரோ சொல்கிறான். சில இடங்களைத் தனித்து நினைவுகூர முடிந்து. ஓரிடத்தில், “நாங்கள் அனைவரும் ஒன்றாக வெளியேறினோம், இரும்புக் கையின் விரல்களைப்போலக் கும்பலாக,” என எழுதுகிறார், மற்றோர் இடத்தில், “சாலையில் நீளமான ட்ரக்குகளைக் காணும்போது அவை எரிந்த கரங்கள் போல் உள்ளன,” என எழுதுகிறார்.    

பொலான்யோவின் நாவல்களில் ஒரு தொடர்ச்சி உண்டு. உதாரணமாக, சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலில், “ஃபிரெஞ்சு நாவலாசிரியார் ஜே.எம்.ஜி. ஆர்சிம்போல்டி மெக்ஸிகோ வருகிறார்,” என ஒருவரிக் குறிப்பு காணக் கிடைக்கிறது. ஆர்சிம்போல்டி ஜெர்மானிய எழுத்தாளராக 2666 நாவலில் வருகிறார். செசாரியாவுடனான உரையாடல் நினைவுபடுத்தும்போது, 2600களில் ஏதோ ஒன்று நிகழப்போகிறது எனக் கூறி வெடி சிரிப்புச் சிரிக்கிறார். பொற்குழல் கொண்டவரும், ராஸ்புடீன் ஜாடையிலும் இருக்கும் ஹான்ஸ் எனும் நெடிய ஜெர்மானியன் பற்றிய ஒருவரிச் சித்திரிப்பு இந்நாவலில் உண்டு. ஹான்ஸ்தான், 2666 குற்றம் சுமத்தப்படும் ஜெர்மானியன். 2666 பற்றிய குறிப்பு முதலில் ஆமுலெட் நாவலில் வந்ததாகத் தெரிகிறது. ஆர்டுரோ, எர்னஸ்டோ போன்ற கதை மாந்தர்கள் வேறு நாவல்களிலும் வருகிறார்கள்.   

நேர்காணல் நூலில், 2666 நாவலின் குற்றங்கள் சார்ந்த பகுதி எழுதப்பட்டதன் பின்புலத்தை விளக்கியுள்ளார்கள். ஹுவாரெஸ் மாகாணத்தில் 1996-97 காலத்தில் நிகழ்ந்த தொடர் மரணங்கள், அதை கொன்சாலெஸ் ரோத்ரிகெஸ் எனும் எழுத்தாளர் /பத்திரிகையாளர் வெளிச்சமிடுகிறார். அதைத் தொடர்ந்து அப்துல் லத்தீப் ஷெரிஃப் எனும் அரேபியனைக் கைது செய்கிறார்கள். ஆனால் அவனுடைய கைதுக்குப் பிறகும் குற்றங்கள் தொடர்கின்றன. சிறை வளாகத்தில் லத்தீப் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து தனது தரப்பைக் கூறுகிறான். இப்பகுதி முழுக்கவே பொலான்யோவின் நாவலில் வருகிறது. லத்தீப் எனும் அரேபியன், நாவலில் ஜெர்மானியனாக உருமாறுகிறான். 2666 நாவலின் குற்றங்களைப் பற்றிய பகுதியை வாசிக்கும்போது கடும் அமைதியின்மையை உணர்ந்தேன். மூன்று முறை நிறுத்திவிடலாம் என முடிவு செய்து, நிறுத்த முடியாமல் தொடர்ந்தேன். 1993-97 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த 112 பெண்களின் மரணத்தைப் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மொழியில் சொல்கிறார். பொலான்யோவின் நாவல்கள், எழுத்தாளர்கள் அடக்குமுறை அரசாங்கத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையே மீள மீளப் பேசுகிறது. “ஒரு வகையில் எல்லா இலக்கியங்களுமே அரசியல்தான்,” என வாதிடுகிறார். சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலுக்காக விருது பெற்றபோது, “ஏதோ ஒரு வகையில் தாம் எழுதுவது எல்லாமே மோசமான லத்தீன் அமெரிக்கப் போர்களில் மரித்துப்போன இளைஞர்களுக்கு எழுதப்படும் காதல் கடிதம் அல்லது விடைபெறும் கடிதம்தான்,” எனக் கூறுகிறார். சாவேஜ் டிடெக்டிவ்ஸ், மற்றும் 2666 என்ற இரண்டு நாவல்களில் நிகழும் மரணங்களை, எழுத்தாளர் எழுப்பும் நினைவுச் சின்னம் என்றே வகுத்துக்கொள்ள முடியும். 

பொலான்யோவை நமக்கு ஏன் பிடிக்கிறது? 2666-ம் சரி, சாவேஜ் டிடெக்டிவ்ஸ்-ம் சரி, ஒரு வித இலக்கிய லட்சியவாதத்தை முன்வைக்கின்றன. நிச்சயமாகப் பொலான்யோவின் படைப்புகள் சாரத்தில் கற்பனாவாதத் தன்மை கொண்டவை. பொலான்யோ நேர்காணலில் சொல்கிறார், “ஒரு பொது விதியாக, மனிதர்கள் பெரும் நினைவுச் சின்னங்களை நகலெடுப்பார்கள் அல்லது நிராகரிப்பார்கள். ஆனால், சிறிய, கண்ணுக்கே தென்படாத பொக்கிஷங்களைக் கவனிப்பதில்லை.” பொலான்யோ, இப்படியான சிறிய, கண்ணுக்குத் தெரியாத பொக்கிஷங்களை நினைவில் நிறுத்தவே முயல்கிறார். இதே அளவுகோளின்படிதான் அவர் மார்க்கெஸ், ஃபுயெண்டஸ், நெரூதா, ஆக்டேவியோ பாஸ், இசபெல் அயென்டே (இவரை முற்றிலும் நிராகரிக்கிறார். பொலான்யோவிற்குத் தன்வரலாற்றுக் கதைகளின்மீது பெரிய மதிப்பில்லை. பெண் எழுத்துக்கள் பற்றி Savage Detectives நாவலில் இப்படி ஒரு வரியை அதன் ஒரு கதாபாத்திரம் கூறுகிறது – “ஒரு கல்லை நகர்த்துங்கள், அங்கே தன்னுடைய சிறிய வாழ்வைப் பற்றி எழுதும் ஒரு பெண்ணைக் காணமுடியும்” – பொலான்யோ பெண் எழுத்துக்கள்மீது வைத்த விமர்சனமாக இதைக் காண முடியாது. விரிந்த தளங்களுக்குச் செல்லாமல் குறுகிய வட்டத்திற்குள் உழல்வதையே அவர் விமர்சிக்கிறார்.) எனப் பலரையும் விமர்சன ரீதியாக அணுகுகிறார். லத்தீன் அமெரிக்க எழுத்தின் ‘வெடிப்பு’ நிகழ்ந்த அறுபதுகளின் காலகட்டத்தில் சிலரும், அதற்குப் பின்பு மார்க்கெஸ் போன்ற எழுத்தாளர்களை நகலெடுக்கும், அவருக்குப் பிந்தைய தலைமுறை எழுத்தாளர்களும் சர்வாதிகாரிகள், விபசாரிகள், ஆவிகள் என லத்தீன் அமெரிக்கா சார்ந்து ஒரே விதமான வார்ப்புகளை உலகிற்கு விற்கிறார்கள் என பொலான்யோ கருதினார். 

எழுத்தாளர்கள், அதிகாரத்துடன் எவ்வகையிலும் சமரசம் செய்துவிடக்கூடாது. நிகனோர் பார்ராவைத்தான் சிறந்த கவி என பொலான்யோ கருதுகிறார். அதேபோல், கொர்தசாரும் அவருடைய ஆதர்ச படைப்பாளிகளில் ஒருவர். உலகியல் நோக்கில் தோல்வியடைந்த, புகழ்பெறாத எழுத்தாளர்களே பொலான்யோவின் நாயகர்கள். லஷ்ஷெஸ் ஸ்கின் கொல்லப்படுகிறான். எர்னஸ்டோ மூளை பாதிப்படைந்து மரிக்கிறான். அர்டுரோவும் லீமாவும் உலகத்தைப் புரட்டிப்போடும் மூர்க்கத்துடனும், வேகத்துடனும் மெக்ஸிகோ இலக்கியச் சூழலிற்குள் நுழைகிறார்கள். சாத்தியமான கலகங்களை நிகழ்த்துகிறார்கள். “எழுதுதல் என்பதைக் காத்திருத்தல் எனும் சொல்லிற்கான எதிர்ப்பதமாகக் காண்கிறேன்,” என எழுதுகிறார். பொலான்யோவின் நாயகர்கள் எதற்கும் காத்திருப்பதில்லை. எழுதியும், மூர்க்கமாக முட்டிமோதியும் முன்னகர்பவர்கள்.  ஆனால், வற்றிக் காய்ந்து மறைந்த நீரோடைபோல மெல்லிய தடமாகவே சிலரின் நினைவு அடுக்குகளில் மட்டும் எஞ்சுகிறார்கள். எழுத்தாளர் எவ்விதத்திலும் முக்கியமல்லர், எழுத்து மட்டுமே முக்கியம். எழுதுவதை எவரும் வாசிக்கவேண்டும் என்பதுகூட முக்கியமில்லை. சமரசமின்றி ஓயாமல் எழுதியும், வாசித்தும் வாழ்க்கையைக் கடக்க வேண்டும். எழுத்து வாழ்க்கையின் பித்துநிலையை முழுவதுமாக அனுபவிக்க வேண்டும். நாவலில், டான் கிரிஸ்போ எனும் பாத்திரம்  “இலக்கியத்தில் உள்ள சிக்கல் என்னவென்றால், வாழ்க்கையைப் போலவே இறுதியில் மனிதர்கள் இதிலும் போலியாகிவிடுவார்கள் என்பதே,” என்றொரு அவதானிப்பைச் சொல்லும். பொலான்யோ இதை நன்கு உணர்ந்தவர். இந்த மொண்ணைத்தனத்திற்கு எதிரான ஒரு போராட்டம்தான் அவருடைய எழுத்து. இந்நாவலில் ஒரு கட்டத்தில் அர்டுரோதான் சிறந்த விமர்சகன் என்று நம்பும் ஒருவன், தன்னுடைய படைப்பை எதிர்மறையாக விமர்சித்து நிராகரிக்கப் போகிறான் என முன்னுணர்கிறான். அவன் விமர்சனமே எழுதாத சூழலில், அவனுடன் நேர் சண்டைக்கு அழைப்பு விடுக்கிறான். இருவரும் நெடுநேரம் கத்தி வீசுகிறார்கள். விமர்சனத்தை ஏற்க முடியாமை என்பதன்று இதன் பொருள். அர்டுரோ தாமும் சாதாரணத்துவத்திற்குள் விழுந்துவிட்டதாக உணரும் முதல் நொடியில் ஏற்படும் விழிப்பு இத்தகைய அறைக்கூவலுக்குக் காரணமாகிறது. சமரசமற்றுத், தாம் நம்பியதற்காக வாழவேண்டும். உயிரைக் கொடுப்பதானாலும் சரி, உயிரை எடுப்பதானாலும் சரி. 2666 நாவலின் நாயகன் பென்னோ வான் ஆர்ச்சிம்போல்டியை எவரும் சந்தித்ததில்லை. விமர்சகர்கள் அவரைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஆர்ச்சிம்போல்டி இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானிய ராணுவ வீரராக இருந்தவர். யூதர்களை வதை முகாம்களில் கொன்ற தன்னுடைய சக சிறைவாசியை, அவருடைய ரகசியம் வெளிப்பட்டதும் கொல்கிறார்.  சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலில் அர்டுரோவும் லிமாவும் தேடி அலையும் முன்னோடி செசாரியோ எழுதிய கவிதைகள் எதுவுமே கிடைக்கவில்லை. அவரைத் தேடி இறுதியில் வயதான குண்டுப் பெண்ணாகக் கண்டடையும்போது, கறுப்பு அட்டைபோட்ட கவிதைப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. லூபெ எனும் முன்னாள் பாலியல் தொழிலாளியை, அவளுடைய தரகரிடமிருந்து மீட்கும் போராட்டத்தில் செசாரியா மரணமடைகிறார். அர்டுரோவும் லீமாவும் ஊர் ஊராக அலைகிறார்கள். வெவ்வேறு வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனால், எழுத்தும் வாசிப்பும் மட்டும் நிற்கவில்லை.

பொலான்யோ, ஒரு கட்டுரையில் நவீன இலக்கியம் ஹெர்மன் மெல்வில்லின், மொபி டிக் அல்லது மார்க் டுவைனின், ஹக்குல்பெரி ஃபின் என இரண்டில் ஒன்றையே மூலமாகக் கொண்டிருக்க முடியும் என எழுதுகிறார். 2666-இல் மோபி டிக்கின் தாக்கத்தை உணர முடியும் என்றால், சாவேஜ் டிடெக்டிவ்ஸில் ஹக்குல் பெரி ஃபின்னின் தாக்கத்தை உணரமுடியும் என விமர்சகர்கள் சொல்கிறார்கள். 2666-ம் சரி, Savage Detectives-ம் சரி, அடிப்படையில் ஒரு நாயக சாகசக் கதைத் தன்மை கொண்டவை என்பதே அவற்றின் மீதான ஈர்ப்பிற்கு முக்கியக் காரணம். அந்த நாயகர்களின் சாகசத்திற்குப் பின்னால் ஒரு கபடமற்ற தன்மை பொதிந்திருப்பதைக் காண முடியும். கலைக்குத் தம்மை ஒப்புக் கொடுத்தல் என்பது ஒவ்வொரு எழுத்தாளரின் கனவு. பொலான்யோவின் எழுத்துகள், உலகியல் சுழலில் சிக்கிச் சமரசங்கள் வழியாகச் சாம்பல் மூடிச் செத்துக்கொண்டிருக்கும் அந்த கங்கை ஊதிப் பெருக்கித் தழலாக்குகிறது. இதுவே, பொலான்யோவை எழுத்தாளர்களுடைய எழுத்தாளராக ஆக்குகிறது.     

No comments:

Post a Comment