Tuesday, July 14, 2020

ஆல்ஃபா ஆண்- ஒரு விவாதம்

வைரமுத்து விவகாரம் தொட்டு நண்பர்களுடன் விவாதித்தபோது இந்த ஆல்ஃபா ஆண் எனும் கருத்தாக்கம் சுட்டிக்காட்டப்பட்டது. இன்றைய பதிவில் ஜெயும் அதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆசிரியருடன் உடன்பட்டும் முரண்பட்டும் கற்கப்படுவதே கல்வி. எனது முந்தைய கட்டுரையில் வைரமுத்துவை கலைஞன் என கொனாடடுவதில் எந்த சிக்கலும் இல்லை ஆனால் அதற்கு முன் பொதுவெளியில் பகிரங்கமாக கண்டிக்கப்பட வேண்டும் என்றும் சிற்றிதழ் பின்புல நண்பர்கள் இதை எழுதியதுமே சீற்றத்திற்கு காரணம் என எழுதி இருந்தேன். ஜெயும் இதே கருத்துக்களை இன்று வலியுறுத்தியுள்ளார்.  வைரமுத்தின் திரையிசை பாடல் பங்களிப்பை பற்றி அவர் எழுதியுள்ளார். மெட்டு மீதிருக்கும் ஈடுபாடு/ கவனம் அளவிற்கு  எனக்கு பாடல் வரிகள் மீது பெரிய கவனம் இருந்ததில்லை.  ஆகவே இதில் அவருடைய பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என ஜெயும் பிற நண்பர்களும் சொல்வதை ஏற்கிறேன்.

இப்போது இந்த ஆல்ஃபா ஆண் கருத்தாக்கத்திற்கு வருவோம். இந்த ஆல்ஃபா ஆண் கருத்தாக்கத்தில் அவருடன் முரண்படுகிறேன்.இது மிருக கூட்டங்களில் இருந்து அனுமாணிக்கப்பட்டு மனிதர்களுக்கு பொருத்திப் பார்க்கப் படுகிறது. மானுடம் இவ்வகையான சில இயல்புகளை கடந்து பரிணாமம் கொண்டிருக்கிறது. ஒரு ஆல்ஃபா தனது எல்லையின் மீது மிகுந்த அதிகாரம் கொண்டதாக இருக்கும், அதன் முடிவே இறுதியானதாகவும் இருக்கும். இன்னொரு ஆல்ஃபாவிடம் தோற்கும் வரை தன்னை இழக்காது. ஆல்ஃபாவை சுற்றி இயல்பாகவே அந்த கூட்டத்தின் பெண் விலங்குகள் கூடும். இயற்கை தேர்வு முறை இனத்தை காக்க ஏற்படுத்திக்கொண்ட அமைப்பு. 

இதை அப்படியே மனிதர்களுக்கு பொருத்தி பார்க்க முடியுமா? மிருகங்களில் ஆல்ஃபாத்தனம் என்பது சந்ததி உற்பத்தி திறன் சார்ந்ததாக இருக்கிறது. பரிணாமம் அடைய அடைய இது வேறாக மாறுகிறது. உதாரணமாக குரங்குகளில் உடல்வலுவை காட்டிலும் சமூக இணக்கத்தை உருவாக்கும் சிமப்ன்சீக்கள் ஆல்பா ஆகின்றன என்கிறது ஆய்வுகள். இப்போது மனிதர்கள் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்து பல்லாயிரம் ஆண்டுகளாக பண்பாட்டு சமூக கட்டமைப்புகளை உருவாக்கி வளர்த்தெடுத்து உருமாறி வரும்போது ஆலஃபாவின் வரையறைகள் முற்றிலும் மாறுகின்றன. திருமணம் போன்ற அமைப்புகளை உருவாக்கியதன் வழியாக பாலியல் என்பது இயற்கை தேர்வு என்பதிலிருந்து ஒரு சமத்துவ வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள மனித இனம் முயன்றுவருகிறது. ஆகவே இன்று ஒரு ஆல்ஃபா (அப்படி ஒன்று இருக்கும் பட்சத்தில்)  பாலியல் திறமையால் உருவாவதில்லை. மேலும் வரலாற்றின் நம் காலத்தில் செல்வாக்கு செலுத்திய ஆண் ஆளுமைகளை கணக்கில் கொண்டால் அவர்கள் எதிர்பாளினத்தவரை விட சக பாளினத்தவரையே அதிகமும் ஈர்த்துள்ளனர். அல்லது சமமாக ஈர்த்துள்ளனர் அல்லது இந்த ஈர்ப்பிற்கும் தாக்கத்திற்கும் பாலினம் ஒரு முக்கிய பேசுபொருளாக இருக்கவே இல்லை. சிறந்த உதாரணம் என காந்தி, விவேகானந்தர், ஐன்ஸ்தீன் என பலரையும் சொல்லலாம். 

ஜெ முன்னர் முதல் ஆற்றல் என்றொரு கட்டுரை எழுதி இருப்பார். அனைத்து உயிர்களையும் இயக்கும் அடிப்படை விசை, மூலாதார சக்தி காமம் என்பதாக அது முன்வைக்கும். அந்த ஆற்றலை எவ்வாறு மேல்நிலையாக்கம் செய்கிறோம் என்பதே மனித குலத்தின் சவால். பெரும் சமூக மாற்றங்களும், இசையும் கதையும், ஓவியமும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் அந்த ஆற்றலில் இருந்தே ஊற்றெடுக்கிறது. இந்த ஆற்றல் ஊற்றேடுப்பவர்களை நாம் ஆல்ஃபாக்கள் என கொள்ள முடியுமா? இவை இரண்டையும் இணைக்க முடியுமா?. மிருகங்களில் பாலியல் தான் தீர்மானிக்கும் ஆற்றலாக இருக்கிறது, மனிதர்களில் அந்த ஆற்றலை எந்த அளவிற்கு மேல்நிலையாக்கம் செய்ய முடிகிறது என்பதே அளவுகோளாக இருக்கிறது.  ஜெ விதி சமைப்பவர்கள் என்றொரு கட்டுரையும் எழுதி இருக்கிறார். இந்த ஆற்றல் கொண்டவர்கள் முட்டி மோதி பாதையை உருவாக்குகிறார்கள். இவர்களே விதி சமைப்பவர்கள். விதி சமைப்பவர்கள் ஆல்ஃபாக்கள் அல்ல. அவர்கள் ஆல்ஃபாக்கள் போல குறுகிய எல்லைகள் கொண்டவர்கள் அல்ல. தனது territorial எல்லைகளை கடந்தவர்கள். 

அடுத்து ஆல்ஃபா கருத்தாக்கத்தின் மிக முக்கியமான சிக்கல். பாலியல் சுரண்டல் சார்ந்து பேசும்போது இது ஒரு காரணியாக சுட்டப்படுவது பாலியல் சுரண்டலுக்கான கருத்தியல் தளத்தை அமைத்து கொடுப்பதாக தோன்றுகிறது. ஆல்ஃபா கருத்தாக்கத்தை புனைவு உண்மையாக, புனைவிற்குள் மனிதர்களை அவர்களுடைய விழைவுகளை பரீசீலிக்க ஒரு கருவியாக பயன்படுத்துவதில் எந்த தடையும் இல்லை. ஆனால் அதற்கு வெளியே இதை ஆய்வு உண்மையாகவோ அனுபவ உண்மையாகவோ சொல்வது இதற்கொரு கருத்தியல் தளத்தை ஏற்படுத்தி கொடுப்பது தான். ஆல்ஃபாக்களை விட்டுவிடலாம். இந்த மீ டூ குற்றசாட்டு மிக அதிகமாக சுட்டப்படுவது கல்லூரி பேராசிரியர்கள் மீது தான். குறிப்பாக ஆய்வு மாணவர்கள் மீது செலுத்தப்படும் பாலியல் வன்முறைகள். மற்றொரு பக்கம் உயர் அதிகாரிகள். இவற்றை நிகழ்த்துபவர் ஆல்ஃபா அல்ல. மாறாக ஒரு பூச்சி. வெளிச்சம் கண்டால் பயந்து ஓடிவிடும் சந்தர்ப்பவாதி. தனது குறுகிய அதிகார வட்டத்திற்குள் அமர்ந்துகொண்டு அதை தவறாக பயன்படுத்தும் ஒரு நபர் மட்டுமே. நாம் திருமண அமைப்பு போன்றே அதிகார அமைப்பையும் மக்கள்மயப்படுத்தி  இயற்கை தேர்வை பைபாஸ் செய்திருக்கிறோம். ஒரு பல்கலைகழகத்தின் உயர் பதவிக்கு வர ஆல்ஃபாவாக இருக்க வேண்டிய எந்த தேவையும் இல்லை. உயர் பதவியில் இருக்கும் நபரை சுற்றி ஒரு காக்கா கூட்டம் இருக்கவே செய்யும். இவர்கள் செய்வது அதிகார துஷ்பிரயோகம் மட்டுமே. மிக முக்கியமாக இந்த அதிகாரத்தைக் கொண்டு தங்களை அவர்கள் ஆல்ஃபாக்களாக கற்பனை செய்துகொண்டு அதற்குரிய நியாயத்தை கண்டுபிடித்து கொள்வார்கள் என்பதே. வைரமுத்து ஒரு ஆல்ஃபாவா என கேட்டால், தருண் விஜய் போன்ற ஒருவரிடம் குழையும், நிமிர்வற்ற ஒருவர் எப்படி ஆல்ஃபாவாக இருக்க முடியும்? இத்தனை துல்லியமாக அரசியல் சரிநிளைகளை பேணும் திறன் ஆல்ஃபாவிற்கு உண்டா? அப்படியானால் அவருடைய தளத்தில் மட்டுமே அவர் ஆல்ஃபா, ஒரு ஆல்ஃபா தன்னைவிட சக்தி வாய்ந்த ஆல்ஃபாவை எதிர்கொள்ளும்போது தன்னை ஆல்ஃபாவாக முன்வைக்காது என்றொரு வாதம் வைக்கப்பட்டது. இதன்படி அவரவர் குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் எல்லாம் ஆல்ஃபாக்கள் ஆகிறார்கள். வலுத்தவர் வரும்போது சமரசம் செய்து கொள்வதும் இளைத்தவர் வரும்போது எகிறி அடிப்பதும் எப்படி ஆல்ஃபா இயல்பாக இருக்க முடியும. இது பொது மானுட இயல்பு தானே. மத்ஸ்ய நியாயம் என சொல்வார்கள்- சின்ன மீனை பெரிய மீன் விழுங்குவது, அதைவிட பெரிய மீன் அதை விழுங்கும். இதை தனித்தன்மையுடன் சுட்டுவதற்கு என்ன பொருள் இருக்கிறது? அப்படியென்றால் ஆல்ஃபா என்பது சந்தர்ப்பமும் வாய்ப்பும் அமைந்தால் எவரும் ஆகக்கூடிய ஒன்றாக சுருங்கி விடுகிறதே. ஹிட்லர் கூட ஒரு போலி ஆல்ஃபா என்றொரு சந்தேகம் எனக்குண்டு. அதிகாரத்தை பற்றிய கடும் பாதுகாப்பின்மையை உணர்பவர்கள் பேரழிவை உருவாக்குபவர்கள். ஒட்டுமொத்தமாக, இந்த ஆல்ஃபா கருத்தாக்கத்தை, அதன் வரையறைகள் குழப்பமானவை, ஒருவேளை அது நிதர்சனமாகவும் கூட இருக்கலாம், எனக்கு இது சார்ந்து இன்னும் துல்லியமான புரிதல் ஏற்படவில்லை,  ஆனால் மீ டூ போன்ற சிக்கலுக்கு விவாதத்திற்கு எடுத்து கொள்வது சரியானதல்ல என்றே எண்ணுகிறேன்.  

No comments:

Post a Comment