Monday, July 20, 2020

பசித்த மானுடம்- கரிச்சான் குஞ்சு - வாசிப்பு

நெடுநாட்களாக வாசிக்க வேண்டும் என வைத்திருந்த நாவல்களில் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன் கரிச்சான் குஞ்சு அவர்களின் புகைப்படத்தை போட்டு அவர் எழுதிய இந்நாவல் குறித்து அ. மார்க்ஸ் ஒரு பதிவு எழுதியிருந்தார். புறத் தோற்றத்தில் ஆச்சாரமாக தென்படும் ஒருவர் இத்தனை துணிவுடன் இந்நாவலை எழுதி இருக்கிறார்  என்பதாக செல்லும் குறிப்பு. அப்போதிருந்தே வாசித்து பார்க்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன். இன்று ஆடி அம்மாவாசை. நாவலில் ஆடி அம்மாவாசை முக்கியமான கட்டமாக வருகிறது என்பது ஒரு தற்செயலான தொடர்பு. 

கணேசன், கிட்டா என இருவரின் வாழ்க்கை கதையை சொல்கிறது. சிறுவயதிலேயே தாய் தந்தை இல்லாமல் அனாதையாக வளரும் கணேசன் சத்திரத்தில் வளர்கிறான். பிறகு அவனை ஒரு பள்ளி வாத்தியார் வேறொரு ஊருக்கு அழைத்து சென்று வளர்க்கிறார். அதே ஊரை சேர்ந்த கிட்டா கணேசன் மீது எப்போதும் பொறாமை கொள்பவன். உலகியல் வெற்றிகளை நாடி செல்பவன். விலகிய இருவரும் சந்தித்துக்கொள்ளும் புள்ளியில் நாவல் நிறைவுறுகிறது. கணேசனின் பசி உடல் சார்ந்தது. கிட்டாவின் பசி பொருள் மற்றும் அதிகாரம் சார்ந்தது.  கணேசன் உடற்பசியை கடந்து வேதாந்த ஒருமையை அடைகிறான். ஒருவகையில் அவனுடைய தொழுநோய் அதற்கு காரணமாகிறது. கிட்டாவால் அவனுடைய பசியிலிருந்து மீள முடியவில்லை. 

நாவல் அடிப்படையில் ஒரு வேதாந்த தரிசனத்தை முன்வைக்கிறது. உடற்பசி உன்னதமாகி ஆன்ம பசியாக, அறிதலின் வேட்கையாக பரிணாமம் கொள்கிறது. மிக நல்லதொரு வாழ்க்கையில் இருக்கும் கணேசன் சிங்கம் ரவுத்தின் கண்களில் பட்டுவிடுகிறான். தொடர்ச்சியான அலைகழிப்புகள் நிறைந்த பயணம் அவனுடையது. எனக்கு தெரிந்தவரை ஆண் தற்பால் உறவு குறித்து ஒரு சித்திரத்தை அளிக்கும் முதல் நவீன தமிழ் நாவல் இதுவாகவே இருக்கும். கணேசனுக்கு எல்லாமே நம்பமுடியாத விரைவில் சட்டென நிகழ்கிறது. ஆங்கிலத்தில் roller coaster ride வாழ்க்கை என சொல்லும் பதம் அவனுக்கு பொருந்தும். சத்திரத்தில் ஊழியம் செய்து கொண்டிருப்பவன் தோப்பூர் வாத்தியாரிடம் சென்று சேர்வது ஒரு தடாலடி முடிவு. அங்கிருந்து சாலையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிங்கம் ரவுத்தின் வீட்டிற்குள் நுழைந்து அவருடைய உறவில் தன்னை இழப்பதும் ஒரு நொடிப்பொழுதில் நிகழ்ந்து விடுகிறது. அங்கிருந்து வெளியேறுபவன் ஒரு முடிவுடன் ஜவுளி கடைக்காரரிடம் செல்கிறான். பின்னர் ஒரு அரசியல் கலவரத்தில் பயந்து திறந்திருந்த வீட்டிற்குள் நுழையும் கணேசன் அங்கு வசிக்கும் சுந்தரியுடன் பத்தாண்டுகள் குடும்பம் நடத்தி அவள் மரணிக்கும் வரை அவளுடனேயே வாழ்கிறான். அவளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருடன் உறவு ஏற்படுகிறது. தொழு நோய் கண்டு அவனை இரவோடு இரவாக வெளியேற்றுகிறாள். ஒரு ஆடி அம்மாவாசையில் பக்கத்தில் பிச்சை எடுக்கும் கோதையுடன் உறவேற்பட்டு அவளுடனேயே வசிக்க தொடங்குகிறான். நாவலில் தொடக்கத்திலேயே கணேசனின் இயல்பு துலங்கி வருகிறது. அவன் எந்த ஒரு அனுபவத்தையும் விலக்க கூடாது எனும் முடிவுடன் வாழ்வில் எல்லாவற்றையும் எதிர்கொண்டு கடக்கும் திண்மையுடன் இருக்கிறான். ஆகவே அவனுடைய வாழ்க்கையின் அத்தனை கணநேர முடிவுகளும் புரிந்துகொள்ள / ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவே இருக்கிறது. அப்படி தூசியை தட்டி விடுவது போல் ஒன்றிலிருந்து ஒன்றை கடப்பவனுக்கே சமாதி நிலை வாய்க்கிறது. பெறும் தோறும் துறப்பவன் என கணேசனை சொல்லலாம். கிட்டா இதற்கு நேர்மாறாக பெரும் தோறும் குவிப்பவனாக இருக்கிறான். அவனுடைய வாழ்க்கையும் அலைக்கழிப்புகள் நிறைந்தது தான். வண்டியோட்டியாக கும்பகோணம், மன்னார்குடி, மதுரை, காரைக்குடி என அலைந்து திருச்சியில் மருந்து கடைக்கு வருகிறான். பெரும் தொழில் அதிபனாக ஆகிறான். அவனுடைய சாமர்த்தியம் குறைந்த அண்ணனின் புதையல் அவனுக்கு உதவுகிறது. அவனுடைய சொந்த மகனே அவனை வெறுத்து அடிக்கும் சூழலுக்கு உள்ளாகிறான். அவனால் எதையும் எவரையும் துறக்க இயலவில்லை.  கிட்டாவின் பாத்திரம் எனக்கு ஏதோ ஒருவகையில் பொய் தேவு சோமு முதலியை நினைவுக்கு கொணர்ந்தது. உலகியலில் இருந்து ஆன்மிகத்திற்கு சென்று கனியும் சித்திரம் பொய் தேவில் உண்டு. இரண்டு நாவல்களுமே சாரமாக மனிதனின் உலகியல் வெறியை, அவனுடைய ஆன்மீக சுயத்தை மறந்த நிலையை நோக்கி விமர்சனங்களை எழுப்புகிறது. ஆகவே இன்று வாசிக்கும் போதும் நமக்கான எச்சரிக்கையாகவும் காலப்பொருத்தம் உள்ளதாகவும் திகழ்கிறது.   

பசித்த மானுடம் நாவல் வாசித்து முடித்ததும் தோன்றிய முதல் உணர்வு 'பசித்த பிராமணம்' என இந்நாவலுக்கு அவர் பெயர் வைத்திருக்கலாம் என்பதுதான். நாவல் முழுக்க பிராமணர் உலகத்தில் நிகழ்வது. பிராமணர் அல்லாத பாத்திரங்கள் ஒன்றிரண்டு என்றாலும் அவை மிகவும் சாமானியமான வார்ப்புகள். மேலும் மற்றொரு தளத்தில் இந்நாவல் பிராமண சமூகத்தின் மீது தீவிர விமர்சனத்தை வைக்கிறது. வேத வாழ்க்கையை கைவிட்டு வேறு தொழில்களுக்கு பிராமணர்கள் சென்றதைத்தான் நாவல் விமர்சிக்கிறது. சில இடங்களை சுட்ட முடியும். கிட்டா கும்பகோணத்தில் கார் பழக செல்லும்போது அவருக்கு கற்றுகொடுப்பதாக இருந்த நபர் தான் எப்படி பிராமணரால் ஏமாற்றப்பட்டேன் என சொல்கிறார். மேலும் பிராமணர்கள் எப்போது சாப்பாட்டுக்கடை தொடங்கினார்களோ அப்போதே அழிவுகாலம் தொடங்கிவிட்டது என அவருடைய தந்தை சொன்னதாக சொல்லப்படுகிறது. கிட்டாவின் மூத்த மகன் தெளிவு இல்லாதவன் இறுதியாக அவன் பட்டை தரித்து சந்தியா வந்தனமும் பரிசெஷனமும் செய்வது மகத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது. வைணவ கைங்கரியத்தை முன்னெடுத்து  தொழிலை கைவிடும் சீமா அய்யங்கார் பாத்திரமும் இதையே சொல்கிறது. கணேசனை வளர்க்கும் வாத்தியார்கூட பிராமண சமூகம் லட்சியத்தை விட்டுவிட்டு சடங்குகளில் உழல்வதாக ஒரு விமர்சனத்தை வைக்கிறார்.  இதற்கு மாறான வேறொரு பார்வையை கணேசன் பாத்திரம் வழியாக சுட்டுகிறார். ஆடம்பரமாக ஊர்கூடி அவனுக்கு பூணூல் அணிவிக்கிறது. ஆனால் அவன் அதை துறந்தே வாழ்கிறான். சுந்தரியின் நிர்பந்தத்தின் பேரில் அதை அணிந்து கொள்கிறான். அம்மா பிராமணர் ஆனால் தந்தை வேறு சாதி என்றாலும் பிராமண அடையாளத்தை வலியுறுத்தும் சுந்தரியின் பாத்திரம் ஒரு துல்லியமான அவதானிப்பு. சத்திரத்து மாமி, மாச்சி, அம்மு, சாமா, சந்துரு ஐயர், சீனி அய்யங்கார், ராசு அய்யர், செட்டியார், மாத்தூர் அசடு (அப்படித்தான் நாவல் சொல்கிறது), கோதை எனும் கண் தெரியாத பிச்சைக்காரி, பெரியசாமி என பல சிறு சிறு கதை மாந்தர்களும் தனித்துவத்துடன் துலங்கி வருகிறார்கள். கணேசனை குருவாக கருதி அவரிடம் வேதாந்த விசாரத்தில் ஈடுபடும் போலீஸ்காரர் பசுபதி ஜெயகாந்தனின் சிறுகதை மாந்தரை நினைவு படுத்தினார். அசட்டு குரு  ஆர்வமுள்ள ஞானம் கொண்ட சீடன். உண்மையில் சீடனே குருவுக்கு போதிக்கிறான். கணேசனின் சமாதி நிலை பற்றிய சித்திரம் நாவலின் அபாரமான பகுதிகளில் ஒன்று. 

தற்பால் உறவு சார்ந்த பகுதிகள் இன்று நமக்கு எவ்வித பெரிய தொந்தரவையும் அளிக்கவில்லை. ஆனால் நாவல் வெளியான காலத்தில் பெரும் அலையை கிளப்பி இருக்கலாம். ஒருமாதிரி சீரற்ற வேகம் கூடிய கதையாடல் கொண்டதாக நாவல் உள்ளது. அழகியல் ரீதியாக நாவலை விமர்சனத்திற்கு உட்படுத்தலாம் தான். நாவல் எனும் மேற்கத்திய இலக்கியத்தில் உதித்த வடிவத்தை இந்திய இலக்கியம் குறிப்பாக தமிழ் இலக்கியம் எப்படி தனக்கானதாக தகவமைத்து கொள்கிறது என கவனிப்பது மிக சுவாரசியமாகவும், நாம் கற்றுக்கொள்ளகூடியதாகவும் இருக்கும். மேலும் நாவல் சித்தரிக்கும் காலகட்டம், வாழ்கை முறை, நிலப்பரப்புகள் மனதில் ஊறி பெருகுகிறது. நிகர் வாழ்வு அனுபவத்தை அளிப்பதாகவும் இருக்கிறது. 


நண்பர் ஒருவரிடம் இந்நாவல் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். அவர் மன்னார்குடியை பூர்வீகமாக கொண்டவர். இந்த கதை மாந்தர்களில் சிலர் நிஜமானவர் என சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு நிமிடம் ஒரு சிறு துணுக்குறல் ஏற்பட்டது. எந்த நம்பிக்கையில் கரிச்சான் குஞ்சு இந்த நாவலை எழுதி இருப்பார்? நிச்சயமாக தன்னுடைய சொந்த ஊரில் தான் வாசிக்க படமாட்டோம் எனும் சுதந்திர உணர்வு அவரை துணிவுடன் எழுத வைத்திருக்க வேண்டும். எழுத்தாளர் தன் வாழ்நாளில் படிக்கப்பட வேண்டும் எனும் விழைவை அழித்துக்கொண்டு எழுதினால் தீவிரமான சுதந்திரமான படைப்புகளை அளிக்க முடியுமா? இவை இன்றைய சமூக ஊடக காலத்தில் சாத்தியமா?  என சில கேள்விகள் மனதில் உதித்தன. தீர்மானமான பதில்கள் ஏதுமில்லை. .  
  

2 comments:

  1. கணேசன் அவனாக விரும்பி எதையும் செய்யவில்லை, மற்றவர்கள் அவனைப் பயன்டுத்திக் கொண்டனர். மேலும் வனமாலி பாத்திரமும் முக்கியமானது.

    ReplyDelete
  2. கணேசன் அவனாக விரும்பி எதையும் செய்யவில்லை, மற்றவர்கள் அவனைப் பயன்டுத்திக் கொண்டனர். மேலும் வனமாலி பாத்திரமும் முக்கியமானது.

    ReplyDelete