Wednesday, January 22, 2020

சிறுகதையிலிருந்து நாவலுக்கு

(தமிழ் இந்து திசை நாளிதழில் த. ராஜன் தொகுத்த பகுதிக்காக எழுதியது. இன்று வெளியாகியிருக்கும் பகுதியை விட ஐம்பது அறுபது சொற்கள் கூடுதலாக அனுப்பி இருந்தேன். அதை அவர் சுருக்கிப் போட்டிருக்கிறார். தமிழ் இந்து திசைக்கும் ராஜனுக்கும் நன்றி)  

‘அம்புப் படுக்கை’ தொகுதியில் உள்ள நான்கைந்து கதைகள் எழுதி இருந்தபோதே ‘நீலகண்டம்’ எழுதத் தொடங்கிவிட்டேன். நியாயப்படி நாவலாசிரியராகத்தான் அறிமுகம் ஆகியிருக்க வேண்டும். ‘நாவல்’ தத்துவத்தின் கலை வடிவம் என சொல்லப்படும் பார்வை எனக்கு உவப்பானது. ஒரு வாழ்க்கையை சொல்வது அல்லது ஒரு தருணத்தை சொல்வது என்பதைக் காட்டிலும் ஒரு கேள்வியின் சகல பரிமாணங்களையும் வாழ்விலிருந்தும் தொன்மங்களிலிருந்தும், வரலாற்றிலிருந்தும் தொடுத்து ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு ஓர் சமநிலையை அடையும் சாத்தியம் நாவலில் உள்ளது. என் 'குருதி சோறு' 'பேசும் பூனை' 'திமிங்கிலம்' மற்றும் 'ஆரோகணம்' ஆகிய சிறுகதைகளே கூட நாவல் தன்மை கொண்டவை என்றே எண்ணுகிறேன். 

என் மூன்றரை வயது மகன் வடிவங்களுக்கு வர்ணம் தீட்டுவதை பார்த்திருக்கிறேன். சதுரத்தின் கறுப்பு வரையறைகளை மீறி வர்ணங்கள் வழியும். எனினும் அது சதுரம் என்பதில் எவருக்கும் குழப்பம் இருக்காது. சிறுகதை என்பது குழந்தை தீட்டும் சதுரம்தான். கச்சிதத்தின் கலை வடிவம்.  நாவலை ஆக்டோபஸ் அல்லது ஆயிரம் கரங்கள் கொண்ட கார்த்தவீரியாசுரனுடன் வேண்டுமானால் ஒப்பிடலாம். சகல திசைகளிலும்  நீளும் கரங்களை ஒரு மையம் பிணைந்திருக்கிறது. மையத்துடன் பிணைந்திருக்கும் வரை கணக்கற்ற கரங்கள் உருவாகியபடியே இருக்கலாம்.   

‘நீலகண்டம்’ இப்படியான ஒரு முயற்சி. ஒரு உருவகத்தை தன் உடலாக கொண்ட அதன் ஒரு கரம் நாட்டாரியலிலும், ஒரு கரம் தொன்மத்திலும், ஒரு கரம் நவீன வாழ்விலும், மற்றொரு கரம் குழந்தை கதைகளிலும் என நீள்கிறது. என் மருத்துவமனைக்கு ஒரேயொருமுறை ஆட்டிச நிலையுள்ள தன் வளர்ப்பு மகனை அழைத்து வந்த தந்தை ‘இதுக்கு நாங்க பிள்ளை இல்லாமலேயே இருந்திருப்போம் சார்’ என விரக்தியில் தழுதழுத்து கூறிய ஒரு வரி தான் ‘நீலகண்டத்தின்’ விதை.

 நாவல் எப்படிப்பட்டதாகவும் இருக்கட்டும், அதை வாசகரின் வாசிப்பிற்கே விட்டுவிடுகிறேன்,  என்னளவில் நாவல் எழுதிய காலகட்டம் வாழ்வின் மிக இனிமையான நாட்களில் ஒன்று. நாவலுக்கென நாம் வகுத்த திட்டங்கள் தடம் பிறழ்ந்து வேறொன்று எழுந்து வருவதை காணும்போதெல்லாம் மனம் பெரும் உவகை கொண்டது. முதல் நாவல் என்பது ஒரு படிநிலை, அதற்கு பின் எல்லா கதைகளையும் மனம் நாவல்களாகவே புனையத் தொடங்குகிறது. எனினும் சிறுகதைகள் நாவல்கள் என இரண்டையுமே தொடர்ந்து எழுதவே விழைகிறேன்.

No comments:

Post a Comment