Wednesday, January 15, 2020

நஞ்சுக்கும் அமுதென்று பேர்- நீலகண்டம் குறித்து சுபா

(நண்பர் சுபஸ்ரீ சிங்கப்பூரில் வசிப்பவர் என சொல்லிக்கொண்டாலும் பெரும்பாலும் எங்களுக்கு எல்லாம் பொறாமை ஏற்படுத்தும் அளவிற்கு உலகின் வெவ்வேறு மூலைகளுக்கு பறந்து சென்று கொண்டிருப்பவர். நீலகண்டம் குறித்து இதுவரை வந்துள்ள சிறந்த பார்வைகளில் ஒன்று. எழுத்தாளர் எழுதி முடித்த படைப்பிற்கு உரிமை கொண்டாடக் கூடாது, எதிர்மறை விமர்சனத்தையும், நேர்மறை பாராட்டையும் சமநிலையில் அணுகுவதே சிறந்தது என மனதை பழக்க முயன்றபடி இருந்தாலும், இத்தகைய ஒரு வாசிப்பு நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.  நன்றி சுபா)

அன்புள்ள சுனீல்,

நீலகண்டம் வாசித்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. என்னை மிகவும் பாதித்த நாவல். உறவினுள்ளேயே தத்தெடுக்கப்பட்ட எனது குழந்தைப்பருவம் இன்றுவரை அவ்வப்போது தலைசிதறும்படியான கேள்விகளை எழுப்பியபடி தோளில் கணக்கிறது.

அதனாலேயே இதை தர்க்கரீதியாகவோ விமர்சனமாகவோ அணுக முடியவில்லை என்று நினைக்கிறேன். எனினும் இயன்றவரை எனது வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.


குழந்தைப்பேறுக்கான சமூக அழுத்தம், ஆட்டிசக் குழந்தைவளர்ப்பின் தத்தளிப்புகள், காதலின் வண்ணங்கள் மண
உறவுக்குப்பின் வெளிறிப்போதல் எனப் பல்வேறு பேசுபொருள் வந்தாலும் சுழிமையமாக எனை ஈர்த்தது இந்நாவல் காட்டும் தாய் தந்தை - பிள்ளைகளின் உறவுதான். பெற்றோர் என்ற வார்த்தையை கவனமாகவே தவிர்க்கிறேன்.

தாய் தந்தையரால் கைவிடப்பட்டதாக உணரும் குழந்தையாக, பெற்ற குழந்தையை பலி கொடுக்கத் துணிந்த பெற்றோராக, பல சமூக நிர்ப்பந்தங்களுக்கிடையே விரும்பியேற்ற வளர்ப்புக் குழந்தையை பெற்ற குழந்தையினும் 'அதீதமாக' அன்பு செலுத்த முயலும் தாய் தந்தையராக, அவ்வன்பை நன்றியறிதலாக பிரதிபலிக்க நேரும் வளர்ப்புக் குழந்தையாக என்ற பல வாசிப்புக் கோணங்களை இந்நாவல் தருகிறது. அது ஒவ்வொன்றும் உள்ளூர உணரச் செய்யும் மெய்யான தத்தளிப்பே இந்நாவல் வாசிப்புக்குப் பிறகு கண்டத்தில் நிற்கும் நஞ்சு.

முதலாவதாக நாவலின் மையம்.

கதையெங்கும் ஒரு நீள் சரடென தத்தெடுப்பது வருகிறது. வரு, அவள் பாட்டி வரலக்ஷ்மி, செந்திலின் தாத்தா நாகப்பன், தருணிகா(மீரா-முரளி) என்று ஒரு வரிசை. பெற்றோரால் கைவிடப்பட்டவர்களின் ஒரு வரிசை - நாகம்மாள், சீராளன், ரயில் ஓட்டுனரின் குழந்தை என

தாய்-தந்தைமை, மக்கட்பேறு என்பதன் பொருட்டு மானுடம் எது வரை செல்கிறது என்ற கேள்வியை இந்தக் கதை மையமாக எழுப்பிக் கொள்கிறது. அதன் ஒரு எல்லையில் குழந்தைப் பேறுக்காக ஆன்மீகம் முதல் விஞ்ஞானம் வரை கதவுகளைத் தட்டி தத்தெடுக்க முனைவதும், மறுமுனையில் தத்தெடுத்த பிறகு தடுமாறுவதும், பெற்ற பிள்ளைகளிடம் தங்கள் வழியே மண் வந்த உரிமையாலேயே பலியிடுவது முதல் புறக்கணிப்பது வரை செல்வதுமென விரிகிறது நஞ்சூறும் தருணங்கள்.

'உசிரக் கொடுத்தவ நான், எடுக்கக்கூடாதா' என்ற மெடியாவின் மனநிலையில் பெற்றோரால், தான் பெற்றெடுத்த குழந்தைகள் வாழ்வின் மீதான முடிவுகளை எடுப்பது (உயிர் எடுப்பது உட்பட) சரியோ தவறோ இலகுவாக இருக்கிறது. சுடலைமாடனால் தன் குருதியைக் குடிக்க முடிகிறது. ரம்யாவின் தாயால் தன் பெண்ணை மீண்டும் மீண்டும் உதாசீனப்படுத்த முடிகிறத. ரம்யா தனது அம்மாவின் அன்பிற்காகக் காத்திருந்தது அவள் அணுக நேரும் போது புறக்கணிப்பைத் தருகிறாள். அந்தப் புறக்கணிப்பு ஒரு வகையான உரையாடலே எனத் தோன்றியது. தாயும் மகளும் மிகச் சரியாக உணர்ந்து கொள்ளக்கூடிய உரையாடலே இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் காட்டிக் கொள்ளும் புறக்கணிப்பு போன்ற ஒன்று.

செந்தில்-ரம்யா வரு குறித்து கொள்ளும் தத்தளிப்பு அதில் இல்லை. தருணிகா தூக்கிச் சுமக்கும் நன்றியறிதல் எனும் நஞ்சு அதில் இல்லை.
பங்காளி வீட்டில் இருந்து தத்துவந்த நாகப்பன் மீது அளவுக்குமீறிய அன்பைப்பொழிவதும்,
மரகதவல்லி கருவுற்றதும் இயல்பாக நாகப்பன் மேல் கோபம் கொள்ள முடிந்தது என்பது மிகச் சிறந்த அவதானிப்பு. புறக்கணிப்பு மட்டுமல்ல, அளவுக்கு மீறிய, அல்லது நிர்பந்திக்கப்பட்ட அன்பும் நஞ்சாகத் திரியும்.

இது ஒரு புறமெனில் பெற்றோரால் வாழ்வின் கதி நிரந்தரமாக மாற்றிவிடப்பட்ட பிள்ளைகளின் பார்வை இரு எல்லைகளில் ஓன்றாகவே இருக்கிறது. தந்தையரின் பெருமை பொருட்டு தெய்வங்களுக்கு பலியிடப்படுவதன் துயரம் என்று தாய் தந்தையரால் கைவிடப்பட்டதாக உணரும் சீராளன் ஒரு முனை என்றால், தனைக் கொல்லாது ஐந்து குழந்தைகளை பலி கொண்டு வாழ்நாளுக்கும் வலி தந்து சென்றதாக உணரும் ரயில் ஓட்டுனரின் குழந்தை மறுமுனை. இரு எல்லைகளிலும் தன் மேல் 
வாழ்வின் செல்திசையை மாற்றிவிட்ட முடிவுகளை சுமத்திய பெற்றோரால் கைவிடப்பட்டதாகவே உணர்கிறார்கள். எத்திசை தேரினும் அத்திசை நஞ்சே. 


இரண்டாவதாக நாவலில் வரும் படிமங்கள்.

சிதல் கதையின் தொடர்ச்சி போல நாவலின் நடுவில் வரும் கரையான் நாவலின் பேசுபொருளின் சிறந்த படிமமாகப் படுகிறது. அம்மாவின் நினைவாக எஞ்சும் பவளமல்லிச் செடியில் மண்ணெண்ணெய் ஊற்றுவது போல, உதறவியலாத உறவின் பொருட்டு அன்பின் வேரில் நஞ்சை உமிழும் நீலகண்டர்கள்.

செந்திலின் பூர்விக வீடு - நஞ்சுமிழும் வீடு, வாழவும் வழியின்றி, கைவிடுதலின் குற்றவுணர்வைத் தந்தபடி, விற்று வெளியேறவும் விடாமல் பால்யங்களின் நினைவைச் சுமந்த வீடு. அவனது மகள் வருவைப் போல. இரண்டும் அவனை வந்தடைந்தவை. நேசத்தின் கவர்ந்திழுக்கும் நச்சு உமிழ்பவை. உட்செரிக்கவோ உமிழ்ந்து விடவோ இயலாதவை.
வீட்டைப் பார்த்து,
"ஏன் இதைக் கட்டுவானேன், கட்டிச் சீரழிய விடுவானேன்" என்ற எண்ணவோட்டத்தின் தொடர்ச்சியாக "இந்த ஊர் வருவுக்குப் பிடிக்கும்" என்று செந்தில் எண்ணுவது மிக இயல்பாக அவனுள் இந்தத் தொடர்பை தொட்டெடுக்கிறது.

வேதாளம்-விக்கிரமன் உரையாடல்கள் கதையைக் கட்டமைக்கும் உத்தியாக மட்டுமல்லாது, நஞ்சு-அமுது எழும்பொழுதுகளின் இருமை நிலையைச் சொல்கிறது.
நாம் அனைவருமே ஒரு வகையில் மனதுள் எழும் நஞ்செனும் வேதாளத்தை நீதியுணர்வினால் கட்ட முயலும் விக்கிரமர்கள்தானே.

தேவர்-அசுரர் சித்தரிப்பும் பாற்கடல் கடைதலும் மிகப் பொருத்தமாக வருகிறது. இந்நாவல் வாசிப்பு நிகழ்த்திவிடும் மாபெரும் மனக்கடல் கடைதலில் அமுதுக்கான விழைவில் உள்ளுக்குள் எஞ்சியிருக்கும் நஞ்சு வெளிவந்து அசுரர்தன்மையை உணரச் செய்கிறது, ஆழத்தில் எங்கோ நிழலென தேவனெனத் திகழும் சில தருணங்களையும் உணர்த்துகிறது. தேவரும் அசுரரும் வெறும் மனநிலைகளே என்பது மட்டுமல்ல, அமுதே நஞ்சென்பதும் இந்நாவல் காணும் மெய்மையே.

மூன்றாவதாக, வாசிப்புக்குப் பிறகு முற்றுப்புள்ளி வைக்கவிடாது நாவல் மனதுள் வளர்ந்து கொண்டே இருக்கும் முடிச்சுகள்.

அலமேலுவிடம் தான் அனுபவித்த வேதனையை வரலட்சுமி என்னவாக மாற்றிக் கொள்கிறாள்? அது அவளை ரம்யா-வரு உறவை எவ்விதம் புரிந்து கொள்ள வைக்கிறது? இவை எல்லாம் நான் இன்னும் தட்டித் திறந்து கொண்டிருக்கும் கேள்விகள். இசையைத் தொலைத்த மிருதங்கம் கண்டு தளர்ந்து போன தந்தையால் வருவை உணர்ந்து கொள்ள முடிவது புரிகிறது. 

ஹரி அவனது தந்தை ஏதோ ஒரு விதத்தில் தந்த புறக்கணிப்பை அவனது நிலைகொள்ளாமை, எதிலும் இயைந்து கொள்ளும் நீர்மை, நீர்படூஉம் புணை போன்ற வாழ்க்கை என்று வாழ்வின் வழியாக அந்த நச்சை கண்டத்தில் வைத்திருக்கிறானோ என்றெண்ணிக் கொண்டேன். நஞ்சைக் கண்டுகொள்வதற்கும், அதை உமிழ்ந்துவிடாதிருப்பதற்கும், தானே உட்செரித்து அழிவதற்கும்தான் எத்தனை எத்தனை மகத்தான காரணங்கள் தருகிறது இவ்வாழ்வு!

நிகழ்கதை - கனவு - புனைவு - தொன்மம்- குழந்தையின் உலகம், நீத்தோர் கதை என்ற அனைத்து தளத்திலும் பயணம் செய்யும் இந்நாவலும், அதன் பல காட்சிகளும் ஒரு ஆழமான நதியின் அடியில் குளிர்ந்து கிடக்கும் கல் போல எனக்குள் என்றுமிருக்கும்.

மிக்க அன்புடன்,
சுபா

No comments:

Post a Comment