Monday, January 27, 2020

தன்னொளி துலக்கும் காந்தி - பாலாவின் இன்றைய காந்திகள் முன்வைத்து

(ஜனவரி பத்தாம் தேதி சென்னையில் நிகழ்ந்த விஷ்ணுபுர வட்டத்தின் பத்து நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். இன்று ஜெயமோகன் தளத்தில் வெளியாகியுள்ளது.) நம்முள் ஆன்மீக பிரக்ஞை வளர வளர நாம் இவ்வுலகத்தில் இருக்கும் எல்லாவற்றோடும் நம்மை அடையாளப்படுத்தி கொள்கிறோம்.. ஆகவே சுரண்டல் அங்கு இல்லை. நமக்கு நாமே உதவிக் கொள்கிறோம். நம்மை நாமே குணப்படுத்திக் கொள்கிறோம்- டாக்டர். வெங்கிடசாமி, அரவிந்த் கண் மருத்துவமனைலாரி பேக்கர் காந்தியை முதன்முதலாக சந்தித்த தருணத்தைப் பற்றி வாசித்ததுண்டு. இந்தியர்களுக்கு உகந்த கட்டுமானத்தை எழுப்புங்கள் என பேச்சு வாக்கில் காந்தி சொனனது அவருடைய வாழ்வை திசை மாற்றியது. வெரியர் எல்வினின் கதையும் இதுதான். குமரப்பாவின், வினோபாவின், லட்சுமண அய்யரின், ஜே.பி.எஸ்.ஜெயாவர்தனேயின் என அனைவரின் கதைகளும் இதுதான். ஒரு தீண்டல், ஒரு சந்திப்பு வாழ்வின் வசதிகளை அனைத்தையும் துறந்துவிட்டு முகமறியா மக்களுக்கு பணியாற்ற இவர்களை துரத்தியது ஒருவகையில் ஒரு பித்துதான். காந்தியின் ஆற்றல் அல்லது அவர் வழிபட்ட சத்தியத்தின் ஆற்றல் இது. பாலாவின் ‘இன்றைய காந்திகள்’ நூல் அபய் பங்கின் தந்தை தாக்கூர் தாஸ் பங்கின் கதையை சொல்கிறது. அமெரிக்காவில் முழு உதவித்தொகையுடன் பொருளியல் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ‘சேவா கிராமத்தில். பாபுவின் முன்பு தன் கல்லூரி அனுமதிச்சீட்டை வைத்து வணங்கினார். “பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் படிக்க அமேரிக்கா போகிறேன். உங்கள் ஆசிகள் வேண்டும்” என்றார். “பொருளாதாரம் படிக்க வேண்டுமெனில், கிராமங்களுக்குச் சென்று ஏழை மக்களுடன் வாழ்ந்துப்படி” என்றார் பாபு. அவர்  பேச்சுக்கு மறுவார்த்தை ஏது? அனுமதிச்சீட்டை கிழித்தெறிந்துவிட்டு, சேவாகிராமம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வாழச்சென்றார்.’ என ஒரு நிகழ்வை பாலா குறிப்பிடுகிறார்.

Image result for dr g venkataswamy aravind eye hospital
டாக்டர். வெங்கடசாமி 

காந்தி ஒரு சுடர், பற்றிக்கொள்ளும் பதமிருந்து அவரை நெருங்கும் எவரும் சுடரை தமதாக ஏந்திக்கொள்பவர்கள். பாலாவின் ‘இன்றைய காந்திகள்’ அப்படி நெஞ்சில் சுடரேந்தி ஒளி வளர்க்கும் பதினோரு ஆளுமைகளை எளிய நேரடியான உணர்ச்சிகரமான வாழ்க்கை பின்னணியை விவரித்தபடி நமக்கு அறிமுகப் படுத்துகிறது. முன்னுரையில் ‘காந்தியம் என்பது சாமானியர்களிடமிருந்து வெளிப்படும் ஒளிதான்.’ என சமஸ் குறிப்பிடுவது சரியான பார்வை. பத்து நேரடி கட்டுரையும் இறுதியில் ஒரு மொழியாக்க கட்டுரையும் கொண்ட தொகுப்பிது. கடைசி கட்டுரையான ஜான் ட்ரெஸ் பற்றிய கட்டுரை ராமச்சந்திர குஹா எழுதிய ஆங்கில கட்டுரையின் தமிழ் மொழியாக்கம். அதை அவருடைய அனுமதியோடு பதிப்பித்துள்ளார்.

கிருஷ்ணம்மாள் அவர்களின் ஆசி, பாலாவின் என்னுரை, சமஸின் முன்னுரை, தன்னறம் பதிப்புக் குழுவின் பதிப்புரை என கட்டுரைகளுக்கு முன் நான்கு முன்னுரைகள் உள்ளன. பொதுவாக இது ஒரு சரியான பதிப்பு உத்தி அல்ல என்றே தோன்றும். பக்கங்களை ஓட்டிவிட்டு நேராக கட்டுரையை வாசிக்கத் தோன்றும். ஆனால் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்றைய காந்திகள் எனும் காந்தியால் தககமுண்ட ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் நூலில் இன்று தமிழகத்தில் வாழும் மூத்த காந்தியர் கிருஷ்ணம்மாள் பங்களிப்பு ஆற்றுவது பொருத்தமானது. எளிய ஒரு வரிதான், பலரும் பல சமயங்களில் சொன்னதும் கூட தான், நாமே அறிந்ததும் கேள்விப்பட்டதும் தான் ஆனாலும் “நோக்கத்தின் உண்மை குடியிருக்கும் எச்செயலும் எச்சொல்லும் நிச்சயம் நிறைவேறும்” எனும் வரியை கிருஷ்ணம்மாள் அவர்களின் சொற்களாக வாசிக்கும்போது மனம் ஆழ்ந்த சுய விசாரணையை நோக்கிச் செல்கிறது. ஒருவகையில் இந்த நூலில் உள்ள அனைத்து ஆளுமைகளையும் கோர்க்கும் சரடு என இந்த வரியையே சொல்லலாம். இதுவே அவர்களை இயல்பாக காந்தியை நோக்கி கொண்டு செல்கிறது என எண்ணுகிறேன். சமஸ் அவருடைய முன்னுரையில் இப்படி குறிப்பிடுகிறார் “ஏற்கனவே உருவாக்கப்பட்ட சட்டகங்களுக்கு வெளியே மக்களுக்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வோர் தனக்கென ஒரு அர்த்தப்பாட்டை நோக்கி நகரும் இடத்தில்தான், ஒரு சாமானிய இந்தியரின் தார்மிக அடையாளமாக காந்தி உருமாறுகிறார்.”இந்த நூலுக்கு ஏன் இன்றைய காந்தியர்கள் என பெயர் வைக்கவில்லை என யோசித்துக்கொண்டிருந்தேன். காந்தியர்களுக்கும் காந்திகளுக்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு என தோன்றியது. காந்தியர்கள் காந்திய அமைப்புகளில் அமர்ந்து காந்தியை நகல் எடுப்பவர்களாக குறுகி விடுகிறார்கள் எனத் தோன்றுகிறது. காந்தியை ஆன்ம துணைவனாக கொள்ளாமல் அமைப்பு துணைவனாக, அச்சத்தில் பதுங்கிக் கொள்ளும் முகமுடியாக பயன்படுத்துகிறார்கள் என்றும் தோன்றியது. காதி அணிந்து, புலால் உண்ணாமல், மது அருந்தாமல், தினமும் பிரார்த்தனை செய்தபடி, ரகுபதி ராகவ ராஜாராம் பாடியபடி காந்தியை ஒரு ஆச்சாரமாக தொடர்கிறார்கள். இவ்வகையான வாழ்விற்கு முக்கியத்துவம் இல்லாமல் இல்லை. ஒருவகையில் அது ஆன்ம சாதனத்தின் பாதை. ஆனால் இவர்களின் சமூக பங்களிப்பு எந்த அளவிற்கு பொது போக்கை மாற்றியிருக்கிறது என தெரியவில்லை.. சாரம்சத்தை விட்டுவிட்டு ஆச்சாரங்களை  நகல் எடுக்கும் போது எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில்லை. சட்டென சசி பெருமாள் நினைவுக்கு வருகிறார். புதிய காலத்தின் புதிய சிக்கல்களுக்கு புதிய தீர்வுகள் உருவாக்க வேண்டியது அவசியம். இன்றைய காந்திகள் அனைவரும் இப்படி உருவாகி வந்தவர்கள். சமஸ் குறிப்பிடுவது போல் காந்தியம் படைப்பூகத்தில் வாழ்கிறது. ‘காந்தியின் சாராம்சம்- அனைவரிடத்தினும் அன்பு- சமத்துவம்- கடைசி மனிதனுக்குமான அதிகாரம்- ஒட்டுமொத்த ஆன்ம விடுதலை’ என சமஸ் குறிப்பிடுகிறார். ஒருவகையில் புத்தர், இயேசு என எல்லா மாபெரும் ஆளுமைகளையும் இப்படி சாரம்சப்படுத்திவிட முடியும். இந்த சாரம்சத்தை உள்வாங்கிய ஆளுமைகள் படைப்பூக்கத்துடன் தங்கள் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். சமஸ் அண்ணாவை காந்தியராக முன்வைப்பதன் பின்னணி ஓரளவு துலங்கி வருகிறது.

பாலா ஒரு மேலாண்மை பட்டதாரி. இந்த நூலில் அவருடைய மேலாண்மை கோணம் பிரதானமாக வெளிப்படுவது ஒரு தனித்தன்மையை அளிக்கிறது. அமுல், அரவிந்த் என வணிக ரீதியாக மிகவும் வெற்றிகரமாக செயல்படும் இரண்டு நிறுவனங்கள் பற்றி மேலாண்மை புள்ளியிலிருந்து மக்கள் நலன் நாடும் அரசு குறித்து சில கோணங்களை முன்வைக்கிறார். அமுல் கூட்டுறவு அமைப்பின் ஒரு முன்மாதிரி. மந்தன் திரைப்படம் திரையிடப்படும் போது ‘ஐந்து லட்சம் குஜராத் உழவர்கள் வழங்கும்’ என திரையில் மின்னும்போது பெரும் உணர்வு கொந்தளிப்பை பார்வையாளராக தான் அடைந்ததை பாலா குறிப்பிடுகிறார். அமுல் மூன்றடுக்கு கொண்ட சமூக அமைப்பு- அஸ்திவாரத்தில்- கிராமக் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உறுப்பினர்களாக இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் இரண்டாவது அடுக்கில் – பாலை பதனம் செய்யும் வட்டார அமைப்புகள் மூன்றாம் அடுக்கில் – விற்பனை செய்யும் நிறுவனங்கள்  என அதன் வடிவத்தை விளக்குகிறார். கிடைக்கும் லாபத்தை தன் பங்குதாரர்களிடமே திரும்பி அளித்து விடுகிறது. அமுலும் சரி அரவிந்தும் சரி தொழிலுக்கு தேவையான தொழில்நுட்பங்களை தாங்களே  உருவாக்கிக்கொண்டார்கள்.

ஒரு நிறுவனத்தின் குறிக்கோள் லாபம் குவிப்பது என்பதல்ல. நுகர்வோரின் தேவையை அறிந்துகொண்டு, அதை மிகச்சிறப்பாக, விரைவாக, குறைந்த செலவில் பூர்த்தி செய்வதே ஒரு நிறுவனத்தின் குறிக்கோளாக இருக்க முடியும்- லாபம் என்பது ஒரு நிறுவனம் சரியாக இயங்குகிறது என்பதற்கான அடையாளம் மட்டுமே எனும் பீட்டர் ட்ரக்கரின் மேற்கோள் இவ்விரு நிறுவனங்களுக்கும் பொருந்தும்.


அரவிந்த் கண் மருத்துவமனையின் டாக்டர் வெங்கிடசாமியின் கனவு ஒரு வகையில் ராபின்ஹுட்தனமான கனவு தான். பணம் உள்ளவர்களிடம் வாங்கி இல்லாதவர்களுக்கும் அதே சிகிச்சையை அளித்து வரும் நிறுவனத்தை உருவாக்குவது. பணம் வாங்குவது என்பதும் கூட தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் மிகக் குறைவுதான். ஃபோர்டின் அசெம்ப்ளி லைன் தொழில்நுட்பத்தை மருத்துவமனையில், அறுவை சிகிச்சை மேசையில் செயல்படுத்தி பார்த்திருக்கிறார். மூலப் பொருட்களை தாங்களே உற்பத்தி செய்கிறார்கள். எழாயிரம்ரூபாயில் இறக்குமதி செய்யப்பட லென்ஸ்களை வெறும் 140 ரூபாய்க்கு இங்கே தயாரிக்கமுடிந்தது. இன்று உலகம்முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.. கண் சிகிச்சைக்கான மருந்துகளை அவர்களே தயாரிக்கிறார்கள்.

நான் அண்மையில் அரவிந்த் மருத்துமனையின் நிறுவனர் டாக்டர் வெங்கிடசாமியின் சகோதரி டாக்டர் நாச்சியார் அரவிந்த் மருத்துவமனை குறித்து ஆற்றிய உரையை கேட்டேன். அபார மன எழுச்சி அளித்த தருணம் அது. குறிப்பாக அவர்கள் வேலைக்கு எடுப்பது எப்படி? அளவுகோள் எவை என விவரித்தார். செவிலி வேலைக்கு வரும் பெண்ணுக்கு பேருந்து கட்டணமும் நிலத்தில் எவ்வளவு விளைந்தது என்றும் தெரிந்திருந்தால் அவள் சமூகத்துடனும் குடும்பத்துடனும் நெருக்கமாக ஊடாடி வருகிறாள் என பொருள். தங்க பதக்கம் வாங்கியவர்கள் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு தேவை எல்லாம் இத்தகைய ‘கூர்’ உடையவர்களே என்றார். ஒருவகையில் பாலாவின் புத்தகத்தில் செயல்படும் அத்தனை காந்திகளுமே சாமானியர்களின் அறிவு ஆற்றலை நம்புகிறார்கள். அதை உரிய முறையில் பயன்படுத்த முடியும் என கருதுகிறார்கள். இந்தகூற்றுக்கு உதாரணமாக நாம் மருத்துவ தம்பதியர் அபய் பங் மற்றும் ராணி பங்கின் வாழ்வை காணலாம். ‘ஆரோக்கிய சுயராஜ்ஜியம்’ தான் அவர்களுடைய இலக்கு.

குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் பழங்குடி பகுதிக்கு மருத்துவ சேவை ஆற்ற வருகிறார்கள் பங் தம்பதியினர். மருத்துவமனையில் மாதந்தேஷ்வரியின் கோவில் இருக்க வேண்டும் என பழங்குடி மக்கள் விரும்பினார்கள் என்பதால் அதை நிறுவுகிறார்கள். மருத்துவமனைக்கும் அதே பெயரை இட்டார்கள். பல்வேறு நம்பிக்கைகள் வழக்கங்களுக்கு எதிராக போராட வேண்டி இருந்தது. மிகக் குறைந்த செலவில் உள்ளூரிலேயே செவிலிகளை தயார் செய்வது. இன்சுலின் ஊசி வழியாக சரியான அளவு கிருமி கொல்லியை குழந்தையின் எடைக்கு ஏற்ப அளிக்க முடியும் எனும் நுட்பத்தை செயல்படுத்துவது இவர்களின் நூதன பங்களிப்பு. ‘ஆஷா’ எனும் கருத்துருவாக்கம் அபய் பங் மற்றும் ராணி பங்கின் யோசனைதான் உள்ளூர் குழந்தை பராமரிப்பு பயிற்சி செய்து கொண்டவர்களை ஊசி போட அனுமதிப்பதில் சட்ட சிக்கல்கள் இருப்பதால் அவர்களுடைய திறனை மதிப்பிட எய்ம்ஸ் மருத்துவர் குழு வருகிறது. அவர்களுடைய அறிக்கையில் ‘சாதாரணப் பெண்கள் போல நடமாடும் கட்சிரோலியின் இந்த ஆரோக்கியத் தூதர்கள், எங்கள் கல்லூரியின் மருத்துவர்களை விட குழந்தைகள் நலன் பற்றி அதிகம் அறிந்தவர்கள்.’ என்றார். “மருத்துவர்கள் மருத்துவமனைகள் என அனைத்து வசதிகளும் படைத்த அரசு கட்டமைப்பை விட இரண்டு மருத்துவர்கள், 39 ஆரோக்கிய தூதர்கள், தலா 1500 ரூபாய் மதிப்புள்ள மருத்துவக் கருவிகள், 28 நாள் பயிற்சி எனக் கிளம்பிய சிறுபடை பெரும் சாதனையை படைத்தது.” என எழுதுகிறார் பாலா. ராஜேந்தர் சிங் ஆர்வரி மக்களவை என்றொரு அமைப்பை உருவாக்கினார். நதிநீரை பயன்படுத்தும் 72 கிராமங்களில் இருந்தும் தலா இரு பிரதிநிதிகளை கொண்டது இந்த மக்களவை. நதிநீர் சேகரிப்பு, மேலாண்மையை கவனிப்பது போன்றவற்றை ,நதிநீரை பயன்படுத்தும் மக்கள் தங்களுக்குள் பேசி முடிவெடுக்கிறார்கள்.

இது ஏன் அப்படி? அரசுக்கும் மக்கள் தன்னார்வ அமைப்பிற்கும் இடையிலான செயல்திறன் இடைவெளி ஏன் வருகிறது என்பதை கவனிக்க வேண்டும். மக்கள் ஒன்றை தங்கள் நலனுக்கானது என நம்பும்போது அதற்காக பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். அது தங்களுடையது, தங்களுக்கானது எனும் எண்ணம் அவ்வமைப்பை காக்க போதுமானது. இந்த உணர்வு ஏற்பட நிர்வாகம் கீழிருந்து மேல்நோக்கி செயல்பட வேண்டுமே தவிர மேலிருந்து கீழ்நோக்கி பாய்வதாக இருக்ககூடாது. காந்தி முன்வைக்கும் கிராம குடியரசு இத்தகைய ஒரு அதிகார பரவலாக்க வடிவம் தான். காந்தி தென்னாப்பிரிக்காவில் சத்த்யாகிரகம் மற்றும் சத்திய சோதனையில் பொது அமைப்புகள், நிறுவனங்களை காக்க நாம் தனித்த முயற்சி எதுவும் எடுக்கக்கூடாது என்கிறார். அதன் தேவை இருக்கும் வரை மட்டுமே அது செயல்பட முடியும். அது மக்களுக்கானது, மக்களால் வழிநடத்தப்படுவது. அரவிந்தும், அமுலும் காந்தியின் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கின்றன.‘இன்றைய காந்திகளின்’ மற்றொரு ஒற்றுமை அவர்கள் மைய அரசின் கரங்கள் சென்று சேராத இண்டு இடுக்குகளில் மக்களை திரட்டி தங்களுக்கு தேவையானவற்றை உருவாக்கிக் கொண்டார்கள். தங்கள் சிக்கலுக்கான தீர்வுகளை உள்ளூர் மனித வளத்தையும் அவர்களின் அனுபவ அறிவையும் கொண்டு எதிர் கொண்டார்கள். சோனம் வாங்கசுக்’ திரீ இடியட்ஸ் திரைப்பட உருவாக்கத்தின் பின்புலத்தில் உள்ள ஆதர்சம். லடாக் மக்களின் கல்வி சிக்கல்களை குறித்து சிந்திக்கிறார். பள்ளியிறுதித் தேர்வில் தோல்வியுறும் மாணவர்களுக்காக என்றே ஒரு பள்ளியைத் தொடங்கினார்.. பனி ஸ்தூபி வழி லடாக்கில் நீர் சேகரிப்பை சாத்தியாமாக்கி இருக்கிறார். பங் தம்பதிகள் தண்டகாரண்ய பகுதியில் செயலாற்றுகிறார்கள். ராஜஸ்தானில் தேவ்துங்க்ரி எனும் வறண்ட கிராமத்தில் மக்களுக்கு சேர வேண்டிய குறைந்தபட்ச கூலியை முறையாக பெற்றுத்தர தோன்றிய இயக்கம் தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வேர்.  பாலாவின் சொற்களில் சொல்வதானால் நான்கு லட்சிய கிறுக்குகளால் உருவாக்கப்பட்டது தான் இன்று பெரும் ஊழல்களை வெளிப்படுத்த மக்களுக்கு கிடைத்த மாபெரும் ஆயுதம். இதில் முக்கிய பங்களிப்பு ஆற்றிய அருணா ராய் ஒரு தமிழ் ஐ.எ.எஸ்.

“எல்லோரும் வரலாற்றை மாற்றுவதாக சொல்வார்கள். நாங்கள் புவியியலை மாற்றினோம்” எனக் கூறியவர் தண்ணீர் காந்தி’ என்றழைக்கப்படும் ராஜேந்தர் சிங்.  அவர் ராஜஸ்தானில் ஆள்வர் மாவட்டத்தில் ஆர்வரி நதியை உயிர்ப்பித்தார்.  அவர் ஆயுர்வேத மருத்துவரும் கூட. பங்கர் ராய்- வெறும் பாத கல்லூரியை ராஜஸ்தானில் ஒரு ஊரக பகுதியில் தான் நடத்தி வருகிறார். நிபுணர் என்பவர் ஒரு தொழிலில் திறனும் நம்பிக்கையும் உடையவராக இருக்க வேண்டும் என அவர் கருதுகிறார்..ஊட்டச்சத்து குறைவுக்கு அமிருத் சூர்ணத்தை அளித்தார். அவருடைய மற்றுமொரு முக்கியமான பங்களிப்பு என்பது சோலார் மாமாஸ்’ எனும் யோசனை தான். பெண்கள், அதிலும் வயதானவர்கள் தங்கள் சமூகத்துடனேயே வசிப்பவர்கள் எனவே அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி சமூகத்துக்கு நீடித்து நிலைத்துப் பயன் தருகிறது என கருதினார்.

சேவா அமைப்பு ஊரக கிராமப்புறம் சார்ந்தது இல்லை என்றாலும், நகரத்திலேயே அரசிடமிருந்து தொலைவிலிருக்கும் மக்களுக்கானது என சொல்லலாம். அனுசூயா சாராபாய் பற்றிய சுவாரசியமான சித்திரம் இலா பட் பற்றிய கட்டுரையில் உள்ளது. அவர் இங்கிலாந்தில் சஃபர்கேட் இயக்கத்தில் பங்கெடுத்தவர் என்பது நான் அறியாத பின்புலம். அமைப்புசாரா தொழிலாகளுக்கு என்றொரு சங்கம் என்பது மிக முக்கியமான முன்னெடுப்பு. ‘வங்கி தோழி’யும் ஒரு நூதன வழிதான்.

பாலாவின் கட்டுரைகள் வழியாக கிடைக்கப்பெறும் மற்றொரு சித்திரம் என்பது இந்த ஆளுமைகள் முழுக்க அரசின்மைவாதிகள் அல்லது கிளர்ச்சியாளர்கள் அல்ல. காந்தியை போலவே அவசியமான இடங்களில் மக்கள் நலனை முன்னிறுத்தி அரசுடன் இயைந்தும், அவசியமான தருணங்களில் முரண்பட்டு போராடியும் இயங்கி வருகிறார்கள். லக்ஷ்மி சந்த் ஜெயினின் வாழ்க்கை உதாரணம் ஒரு சித்திரத்தை அளிக்கிறது. அரசு தலையீடும் மையப்படுத்துதலும் நிகழும்போது ஊழல் பெருகுகிறது என்பதுதான் அது.; லக்ஷ்மி சந்த் ஜெயின் வாழ்க்கை புனைவுக்குரிய தருணங்களால் நிரம்பியவை.  பாலா லக்ஷ்மி சந்த் ஜெயின் பற்றிய கட்டுரையில் தில்லி கிங்க்ஸ்வே அகதிகள் முகாமில் இருந்த அகதிகள் சிலரும் நிர்வகித்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலரும் சேர்ந்து ஒரு இஸ்லாமியரை இழுத்து வந்து காந்தி நடத்திக்கொண்டிருந்த கூட்டத்தின் முன்பு அடித்தே கொன்றார்கள் என எழுதுகிறார். இந்த நிகழ்வின் வீரியம் காட்சிகளாக உணர்வுகளாக விரிந்தபடி இருக்கிறது. .

லக்ஷ்மி சந்த் ஜெயின் வாழ்வில் மிகவும் உணர்ச்சிகரமான நிகழ்வு என்பது அவர் நிர்வகித்த அகதி முகாமில் இளைஞரான அவரிடம் கலவரக்காரர்களை வெளியேற்றவேண்டும் என முகாம் வாசிகள் சொல்கிறார்கள். அதற்கு “எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அவர்களும் நம் குழந்தைகள் தானே? நாம் வெளியேற்றிவிட்டால் வேறு எந்த முகாமிலும் அவர்களை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என பதில் அளிகிறார். அன்றிரவு கலவரம் செய்த இளைஞர்கள் அவரிடம் “நாங்கள் இந்த முகாமிற்கு பலத்த சேதத்தை விளைவித்தோம். ஆனாலும் நீங்கள் எங்களை ‘நம் குழந்தைகள்’ என்று சொன்னீர்கள். தவறு செய்துவிட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள்.” எனக் கைக்கூப்புகிறார்கள்.

அகதிகள் மறு வாழ்வு, கூட்டுறவு இயக்கம், கைவினைப் பொருட்கள் வாரியம், திட்டக் கமிஷன், முதல் பெரும் சில்லறை அங்காடியை நிறுவியவர், தென்னாப்பிரிக்க தூதர் என ஓரிடத்தில் தேங்கி விடாமல் தொடர்ந்து புதிய இலக்குகளை நோக்கி பயணித்தபடி இருக்கிறார் லக்ஷ்மி சந்த் ஜெயின். குரியனும் அமைப்புகளை கட்டி எழுப்பியவர் தான். குரியன் கோபிச்செட்டிபாளையத்தில் தமிழ்வழி பயின்றவர் எனும் பாலாவின் தகவல் எனக்கு புதிதாக இருந்தது.. குரியன் தான் தேர்ந்தெடுத்த வாரிசாலேயே அரசியல் சதுரங்க விளையாட்டில் வீழ்த்தப்படுகிறார். ஆனால் அவர் அதற்கும் அப்பால் முப்பது நிறுவனங்களை உருவாக்கி காட்டியவர்.

அரவிந்த் குப்தாவின் இணைய நூலக சேகரிப்பை பயன்படுத்தியவன் என்ற முறையில் அவருடைய பங்களிப்பு குறித்து அறிந்து கொண்டது மகிழ்ச்சியை அளித்தது.

ஒட்டுமொத்தமாக இந்நூல் எனக்கு ஒரு ஆழ்ந்த மன எழுச்சியை அளித்தது. படைப்பூக்கத்துடன் சமூகத்திற்கு ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும் எனும் உந்துதலை வாசகர் பெற முடியும். அது குறைந்த காலம் நீடிப்பதாகவும் இருக்கலாம். செயலுக்கான உந்துதலை அளிப்பது சாதாரணம் அல்ல. உண்மை மனிதர்களின் ஒளிமிகுந்த வாழ்வு நம்மை செயல்படத் தூண்டுகிறது. ஜெயகாந்தனின் சொற்களை நினைவு கூர்ந்தபடி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். ‘ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊருக்கான காந்தி இருப்பார்.’ அவரை அடையாளம் காட்டும் பணியை அறிவு சமூகமேற்றுக்கொள்ள வேண்டும்.இன்றைய காந்திகள்

பாலசுப்பிரமணியம் முத்துச்சாமி

தன்னறம்

No comments:

Post a Comment