Friday, December 29, 2023

வேடிக்கை பார்ப்பவன்- யுவன் சந்திரசேகருடன் ஒரு உரையாடல்- முன்னுரை

 

(விஷ்ணுபுரம் விருது விழாவில் வெளியிடப்பட்ட நூலிற்காக எழுதிய முன்னுரை) 


புத்தகத்தை வாங்க 







எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு ஒரு ரீடர் செய்ய வேண்டும் என்பது அவரது வாசகராக எனது நெடுநாள் கனவுகளில் ஒன்று.  இன்னதென்று வகுத்துக்கொள்ள முடியாத மர்மமும் வசீகரமும் நிரம்பிய எழுத்து அவருடையது. கதை எதற்காக சொல்லப்பட வேண்டும் எனும் கேள்வியை வெவ்வேறு காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் எதிர்கொள்வோம். வேறு எதற்காகவும் இல்லை, அதன் களிப்பிற்காக, அதில் திளைப்பதற்காக என்பதே யுவனிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட விடை. நூல்வனம் வெளியீடாக வரவுள்ள அந்த ரீடருக்காக அவரை நேர்காணல் செய்ய வேண்டும் என உத்தேசித்தேன். மார்ச் மாதம் ஒருமுறையும் ஜூலை மாதத்தில் ஒருமுறையும் என இருமுறை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கே சென்று உரையாடினோம். முதல் அமர்வில் விக்னேஷ் ஹரிஹரன், காஞ்சி சிவா, அ. க.  அரவிந்தன் ஆகியோர் அவருடன் உரையாடினோம். ஜூலை மாத அமர்வில் எழுத்தாளர்கள் சுரேஷ் பிரதீப்பும் காளிபிரஸாத்தும் விக்னேஷ் ஹரிஹரனும் உரையாடலில் பங்கெடுத்தார்கள். 


இந்த நேர்காணலுக்காகவும் ரீடருக்காகவும் அவரை தொடர்ந்து வாசித்தேன். சுரேஷ் பிரதீப்பும் மொத்தமாக மீண்டும் வாசித்தார். நானும் சுரேஷும் அதிகாலை அவர் வீட்டுக்கு சென்று இறங்கிய போதுதான் ஜெயமோகன் விஷ்ணுபுரம் விருது இந்த ஆண்டு யுவனுக்கு அளிப்பதாக முடிவெடுத்துள்ளதாக செய்தி அனுப்பினார். இந்த நேர்காணல் விஷ்ணுபுரம் விருதிற்கு முந்தியே திட்டமிடப்பட்டது. விருது இந்த நேர்காணல் தனி நூலாக பதிப்பாக்கம் பெறுவதற்கு ஒரு முகாந்திரம் அளித்தது.  எங்களுக்கே அளிக்கப்பட்ட விருது என உணர்ந்தோம். இந்த நேர்காணலின் ஒரு பகுதியை அகழ் மின்னிதழில் வெளியிட்டோம். நூற்றி எழுபது பக்கங்கள் நீண்ட நேர்காணல் இது. ஒரு பகுதியை அகழ் மின்னிதழில், இன்னொரு பகுதியை ரீடருக்கும் மற்றொரு பகுதியை ஜெயமோகன் இணையதளத்திலும், விழாவில் வெளியாகும் கட்டுரை தொகை நூலின் பகுதியாகவும் வெளியிடலாம் என்பதே எங்கள் யோசனை. ஜெயமோகன் நேர்காணலை முழு தனி நூலாக விஷ்ணுபுரம் பதிப்பகம் வழியாக விழா சமயத்தில் வெளியிடுவோம் என கூறினார். ஜெயமோகனுக்கும் விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் மீனாம்பிகை மற்றும் குவிஸ் செந்தில் ஆகியோருக்கும் எங்கள் நன்றி. 


விக்னேஷ்  ஹரிஹரன், சுனில், யுவன், காஞ்சி சிவா, அ. க. அரவிந்தன்,  

ஒரு நல்ல நேர்காணல் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு அவரே அவரது 'நினைவுதிர் காலத்தில்' ஒரு முன்மாதிரியை வைத்துள்ளார். சிகரங்களும் சமவெளிகளும் பள்ளத்தாக்குகளும் மாறி மாறிவரும் நிலப்பரப்பிற்குள் பயணிப்பதான ஒரு அனுபவத்தை அளிக்கும். அதேபாணியில் நேர்காணலை பேசு பொருள் சார்ந்து அத்தியாயங்களாக வகுத்துள்ளோம். இந்த நேர்காணலில் அப்படிக் குறைந்தது மூன்று சிகரங்களையாவது அடையாளம் காண முடியும். இரண்டாவதாக, இந் நேர்காணலை முடிந்தவரை அவரது பேச்சுமொழிக்கு அருகே கொண்டுவர வேண்டும் என்பதில் மெனக்கெட்டோம். யுவன் அபாரமான உரையாடல்காரர். காரைக்குடிக்கு வந்தபோது கூட "எங்கயாவது போலாமா சார்" என்றால் "வாங்க பேசிக்கிட்டு இருப்போம். அதுதானே நம்ம லாகிரி" என்பார். ஏறத்தாழ ஏழுமணிநேர உரையாடல் பதிவு உள்ளது. இத்தனை பேசிய பின்னரும் நாங்கள் இன்னும் அவரோடு உரையாடுவதற்குப் பல விஷயங்கள் எஞ்சியிருப்பதைக் கண்டுகொண்டோம். காலை பத்து மணிக்கு அவரது அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றோம். உள்ளே செல்வதற்கு நிறையப் பாதுகாப்பு கெடுபிடிகள் உண்டு. விசாலமான வீடு. ஒவ்வொரு அறையிலும் இசைக்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார். அவரது அறையிலிருந்து கீழே நீச்சல் குளம் தெரியும். விசாலமான ஃபிரெஞ்சு ஜன்னல்கள் வழி போதுமான வெளிச்சமும் காற்றும் உள்ளே வந்தது. "உங்களுக்கு ஒண்ணும் டிஸ்டர்பன்ஸ் இல்லையே" என்றபடி சித்தார் இசையை சன்னமாக ஒலிக்க விட்டார். அநேகமாக இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை "காப்பி சொல்லட்டா?" என்பார். நாங்கள் சென்ற அன்று மகள் வழி பேரன் பிறந்து ஒருமாதம் ஆகியிருந்தது. மதியம் அவருடனேயே வயிறார உண்டோம். இருட்டும்வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம். நமக்குப் பிடித்த ஆளுமைகளை எழுத்தாளர்களை நெருங்குவது அவசியமில்லை என்பார்கள். அவர்கள் மீதான நம் மதிப்பு குறைந்துவிடும், ஏதோ ஒருவகையில் நமக்கு அவர்கள் ஒவ்வாதவர்களாக  ஆகிவிடுவார்கள் என்பார்கள். எனக்கே கூட அத்தகைய சில அனுபவங்கள் உண்டு. ஆனால் யுவன் இன்னும் இன்னும் என அணுக்கமாகவே தெரிந்தார்.  உரையாடலில் நேர்மையாக வெளிப்பட்டார் என்பதே காரணம் எனத் தோன்றுகிறது. இந்த உரையாடலை வாசித்தால் ஒன்று புரியும், கேள்விகள் அவரை ஏதேனும் ஒருவகையில் வரையறை செய்ய முயன்றபடி இருக்கும், அவர் அவற்றை மீறிச் சென்றபடியே இருப்பார். ஒருவிதமான கபடி ஆட்டம்போல. இந்த இரு அமர்வுகள் முடிந்தபின்னர் இந்த உரையாடலை நினைவுகூரும்போதும் வாசிக்கும்போதும் திகைப்பே எஞ்சியிருக்கிறது. இங்கே யுவன் ஒரு சிறு வட்டத்திற்கு அப்பால் சென்று சேரவே இல்லை. ஏன் என்பதை ஒருவாறு புரிந்துகொள்ள முடிகிறது. அவர் இருமைகளுக்கு  வெளியே இருப்பவர். தீர்ப்பு சொல்பவராக இல்லாமல் வேடிக்கை பார்ப்பவராக இருக்கிறார். நமக்கோ, தீர்மானங்களும் தீர்ப்புகளும் ஆறுதல்களும் அல்லவா வேண்டியதாய் இருக்கிறது.  நேர்காணலை தட்டச்சு செய்வதற்காகக் கேட்கும்போது பலமுறை எல்லோரும் சேர்ந்து சிரித்த சத்தத்தைக் கேட்டபடி இருந்தேன். அந்தச் சிரிப்பை நேர்காணலில் கொண்டு வரமுடியுமா எனத் தெரியவில்லை. கிண்டலும் கேலியும் விளையாட்டுமாய் அலுப்பே தட்டாமல் சென்றன அவ்விரு நாட்களும். மற்றொரு விஷயம், நேர்காணல் முடிந்து பலமாதங்கள் ஆகியும் பல்வேறு உரையாடல்களின்போது வெளிப்பட்ட அவரது உடல்மொழியை மனம் அப்படியே படம்பிடித்து வைத்திருக்கிறது. அவரைப் பார்த்தவர்கள், அவருடன் ஒருமுறை உரையாடியவர்கள்கூட இந்த நேர்காணலில் அவரது குரலை அதன் ஏற்ற இறக்கத்தோடு கேட்க முடியும் என்றே நம்புகிறேன். முதன்மையாக தன் முன்னோடிகள் மீதும் சக எழுத்தாளர்கள் மீதும் அவருக்கிருக்கும் மதிப்பும் வாஞ்சையும் இந் நேர்காணலில் வெளிப்படுகிறது.   

காளி ப்ரஸாத், சுனில் கிருஷ்ணன், யுவன், சுரேஷ் பிரதீப்  

கவிதைகள் குறித்து ஜெயமோகனுக்கும் யுவனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல், சுகுமாரனுக்கும் அவருக்கும் இடையே நகுலன் கவிதைகள் சார்ந்து நிகழ்ந்த உரையாடல், மின் தமிழ் இதழில் சி. சரவணகார்த்திகேயன் எடுத்த நேர்காணல், புரவி இதழில் கமலதேவி எடுத்த நேர்காணல், அண்மைய வல்லினம் மின்னிதழ் நேர்காணல்  என பல்வேறு நேர்காணல்கள் இதுவரை வந்துள்ளன. அவற்றில் பேசப்பட்டவை பலவும்  இங்கும் வரக்கூடும். அவற்றில் பேசப்படாத பலவும் இந்த நேர்காணலில் பேசப்பட்டுள்ளன. யுவனையும் அவரது படைப்புகளையும் அவற்றுக்கு ஆதார விசையாக இருக்கும் அவரது கலையிலக்கிய நோக்கையும் வாசகருக்கு இந் நேர்காணல் அறிமுகப்படுத்தும் என எண்ணுகிறேன். நேர்காணலில் நல்ல கேள்விகள் முக்கியம்தான். அதைவிடவும் பதில்கள் மிக முக்கியம். தொடக்கநிலை அடிப்படைக் கேள்விகள் முதல் நுண்ணிய அவதானிப்புகள் வரை பல்வேறு வகையான கேள்விகள் இந்த நேர்காணலில் இடம்பெற்றுள்ளன. இவற்றைத் தங்குதடையின்றி வெளிப்படுத்திய நண்பர்கள் அரவிந்தன், விக்னேஷ், காஞ்சி சிவா, காளி மற்றும் சுரேஷ் பிரதீப்பிற்கு நன்றி. யுவனுடைய அத்தனை கேலி கிண்டல்களிலும் பங்கேற்றபடி எங்களுக்கு இரு நாட்களும் உணவளித்த உஷாம்மாவிற்கு நன்றி. எங்களுக்கு நேரத்தை அளித்து தனது ஆத்மார்த்தமான பதில்களால் இந்த நேர்காணலை உயிர்ப்புடையதாக ஆக்கிய யுவனுக்கு நன்றி.     


சுனில் கிருஷ்ணன் 

சுரேஷ் பிரதீப் 

காளி பிரஸாத் 

விக்னேஷ் ஹரிஹரன் 

காஞ்சி சிவா 

அ. க. அரவிந்தன் 


23/11/23


No comments:

Post a Comment