Friday, August 11, 2023

போபால் பயணம் - 2- சாஞ்சி

 


கன்னட எழுத்தாளர் பத்மநாப பட். இந்த பதிவில் இடம்பெரும் புகைப்படங்கள் யாவும் அவர் எடுத்தவையே. 

3 ஆம் தேதி காலை ஜனாதிபதி நிகழ்வை துவக்கி வைக்க வருகிறார் என எங்களுக்கு சொல்லப்பட்டது. பாதுகாப்பின் பொருட்டு எக்கச்சக்க கெடுபிடிகள். கைபேசியை எடுத்துவரக்கூடாது, பை ஏதும் கொண்டுவரக்கூடாது, 11.30 மணிக்கு எல்லாம் விழா அரங்கில் அமர்ந்திட வேண்டும். எங்களுக்கு வேறொரு திட்டம் இருந்தது. என்னோடு  2018 ஆம் ஆண்டு யுவபுரஸ்கார் விருது பெற்ற  கன்னட எழுத்தாளர் பத்மநாப பட் இங்கு வந்திருந்தார். ஒரு நாவலும் சிறுகதை தொகுப்பும் எழுதியுள்ளார். பிரஜாவாணி எனும் கன்னட துவக்க விழா கேட்டு என்ன புண்ணியம், நாம் கிளம்பி சாஞ்சி செல்வோம் என்றான். சிக்கல் என்னவென்றால், நிகழ்விற்கு சுமார் ஐநூறு எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள் , ஒவ்வொருவரும் போபாலில் ஒவ்வொரு இடத்தில் தங்கியிருந்தோம். கவிஞர் சல்மா "வடநாட்டுல  தனியா போறதுன்னா பயம், என்கைனாலும் கூட்டிட்டு போயிடு தம்பி" என சொல்லியிருந்தார். ஆனால் நாங்கள் ஆளுக்கொரு மூலையில் இருந்தோம். இதற்கிடையே எனது விடுதியில் தங்கியிருந்த மது ராகவேந்திரா எனும் கவி எங்களோடு இணைவதாக இருந்தது. மது தஞ்சாவூர் மராட்டிய பின்புலம் கொண்டவர். வளர்ந்தது கொல்கத்தாவில், மணமுடித்திருப்பது அருணாச்சல பிரதேச பெண்ணை, வசிப்பது அஸ்ஸாமில். 

பத்மநாப பட் ஓலாவில் வண்டியை அமர்த்திக்கொண்டு எனது விடுதிக்கு வந்து சேர்ந்தார். இண்டிகா காரில் பின்னிருக்கையில் முடங்கிக்கொண்டு மூவர் அமர்வது சிரமம் என்பதால் மது வரவில்லை. நகரின் மறுமூலையிலிருந்த சல்மாவை அழைத்துக்கொண்டோம். எனக்கும் பத்மநாப பட்டுக்கும் சுமாரான இந்தி அறிவு உண்டு. ஓட்டுநர் கொஞ்சம் ராங்கித்தனம் செய்தார். எப்படியோ சமாதானம் செய்து சென்று வந்தோம். மையசாலையை விட்டுவிட்டு டோல்கேட் இல்லாத சாலையின் வழி அழைத்து சென்றார். மழை தூறி நிலக்காட்சி வெகு அழகாக இருந்தது. நாங்கள் சென்ற சாலையில் ஓரிடத்தில் இங்கு 'டிராபிக் ஆப் கேன்சர்' கடந்து செல்கிறது என அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். விந்திய மலை தொடர் எங்களுடன் வந்தபடி இருந்தது. பீடா வாயர்கள் பானிப்பூரியான்கள் என நாம் பொதுமைப்படுத்தி நக்கலடிக்கிறோம். நாம் நாகரிகத்தின் உச்சத்தில் உள்ள குடிமை சமூகம் எனும் கற்பிதம் நமக்கு உண்டு. தமிழகத்தில் முக்கியமான தொல்லியல் தலங்களுக்கு சென்றிருக்கிறேன். பீர் புட்டிகளும் பிளாஸ்டிக் கப்புகளும் பிஸ்கட் பாக்கெட்டுகளும் இல்லாத தொல்லியல் இடமே இல்லை என சொல்லலாம். என் ஊருக்கு அருகே இருக்கும் திருமயம், குடுமியான்மலை, சித்தன்னவாசல் அனுபவங்களை கொண்டே என்னால் இதை சொல்லிவிட முடியும். சாஞ்சியிலும் சரி பின்னர் சென்ற பிம்பேட்காவிலும் சரி நான் ஒரேயொரு பிளாஸ்டிக் குப்பையை கூட காணவில்லை. பொது கழிப்பறை வெகு சுத்தமாக பராமரிக்கப்பட்டது. இரண்டு மூன்று கிலோமீட்டருக்கு சிறிய பெட்டிக்கடை கூட இல்லை என்பது மிக முக்கியமான காரணமாக இருக்கலாம். யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது என்பதால் அதற்கென சில நெறிமுறைகள் இருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டேன். சாஞ்சி சிறிய குன்றின் மீது உள்ளது. தூறலில் நனைந்தபடி, ஈரமான சாஞ்சியை கண்டது அபாரமான அனுபவம். ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் விளக்கமான தகவல்கள் ஆங்காங்கு அளிக்கப்பட்டுள்ளன. கும்மட்டங்களில் ஏறி செல்ல வழி இருக்கிறது. கும்மட்ட வடிவத்தின் பெயர் 'அண்டம்' அதனுள் புத்தரின் சாம்பல் உள்ளதாக நம்பப்படுகிறது. ஸ்தூபிகள் புத்தர் தொடர்பான ஏதோ ஒரு சின்னத்தை தன்னகத்தே கொண்டவை. சாஞ்சி அசோகர் எழுப்பியது. பனிரெண்டாம் நூற்றாண்டிற்கு பின் புழக்கத்தில் இல்லாமல் ஆனது. பின்னர் ஆங்கிலேயர்கள் காலத்தில் 1818 ஆம் ஆண்டு மீண்டும் கண்டடையப்பட்டு மறுநிர்மாணம் செய்யப்பட்டது. பெரும் கட்டிடங்கள் நிறைந்த கோட்டமாக இருந்திருக்க வேண்டும். அடித்தளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. மூர்த்தங்கள் ஏதுமற்ற கருவறைகள். அமர்ந்து தியானிக்கும் புத்தர் திருவுரு, தலையுடைக்கப்பட்ட புத்தர் உருவம் என பலவற்றையும் கண்டோம். 

கவிஞர் சல்மாவுடன் 

இத்தகைய வரலாற்று தலங்களை காணும்போது அவற்றுக்கு பின்னிருக்கும் காலத்தை விஞ்சி நிற்கவேண்டும் எனும் விழைவு படைப்பூக்கமாக எப்படி உருமாற்றமடைகிறது என சிந்தனை தோன்றியது. ஏதோ ஒரு வகையில் அத்தனை படைப்புச் செயல்பாடும் காலத்தை விஞ்சி நிற்க வேண்டும் எனும் பெருங்கனவால் இயக்கப்படுவதாக இருக்க முடியும். ஆனால் எத்தனை உண்மையில் எஞ்சியிருக்கும்? எஞ்சியிருப்பது தான் மேலான படைப்பு என்பதற்கான சான்றா? பயன்படுத்துபவற்றையும், புழக்கத்தில் உள்ளவற்றையும் மதிப்பிடவும் மேம்படுத்தவும் நமக்கு கருவிகள் உண்டு. கலை போன்ற பூடகமான பயன்பாடு உள்ளவற்றை காலம் எப்படி கடத்துகிறது என்பதற்கு திண்ணமான வழிமுறை ஏதுமில்லை. காளத்தி விஞ்சி நிற்கும் ஒரு படைப்பு என்பது காலத்தால் நசுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான படைப்புகளின் பிரதிநிதியும் கூட.  சிங்கள சுற்றுலா குழு ஒன்று நாங்கள் சென்றிருந்த சமயத்தில் வந்திருந்தது. நான் மட்டுமே கையில் குடை வைத்திருந்தேன். சல்மாவும் பத்மநாப பட்டும்  ஓரளவு நனைந்துவிட்டார்கள். அமர்ந்து தியானிக்க முடியவில்லை என்றாலும் மழையில் சாஞ்சியி கண்டது பெரும் பரவசம் என்றே சொல்ல வேண்டும். இரு பெரும் தூண்களை தனியாக வைத்திருந்தார்கள். படுக்கைவசத்தில் நோக்கும்போது தான் ஒற்றை கல்லால் ஆன அதன் பிரம்மாண்டம் விளங்குகிறது. புதிதாக மணமான இளம் தம்பதியர் சாஞ்சியை பார்க்க வந்திருந்தனர். பையனுக்கு இருபது இருக்கலாம், பெண்ணுக்கு அதைவிட குறைவு. பையன் ஷூ அணிந்திருக்க பெண் வெறுங்காலில் நடந்தது பார்க்க வினோதமாக இருந்தது. சல்மா அவனிடம் நேரடியாக கேட்டே விட்டார். செருப்பு அறுந்துவிட்டது என்று ஏதோ சொன்னான். 

கன்னட - தமிழ் இலக்கிய சூழல் பற்றி போபால் திரும்புகையில் பேசியபடி வந்தோம். பைரப்பா நூல்கள் முப்பதாயிரம் பிரதிகள் விற்கின்றன. பிறருக்கு அத்தகைய வாய்ப்புகள் ஏதுமில்லை. பத்மநாப பட் பிரஜாவாணி இதழில் பணியாற்றியபோது நடிகர் அர்ஜுன் மீதான மீடூ குற்றசாட்டை முதன்முதலில் வெளி கொணர்ந்தவன். நடிகை சுருதி ஹரிஹரன் நேர்காணல் வழியாக இந்த செய்தி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரஜாவாணி இலக்கிய பகுதியில் நிறைய மதிப்புரைகள் எழுதியுள்ளான். விவேக் ஷான்பகை மொத்தமாக படித்து அவரை நீண்ட நேர்காணல் செய்ததாக கூறினான். இப்படி மொத்தமாக வாசிப்பதும், அதையொட்டிய உரையாடலும் எழுத்தாளரை எப்படி தொகுத்துக்கொள்ள உதவுகிறது என இருவரும் பேசிக்கொண்டு வந்தோம். என் நோக்கில் விமர்சனம் என்பது அப்படியான ஒன்றாகவே இருக்க முடியும். ஒரு படைப்பை பற்றிய மதிப்பீடு என்பது ரசனை அபிப்பிராயம் என சொல்லிக்கொள்ளலாம். அவற்றுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இல்லை. ஆனால் விமர்சனம் என்பது விரிந்த பின்புலத்தில் எழுத்தாளரையும் அவரது ஆக்கத்தையும் வைத்து நோக்குவது. 

 

ஜனாதிபதியின் வருகையை பொருட்டு போபாலில் சாலைகள் அடைக்கப்பட்டிருந்தன. எங்கள் விழா நடக்கும் ரவீந்திர பவானிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஓட்டுநர் இறக்கிவிட்டார். ஓலா காட்டியதைவிட 250 ரூபாய் கூட கொடுத்தோம். சல்மா முழுக்க நனைந்திருந்ததால் விழா அரங்கிற்கு வர தயங்கினார். ஆனால் வேறு வழியில்லை என்பதால் மூவரும் சென்றோம். நாங்கள் சென்றபோது தான் திரவுபதி முர்மு உரையாற்ற தொடங்கினார். எங்களது அடையாள அட்டையை சரிபார்த்துவிட்டு உள்ளே விட்டார்கள். பையிற்கோ கைபேசிக்கோ தடை சொல்லவில்லை. மாடியில்  உட்கார்ந்து கொண்டோம். விழா மேடையை புகைபபடம் எடுக்க முயன்றபோது மட்டும் வந்து எச்சரிக்கை செய்தனர். நாட்டுப்புற / பிராந்திய நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் வெவ்வேறு பகுதியினர் தங்களுக்கே உரிய தாளவாத்தியங்களுடன், அலங்காரம் செய்துகொண்டு இருபது நிமிடங்கள் ஆடினர். ரவீந்திரபவனின் மைய அரங்கத்தில் ஐயாயிரம் பேர் அமரலாம். நல்ல ஒலியமைப்பு கொண்டது. மொழிபெயர்ப்பாளர் என். கல்யாண ராமன், எழுத்தாளர் இரா. முருகன் ஆகியோர் அங்கே வந்திருந்தனர். நிகழ்வு முடிந்ததும் உணவிற்கு எங்கு செல்வத்த்தேனா எவருக்கும் தெரியவில்லை. ரவீந்திர பவனின் கீழ்த்தளத்தில் உணவு கூடமும் எங்களுக்கான சிறிய நிகழ்வு அரங்குகளும் இருந்தன. சாகித்ய அகாதமி, நேஷனல் புக் ட்ரஸ்ட், சங்கீத் நாடக அகாடமி ஆகியோரின் புத்தக நிலையங்கள் இருந்தன. ரவீந்திர பவன் போபாலில் நகர் மையத்தில் உள்ளது. அத்தனைப்பேரிய இடம் நகர் ஐயத்தில் நன்கு பராமரிக்கப்படுவது வியப்பை அளிக்கிறது. உணவிற்கு பெரிய வரிசை. 2.30 மணியிலிருந்து அமர்வுகள் தொடங்குவதாக அறிவித்திருந்தார். ஒரே நேரத்தில் ஐந்து அரங்குகள் நிகழ்ந்தன. பதாகை- யாவரும் வெளியீடாக வெளிவந்த 'பாகேஸ்ரீ' தொகுப்பை எழுதிய எஸ். சுரேஷ் அவர்கள் வந்திருந்தார். சுரேஷ் ஆங்கிலத்தில் நேரடியாக எழுதக்கூடியவர். இந்திய இலக்கியம் குறித்து ஆழமான வாசிப்பு உடைஅய்வர். அவருடைய பரிந்துரையின் பேரில் குர்தயாள் சிங்கின் ஒரு நூலை சாகித்திய அகாதமி ஸ்டாப்களில் வாங்கிக்கொண்டேன். இசை குறித்தும் கவிதைகள் குறித்தும் தொடர்ந்து எழுதி வருபவர். எனது விடுதியிலேயே அவருக்கும் அறை என்பதாலும், தங்குதடையின்றி இந்தி பேசுவார் என்பதாலும் ஏற்கனவே நன்கு அறிமுகமான நண்பர் என்பதாலும் இருவரும் சேர்ந்தே  சுற்றினோம். 

எழுத்தாளர்களாக உருமாறிய மருத்துவர்கள் பங்குகொள்ளும் அமர்வு நிகழ்ந்தது. மருத்துவம் என்பது வேறு எழுத்து என்பது வேறு என அரங்கை தாங்கிய துருபா ஜோதி போரா தொடங்கினார். ஆரத்தி பெல்லாரி எப்படி மருத்துவத்தின் அழுத்தங்களை இலக்கியத்தின் வழி எதிர்கொள்கிறேன் என்றார். அபிஜித் தரப்தார் மருத்துவராக இருப்பது எத்தகைய வாய்ப்பு கதைகளை உருவாக்குவதற்கு என தனது அனுபவத்திலிருந்து சில நிகழ்வுகளையும் அவை கதையாகி போன தருணங்களையும் சுவாரசியமாக சொன்னார். ஆனால் நான் பெரிதும் ஏற்கப்பட்டது காவேரி நம்பீசனின் உரையினால் தான். காவேரி கர்நாடகத்தில் வசிக்கிறார். தனது மருத்துவ வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் அறுவை சிகிச்சை நிபுணராக ஏழை மக்களுக்கு உதவும் வகையில் பணியாற்றி வருகிறார். பல சிறார் கதைகளை எழுதியுள்ள அவர் 'A Luxury called Health' எனும் நூலுக்காக பரவலாக கவனிக்கப்பட்டார். மருத்துவராக இருப்பது எழுத்தை எப்படி பாதிக்கிறது என்பதை தாண்டி எழுத்தாளராக இருப்பது மருத்துவ தொழிலில் எத்தகைய பாதிப்பை செலுத்துகிறது என்பதை பாவனைகள் ஏதுமின்றி தெளிவாக சொன்னார். அமர்வு முடிந்ததும் அவரை அறிமுகம் செய்துகொண்டு கொஞ்சநேரம் பேசினேன். எனக்கு பிடித்த ஆயுர்வேத சுலோகம் ஒன்று உண்டு, அதன்படி ஆதிசேடன் சரகராகவும், பதஞ்சலியாகவும் பாணினியாகவும் அவதரித்து முறையே உடல் மனம் மாற்று வாக் தோஷங்களை சரக சம்ஹிதை, யோக சூத்ரம் மற்றும் மஹா பாஷ்யம் ஆகியவற்றை இயற்றி  சீர் செய்கிறார் என கூறும். மருத்துவராகவும் எழுத்தாளராகவும் இருப்பது ஒன்றின் இரு பக்கங்கள், அல்லது ஒன்றே என எனக்கு எப்போதும் தோன்றுவதுண்டு. 


'இலக்கியமும் இயற்கையும்' எனும் தலைப்பில் இன்னொரு அரங்கு நடந்தது. ரிக்வேதம் உபநிஷத் தொடங்கி இயற்கை இப்படியொரு பேசு பொருளாக இலக்கியத்தில் வருகிறது, இன்று காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழல் சிக்கல்களில் போதுமான அளவு இலக்கியம் எதிர்கொள்கிறதா? அவற்றை பேச வேண்டிய தேவை என்பதை எல்லாம் பற்றி நல்லதொரு உரையாடல். குறிப்பாக அரங்கை ஒருங்கிணைத்த சேகர் பாதக் மற்றும் விவேக் மேனன் உரை சிறப்பாக இருந்தது. விவேக் மேனன் அமைதி பள்ளத்தாக்கு காக்கப்பட்டதில் சுகதகுமாரி 'டீச்சரின்' கவிதைகள் ஆற்றிய பங்களிப்பை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். அவருடைய கவிதைகள் ஒரு இயக்கமாகவே மாறியதை பற்றி குறிப்பிட்டார். அமிதவ் கோஷின் எழுத்துக்களின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். இயற்கையை அவதானிப்பது, பதிவு செய்வது, கொண்டாடுவது, நன்றி தெரிவிப்பது, சீரழிவை ஆவணப்படுத்துவது, மாற்று வாழ்வை கற்பனை செய்வது என பல்வேறு தளங்களில் செயல்பட முடியும். அருண் பிரசாத் கொண்டு வந்த காலநிலை மாற்ற தொகுப்பு நூலின் முக்கியத்துவத்தை பற்றி எண்ணிக்கொண்டேன். தமிழில் அது ஒரு முக்கியமான தொடக்கம். அமர்வின் இறுதியில் பேசிய சேகர் பாதக் அரசின் சூழலியல் கொள்கைகளை சற்று தீர்க்கமாக விமர்சித்து பேசினார். காஷ்மீர் சிக்கலும் மணிப்பூர் சிக்கலும் நிலம் மற்றும் சூழலியலுடன் தொடர்புடையவை. அக்கோணங்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்றார். இந்த அமர்வின் முடிவில் என்னை தொந்திரவு செய்யும் நிகழ்வு ஒன்று நடந்தது. சேகர் பேசி முடித்ததும் எனக்கு முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் என்னிடம் இப்போது பேசியவர் பெயர் என்ன என கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் பின்னாடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த குழுவினரிடம் கேட்டார். அவர்கள் சொன்னதும் யாருக்கோ அவசர அவசரமாக கைபேசியில் அனுப்பினார். விடுவிடுவென வெளியேறி சென்றார். உச்சியில் சிகை வைத்திருந்தார், கையில் ஆரஞ்சு கயிறு, டீஷர்ட்டும் பேண்டும் அணிந்திருந்தார். அவருக்கும் இலக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. அவர் யார்? எதற்காக அமர்ந்தார்? யாருக்கு செய்தி அனுப்பினார்? என்ன அனுப்பினார்? ஏதும் தெரியவில்லை. விழா முடியும்வரை அவர் மீண்டும் கண்ணில் படுகிறாரா என தேடியபடி இருந்தேன். ஆனால் கண்ணில் படவே இல்லை. திறந்த சாத்தியம் கொண்ட இந்நிகழ்வில் மனம் உச்சபட்ச மோசமான சாத்தியத்தையே கற்பனை செய்கிறது.  

அடுத்து 'ஐடியா ஆப் இந்தியா' எனும் அரங்கிற்கு சென்று அமர்ந்தேன். முதல் முரண்பாடு அங்கு பேச அழைக்கப்பட்டவர்கள் அனைவருமே இந்திய மையநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த தலைப்பிற்கு தென்னிந்தியாவிலிருந்தும் வடகிழக்கிலிருந்தும் ஒருவரையாவது அழைத்திருக்க வேண்டாமா? இந்தியா எனும் கருத்தாக்கத்திற்கும் பாரதம் எனும் கருத்தாக்கத்திற்கும் இடையேயான இடைவெளி என்ன என்பதிலிருந்து தொடங்கியது.   பாரதம் என்பது பரதனின்  பேரிலிருந்து,அதாவது நம்மை நாமே ஆண்டுகொண்டபோது நமக்கு நாம் இட்டுக்கொண்ட பெயர். இந்தியா என்பது இந்து, சிந்து, அந்நியர்கள் இட்ட பெயர். என்னை வெகுவாக அமைதி இழக்க செய்த அமர்வு இதுதான். பார்ஹ பண்பாட்டில் திருக்குறளுக்கும், தொல்காப்பியத்திற்கு இடமில்லையா? இவர்கள் பாரத பண்பாட்டு என சொல்வது சம்ஸ்கிருத பண்பாட்டை மட்டும்தானா? அதிலேயே எத்தனை வகைகள், எத்தனை பிராந்தியங்கள் உள்ளன. சிந்து- கங்கை சமவெளி பண்பாடு பாரதத்தின் பண்பாடாக இருக்கலாம் அது இந்தியாவின் பண்பாடு அல்ல. நானொரு அத்வைத வேதாந்தி, ஆயுர்வேத மருத்துவன் சம்ஸ்கிருத வெறுப்போ, தமிழ் மேட்டிமையோ எனக்கு இல்லை. ஆனால் இந்திய எனும் கருத்தாக்கம் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஐவர் பேசிய அமர்வில் இந்தியாவின் தரப்பாக பேசிய இருவரும் ஆங்கிலத்திலும் பிறர் இந்தியில் பேசியதும் சுவாரசியம். ஹரிஷ் திரிவேதியின் உரை மிக சிறந்தது. அடையாளம் என்பது என்ன எனும் கேள்வியை அவர் எழுப்பினார். நம்மைப் பற்றி நாம் சொல்லும் கதைகளே நம் அடையாளம் என சுதிர் காக்கர் மேற்கோளை சொல்லிவிட்டு, நம்மை பற்றி பிறர் நம்மிடம் சொல்வதும் நம் அடையாளம் தான், நம்மைப் பற்றி நமக்கு பின்னால் பேசுவதும் நம் அடையாளம் தான் என்றார். ஹரீஷின் இந்த கூற்று எனக்குள் பல சிந்தனைகளை கிளறியது. இந்தியா எனும் கருத்தாக்கம் குறித்து அங்கு பேசிய பலரும் நாம் நம்மை பற்றி சொல்லும் கதைகளையே சொல்வதாக தோன்றியது. நம்மால் கட்டுப்படுத்த முடிகின்ற கதை என்பது நம்மை பற்றி நாம் சொல்லிக்கொள்ளும்
கதையை மட்டும் தான். ஆகவேதான் திரும்பத்திரும்ப அழுத்தி சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஓரளவு செல்வாக்கு அடைந்தால் நாம் விரும்பும் கதையை வற்புறுத்தி பிறரிடம் கேட்டு பெறலாம். ஆனால் இவை இரண்டிற்கும் அப்பாலான நமக்கு பின்னாடி பேசப்படும் கதையே வரலாறாக நின்றுவிடும், பெரும் ஆற்றல் கொண்டு எழும். இந்த அச்சம் எல்லா சர்வாதிகாரிகளையும் ஆட்டிப்படைக்கிறது. ஆகவேதான் அவர்கள் ரகசியங்களையும் காதல்களையும் அஞ்சுகிறார்கள். கதையாடலை கட்டுப்படுத்துவதே அதிகாரத்தை  கட்டுப்படுத்துவதும். ஹரிஷ் திரிவேதி தனது உரையில் ஒற்றை மொழியா ஒரு நாடா எனும் விவாதம் முக்கியமானது என்றார்.தனது தாய்மொழி இந்தி என்றாலும் தேசிய மொழியை விட ஒரு தேசமாக இருப்பது முக்கியம் என தான் கருதுவதாக குறிப்பிட்டார். 

அங்கிருந்து விடுதியறைக்கு திரும்பினோம். ராஜ்மோகன், மலையாள கவிஞர் இந்து மேனன், மது ராகவேந்திரா என அனைவரும் நெடுநேரம் பேசியபடி இரவுணவு உண்டோம். மற்றொரு நெடிய நாள் முடிவுக்கு வந்தது.  No comments:

Post a Comment