Wednesday, May 20, 2020

உடைந்த துண்டுகளில் உருக்கொள்ளும் சித்திரம்- எம்.கோபாலகிருஷ்ணன்

(நீலகண்டம், பாரிஸ், கழுதை பாதை மற்றும் நட்சத்திரவாசிகள் குறித்து எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் எழுதியிருக்கும் கட்டுரையில் நீலகண்டம் குறித்து அவர் எழுதிய பகுதியை இங்கு பதிகிறேன். நாவலின் வரைவு வடிவத்தில் வாசித்து சில அவதானிப்புகளை கூறினார். அவருக்கு எனது நன்றிகள். ) 

சுனில் கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ நாவலின் மையத்தை ‘குழந்தைகள்’ என்று ஒற்றைச் சொல்லில் வகுக்க முடியும். இன்னும் கறாராகச் சொல்லப் போனால் குழந்தையின்மை என்பது தனிமனித அளவிலும் குடும்ப உறவுகளுக்குள்ளும் சமூக உறவிலும் ஏற்படுத்தும் உளச் சிக்கல்களை மையம் கொண்டுள்ளது என்றே சொல்லலாம்.

இதுவொன்றும் புதியதல்ல என்றாலும் சொல்லி முடிக்கப்பட்டுவிட்ட கதை அல்ல. இன்றைய சமூக மனிதனிடம் வம்சவிருத்தி என்னும் அம்சம் ஏற்படுத்தும் அழுத்தங்கள் வேறானவை. அறியாமையும் பெண்களை மட்டுமே காரணமாக்கிய ஆணாதிக்கமும் வலுவாக இருந்த நேற்றைய சூழலும் தகவல்தொடர்பினால் திறக்கப்பட்டுள்ள உலகளாவிய அறிவுப்புலமும் மருத்துவம், அறிவியல் இரண்டின் உச்சபட்ச சாத்தியங்களாலும் பெருமளவு மாறியிருக்கும் இன்றைய நவீன சூழலும் வெவ்வேறானவை. இன்றைய தீர்வுகள் எளிதானவை என்ற எண்ணம் உடனடியாக எழுந்தபோதும் தனிமனித அளவில் அவை எழுப்பும் கேள்விகளும் சிக்கல்களும் நேற்றைய சூழலில் கிளைத்தவையே. தனிப்பட்ட ஆண் பெண் சார்ந்த உள மோதல்களில் தொடங்கி இந்தப் பிரச்சினை ஏற்படுத்தும் உடைப்புகள் பெரும் பாதிப்புகளை விளைவிப்பவை.

இந்த நாவல் அவ்வாறான மோதல்களையும் உடைப்புகளையும் வெவ்வேறு கோணங்களில் அணுகியுள்ளது. அந்த வகையில் நாவலின் மையம் மிக முக்கியமானது.

இந்த நாவல் சிதறலான ஒரு வடிவத்தில் சொல்லப்பட்டுள்ளது. நேர்கோட்டு வடிவத்திலேயே நாவல் இருக்கவேண்டிய அவசியம் இல்லைதான். வடிவத்தை கலைப்பதும் மீறுவதும் தேவையைப் பொறுத்து செய்யவேண்டியவைதான். முற்றிலும் நேரடியான கதைசொல்லல் முறையைக் கொண்ட நாவலாக இல்லாமல் ஒரு கோணத்தில் இது மீயதார்த்தமாகவும் இன்னொரு கோணத்தில் மாய யதார்த்த பாணியிலுமாக அமைந்துள்ளதால் வெவ்வேறு வடிவங்களை கையாண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. குழந்தைகளைச் சுற்றிய உலகம் என்பதால் குழந்தைகளுக்கான உலகமும், விக்ரம் வேதாவும் உள்ளே வந்திருக்கவேண்டும். விக்ரம் வேதாவுக்கிடையே சொல்லப்படும் புராண கதைகள் நாவலின் மையத்தை சுற்றிய கேள்விகளாகவும் விளக்கங்களாகவும் அமைந்திருக்க குழந்தைகளின் உலகமாக அமைந்துள்ள பகுதிகள் குழந்தைகளுக்கேயுரிய வெகுளித்தனங்கள் இன்றி புத்திசாலித்தனமாக உள்ளன.  பழங்கதைகள் இரண்டும், நாடகமொன்றும், வழக்காடு மன்றத்திற்கான விண்ணப்பமொன்றும் கதாபாத்திரங்களே எழுதும் குறிப்புகளும் நாவலின் பல்வேறு பகுதிகளாக அமைந்துள்ளன. இவை யாவும் கதையின் முன்பின் உறுப்புகளாக அமைந்திருப்பவை. தொடர்ச்சியை வெவ்வேறு தளத்திலிருந்து வாசகனுக்குத் தெரிவிப்பவை. நாவலின் புரிதலுக்கும் மேலதிக வாசிப்புக்கும் இடமளித்துள்ளன. ஆனால் நாவலின் வாசிப்பு சுவாரஸ்யத்துக்கு இவை  இடமளிக்கவில்லை.

தமிழில் இதற்கு முன்னும் வடிவ அளவிலான பல பரிசோதனைகளும் முயற்சிகளும் நடந்துள்ளன. ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலின் வடிவம் அதன் மையத்துக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது. அண்மையில் வெளியான விவேக் ஷான்பாக்கின் ‘காச்சர் கோச்சர்’ நாவலும் வெவ்வேறு கதாபாத்திரங்களின் வழியாக சொல்லப்பட்ட கதைதான். அதன் வடிவ மீறல் நாவலின் மையத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது.

தமிழவன், எம்.ஜி.சுரேஷ், கோணங்கி ஆகியோர் நாவலின் புதிய சாத்தியங்களை வடிவங்களை எழுதிப் பார்த்திருக்கிறார்கள்.  நாவல் வடிவத்தில் தொடர்ந்து புதிய பாணிகளை பரிசோதிப்பவர் யுவன். பா.வெங்கடேசனின் நாவல்களும் அவ்வகையே. இவை இவ்வாறு தமிழின் பல்வேறு எழுத்து முறைகளையும் வடிவங்களையும் முன்வைத்த நாவல்களின்  வரிசையில் ‘நீலகண்டமு’ம் இடம்பெறுகிறது.

நாவலின் கச்சிதமான புனைவு மொழி வெவ்வேறு வடிவங்களிடையேயும் தனித்துவத்துடன் அமைந்துள்ளது. குழந்தைகளின் உலகத்தைச் சொல்லும் பகுதிகள் தமிழில் வெகுவாக இல்லாத சிறுவர் உலகத்தை அபாரமாக கட்டமைத்துள்ளன. மனவோட்டங்களாக அமைந்துள்ள குறிப்புகளும் ( கரையான் போன்றவை ) பல இடங்களில் புனைவுச்சம் பெற்றுள்ளன.

மனிதனின் எல்லா முயற்சிகளுக்கும் ஆதாரமாக அமைந்திருப்பது தனது சந்ததிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதுதான். இயற்கையாக ஒரு வாரிசு அமையாதபோது அந்தத் தம்பதிகளின்மீது ஏற்படும் அழுத்தங்கள் பல்வேறு வகையானவை. இன்றைய மருத்துவத் துறையில் பணம்பெருக்கும் மிகப் பெரும் வாய்ப்பாக மாறியிருக்கும் இந்தச் சிக்கலின் உளவியல் கூறுகளை வெவ்வேறு வடிவங்களின் வழியாக விவாதித்துள்ளது சுனில் கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’.

( நீலகண்டம், யாவரும் வெளியீடு )

No comments:

Post a Comment