Friday, May 8, 2020

இச்சாதாரி

Snakes in Chinese mythology - Wikipedia

காய்ந்து உதிர்ந்து கிடந்த இலைகளின் ஊடாக அவர்கள் நடந்து சென்றபோது அதன் சரசாப்பு ஒலி கனத்து கிடந்த நிசப்தத்தை கீறி சென்றது. இரவுகளில் மட்டுமே அவர்கள் நடந்தார்கள். அதுவும் கூட தொடர்ச்சியாக அல்ல. ஒருமணிநேரத்திற்கு ஒருமுறை அவர்களுக்கு ஒய்வு தேவையாய் இருந்தது. கேசவன் கேட்டார் “நடக்க தொடங்கி ஒருமணிநேரம் ஆகிவிட்டதா?|” யாரும் எதுவும் சொல்லவில்லை. எல்லோரும் மெதுவாக தரையை ஊன்றி கவனித்தபடி நடந்தார்கள். “கொஞ்சம் ஓய்வெடுக்கலாமா?” என மீண்டும் கேட்டார். கேசவனின் கரம் கோர்த்து நடந்து வந்த அவருடைய மனைவி மட்டும் அவர் கையை இறுக அழுத்தினார். “இந்த இடம் அழகாக இருக்கிறது. மேலே நிலவு தெரிகிறது. அதற்காகத்தான் சொன்னேன்.. இதை விட்டால் நல்ல இடம் கிடைக்காமல் போகலாம்.” என்றார். அவருக்கு முன் சென்று கொண்டிருந்த ஜேக்கப் மெதுவாக திரும்பி “கேசவன் வாயை மூடு, உன்னை விட பத்து வயது அதிகம் நான் நடக்கிறேன், உனக்கென்ன வந்தது,  இப்போது தான் அரைமணிநேரம் கடந்திருக்கிறோம்.’ என மூச்சு வாங்க சொல்லிவிட்டு மீண்டும் முன்னே திரும்பினார். 

கேசவன் எதுவும் சொல்லவில்லை. பக்கவாட்டில் தெரிந்த இரண்டு பச்சை விழிகளை பார்த்ததும் உடல் வியர்த்தது. வலக்கையில் ஊன்றியிருந்த நடை கம்பை அதை நோக்கி சுட்டிக்காட்டி ‘கேப்டன் அது என்ன?’ என கேட்டார். கேப்டன் அஜய் குருவில்லா அணைத்து வைத்திருந்த டார்ச் ஒளியை பாய்ச்சியபோது அது புதருக்குள் மறைந்தது. ‘கேசவன் அஞ்ச வேண்டியதில்லை. இது காட்டுப்பூனைதான்.’ என்றார். கொஞ்சம் தொலைவு நடந்திருப்பார்கள் அப்போது சட்டென குருவில்லா உரக்க கூவினார் ‘ஜேக்கப் அங்கேயே நில்லுங்கள்’. அனைவரும் அந்தெந்த இடங்களில் அப்படியே சிலைந்து நின்றார்கள். இந்த ஒருவாரத்து நடையின் ஊடாக இதற்கு நன்கு பழகியிருந்தார்கள். இலை சரசரப்பு துல்லியமாக கேட்டன. காற்றில் ஊன் நெடி எழுந்தது. சரசரப்பு ஓசை ஓய்ந்ததும் “செல்லலாம்” என்றார் கேப்டன். 
கேசவன் கேப்டன் இருக்குமிடம் நோக்கி நெருங்கி சன்னமாக அவரிடம் ‘கேப்டன், அது என்ன, பாம்பா? ஊன் வீச்சம் எழுந்ததே?’ என கேட்டார். ‘கேப்டன் மெளனமாக நடந்தார். அவர்கள் தொடர்ந்து நடந்து சென்றார்கள். கொஞ்ச நேரத்தில் ஜேக்கப் நின்றார். ‘திரும்பி, இது ஒய்வு நேரம், ஓய்வெடுங்கள்’ என்றார். முந்தைய குழு விட்டுச்சென்ற அடையாளங்களை கொண்டே ஜேக்கப் ஒய்விடத்தை கண்டடைகிறார் என கேசவன் புரிந்து கொண்டார். ‘தயவு செய்து எவரும் தீ மூட்ட வேண்டாம். இலைகள் காய்ந்து உதிர்ந்து உள்ளன. தீப்பற்றி பரவ வாய்ப்பு உள்ளது. காற்றும் பலமாக வீசுகிறது.’ என்றார். பையில் வைத்திருந்த ரொட்டியையும் உலர்ந்த திராட்சையும் கேசவனும் அவரது மனைவியும் உண்டார்கள். கேப்டன் அவரருகே வந்து அமர்ந்து கொண்டார். ‘இங்கே முன்பு ராஜ நாகங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். நகரத்தின் கழிமுகம் மாசுபட்ட பிறகு அவற்றின் வாழ்விடங்கள் அழிந்து அவையும் அழிந்துவிட்டன என்றே ஆய்வாளர்கள் கூறியிருந்தார்கள். நாம் அங்கு பார்த்தது ஒரு ராஜ நாகம். வேட்டையாடிய உணவின் வீச்சமாக அதிருக்கலாம். அதை அங்கு சொல்லியிருந்தால். நீங்கள் பயந்திருப்பீர்கள் கேசவன்.’ என சிரித்தார். ‘இங்கு ராஜ நாகமா? விளையாடாதீர்கள் கேப்டன்.’ என்றார் கேசவன் படப்படப்புடன். ‘எனக்கும் அது ஆச்சரியம் தான். நம்மை கடந்தது பன்னிரண்டு அடியிருக்கும் என ஊகிக்கிறேன் எங்கள் ஊரில் பாம்புகளை பற்றி பல கதைகளை சொல்வார்கள். அவற்றை நினைத்துக்கொண்டிருந்தேன். எப்படியோ அவை பிழைத்து இருக்கின்றன. இப்போது மானுட நடமாட்டம் குறைந்ததும் அவை பல்கி பெருகி தங்கள் இடங்களை எடுத்துக்கொண்டிருக்கக்கூடும்.’ ‘இங்கும் பாம்பு பற்றிய கதைகள் உண்டு. இணை இறந்தால் பழிவாங்க புறப்படும் இச்சாதாரி நாகங்கள் பற்றி கதைகதையாக சொல்லக்கேட்டிருக்கிறேன் நூற்றாண்டுகள் கடந்தும் வாழும் என்பார் எனது பாட்டி.’ ‘ஆ..என்னவொரு பொருத்தமான பெயர். இச்சாதாரி. இச்சையின் பொருட்டு உயிரை பிடித்துக்கொண்டிருத்தல்.’ என சொல்லிச்சிரித்தார். 

ஜேக்கப் குறட்டை விடும் ஒலிகேட்டது. ‘கொடுத்து வைத்தவர்’ என்றார் கேசவன். பலரும் ஆங்காங்கு கால் நீட்டி படுத்திருந்தனர். 

நான்கைந்து மாதங்களில் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது என அசைபோட்டுக்கொண்டிருந்தார். எழுபத்து மூன்று வயதில் இப்படி இரவெல்லாம் நடந்து உயிர்பிழைத்திருக்க தான் ஓடிவரக்கூடும் என அவர்  ஒருபோதும் எண்ணியதில்லை. ஐந்து மாதங்களுக்கு முன்  வைரஸ் முதலில் செய்தியாக மட்டும் பரவிக்கொண்டிருந்த காலத்தில் எல்லாம் இயல்பாகத்தான் இருந்தது. நாள் தவறாமல் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிரிக்கவும், சிடுசிடுக்கவும் தருணங்கள் வாய்த்தன. பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவியபோது பிராகிருதிஸ்தான் அரசு அதை முனைப்போடு கட்டுப்படுத்தியது. அஞ்சத்தேவைஇல்லை என்றார்கள். பிராகிருதிஸ்தானின் பெருந்தலைவர் தினமும் தோன்றி வெற்றிக்கதைகளை பேசியபடி இருந்தார். முதலில் எழுந்த  ஒவ்வாமை மெல்ல மெல்ல மறைந்தது அவரை ஒருமாதிரி ஏற்கவும் ரசிக்கவும் தொடங்கினார் கேசவன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் அரசை முழுமையாக நம்புவதைத்தவிர வேறுவழியில்லை எனும் அவருடைய கூற்றை முழுமையாக ஏற்றார். பரவல் அதிகரித்தபோது பலியும் புரளியும் அதிகரித்தது. எல்லா ஊடகங்களையும் அரசு தடை செய்தது. முன்பைவிட புரளி பாய்ந்து பரவியது. 

 கேசவன் வசித்த அடுக்ககத்தில் அவரைவிட இரண்டு வயது இளையவர் ஒருவர் இறந்து போனபோது தான் அவரை அச்சம் பீடிக்க தொடங்கியது  முதியவர்கள் அஞ்ச வேண்டியதில்லை. அரசு உரிய சிகிச்சை அளிக்கும் என உத்திரவாதம் அளித்தது. எல்லாம் கட்டுக்குள் இருந்ததாக நம்பப்பட்டுக்கொண்டிருந்த காலக்கட்டத்திற்கு பிறகு ஆழிப்பேரலை என வைரஸ் மீண்டும் எல்லோரையும் சுழற்றி வீசியது. கடந்த ஒரு மாதத்தில் அரசின் அணுகுமுறை மாறியிருப்பதை உணரமுடிந்தது. கேசவன் உணர்ந்து கொண்டது போலவே இவர்கள் அனைவரும் உணர்ந்து கொண்டார்கள். 

இது இப்படித்தான் தொடங்கியது. முதலில் வடக்கிருத்தல் எனும் கீழைத்தேய உன்னத பண்பாடு குறித்து அறிஞர்கள் ஆய்வாளர்கள் பேசும் ஆவணப்படம் நாளுக்கு மூன்றுமுறை ஒளிபரப்பப்பட்டது. பின்னர் போர் வெற்றிக்காக தன்னை பலிகொடுக்க ஒப்புக்கொண்ட அரவான் கதையை நாடகமாக்கினார்கள். ‘அறம் வெல்வதற்கு, நீங்கள் தழைத்திருக்க, உலகம் வளமுடன் இருக்க காலம் எனக்கு பணித்த பணி இது தந்தையே.’ என கூறிவிட்டு ‘காலம் அருஞ்செயல் கோரி உங்களையும் அழைக்கும்’ என பார்வையாளர்களை நோக்கி பேசும் அரவானின் இறுதி வசனத்தையும் கேசவனால் மறக்க முடியவில்லை. பிறகு உலகின் பாவங்களுக்காக சிலுவையில் மரித்த இயேசு கிறிஸ்துவின் மரணத்தை பற்றி பேசினார்கள். அடுத்து மதநூல்களில் இருந்து புனிதக்கடமை குறித்து மேற்கோள்களை எடுத்துப்போட்டு மறுவிளக்கங்கள் அளித்தார்கள். மறுமையின் சாட்சியர்கள் புற்றீசல் போல தோன்றி வாக்களிக்கப்பட்ட புதிய உலகில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக அறிவித்தார்கள். ஆவிகள் அவர்கள் மீதிறங்கி ஆருடம் கூறின. தீரா நோயாளிகள் தங்கள் துயரமான வாழ்க்கை கதைகளை அழ அழ ஊடகங்களில் கூறினர். தங்களுக்கு இந்த வாழ்வு போதும் எங்களை விடுவியுங்கள் என இறைஞ்சி கதறினர்.

அப்போதுதான் மருத்துவமனைகளில் தொற்று உள்ள வயோதிகர்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பபடும் செய்திகள் வரத்தொடங்கின. மருத்துவமனை வாயிலில் அவர்கள் விரட்டியடிக்கப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் சுற்றத் தொடங்கின. இந்த இக்கட்டான தருணங்களில் நாம் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என பெருந்தலைவர் தோன்றி அறிவுறுத்தினார். மறுநாள் முதல் தியாகம் ஒரு கட்டாயவிதியாகி இருந்தது. மருத்துவமனை ஏற்க மறுத்தவர்களை வீடு மீண்டும் தொற்றுக்கு அஞ்சி ஏற்றுக்கொள்ள மறுத்தது. கேசவன் ஒருநாள் காலையில் ஜன்னலில் இருந்து சாலையில் கரையும் காக்கை கூட்டத்தை பார்த்தார். அவை விலகி பறந்த ஒரு கணத்தில் முதிய முகம் ஒன்று தென்பட்டது. முற்றுபெறாத அடுக்ககத்தின் மாடியிலிருந்து குதித்து இறந்ததாக சொன்னார்கள். அன்றுமுதல் கண்ணை மூடும் போதெல்லாம் காகங்களின் கீறலை எரிச்சலாக முகத்தில் உணர்ந்தார். 

மரணங்கள் பெருகின. தொற்றுள்ளவர்கள், தொற்று இருக்கக்கூடும் என அஞ்சுபவர்கள் என பலரும் மாண்டார்கள். ஊரெங்கும் ‘இனியும் வாழ்ந்து என்ன பயன்? முடிவெடுங்கள்’ என சிகப்பு நிற தட்டிகள் இரவோடு இரவாக வைக்கப்பட்டன. மறுநாள் பெருந்தலைவர் புதிய திட்டத்தை அறிவித்தார். தன்விருப்ப மரண தேர்வு சுருக்கமாக தம. நாடுமுழுவதும்  உள்ள ஆரோக்கியமான இளைஞர்களை இத்திட்டத்தை மேற்பார்வையிடும் தன்னார்வ தொண்டர் படையில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். மேலும் இந்த திட்டத்தில் தங்கள் மரணத்தை தேர்ந்தெடுத்து கொள்பவர்களுக்கு அரசு மூன்று சலுகைகளை அறிவித்தது.

1. அவரவர் மத நம்பிக்கையின் படி இறுதி சடங்கும் நல்லடக்கமும் உரிய நேரத்திற்குள் நிகழும். 
2. இதற்கான செலவை அரசாங்கமே ஏற்கும். 
3. அரசாங்க அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து மரண முறைகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அரசு பயனருக்கே அளிக்கிறது. அதை நிறைவேற்றும் செலவையும் அரசே ஏற்கிறது. மரண நேரத்தையும் பயனரே முடிவு செய்துகொள்ளலாம். 

காலத்தின் தொண்டர்கள்- தன்னார்வலர்கள் தங்களை அப்படித்தான் அழைத்து கொண்டார்கள். அரசு ஆங்காங்கு மையங்கள் அமைத்து அவர்களுக்கு பயிற்சி அளித்தது. அரசு திட்டத்தை அறிவித்தும் கூட முதல் ஒரு வாரத்தில் எவருமே தன்விருப்புடன் பதிந்துகொள்ள முன்வரவில்லை. இத்தனைக்கும் தற்கொலைகள் நிகழ்ந்தபடிதான் இருந்தன. ஒருவாரத்திற்கு பின் மூன்றாம் நிலை புற்றுநோயாளியான மருத்துவர் முதல் ஆளாக பதிந்து கொண்டார். மருத்துவர்கள் அவருடைய உயிரை அடக்க ஊசியை செலுத்தும்போது அரசாங்கத்திற்கு கண்ணீர் மல்க நன்றி கூறிவிட்டு ‘மரணம் இத்தனை இனிய அனுபவமாக இருக்கும் என நான் கற்பனை செய்ததில்லை என சொல்லியபடி கண்மூடி மரணித்ததை நாடு முழுக்க நேரலையில்  ஒளிபரப்பினார்கள்.  ‘மாற்றங்கள் தானாக நிகழாது நாம் தான் அதை நிகழ்த்த வேண்டும்.’ என காலத்தின் தொண்டர்கள் இடையே உரையாற்றினார் பெருந்தலைவர்.  காலத்தின் தொண்டர்கள் கருப்பு ஆடையும் அதன் மீது கருப்பு பாதுகாப்பு அங்கியும் அணிந்துக்கொண்டு வீடுவீடாக சென்று அறுபது வயதிற்கு மேல் உள்ளவர்களின் பட்டியலை சரிபார்த்தார்கள். ஒவ்வொரு தொண்டர் குழுவிற்கும் வாராந்திர இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விளக்கி கூறியும், கெஞ்சியும், மிரட்டியும் தங்களது இலக்குகளை அடைந்தார்கள். 

மக்கள் தேர்ந்தெடுத்த மரணத்தின் வழிமுறைகள் விநோதமாக இருந்தன. சிலர் தங்கள் குடும்ப வழக்கப்படி தொல்வழிமுறைகளை பின்பற்ற கோரினர். அதன்படி வயோதிகர்களுக்கு உடல்முழுக்க நல்லெண்ணெய் தேய்த்து குளிர்ந்த நீரில் குளிப்பித்து வெய்யிலில் கிடத்தினர். வலுக்கட்டாயமாக வீட்டு உறுப்பினர்களால் அனுப்பப்பட்டவர்கள் சிலர் கோர மரண வழிமுறைகளை தேர்ந்தெடுத்ததின் உளவியல் பின்னணி ஊடக விவாதங்களில் சுவாரசியமான பேசு  பொருளாயின.

இந்நிலையில் தான் கேசவன் இத்தகைய ரகசிய வயோதிகப்படை உருவாவதை தெரிந்து கொண்டு அவர்களுடன் இணைந்து கொண்டார். மொத்தம் முப்பத்தி மூன்று பேருடன் தொடங்கிய குழு இப்போது இருபத்தி ஏழாக குறைந்திருந்தது. ரகசிய இடத்தில் இருக்கும் கைவிடப்பட்ட கல்லூரிக்கு செல்வதே இவர்களுடைய திட்டம். 

ஜேக்கப் திடுக்கிட்டு எழுந்தார். வாயில் வழிந்த கோழையை உமிழ்ந்துவிட்டு கைக்கடிகாரத்தை பார்த்ததும் ‘செல்வோம்’ என உரக்க கூவினார். அனைவரும் மெதுவாக எழுந்து அலுப்புடன் நடக்கத் தொடங்கினர். 

கேசவனின் மனைவி அவர் கையை பிடித்தபடி உடன் நடந்துவந்தார். தொடுவானம் வெளுக்கத் தொடங்கியது. ஜேக்கப் லேசாக செருமியபடி ‘சீக்கிரம்..சீக்கிரம்’ விடிவதற்கு முன் நாம் அங்கு பொய் சேரவேண்டும்.’ என்றார். கேசவன் வேகவேகமாக நடந்தார். ‘சீக்கிரம் வா’ என கையை இழுத்துக்கொண்டே சென்றார். மனைவிக்கு மூச்சிரைத்தது. கையை உதறி நெஞ்சை பிடித்துக்கொண்டு சற்று பொறுங்கள் என சமிங்கை செய்தார். அவர்கள் செல்லவேண்டிய கட்டிடம் கண்ணுக்கு தெரிந்தது. கேசவனின் மனைவி வயிற்றைப்பிடித்துக்கொண்டு குனிந்து வாயால் மூச்சை இழுத்துவிட்டார். ஒருகணத்தில் மயங்கி சரிந்தார். ஜேக்கப்பும் குருவில்லாவும் அவர்களை நெருங்கினார்கள். அழுதபடி உலுக்கிக்கொண்டிருந்த கேசவனை விலக்கிவிட்டு குருவில்லா அவருடைய மூச்சையும் நாடியையும் பார்த்தார். கையிலிருந்த டார்ச்சின் ஒளியை கண்களில் பாய்ச்சினார். ‘மன்னிக்கவும் கேசவன்’ என கையை அழுத்திப்பிடித்தார். ‘என்னை விட்டுவிடுங்கள், நான் இங்கேயே இவளோடு செத்து விடுகிறேன்.’ என அழுது அரற்றினார். ஜேக்கப் தொப்பியை கழட்டி சிலுவையிட்டுக்கொண்டு கேசவனின் தோளை தட்டிக்கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். பையிலிருந்து சிகார் ஒன்றை எடுத்து பற்றவைத்துக்கொண்டு ஆழ்ந்து மூச்சிழுத்தார். ஜேக்கப்புடன் கேப்டனும் இன்னும் இருவரும் சேர்ந்துக்கொண்டு அங்கேயே ஒரு குழி வெட்டினர். ஜேக்கப்பின் கங்கு செம்பொட்டாக துலங்கிக்கொண்டிருந்த சாம்பலில் ஒளிர்ந்தது. குழியில் இறக்கி மண் மூடி பிரார்த்தனை செய்தார்கள். ஒவ்வொரு படிநிலையிலும் கேசவன் கதறி அழுதார். ‘இதற்காகத்தான, இத்தனை சிரமமும், இங்கு இந்த காட்டில் சாகத்தானா’ என்றார். மற்றொரு சிகாரை புகைத்தபடி ஜேக்கப் ஒரு சிறிய பாறையில் அமர்ந்திருந்தார். குருவில்லா தோளை அணைத்து தேற்றிக்கொண்டிருந்தார். ‘என்னை விட்டு விடுங்கள், நான் இனி வாழ்ந்து என்னவாகப் போகிறது ..நான் அவளுடனேயே சாகிறேன்.’ என்று விடாமல் பிதற்றிக் கொண்டிருந்தார். ஜேக்கப் கங்கை காலால் அணைத்துவிட்டு எழுந்து கேசவனருகே வந்தார். ‘அது உன்னால் முடியாது, இங்கு எவராலும் முடியாது,’ கேசவன் அழுவதை நிறுத்திவிட்டு திகைப்புடன் அவரை நோக்கினார் அதுதான் கட்டிடம் நாங்கள் அங்கிருப்போம்.’ என சொல்லிவிட்டு எல்லோரையும் நோக்கி ‘கிளம்புங்கள்’ என்றார். குருவில்லா மட்டும் அவர்கள் கிளம்பும்வரை கேசவனுக்கு அருகே நின்றிருந்தார். அவரும் அகன்று சென்றபின்னர். அவர்கள் சென்ற வழியையே வெறித்துக்கொண்டிருந்தார். தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார். அவருக்கு பின்பக்கத்தில் இலை சரசரப்பையும் ஊன் நெடியையும் ஒருசேர அவர் உணர்ந்ததும் உடல் பரபரக்க தொடங்கியது. திரும்பி நோக்க அவருக்கு துணிவில்லை. கொஞ்சம் தொலைவில் அவர்களுடைய தலைகள் தென்பட்டன எழுந்து விடுவிடுவென அவர்களை நோக்கி வேகவேகமாக நடந்தார். 

No comments:

Post a Comment