Sunday, March 22, 2020

அம்புப் படுக்கை - ஒரு வாசிப்பு- காளீஸ்வரன்

(நண்பர் காளீஸ்வரன் அவர்களை அண்மையில் ஈரோட்டில் சந்தித்தேன். அப்போதுதான் அம்புப்படுக்கை வாசித்ததாக கூறினார். அவருடைய வாசிப்பை எழுதி அனுப்பியுள்ளார். நன்றி)

என் பால்யத்தில், ஒவ்வொரு தைப்பூசத்துக்கும் என் அம்மாவின் சொந்த ஊரான வடுகபாளையத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவிலுள்ள சென்னிமலைக்கு மாட்டுவண்டிகள் கிளம்பும். காவடி பூசைகள் முடிந்து வண்டிகள் கிளம்ப எப்படியும் அதிகாலை ஆகிவிடும். பெருமாநல்லூர் வழியே ஊத்துக்குளி வருவதற்குள் விடிந்துவிடும். அங்கு காலை உணவு. பின்னர் தோப்புப்பாளையத்தில் மதிய உணவு. மாலை வேளையில் சென்னிமலை சென்றிருப்போம். அதிகாலையில் கிளம்பும் மாட்டுவண்டிப் பயணம் பெரும்பாலும் உறக்கமில்லாத பயணமாகவே இருக்கும். அதற்கு மாட்டுவண்டிப் பயணம் தரும் கிளர்ச்சி, வைக்கோல் விரிக்கப்பட்டிருந்தாலும் கூண்டில் நன்கு சாய முடியாத அசெளகரியம் என சில காரணங்கள் இருந்தாலும், அவற்றைக் காட்டிலும் மிக முக்கியமான காரணம் மயங்காத்தாள் பெரியம்மா. அவர்கள் சொல்லும் கதைகள். பெரும்பாலும் ஒவ்வொரு வருடமும் ஒரே கதைகளாகத்தான் இருக்கும். ஆனால், இந்த வருடம் கேட்கும் கதைகளை, மீண்டும் கேட்க வேண்டுமானால், அடுத்த தைப்பூசம் வரை காத்திருக்க வேண்டும் என்பதே அக்கதைகளின் வசீகரத்தை இன்னும் உயர்த்துகின்றன. வளர்ந்துவிட்ட நவீன யுகம், 55 கி.மீ. தூரத்தை ஒரு நாள் முழுக்க கடப்பதை எப்படி அனுமதிக்கும் ? ஆகவே, மாட்டு வண்டிகளின் இடத்தை லாரி பிடித்துக்கொண்டது. பயண நேரமும் ஒன்றிரண்டு மணிகளாய் சுருங்கிப்போனது. கதைகளின் இடத்தை செல்போன்கள் ஆக்கிரமித்துக்கொண்டு பல வருடங்களாகி விட்டன. ஒரு சின்ன கையசைவில், பல்லாயிரம் கதைகள் அல்லது பாட்டுகள் எம்மொழியில் வேண்டுமே அம்மொழியில் என விஞ்ஞானம் அள்ளித் தந்திருக்கையில். ஒரே கதையை ஒரே மனிதனிடமிருந்து திரும்பத் திரும்பக் கேட்கும் சுகத்தை சொல்லி என்ன லாபம் ?

இந்த மனநிலை, பொதுவாகவே மனிதனின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.  உண்மையில் மனிதனைக் காட்டிலும் பன்மடங்கு தீவிரமாய் இயங்கவல்ல பல கண்டுபிடிப்புகளால் மனிதன் ஒரு சுமையாகக்கூட தோன்றலாம். இந்த அவநம்பிக்கையிலிருந்து பெரும் ஆசுவாசம் தருகின்ற ஒரு அற்புதக்கதையை சமீபத்தில் படித்தேன். திரு.சுனீல் கிருஷ்ணன் எழுதிய அம்புப்படுக்கை எனும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள “பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்” எனும் கதை அது. மனிதனின் இருப்பை இயந்திரங்களைக் கொண்டு நம்மால் பதிலீடு செய்துவிட முடியும். ஆனால், ஒவ்வொரு மனிதனின் இருப்பிலும் அவனுக்கான தனித்த அடையாளம் இருக்கிறது. உண்மையில் அந்த அடையாளமே அவன். அதை ஒருபோதும் இயந்திரங்கள் நிகர் செய்துவிட முடியாது என்பதில் இருக்கிறது எனக்கான சிறு நிறைவு. என்னதான் எஸ்.பி.பி. யே பாடினாலும், அட்சரம் பிசகாத வரிகள் அமைந்தாலும் வள்ளிக்குட்டிக்கு நாவன்ன லேனாவின் பாடலே அமுதமாய் அமைவது கொஞ்சம் நிம்மதியைத் தருகிறது.

குற்றம் புரிந்தவர்களைச் சூழும் ஒரு மந்திரக்கூண்டு; முழு நகரையும் கூழ்ந்துகொண்டுவிட, வெளியே தனித்துவிடப்பட்ட ”நல்லவன்” ஒருவனின் துயரம் சொல்லிமாளாது. தானும் கூண்டுக்குள் இருந்திருக்கவேண்டியவனே, ஆனால் வெளியிலிருப்பதற்குக் “இயந்திரக்கோளாறு” எனும் அவன் மன்றாட்டுடன் முடிகிறது “கூண்டு” கதை. ஒரு கோணத்தில், மற்ற  அனைவரும் ஒரு சிறு உலகில் அவர்களுக்கான சிறுமைகளுடன் மகிழ்ந்திருக்க, எவ்வளவு பரந்து விரிந்ததாய் இருப்பினும் அவன் இருப்பதுதான் கூண்டு எனும் எண்ணம் எழுகிறது. 

தன்னுள் முளைத்த அல்லது தான் கருவுற்று பின்னர் கைவிட்டுவிட்ட கீழ்மையின் உருவு என்பதே ஹரியின் மீதான காந்தியின் பாசத்துக்கான ஊற்றாக இருக்கலாம். மந்தையில் இருத்து தனித்துப் போன ஆட்டுக்குட்டிக்குத்தான் தேவனின் அரவணைப்பு அவசியம் அல்லவா. அந்தப் புரிதலினால் கூட, காந்தி மகான் தன்னுடைய மரணத்துக்குப்பின் நரகத்தைத் தேர்வு செய்கிறார். நிணம் கொதிக்கும் சிறுமைகள் நிறைந்த நரகத்தை நாடுவது அங்கேதான் மனிதர்கள் இருக்ககூடும், அங்கே தன்னுடைய சேவை தேவைப்படும் என்பதால் மட்டும்தானா? அவ்வுலகில்தான் தன் பிரியத்துக்குரிய வழி தவறிப்போன ஹரி இருக்கக்கூடும் என்பதாலும், அவனை நெஞ்சோடணைத்து மீட்சியளிக்கும் கடமையை உணர்ந்ததாலும்தான். ஹரி அவருள் இருந்து முளைத்தெழுந்ததாலோ என்னவோ அவ்வுலகில் எங்கும் அவர் முகம் நிறைந்திருக்கிறது. 

பொம்மைகளின் கைகளையுன் கால்களையும் திருகி விளையாடிப்பார்க்கும் குழந்தைபோல், சிலசமயம் காலமும் விளையாட ஆசை கொள்ளும்போது, மனித வாழ்வைக்காட்டிலும் பொருத்தமான பொம்மை கிடைப்பதில்லை. அனைத்து விதத்திலும் சரியானவாய் இருக்கும் வாசுதேவனின் வாழ்க்கையை ஒரு விபத்து புரட்டிப்போடுகிறது. உணர்வேயில்லாத அல்லது உணர்விருப்பதையே மறந்துபோன ஒரு நோயாளியிடம் காட்டப்படும் கருணைதான் உண்மையில் மிகப்பெரியது. பல வருடங்களுக்கு முன்பே திரு. ஜெயமோகன் அவர்களின் தளத்தில் படித்த கதை “வாசுதேவன்”. சமீபத்தில், மீண்டும் இந்தத் தொகுப்பில் இக்கதையின் முதல் நான்கு ஐந்து பத்திகளை படிப்பதற்குள்ளாகவே கதை நினைவில் எழுந்து வந்த வியப்புக்குறியது இந்தக்கதை.

மேற்சொன்ன கதைகளுடன், திமிங்கலம், காளிங்க நர்த்தனம், அம்புப் படுக்கை பேசும் பூனை, குருதிச்சோறு என முக்கியமான பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
”அம்புப் படுக்கை” - நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய சிறுகதைத் தொகுப்பு.

No comments:

Post a Comment