Sunday, March 15, 2020

கரோனா காலத்தில் ஜோர்பா

கசன்சாகிசின் 'ஜோர்பா எனும் கிரேக்கனை' மொழியாக்கம் செய்வது என் கனவு. ஆறு அத்தியாயங்கள் வரை செய்யவும் செய்திருக்கிறேன்.  எப்போதாவது செய்து முடிக்க வேண்டும். அதனுடைய சில பகுதிகளை மீண்டும் மீண்டும் நினைவு கொள்வேன். அப்படி எனக்கு பிடித்த பகுதிகளில் ஒன்று ஜோர்பாவின் இரண்டாம் அத்தியாயத்தில் வரும் இப்பகுதி. ஏனோ இந்த பத்தியை இப்போது வாசிக்கும்போது மிகுந்த ஆறுதலாக உணர்ந்தேன். அந்த ஆறுதலும் அமைதியும் எல்லோருக்கும் கிடைக்கட்டும். 

--
நான் எனது அறைக்குச் சென்று ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டேன். புத்தர் பற்றிய சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன. புத்தருக்கும் ஆட்டிடையனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை மீண்டும் வாசித்தேன். இந்த ஒரு உரையாடல் அமைதியை பற்றியும் பாதுகாப்பை பற்றியும் பல வருடங்களாக என்னுள் தீரா வினாக்களை எழுப்பியவண்ணம் இருக்கிறது. 

ஆட்டிடையன் - எனது உணவு தயாராகிவிட்டது, நான் எனது ஆடுகளிடமிருந்து பால் கறந்துவிட்டேன், எனது குடிசையின் கதவு தாழிடப்பட்டுள்ளது, உள்ளே தணல் எரிகிறது, ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!

புத்தர்- எனக்கு உணவும் தேவையில்லை பாலும் தேவையில்லை. இந்த காற்றே எனது புகலிடம், தணல் அணைந்துவிட்டது. ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!

ஆட்டிடையன்- என்னிடம் எருதுகள் உண்டு, மாடுகள் உண்டு, என்னிடம் என் தந்தை எனக்களித்த வயல்வெளிகள் உண்டு, எனது மாடுகளைச் சினையாக்கும் காளையும் உண்டு, ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!

புத்தர்- என்னிடம் மாடுகளும் இல்லை, காளைகளும் இல்லை, எருதுகளும் இல்லை, வயல்வெளிகளும் இல்லை. என்னிடம் எதுவுமே இல்லை. ஆகவே எனக்கு எந்த அச்சமும் இல்லை. ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!

ஆட்டிடையன்- எனக்கு நான் சொல்வதை கேட்கும், நம்பிக்கையான மனைவி இருக்கிறாள். எத்தனையோ ஆண்டுகளாக அவள் என் மனைவியாக இருக்கிறாள். இரவுகளில் அவளுடன் களியாடும்போது நான் மகிழ்வாக இருக்கிறேன். ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!

புத்தர்- நான் சொல்வதை கேட்கும் சுதந்திரமான ஆன்மா என்னிடம் இருக்கிறது. நான் பலவருடங்களாக அதைப் பயிற்றுவித்திருக்கிறேன் என்னுடனே விளையாட அதற்கு கற்று கொடுத்திருக்கிறேன். ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!

   

இவ்விரு குரல்கள் என்னுள் மாறி மாறி ஒலித்துக்கொண்டே இருந்தன, தூக்கம் ஆட்கொண்டது. காற்று மீண்டும் பலமாக வீசத்தொடங்கியது. அலைகள் பக்கவாட்டுச் சாளரங்களின் கனத்த கண்ணாடிகளை அறைந்து மோதின. நான் விழிப்பிற்கும் உறக்கத்திற்கும் இடையில் ஊசலாடும் புகை போல் மிதந்தேன்.

கொடூரமான புயல் வீசியது, வயல்வெளிகள் நீரில் மூழ்கின, எருமைகள், மாடுகள், காளைகள் என எல்லாவற்றையும் நீர் விழுங்கி கொண்டது. குடிசையின் மேற்கூரை பிய்த்துக் கொண்டு போனது, தீ அணைந்தது, அந்தப்பெண் கதறினாள், மயங்கி மண்ணில் விழுந்து மரித்தாள், ஆட்டிடையன் தன் புலம்பல்களைத் தொடங்கினான். அவன் சொல்வது என் காதில் விழவில்லை ஆனால் அவன் உரக்க அழுது கொண்டிருந்தான், உறக்கத்திற்குள் மூழ்கி கொண்டிருந்தேன், ஆழ்கடலுக்குள் தப்பித்துச் செல்லும் மீனைப்போல் மூழ்கி கொண்டிருந்தேன். 

No comments:

Post a Comment