Tuesday, December 24, 2019

காந்தியின் பாதை

டி.பி(D.B)  என்றழைக்கப்படும் டி. பாலசுந்தரம் அவர்கள் கோவையின் இலக்கிய மற்றும் தொழில்முனைவோர் முகங்களில் ஒருவர். தொழில்முனைவோருக்கு நடத்தும் மாத இதழில் காந்தி குறித்து அவருடைய 150 பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வருடமாக தொடர் கட்டுரைகள் வெளிவந்த சூழலில் நிறைவு கட்டுரையாக இந்த கட்டுரை இடம்பெற்றது.

---  

காந்தியின் ‘அறங்காவலர்’ யோசனையைப் பற்றி அனைவருக்கும் ஓரளவு பரிச்சயம் இருக்கும். பொதுவுடைமை அலை இந்தியாவில் எழுச்சிப்பெற்ற விடுதலையை ஒட்டிய இறுதி ஆண்டுகளுக்கு முன்னரே காந்தி அறங்காவலர் முறையை பற்றி சிந்தித்துள்ளார். மிக முக்கியமான வேறுபாடு என ஒன்றைச் சொல்லலாம் என்றால் காந்திய வழிமுறையின் நோக்கம் அன்பு மற்றும் கருணையைச் சார்ந்தது. மனிதர்கள் தன்னலத்தை துறந்து மேலெழ முடியும் எனும் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டது. காந்தி பகல்கனவு காண்பவர் அல்ல. அவருக்கு மனிதர்களின் இருண்ட பக்கங்கள் நன்கு பரிச்சயம். அவருடைய சுய சரிதையில் பல இடங்களில் மக்கள் திரளின் மீதான விமர்சனத்தை நாம் காண முடியும். காந்தி செல்வந்தர்களையும் தொழில் முனைவோரையும் வெறுக்கவில்லை. அறிவியல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை முழுக்க நிராகரிப்பவர் என்று முத்திரைக்குத்துவதும் பிழை. சிங்கர் தையல் இயந்திரத்தை ஒரு பெரும் சாதனை என்று எண்ணினார். ராட்டையும் ஒரு இயந்திரம் என்பதை உணர்ந்தவர் தான். அவருடைய விமர்சனங்கள் தொழில்நுட்பம் உலகை சுரண்டப் பயன்படுத்தப்படுகிறது எனும் நோக்கிலிருந்து எழுவது. பொருள் ஈட்டும் திறன் இயல்பிலேயே வாய்க்கப் பெற்ற ஒருவரை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றே அவர் கருதினார். வாழ்நாள் முழுவதும் செல்வந்தர்களின் உதவி அவரை வந்து சேர்ந்தபடிதான் இருந்தது. ஆனால் அது அவருடைய அற நிலைப்பாடுகளை பாதித்ததில்லை. அம்பாலால் சாராபாயை எதிர்த்துதான் அகமதாபாதின் மில் தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக காந்தி செயல்பட்டபோதும் அவர் அம்பாலால் சாராபாயை வெறுக்கவில்லை. எளிதாக இதை ஒரு போலி நிலை என சொல்லிவிடலாம் ஆனால் அது உண்மையல்ல. கோச்ரப் ஆசிரமத்தில் தக்கர்பாபாவின் சிபாரிசின் பேரில் ஒரு ஹரிஜன குடும்பம் சேர்த்துக்கொள்ளப்பட்டபோது அவருக்கு நிதியளித்தவர்கள் கடும் அதிருப்தி அடைந்தார்கள். நிதி உதவியை நிறுத்தினார்கள். காந்தி ஹரிஜன மக்கள் வசிக்கும் இடத்திற்கே அடுத்த மாதம் புலம் பெயர்ந்து விடலாம் என முடிவு செய்திருந்த சூழலில் யாரோ ஒரு சேத் 13000 அளித்துவிட்டு செல்கிறார். பிர்லா, டாட்டா என அன்றைய பெரும் செல்வந்தர்கள் காந்தியுடன் இணைந்து பணியாற்றினார்கள். ‘இந்திய சுயராஜ்ஜியம்’ நூலின் இறுதியில் ஒவ்வொருவரிடமும் சிலவற்றை சொல்கிறார். இந்திய செல்வந்தர்களிடமும் அவருக்கு சொல்வதற்கு சில இருந்தன. காந்தி இந்திய வணிகர்களை இயல்பாக ஏற்றுக்கொண்டாலும் இந்திய மகாராஜாக்களை ஏற்கவில்லை. அவர்களை கடுமையாக விமர்சித்தார். அவர்களுடைய ஆடம்பரமும் அதிகார தோரணையும் அவரை கடுமையாக எரிச்சல் படுத்தியது. வாரணாசி இந்து பல்கலைக்கழக கால்கோள் நாட்டு விழாவில் இப்படி ஆடம்பரமாக அமர்ந்திருக்கும் அரசர்களை கடுமையாக விமர்சித்து மேடையிலேயே உரையாற்றினார். இந்திய சுயராஜ்ஜியம் நூலில் ‘எனக்கு மட்டும் போதிய ஆற்றல் இருந்தால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எப்படி போராடுகிறேனோ அதேயளவு தீரத்துடன் இந்திய அரசர்களுக்கு எதிராகவும் போராடுவேன்’ என சொல்கிறார். காந்தியை புரிந்துகொள்ள இது உதவும். அவருக்கு வணிகர்கள் மீது இணக்கமும் மன்னர்களின் மீதான விலக்கமும் ஏன் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். செல்வம் மன்னர்களைப் பொறுத்தவரையில் தேங்கி விடுவதாகவும், அதிகாரத்தையும் வீண் ஆடம்பரத்தையும் பறைசாற்றுவதாகவும் இருப்பதே அவருடைய சிக்கல். பொருள் ஈட்டுவது சிக்கல் அல்ல அந்த பொருளை எப்படி செலவு செய்கிறோம் என்பதே அவருடைய முதன்மை கவலை. 

காந்தியின் ஆடை வெவ்வேறு காலகட்டங்களில் பரிணாமம் அடைந்தது. தென்னாபிரிக்காவில் இறுதி போராட்டத்தின்போது ஒப்பந்த கூலிகளின் எளிய ஆடையையே தனது ஆடையாக தேர்ந்தார். மதுரையில் அரையாடை உடுத்தத் தொடங்கிய கதை நாம் அறிந்ததே. தேவைக்கு அதிகமாக தன்னிடம் எதுவும் இருக்கக்கூடாது என்பது அவருடைய எண்ணம். இந்தத் தேவைகளை பொதுப்படுத்த முடியாது என்பதையும் அவர் அறிவார். இதுவும் பொதுவுடைமை சித்தாந்தத்திலிருந்து திண்ணமாக வேறுபடும் இடம் என சொல்லலாம். காந்திக்கு குற்ற உணர்ச்சி வெகுவாக உண்டு. இத்தனைக் கோடி மனிதர்கள் போதிய உடையின்றி இருக்கும்போது அவர் மட்டும் கூடுதலாக அணிய வேண்டியதில்லை என கருதினார். வட்டமேஜை மாநாட்டின்போது அவருடைய உடையைப் பற்றி கேட்கும்போது “எனக்கும் சேர்த்து உங்கள் மன்னர் உடை அணிந்திருக்கிறாரே” என சொன்னதை வேறு கோணத்தில் புரிந்து கொள்ளலாம். மன்னர் காந்திக்கு மட்டும் அல்ல ஏழை இந்திய குடிகள் அனைவருக்கும் சேர்த்து உடை அணிந்திருந்தார். 

பென்சில் சொல்லும் செய்தி, பசுமாடு சொல்லும் செய்தி என ஆளுமை வளர்ச்சி திறனுக்கான சந்தை எல்லாவற்றையும் தன் கோணத்தில் வளைத்து சந்தைப்படுத்தி கொள்கிறது. காந்தி, திருவள்ளுவர் என எவரையும் நாம் விட்டுவைக்கவில்லை. இது பிழை என கொள்ள முடியாதுதான் ஆனால் காந்தியை ஆளுமைத்திறன் வளர்க்கும் பண்டமாக குறுக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் மிக முக்கியமாகவும் கவனமாகவும் காந்தியிடம் இருக்கும் கலகக் குரலை தவிர்த்துவிடுகிறது. ஆஷிஷ் நந்தி ஒரு கட்டுரையில் எழுதுகிறார் “பல ஆண்டுகளுக்கு முன்னர் நடத்த ஒரு கூடுகையில் எனது நண்பரும், காந்தியின் பெயரருமான ராமச்சந்திர காந்தி மீண்டும் மீண்டும் காந்தியை இந்தியாவில் வாழ்ந்த ஒரு துறவி என பேசிக் கொண்டிருந்தார், அவருடைய அந்த துறவுத்தன்மையால்தான் இந்திய பொதுமக்களின் வாழ்வை அவரால் மாற்ற முடிந்தது என்றார். உமாசங்கர் ஜோஷி (குஜராத்திய எழுத்தாளர்) இதைக் கேட்டு எரிச்சலுற்றார்  “.காந்தியின் பெயரரே... இந்தியாவில் நூற்றுக்கணக்கான துறவிகள் உருவாகியுள்ளனர்..காந்தியின் தனித்தன்மை என்பது அவர் புனிதர் என்பதனால் வந்ததல்ல, காந்தியின் தனித்தன்மை என்பது இதுதான், அவர் ஒரு அரசியல்வாதியும்கூட.”

காந்தியிடமிருந்து விமர்சனமற்ற கீழ்படிதலை அல்ல அன்பும் மரியாதையும் கலந்த, வெறுப்பும் முன்முடிவுகளும் அற்ற கீழ்படியாமையை கற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணுகிறேன். அப்படியொரு குரல் எழும்போது அதை இயல்பாகவும் நேர்மையாகவும் எதிர்கொள்ளும் திறன் நமக்கு வேண்டும். நமக்கு மேலான அதிகார படிநிலைகளின் நெருக்கடிகளை நாம் எதிர்கொள்ளும்போது நமக்கு இந்த உறுதியும் தெளிவும் தேவை என நம்புகிறேன். 

காந்தி நவீன தொழில்மய நாகரீகத்தை நிராகரிக்கிறார். நடைமுறையில் நாம் காந்தியிடமிருந்து வெகுதொலைவு கடந்து வந்துவிட்டோம். நம்மால் ஒருபோதும் திரும்ப முடியாத தொலைவு. திரும்பத்தான் வேண்டுமா என்றால் அதுவும் விவாதத்திற்கு உரியதே. ஆனால் காந்தி நவீன நாகரீகத்தின் மீது வைத்த விமர்சனங்கள் அப்படியேதான் உள்ளன. காந்தியின் விமர்சனங்கள் நம்மை தொந்தரவு செய்பவை. சீண்டுபவை. ஆழுள்ளத்தில் உண்மை உண்மை என எதிரொலிப்பவை. ஆனால் ஒரு சமூகமாக நம்மால் இன்றைய நவீன வாழ்வை கைவிட்டு சென்றுவிட முடியாது என்பதே நிதர்சனம். தொழில்நுட்பத்தின் சிக்கலை தொழில்நுட்பமே தீர்க்கும். ஆனால் நாம் சிக்கலை தீர்க்க மேலதிக தொழில்நுட்பத்தை, மேலும் சிக்கலான தொழில்நுட்பத்தை நாடுகிறோம். அவை அதைவிட பெரும் சிக்கல்களை தருவிக்கின்றன. ஒருவகையில் நாய்வாலை நிமிர்த்த முயலும் பூதத்தின் கதைதான் நவீன நாகரீகத்தின் கதையும்கூட. இதற்கான மாற்றுவழிகளை நாம் கண்டடைய வேண்டும். மேலும் பொருத்தமான, ஆபத்தற்ற அல்லது குறைந்த ஆபத்துடைய, எளிய தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்க வேண்டும். Human scale technology பற்றிய உரையாடல்கள் உலகெங்கும் நிகழ்ந்து வருகின்றன. தற்சார்பு பொருளாதாரம் குறித்த விவாதமும் பரவலாக நிகழ்ந்து வருகிறது. இத்தளங்களில் தொடர்ச்சியான விவாதங்கள் நிகழ வேண்டும். காந்தி “என் எழுத்தே என் செய்தி” என சொல்லவில்லை “என் வாழ்வே என் செய்தி” என்றே கூறியிருக்கிறார். காந்தி இந்திய சுயராஜ்ஜியம் நூலில் ரயில், மருத்துவர், வழக்கறிஞர் என எல்லாவற்றையும் கடுமையாக விமர்சிக்கிறார். பிரிட்டிஷ் அரசின் கொடை என போக்குவரத்தும், நவீன மருத்துவமும், நீதியமைப்பும் நம்பப்படும் சூழலில் அவர் அம்மூன்றையும் நிராகரிக்கிறார். ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் ரயிலை பயன்படுத்தினார். அவசியமான சமயங்களில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். நீதி மன்றத்தோடும் நீதி அமைப்புகளோடும் தொடர்பிலேயே இருந்தார். காந்தியின் கருத்துக்களை வாழ்வுடன் உரசியே பொருள் கொள்ள வேண்டும். காந்தி மொத்த வாழ்வையும் சத்தியத்தை அடைவதற்கான சாதனமாகவே பார்த்தார். அரசியல் செயல்பாடு, உணவு பழக்கங்கள், அகிம்சை என எல்லாவற்றையும் அந்த நோக்கிலேயே நாம் உணர்ந்துகொள்ள முடியும். சத்திய சோதனையில் அவர் ஆட்டுப்பால் குடிக்க நேர்ந்த நிகழ்வைப் பற்றி சொல்லும்போது சத்தியமா அகிம்சையா என வரும்போது சத்தியத்தின் பாதையையே தேர்வு செய்தார். தானொரு பூரண அகிம்சாவாதி ஆக முடியாது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார். காந்தியை நெருக்கமாக்குவது அவர் கருத்துக்கள் என்பதைக் காட்டிலும் அவருடைய முரண்பாடுகள். அதுவே அவரை மானுடராக்குகிறது. பெரும் ஆற்றல்களுக்கு மத்தியில் உறுதியுடன் (அல்லது ஒருவித அசட்டுத்தன்மையுடன்) நிற்க முயன்று தத்தளிக்கும் மனிதராக, ஒரு காவிய நாயகனாக ஆக்குகிறது. 

காந்தி இலக்கிற்கும் வழிமுறைக்கும் இடையிலான பிணைப்பைப் பற்றி வலியுறுத்துகிறார். வினை விதித்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான் என நாமறிந்த பழமொழி தான். நவீன வாழ்வில் இலக்கடையும் வெறி வழிமுறை குறித்த பிரக்ஞையை நீக்கி விடுகிறது. சரியான இலக்காகவே இருந்தாலும் கூட அதை அடைய அறமற்ற வழிமுறைகளை தேர்ந்தெடுக்கும்போது இலக்கு பொருள் இழந்து போகிறது. நம் வாழ்வில் இக்கட்டான நிலைகளில் இயன்றவரை இலக்கிற்கும் வழிமுறைக்கும் இடையிலான ஒர்மையை பேண இயலுமா என பார்க்க வேண்டும். காந்தி தோல்வியை ஏற்றுக்கொள்பவர். அதற்காக முழு பொறுப்பையும் தானே ஏற்பவர். செளரி சௌரா நிகழ்ந்தபோது போராட்டத்தையே நிறுத்தினார். அவருடைய குரலில் பலமுறை ஐயமும் சுய குழப்பமும் ஏற்படுவதுண்டு. பொதுவாக ஆளுமை வகுப்புக்களில் இவை எதிர்மறை இயல்புகள் என்றே நமக்கு கற்றுக்கொடுக்கப் படுகின்றன. காந்தியின் ஐயமே அவரை பெரும் தலைவராக ஆக்குகிறது என எனக்கு தோன்றுகிறது. ஹிட்லரின் உறுதி கொடுத்த பேரழிவின் பின்புலத்தில் இதை நாம் புரிந்துகொள்ள முடியும். தலைமைப் பண்பு குறித்த வரையறைகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். வெளிமுக பண்புடையவர்களே சிறந்த தலைவர்கள் அல்லது அத்தகைய இயல்புகளையே நாம் தலைமைத்துவத்தின் இயல்புகளாக கூறிவருகிறோம். உள்முக (Introvert) மனப்போக்கு கொண்டவர்களும் சிறந்த தலைவர்களாக ஆக முடியும். அவர்களுக்கு மக்களின் மீதான கரிசனமும் கருணையும் அதிகம். அதுவே அவர்களின் இயங்கு சக்தியும்கூட.  

 காந்தியை மேற்கோள் வழியாக மட்டும் புரிந்து கொள்வதைக் காட்டிலும் அவருடைய வாழ்வை உள்வாங்கி, படைப்பூக்கத்துடன் அணுகி அவருடைய முறைமைகளை நமதாக்கிகொண்டு நம் வாழ்வில் அவருடைய தடத்தை பின்பற்றிச்செல்ல முடிவதே அவரிடம் நாம் ஏதேனும் பெற்றுக்கொண்டோம் என்பதற்கான தடமாக இருக்கக்கூடும்.  

No comments:

Post a Comment