Thursday, December 5, 2019

நீலகண்டம் - பிரபாகரன் வாசிப்பு

(கவிஞர் பிரபாகரன் காரைக்குடி மரப்பாச்சி இலக்கிய வட்டத்தின் முக்கிய உறுப்பினர். விகடன் மாணவ பத்திரிக்கையாளராக இருந்தவர். காரைக்குடியிலிருந்து எழுந்து வரக்கூடிய படைப்பளர்களில் ஒருவராக அவர் இருப்பார் எனும் நம்பிக்கை எனக்குண்டு. நீலகண்டம் நாவல் வாசித்து அவருடைய கருத்தை அனுப்பி இருந்தார். நன்றியும் மகிழ்ச்சியும்.)

பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால நஞ்சை உண்டதால் நீலகண்டன் ஆக சிவபெருமான் மாறிய கதையை நாம் அறிவோம். இங்கு நஞ்சு என்பதோடு எதை வேண்டுமானாலும் பொருத்தி பார்க்கலாம். நம்மால் அதை செரிக்கவும் இயலாது, உமிழ்ந்து தள்ளவும் இயலாது. அதோடே வாழ விதிக்கப்பட்டது போல பல நேரங்களில் போராடவும், ஏற்றுக் கொள்ளவும், சகித்துக் கொள்ளவும், துறந்து ஓடிவிடவும் நாம் தவிப்பதே உணர்வுகளின் கலவையாக வாழ்வினைக் கட்டமைக்கிறது. சுனில் கிருஷ்ணன் அண்ணாவின் நீலகண்டம் நாவலும் அதன் வியக்க வைக்கும் ஒன்றிணைவுகள், பிணக்குகள், முரண்கள் மீது கட்டப்பட்டது. நீலகண்டர்களாக வாழும் மனிதர்களின் கதையை இந்நாவல் பேசுகிறது.

    குழந்தைமை என்பது வரமாக பார்க்கப்பட்ட சமூகத்தில் குழந்தைகள் இல்லாத நிலை சாபமாக கட்டமைக்கப்படுகிறது. நவீன சூழலின் தோற்றுவாய்களால் அந்த சாபத்திற்கு ஆட்படும் இணையர்கள் அதற்கான சாப விமோசனத்தையும் சந்தையாக்கப்பட்ட நவீனத்திலேயே தேடுகின்றனர். அந்த இணையர்களில் ஒருவர் தான் ரம்யாவும் செந்திலும். இரு வேறு கலாச்சார பின்னணி கொண்ட இருவரும் குடும்பங்களைத் தவிர்த்து வாழ்க்கையை அமைக்க போராடுகின்றனர். பிள்ளையின்மை சாபமாக மாறுகிற தருவாயில் அந்த கவலையே தங்களை அரிக்கிற நஞ்சாக மாறி தொண்டைக் குழியில் சிக்கி நிற்கிறது.

    இருவேறு குடும்பங்களின் பின்னணியை தொடர்ச்சியாக இல்லாமல் கதையின் போக்கே தீர்மானிக்கும் இடங்களில் கதைகளாக வருவது வாசிப்பின் ஆர்வத்தை உந்தி செல்கிறது.

    தத்தெடுக்கிற குழந்தை ஆட்டிசக் குழந்தையாக அமைந்துவிடும் சூழலில் வாழ்வில் சந்திக்கும் முரண்களைப் மிக நேர்மையாக பேச முயன்றிருக்கிறது நாவல். இதன் இணையாக விக்கிரமன் வேதாளம் கதைகளும், குழந்தை வர்ஷ்னியின் புனைவுகளாக வரும் கடலாமை, சோட்டா பீம், பாக்மென், நீலநிற யானை பொம்மை கதைகளும், ரம்யா செந்தில் வாழ்வின் நிகழ்வுகளும் இணைந்து நாவலை நகர்த்துகிறது.

    குடும்பங்களில் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. தங்களுக்கு நடக்குற எல்லாவற்றிலும் முன்னோர்களின் பங்கு இருப்பதாக நம்புகிறோம். அதிலும் இளவயதில் இறந்த பெண்களை சாமிகளாக வழிபடும் மரபு, அவர்களைச் சாந்தப்படுத்தும் நிகழ்வாக படையல்களை நடத்துவதை நான் அறிவேன். தொன்மங்களை, புராணங்களை புனைவுகள் என ஒதுக்க முடியாத இடத்தினை வாழ்க்கை சுட்டிக்காட்டி கொண்டே இருக்கிறது. 

    நீல நிறம் கொண்ட நஞ்சினைக் கட்டுக்குள் இருந்து விடுவித்துவிட்டால் குற்றஉணர்ச்சி எனும் நச்சாக மாறி விழுங்கிவிடுகிறது. கட்டுக்குள் கொள்ளும் வரை தான் அதனோடு நமக்குள்ள பிடிப்பு. 

    வெகு அழகான இடங்கள் நாவல் முழுவதும் இறைந்துக் கிடக்கிறது. பேக்மேனும் கடலாமையும், குழந்தை உற்பத்தி முனையம், மெடியா சுடலை மாடன் நாடகம், நீலநிற பொம்மை, வான்மதி- சோட்டா பீம் கதை இவையெல்லாம் சுவாரசியமான இடங்கள். வான்மதி-அருள்மொழி கதை நச்சினை அமுதாக்கி கொள்ள பழகியவர்கள் பற்றியது.

    நாவலோடு பயணிக்கும் யாரும் வர்ஷ்னி குழந்தை மீது அன்பு கொள்வதைத் தடுக்க முடியாது. நாகம்மா போலவே பச்சை நிற உடையிலேயே காட்சி அளிக்கிறாள். நாகம்மா, வர்ஷினி ஏன் ரம்யா கூட பிரக்ஞைகளின் வேறுபட்ட வடிவங்கள் தானே. கனத்த மனதோடு தான் நாவலின் கடைசி அத்தியாயங்களை கடக்க முடிகிறது. இவ்வுலகமே நீலகண்டம் தான். நாம் எல்லோரும் நீலகண்டர்கள் தான். நமக்கான நச்சு தான் வேறுவேறு.   

No comments:

Post a Comment