Tuesday, May 22, 2018

ஸ்டெர்லைட்

காந்தி சரியாகவே அரசைப் பற்றி கணித்தார். அரசு ஆன்மாவற்ற இயந்திரம் என்றார். தனிநபர் வன்முறையை காட்டிலும் பன்மடங்கு வீரியமானது. இந்த ஸ்டெர்லைட் போராட்டமும் கலவரமும் துப்பாக்கிச்சூடும் வெகுவாக அமைதி இழக்க செய்கிறது. அரசின் மீது நம்பிக்கையிழக்க செய்கிறது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் சில வருடங்களாக போராடி வருகிறார்கள். மிக முக்கியமாக அது ஏற்படுத்தும் மாசு பற்றிய கவலை அவர்களுக்கு இருக்கிறது. இந்த சிக்கலை வெறும் மேலெழுத்து வாரியாக புரிந்துகொள்வதை காட்டிலும் இதை ஒரு தத்துவ சிக்கலாக அணுகும்போதே நமக்கு விளங்கும். 

அரசு - மக்கள் உறவு தொன்றுதொட்டு தந்தை - பிள்ளைகள் உறவாகவே உருவகிக்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ கேள்விக்கு அப்பாற்பட்ட கீழ்படிதலை கோருகிறது. நவீன மக்களாட்சி இந்த நிலப்பிரபுத்துவ மனநிலைக்கு எதிரானது. எனினும் இந்தியா போன்ற தேசத்தில் நிலப்பிரபுத்துவ விழுமியங்கள் முழுவதுமாக வெற்றிகொள்ளப் படவில்லை. அது அவசியமா, சாத்தியமா போன்ற கேள்விகளை விட்டுவிடலாம். 

பெரும்பான்மை மக்களின் நலத்தை காரணம் காட்டி, ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு ஆலை அமைக்கிறார்கள். வேலை வாய்ப்பு மற்றும் வசதி பெருக்கம் நிகழும் எனும் நம்பிக்கை அளிக்கிறார்கள். ஆனால் அந்த இடத்தை சார்ந்தவர்களுக்கு அதில் ஒப்புதல் இல்லை. நவீன மக்களாட்சியில் பிராந்திய மக்கள் முடிவுக்கே வலு. காரணங்களோடு அல்லது காரணங்களே இன்றி நிராகரிக்க கூட அவர்களுக்கு உரிமையுண்டு. ஆனால் நிலப்பிரபுத்துவம் முடிவெடுக்கும் உரிமையை ஏற்பதில்லை. ஆகவே மக்களுக்கான முடிவையும் அரசே எடுக்கிறது. வெகுமக்களின் நன்மை பொருட்டு (பெரும்பாலும் வெகுமக்கள் நன்மை என்பது- அரசு மற்றும் முதலாளித்துவ ஆற்றல்களின் லாபநோக்கை உள்ளடக்கியதே) தியாகம் செய் என கோருகிறது. நாங்கள் எதற்காக தியாகம் செய்ய வேண்டும் என முரண்படுகிறார்கள்? எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் பிராந்திய மக்கள். நிலப்பிரபுத்துவமும் இல்லாத முழு மக்களாட்சியும் இல்லாத இரண்டுங்கெட்டான் சுழலில் இந்தியமக்கள் சிக்கி இருக்கிறோம். 

நவீன வாழ்வின் அற்புதங்களை நாம் அனுபவித்து கொண்டிருக்கும் இந்த கணத்தில் அது எங்கோ இயற்கை வளத்தை சுரண்டிக் கொண்டுதான் இருக்கிறது. நாம் நுகரும் ஒவ்வொரு பொருளும் அது உருவாகும் சூழலை நாசமாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. எனக்கு இப்பொருள் இங்கு உற்பத்தியாக வேண்டாம் என்பது சரி. ஆனால் அது வேறு எங்கோ அழிவை ஏற்படுத்தும்போது எவ்வித குற்ற உணர்வும் இன்றி நாம் அதை நுகர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். இந்த அற கேள்வியை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். காந்தி இதன் பொருட்டே கட்டற்ற நுகர்வின் ஆபத்துக்களை பற்றி எச்சரித்தார். நாம் நுகர்வதை துறப்பதில் இருந்து வெகு தொலைவுக்கு வந்துவிட்டோம். இந்த சுழலை உடைத்துவர என்ன வழி என்று யோசிக்கத்தான் வேண்டும். 

நியாயப்படி வெகுமக்கள் போராட்டத்திற்கு செவி சாய்க்கும் நவீன மக்களாட்சி இந்த ஆலையை மூடியிருகக் வேண்டும். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை. மேலும் அரசு இதை முரண்டு பிடிக்கும் மகனுடனான ஈகோ சிக்கலாக அணுகத் துவங்கியது. இந்திய அரசுகள் இப்படித்தான் இதை அணுகி வருகிறது என்பதும் உண்மை. மிக அரிதாகவே தனது குறுகிய எல்லையை, நோக்கங்களை கடந்து சென்றிருக்கிறது. ஆகவே இதன் முதல் பொறுப்பு அரசை சார்ந்ததே. குறிப்பிட்ட கட்சி, அரசு என்பதை கடந்து இந்திய அரசுகளின் இயல்பாகவே இது இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.  பெரும்பாலும் பன்முகங்கள் கொண்ட எந்த ஒரு சிக்கலையும் அரசுகள் தீர்த்தத்தில்லை. அல்லது தீர்க்க விரும்பியதில்லை. காரணம் ஏதோ ஒரு தரப்பை பகைத்துகொள்ள வேண்டும் எனும் அச்சம். இந்திய மக்களாட்சியில் பணம் முதலாளிகளின் கொடை. வாக்கு வெகுமக்களிடம் உள்ளது. ஆகவே பெரும்பாலான விவகாரங்களில் அற நிலைபாடுகள் துலக்கமாக தெரிந்தாலும் கூட அவற்றை தீர்க்கமாக அரசுகள் எடுப்பதில்லை. 

ஆயுதம் ஏந்தியவர்களுக்கு எப்போதும் ஆயுதமற்றவர்களின் போராட்டங்கள் பெரும் குடைச்சல். அவர்கள் போராட்டக் காரர்கள் கலகத்தில் இறங்குவதற்காக காத்திருப்பவர்கள். போராட்டத்தை தங்கள் களத்தில் இழுத்துபோடவே அவர்கள் விரும்புவார்கள். ஆகவே அவர்களே கலவரத்தை தூண்டிவிடுவதும் நிகழ்வதுண்டு. அப்போது வலிமையே வெல்லும் எனும் சித்தாந்தம் மட்டுமே வெற்றியை பெற்றுக் கொடுக்கும். கூட்டத்தை கும்பலாக்க எப்போதும் முயல்வார்கள். அதில் வெற்றிகண்டார்கள் என்றால் போதும் அவர்கள் ஆயுதமேந்த போதுமான தார்மீக நியாயங்கள் உருவாகிவிடும். அப்போது போராட்டம் என்பது இரு கும்பல்களுக்கு இடையிலான யுத்தமாக மாறிவிடும். காவல்துறையோ, ராணுவமோ கும்பலாக செயல்பட பயின்றவர்கள். அவர்களின் திட்டமிட்ட வன்முறைக்கு முன் மக்கள் திரளால் ஒருநாளும் நிற்க முடியாது. கும்பலுக்கு இடையிலான மோதலில் எவ்வித விதிமுறைகளுக்கும் இடமில்லை. அங்கே வலுவான ஆயுதம் கொண்டவனே, அவன் எண்ணிக்கையில் குறைந்தவனாக இருந்தாலும் வெற்றி பெறுவான். 

காந்தி அரச வன்முறையின் முகத்தை நன்கு அறிந்தவர். அவருடைய போராட்ட முறைகள் திட்டமிட்டு கும்பல் மனநிலைக்கு எதிராக உருவாக்கப்பட்டதே. வெகுமக்கள் வன்முறை ஆங்கிலேயர்களுக்கு மக்கள் மீதான வன்முறையை அதிகபடுத்த வாய்ப்பளிப்பதாகும் என்று நன்கு உணர்ந்தவர். ஆகவே வெகுமக்கள் வன்முறையை வலுவாக நிராகரித்தார். தடியடிகளை வாங்கிக்கொண்டு, தலையில் குருதி சிந்த தொடர்ந்து நடைபோடுபவனே சத்தியாகிரகி எனும் மனச் சித்திரம் நமக்குண்டு. சௌரி சௌரா அலையை பயன்படுத்தி இந்தியா விடுதலையை அடைந்திருக்கலாம், ஆனால் அது எத்தகையதாக இருந்திருக்கும்? போராட்டத்தின் உச்சத்தில் அது திசைமாறுகிறது என்று உணர்ந்து போராட்டத்தை திரும்பப் பெற்றார். 

அண்மைய காலங்களில் தமிழகத்தில் கூட்டத்தை கும்பலாக்க முயன்று அதன் மீது ஆரோகணித்து தங்கள் இலக்கை, அதிகாரத்தை, தலைமையை அடைய முனைகிறார்கள். தொடர் வீராவேச உரைகள் வழியாகவும், வெறுப்பு பிரச்சாரங்கள் வழியாகவும் இதை சாதிக்க முயல்கின்றனர். ஆனால் கூட்டம் கும்பல் ஆகும்போது எழும் கட்டற்ற ஆற்றலை கட்டுபடுத்தும் வல்லமை இன்று எந்த தலைமைக்கும் இல்லை என்பதே நிதர்சனம். மதம் கொண்ட யானை முதலில் மிதித்து செல்வது பாகனையே. ஆகவே போராட்டக்காரர்கள், அதை வழிநடத்துபவர்கள் பொறுப்புடன், ஒவ்வொரு உயிரின் மீதும் அக்கறைகொண்டு உரையாட வேண்டியது அவசியம். 

இந்த போராட்டங்கள், கிளர்ச்சிகள் வெகுமக்களை அரசியல் நோக்கி தொடர்ந்து இழுத்து வருகிறது. அற போராட்டத்தின் வலிமையை பறைசாற்றி நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். போலியான அரசியல் தரவுகளை தவிர்த்து மெய்யான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குடிமை சமூகம் முழு மக்களாட்சிக்கு தயாராகும்போது வாக்குக்கு பணம் போன்ற இழிவுகள் நிகழாது. அப்போது தங்கள் உரிமைகள் குறித்தும் பொறுப்புகள் குறித்தும் சிந்திக்கும் சமூகமாக நாம் வளர்வோம். 

1 comment:

  1. அரசு வன்முறை ஒரு பக்கம் இருந்தாலும் சூழலியல் அதிகாரிகளின் மெத்தனப்போக்கும் ஊழலும் மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத எருமைத்தனமும் பிரச்சினையை மேலும் பெருக்கவேண்டும் செய்யும்

    ReplyDelete