Thursday, May 24, 2018

ஸ்டெர்லைட் - 2

இனி நாம் ஒருபோதும் உண்மையை அறிய முடியாது. உண்மை மரித்து விட்டது அலல்து பொருளிழந்து விட்டது. இனி நாம் 'தரப்புகளுடன்' மட்டுமே வாழ்க்கை நடத்த முடியும். 

Truth is dead. We have to live only with versions. 

முதலில் யார் கலவரத்தை தூண்டினார்கள்? நக்சல் அல்லது தேச விரோத சக்திகள் போராட்டத்தில் ஊடுருவின என்கின்றனர் காவல்துறையினர். கலவரமே காவல்துறையினர் ஏற்பாடு செய்தது தான் என மெரீனா முன் அனுபவத்தின் பேரில் குற்றம் சொல்கின்றனர் போராட்ட மக்கள் தரப்பு. ஆகவே அவரவர் மனச் சாய்வுகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கின்றனர் 

இந்த பிரச்சனையை சில அலகுகளாக பிரித்து கொள்வோம். 

துப்பாக்கி சூடு - ஆதரவு/ எதிர்ப்பு
போராட்டம் - ஆதரவு/ எதிர்ப்பு/ நிலைப்பாடில்லை 
ஸ்டெர்லைட் - ஆதரவு/ எதிர்ப்பு / நிலைப்பாடில்லை 

ஏனெனில் ஸ்டெர்லைட் குறித்தான விவாதங்களில் இவை ஒன்றுடன் ஒன்று கலந்தே விவாதிக்கப்படுகின்றன. ஒரு நேர்கோட்டில் இம்மூன்றையும் ஆதரிப்பவர்களும் இம்மூன்றையும் எதிர்ப்பவர்களும் மிகக் குறைவாகவே இருப்பார்கள். ஒன்றை எதிர்த்து மற்றொன்றை ஆதரிக்கும் அல்லது பொருட்டில்லை எனும் மனநிலையே பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். இச்சூழலில் துப்பாக்கி சூடைத் தவிர்த்து வேறு எதைப் பற்றி பேசினாலும் திசை திருப்பலாக பார்க்கப்படும் அபாயம் உண்டு. அது துப்பாக்கி சூட்டிற்கு எதிரான குரலை வலுவிழக்க செய்வதாக கருதப்படும். அதேசமயம் துப்பாக்கி சூட்டை கண்டிக்கும் சாக்கில் இங்கு வேறு பல விஷயங்களும் விவாத பொருளாக திணிக்கப்படுவதை கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். 


கலவரத்தை யார் துவங்கினார்கள் என்பதெல்லாம் இருக்கட்டும். இழப்பு என்னவோ மக்கள் தரப்பிற்கு தான். துப்பாக்கி சூட்டை வன்மையாக கண்டிப்பதில் எவருக்கேனும் மாற்றுகருத்து இருந்தால் பேசுவதற்கு ஏதுமில்லை. இது அப்பட்டமான மானுட விரோத செயல். அதிகார துஷ்பிரயோகம் என்பதைகூட உணராத மனிதர்களிடம் உரையாட ஏதுமில்லை. துப்பாக்கி சூட்டில் எந்த வரைமுறையும் கடைபிடிக்கப்படவில்லை. சீருடையில் இல்லாத காவலர்கள் குறிபார்த்து சுடும் காட்சி மனதை பதற செய்கிறது. 

ஸ்டெர்லைட் குறித்து எனக்கு எந்தவிதமான நிலைப்பாடும் இல்லை. சென்ற கட்டுரையில் குறிபிட்டது போல் நுகர்வை பற்றிய சிந்தையில்லாமல் உற்பத்தியை குறை சொல்வது நியாயமில்லை. வேதாந்தாவிற்கு எதிரான சதி பின்னல் போன்ற சோபையான வாதங்களின் மீது ஈடுபாடில்லை. தனிப்பட்ட முறையில் பெரும் ஆலைகள் மீது எனக்கு எப்போதும் ஐயம் உண்டு என்றாலும் பெரும் ஆலைகள் இன்றி இனி நாம் வாழ முடியாது எனும் நிதர்சனத்தை கணக்கில் கொள்ளத்தான் வேண்டும். 

போராட்டத்திற்கு ஆதரவா? எதிர்ப்பா? என்றால் நான் போராட்டத்தை ஆதரிக்கவே செய்கிறேன். காரணம் சென்ற கட்டுரையில் சுட்டியது போல் நவீன மக்களாட்சியில் காரணத்துடனோ காரணமின்றியோகூட மக்களுக்கு இத்தகைய ஆலைகளை எதிர்க்கும் உரிமை உண்டு. அவர்களுடைய ஐயத்தையும் அச்சத்தையும் போக்க போதிய வலுவில்லை என்றால், அவர்களுடன் உரையாடல் நிகழ்த்த இடமில்லை என்றால் அந்த ஆலை இயங்க அனுமதிக்க கூடாது என்றே நம்புகிறேன். 

சரி இந்த போராட்டம் சார்ந்த சமூக ஊடக விவாதங்களின் செல்திசையை கவனிக்கும் விதத்தில், எல்லா சிக்கலையும் தனித்தமிழ் தேசிய இலக்கை நோக்கிய பயணமாக மாற்ற முனைவது புலப்படுகிறது. ஒருவகையில் ஆளும் பா.ஜ.க இந்த உரையாடலை இந்த கோணத்தில் கொண்டு செல்ல ஊக்கப்படுத்துகிறது. பா.ஜ.க மீதான, நரேந்திர மோதியின் மீதான விமர்சனங்கள் இந்திய எதிர்ப்பாக கட்டமைக்கப் படுகிறது. ஆகவே இது தனித் தமிழ்தேசியர்களுக்கும் ஏதுவாக இருக்கிறது. பிரச்சனையைத் தவிர்த்து உரையாடல் இந்திய தேசியத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் இடையிலான மோதலாக மட்டும் சுருங்கிவிடுகிறது. தனித் தமிழ் தேசியத்தின் சாத்தியங்கள், நியாயங்கள் பற்றி எனக்கு நேர்மறை அபிபிராயம் இல்லை. அதற்கான காரணிகளை பிறிதொரு சமயம் விரிவாக எழுதுகிறேன். எந்த ஒரு போராட்டம் பற்றிய விவாதமும் இத்திசையில் சென்று முட்டிகொள்வது அப்போராட்டத்தின் தார்மீகத்தை வீழ்த்துவதாக அமைகிறது. 


No comments:

Post a Comment