Wednesday, February 28, 2018

புயலிலே ஒரு தோணி - நாவல் வாசிப்பு

நெடுங்காலமாக வாசிக்க வேண்டும் என்றிருந்த நாவல். முன்னரே ஓரிருமுறை சில அத்தியாயங்கள் வரை வாசித்து தொடர முடியாமல் போன நாவலும் கூட. இம்முறை தடையின்றி வாசித்து முடித்தேன். அவருடைய மற்றொரு நாவலான கடலுக்கு அப்பால் இன்னும் வாசிக்கவில்லை. 

சிங்காரம் எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர். அயல் நிலத்தில் நகரத்தார் வாழ்வை மிக நெருக்கமாக எழுதிய படைப்பாளியும் கூட. இந்நாவல் தமிழின் முதன்மை நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 

எழுபதுகளில் இந்நாவல் எழுதப்பட்டது. அன்றைய மைய இலக்கிய போக்கிலிருந்து வெகுவாக அன்னியப்பட்ட களத்தில் நாவல் நிகழ்கிறது. அதனாலேயே சரியாக கவனிக்கப்படாமலும் ஆனது. (அப்படி கவனிக்கபடாமல் மீண்டும் கண்டேடுக்கபட்டதாலே மிகையாக கொண்டாடப்படவும் படுகிறது) தமிழில் சர்வதேச களத்தில் எழுதப்பட்ட முதல் இலக்கியத்தரம் வாய்ந்த நாவல். உலகை உலுக்கிய இரண்டாம் உலகப்போரை களமாகக் கொண்டு எத்தனை படைப்புகள் தமிழில் உள்ளன? இந்திய விடுதலை போராட்டத்தை மையமாக கொண்ட இலக்கியதரம் வாய்ந்த புனைவுகள் கூட ஒப்பீட்டு அளவில் குறைவே. இந்த பின்புலத்தில் புயலிலே ஒரு தோணி முக்கியத்துவம் பெறுகிறது. 

அடிப்படையில் புயலிலே ஒரு தோணி நாயக சாகச கதை. தமிழக கிராமத்திலிருந்து அந்நிய தேசத்திற்கு பிழைக்க செல்லும் ஒருவன். அங்கிருந்து ராணுவத்தில் இணைகிறான். பெரும் சூரனாக எல்லா எதிரிகளையும் வெல்கிறான். ஊர் திரும்பாமல் பெரும் லட்சிய வேட்கையுடன் அந்நிய நாட்டு கொரில்லா படையில் இணைந்து அந்நாட்டின் விடுதலைக்காக போராடுகிறான். அங்கேயே மரிக்கிறான். கற்பனாவாத சாகசக் கதை என சொல்லிவிட முடியும்.  பாண்டியன் செகுவேராவாக முயன்ற கதை என்று கூட சொல்லலாம். பாண்டியன் யாமசக்கி, விலாசினி, சுந்தரம் பகுதிகள் எல்லாம் ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு உரியவை. அதேப் போல் பாண்டியன் எப்பேர்பட்ட பெண்களையும் வென்றெடுக்கும் பேராற்றல் கொண்ட ஆண்மகனாக சித்தரிக்கப் படுவதும் கூட பெரும் பகல் கனவின் விளைவோ என தோன்றியது.  

இப்படியான நாவலுக்கு முதன்மை இலக்கிய அந்தஸ்து எப்படி வழங்கப்படுகிறது?

இரு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று வேறு எவரும் தமிழில் எழுதிவிடாத கதை களம். அதன் நம்பகமான சித்தரிப்பு. புலம் பெயர் தமிழரில் ஒரு சாராரின் வாழ்க்கை பதிவு. (ரப்பர் தோட்டமோ தொழிலாளிகளோ நாவலில் ஓரிடத்தில் கூட வரவில்லை). ஊர் கதைகள்,நினைவுகள் பகிரப்படும் போது பயன்படுத்தப்படும் வட்டார வழக்கு. நானறிந்த வரை செட்டிநாட்டு வழக்கு பதிவான ஒரே முக்கியமான இலக்கிய ஆக்கம் இதுவே. நினைவுகளின் ஊடாக சித்தரிக்கப்படும் மதுரை, சின்னமங்கலம், காரைக்குடி பகுதிகள் முக்கியமானவை. ஆவன்னா, நாவன்னா, மாணிக்கம், அயிஷா, இந்திய தேசிய ராணுவத்தின் அதிகாரிகளின் பாத்திர வார்ப்புகள் சிறப்பாக உள்ளன. 

இதைவிடவும் முக்கிய காரணம் என்பது நாவலுக்குள் உள்ள பகடி. புதுமைபித்தனின் நேர் வாரிசு என சிங்காரத்தை அடையாளப் படுத்தலாம். தமிழ் பேரவை, மதுக்கூட பிரசங்கம் போன்ற பகுதிகளில் மொழி கட்டற்று பாய்ந்து செல்கிறது. ஐ.என்.ஏ அதிகாரியை பாண்டியன் சந்திக்கும், உரையாடும் பகுதிகள் எல்லாம் அபார பகடி. தமிழினத்தை கடைத்தேற்ற எதாவது செய்தாக வேண்டும் என்று எண்ணும் பாண்டியன் சுமத்திராவின் 'மெர்டேக்கா' போராட்டத்தில் உயிர்விடுகிறான். 

 நாவலில் வடிவக் குறைபாடுகளும் உண்டு. அயிஷாவின் பாத்திரம் என்னவோ செய்யப்போகிறது என்று எண்ணிக்கொண்டிருக்கையில் திருமணம் முடித்து 'மெர்டேக்கா' காரர்களோடு சேர்ந்துவிடாதே உன் முகத்தை பார்த்தால் தெரிகிறது என்று சொல்லி எச்சரித்துவிட்டு, நாவலில் அடுத்து பாண்டியன் என்ன முடிவெடுக்க போகிறான் என முன்னோட்டம் காட்டிவிட்டு சென்றுவிடுகிறது. சுமத்திராவிற்காக போரில் பங்கேற்பது வலுவான வாதங்களால் நியாயப்படுத்தப் படுகிறது ஆனால் அவன் ஊர் திரும்ப முடிவெடுப்பதற்கு போதிய நியாயங்கள் நாவலில் உருவாகவில்லை. ஆனால் நாவலில் பாண்டியன் அப்படி முடிவெடுக்கும் தருணம் எனக்கு முக்கியமாக பட்டது. நாவல் போதும், முடித்துவிடலாம் என்று முடிவெடுத்ததன் விளைவா அல்லது ஏதோ ஒரு மன உந்துதலில் எடுத்த முடிவா என தெரியவில்லை. ஆனால் பாண்டியனின் பலவீனத்தையும் காட்டி செல்லும் தருணமாக அவனுடைய ஊர் திரும்பும் முடிவை புரிந்து கொள்கிறேன். நாவலின் 'உண்மை' 'வடிவத்தை' உதறி எழும் தருணம் என்பதாலேயே இது என்னை ஈர்க்கிறது. பாண்டியன் ஊர் திரும்ப முடிவெடுக்க என்ன காரணம் இருக்கும் என யோசித்து கொண்டிருந்தேன். தனது லட்சியவாதத்தின் மீதான அலுப்பாக கூட இருக்கலாம். 

தமிழ் சமூகத்தின் போலி பெருமிதத்தை பகடி செய்தபடியே தமிழ் சமூகத்தின் இலட்சியவாதியாகவும் உருவெடுக்கும் முரணை சிங்காரம் வெற்றிகரமாகா நெய்துவிட்டிருக்கிறார். இந்நாவலின் பகடி பகுதிகளை எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காது. இவை இந்நாவலுக்கு காலாதீத தன்மையும் முன்னோடி இடத்தையும் அளிக்கின்றன. 


1 comment:

  1. விஷ்ணுபுரம் விழாவில் வாங்கி வந்தேன் இன்னமும் வாசிக்கவில்லை உங்களின் விமர்சனம் சீக்கிரம் வாசிக்க தூண்டும்

    ReplyDelete