Saturday, October 9, 2010

மனிதகுலத்தின் அழியா யுத்தம்

மனித குலத்தின் மிக நீண்ட போர் , முடிவடையாத ஒரு யுத்தம் நேற்று இன்று நாளை என்று எக்காலமும் தொடரும் ஒரு யுத்தம் ஒன்று உண்டு .
அது அறிவுக்கும் மனதிற்கும் இடையில் நடக்கும் ஒரு போர் .அறிவையும் மனதையும் வார்த்தைகளால் விளக்குவது கடினம் ,இருந்தும் முயல்கிறேன் , அனுபவம் , கல்வி சார்ந்து , தர்க்கத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் முறையை அறிவு எனலாம் , பகுத்தாய்வு முறை எனலாம் .அனுபவம் தன் அனுபவமாகவும் இருக்கலாம் இல்லை கண்ட கேட்ட பிற விஷயங்களாகவும் இருக்கலாம் .

தர்க்கங்களை தகர்த்து , அனுபவம் ,கல்வியை கடந்து ( சில நேரம் முரனாகக்கூட ) உள்ளுணர்வுகளை அடிப்படையாக கொண்டு , அளவில்லாத ஆற்றலை தன்னிடத்தில் கொண்டுள்ள ஒரு அமைப்பு மனம்.
அறிவின் நடைமுறை மற்றும் விதிகள் மனதில் செல்லுபடியாகாது. அறிவு செயலின் விளைவை சார்ந்து சிந்திக்கும் , மனம் செயலின் காரணத்தை சார்ந்து புரிந்துகொள்ளும் .
மனதிற்கும் அறிவுக்குமான இந்த போராட்டம் அன்றாடம் நடக்கும் செயல் , இதை இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது இதை போராட்டம் என்று கூறுவது மிகை எனவும் படுகிறது , ஏனெனில் இவை இரண்டும் ஒன்றை சார்ந்து மற்றோன்று எனும் நிலையில் உள்ளது , போராட்டம் என்பதை காட்டிலும் அவைகளின் இயல்பு நிலையே இது தான் , ஒன்றை ஒன்று தங்களின் பலவீனங்களை இன்னொன்றின் பலத்தால் நிரப்புகிறது எனவும் சொல்லலாம் .

மனம் அறிவு இந்த இரண்டில் எது சிறந்தது , உயர்ந்தது எனும் கேள்வி மிக முக்கியமானது பொதுவாகவே நமக்கு எழும் முதல் கேள்வியும் கூட , என்னை பொருத்தமட்டில் சிறந்தது உயர்ந்தது என்று இதை நாம் பிரிக்க முடியாது .அப்படி செய்தால் அது மடத்தனம் கூட .அறிவு சார்பு நிலையில் அதிகம் நிலைத்து இருக்கும் போது உணர்சிகளற்ற மரத்து போன நிலை உருவாகிவிடுகிறது .இன்று நம் அறிவு சமூகம் இன படுகொலைகள் , சமூக அவலங்களை கண்டும் காணாது
இருப்பதே இதற்க்கு சான்று .பிற உயிர்களின் உணர்வுகளையும் , இருப்பையும் நாம் உணரமால் போக வாய்ப்பு உண்டு .உணர்வு சார் நிலை பற்றி நான் என்ன கூறுவது ? இன்று நடக்கும் எல்லா அநியாய உயிரிழப்புகளுக்கும் இது தான் காரணம் , முறை தவறிய உறவுகள் முதல் முதல் காட்சி படம் வரை மனம் சார்ந்த நிலை தான் .
காயமே இது பொய் அடா காற்றடைத்த பையடா என்று சொன்ன இதே தேசத்தில் தான் இறந்த மனிதர்களுக்காக ஒப்பாரி வைக்கும் வழக்கம் உள்ளது .மனிதன் இந்த இரு பெரும் அமைப்புகளை சம நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தசெய்த முயற்சிகள் தான் அனைத்துமே என்று சொன்னால் அது மிகை ஆகாது . சட்டம் , தண்டனை, சமூக அமைப்பு , சமூக கட்டுப்பாடு இவை அனைத்துமே அறிவின் மூலமாக நம் மனதிற்கு கொடுக்க படும் செய்தி .அறிவின் அடக்குமுறைகளை எதிர்த்து அல்லது அதற்க்கு பதிலாக மனம் கொடுத்தது தான் கலை .நம் உணர்வுகளின் மிகை வடிவம் தான் கலை , நடைமுறையில் இல்லாத அல்லது ஒவ்வாத அல்லது நம்மால் வெளிபடுத்த முடியாத உணர்வுகளின் வெளிப்பாடாக அறிவு அனுமதித்து , அங்கீகரித்து மனதின் வடிகாலாக வளர்ந்து வந்தது தான் கலை..இதனால் தான் அறிவியல் படைப்புகளை காட்டிலும் கலை படைப்புகள் நம்மை எளிதாக சென்றடைகின்றன , ஆனால் அவை அறிவியல் படைப்புகள் போல் பலன் தருமா என்றால் அது சந்தேகமே , அறிவியல் நமக்கு பயன் தரும் , கலை நமக்கு மகிழ்ச்சி தரும் .
காடு மனித மனம் , நகரம் நமது அறிவு .காடு நமது இயல்பு , நகரம் நாம் உருவாக்கியது.காட்டை அழித்து அழித்து நாம் உருவாக்கியது நகரத்தை , நமது தேவைகளுக்கான ஒரு சொர்கபுரியை .அறிவின் ஆளுமை அதிகமாக அதிகமாக நாம் உணர்வுகளற்று போகின்றோம் , நமது தேவைகளுக்காக அறிவை பயன் படுத்தி எதை வேண்டுமானாலும் அழித்து நமது தேவைக்காக அதை மறு உருவாக்கம் செய்திடலாம் .அறிவு சார்ந்த சமூகத்தில் சுரண்டல் இருக்கிறது சுயநலம் இருக்கிறது .மனிதம் மறித்து விடுகிறது .மனம் சார்ந்த சமூகத்திலோ உணர்வு குவியலாக வழிமுறை தெரியாமால் விழி பிதுங்கி இருக்கிறது .அறிவு பூர்வமாக செயல் பட கூட நம் மனம் தான் காரணம் .மனம் அனுமதித்தால் தான் அதுவும் சாத்தியம் காடும் வேண்டும் நாடும் வேண்டும் , அறிவும் வேண்டும் மனமும் வேண்டும் .

இயற்கையின் விதி அபாரமானது நாம் சமநிலையிலிருந்து வழுவினாலும் அது சமநிலையை நோக்கியே இந்த உலகத்தை அழைத்து செல்லும் , சில நேரம் வலு கட்டாயமாகவும் கூட .உணர்வுகளற்ற சமுதாயத்தை நாம் நமது அறிவின் மூலமாக உருவாக்க முயற்சிக்கிறோம் , நமது மனதின் குரலை நாம் புறக்கணிக்க தொடங்கிவிட்டோம் .இதை தான் பண்டைய புராண கதைகளில் தேவ அசுர யுத்தம் என்று உருவக படுத்தி இருக்கிறார்களோ என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு .காடு தன்னகத்தில் பல நகரங்களை கொண்டுள்ளது , மனம் தன்னகத்தில் நாம் புரிந்து கொள்ள முடியாத சாத்திய கூறுகளால் நிரம்பி வழிகிறது .
அறிவு -மனதின் முரணியக்கம் அபாரமானது, மிக நுட்பமானதும் கூட இதை எல்லாம் நாம் உணரும் தருணம் இது. நம்மை நாமே சற்று உற்று நோக்கினால் போதும் நாம் விழிப்படைந்துவிடுவோம் .
சரி போதும்ன்னு நெனைக்கிறேன் :) பதிவுலகத்துல இருந்துட்டு எந்திரன் பத்தி எதுவுமே எழுதலேன்னா எப்படி ?
என்னை பொறுத்த மட்டில் என்னை ஏமாற்றாமல் படம் எனக்கு மன பூர்வமா / உணர்வு பூர்வமா நிறைவை, மகிழ்ச்சியை கொடுத்துருச்சு :)

4 comments:

 1. அறிவு -மனதின் முரணியக்கம் அபாரமானது, மிக நுட்பமானதும் கூட இதை எல்லாம் நாம் உணரும் தருணம் இது. நம்மை நாமே சற்று உற்று நோக்கினால் போதும் நாம் விழிப்படைந்துவிடுவோம் .

  .....நல்ல பகிர்வு.... வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. வருகைக்கு நன்றி சித்ரா மேடம் )

  ReplyDelete
 3. Idhu unga arivu poorvamana padhivunu, naan mana poorvama nambaren.

  ReplyDelete