இது எனது இரண்டாவது மலேசிய பயணம். இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்ற போது அங்கிருந்து வல்லினம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்காக மலேசியாவிற்கு வந்தேன். நானும் சரவணன் விவேகானந்தனும் பேருந்தில் கோலாலம்பூர் வந்து சேர்ந்தோம். ‘விஷக் கிணறு’ கதை எனக்கு மலேசியா கொடுத்ததுதான். அந்த பயணத்தில் இன்னும் மனதில் தங்கி இருக்கும் காட்சிகளில் முதன்மையானது செம்பனைக்கு நடுவே பிரம்மாண்டமாக படுத்திருந்த அங்காளம்மனின் உருவம்.
இம்முறை யோகாசிரியர் குருஜி சவுந்தருடன் சேர்ந்து யோக ஆயுர்வேத வகுப்பு எடுப்பதற்காக பினாங்கு சென்றேன். கெடாவில் கூலிம் பகுதியில் பிரம்மவித்யாரண்யம் எனும் ஆசிரமத்தை நடத்தி வரும் சுவாமி பிரம்மானந்தர் அழைப்பின் பேரில் அமைந்தது இந்த பயணம். சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சீடர். பத்து பனிரெண்டு வருடங்களுக்கு முன் ஊட்டி நாராயண குருகுலத்தில் ஜெயமோகன் நடத்திய காவிய முகாமில் சுவாமியை முதல்முறை சந்தித்திருக்கிறேன். பிரம்மாநந்தர் மலேசிய தமிழ் பண்பாட்டின் மிக முக்கியமான முகம் என்பதை இந்த பயணத்தில் உணர்ந்து கொண்டேன்.
நவீன மருத்துவர் நண்பர் மாரிராஜ் சவுந்தருடன் சேர்ந்து செல்ல வேண்டியது. அவர் வராததால் மாற்று ஏற்பாட்டின் பேரில் என்னை அழைத்தார்கள். சவுந்தரின் யோக வகுப்புகள் கூலிமில் இரண்டாம் ஆண்டாக நடைபெறுகிறது. 29 ஆம் தேதி சென்னை வந்து சேர்ந்தேன். அன்று மாலை எனது புதிய நாவலான ‘குருதி வழி’ வெளியிடப்பட்டது. ‘யாவரும்’ பதிப்பகம் வெளியிடும் எனது பத்தாவது நூல் இது. பதிப்பகம் என்பதை தாண்டி ஜீவ கரிகாலன் என் நண்பர். மனதிற்கினிய நண்பர்களோடு அந்த மாலைப் பொழுது கழிந்தது. நாவலை முன்னரே வாசித்த விக்னேஷ், அரவிந்தன் போன்ற நண்பர்கள் தங்கள் வாசிப்புகளை பகிர்ந்து கொண்டார்கள். ஜீவா ‘யாவரும்’ சார்பாக எனக்கொரு கைக்கடிகாரம் பரிசளித்தார். அது தானியங்கி கடிகாரம் என்பதால் அவ்வப்போது நாமே நேரத்தை சரி செய்ய வேண்டும். கடிகாரத்தில் எவராவது நேரம் பார்ப்பார்களா என்ன? அழகிய கைகாப்பு போல அன்றாடம் அணிகிறேன். புத்தக வெளியீட்டில் நூலின் உள்ளடக்கம் சார்ந்து குறைவாகவும் பிற பொதுவான விஷயங்களை பற்றி கூடுதலாகவும் பேசினோம். ஷான் வந்திருந்தார். அம்புப் படுக்கை வெளிவந்தபோது முதலில் வாசித்து அது குறித்து என்னிடம் பேசியவர்களின் ஒருவர் மொழிபெயர்ப்பாளர் பத்மஜா நாராயணன். அவரும் வந்திருந்தார். ‘இம்பர்வாரி’ பார்க்கவி, காஞ்சி சிவா, சண்முகம் அண்ணன் ஆகியோரும் வந்திருந்தனர். நிகழ்வு முடிந்து அருகே இருக்கும் உடுப்பி ஹோட்டலில் உண்டுவிட்டு நண்பர்கள் கலைந்து சென்றார்கள்.
முப்பது கிலோக்கு புத்தகங்களை பெட்டிக்குள் அடைத்து கொண்டு சென்றோம். வேதாவும் ஜானகிராமனும் அழகாக பொதிந்து கொடுத்தார்கள். பிரம்மமுகூர்த்தத்திற்கு சற்று முன் அதாவது இரண்டரை மணிக்கு தான் விமானம். சவுந்தர் விமான நிலைய காத்திருப்பு பகுதியில் அமர்ந்த நிலையிலேயே யோக நித்திரை செய்தார். விமானத்தில் எங்களுக்கு நடுவே காலி இருக்கை என்பதினால் பத்மாசனத்தில் அமர்ந்து மொத்த பயணத்திலும் யோக நித்திரையில் (அல்லது தியானத்தில்/ அந்தர் மவுனத்தில்) ஈடுபட்டார். நானும் முயற்சி செய்து பார்த்தேன். பத்மாசனத்திற்கு கால் மடங்கவில்லை என்பதிலிருந்து சிக்கல் தொடங்கியது. தலை நிற்கவில்லை என்பது இரண்டாவது சிக்கல். பக்கத்தில் இருப்பவர் மீது தலை சாய்க்காமல் பேருந்துகளில் உறங்க முடியும் என்பது யோக பயிற்சியின் முக்கியமான பலன்களில் ஒன்று என்பதை கண்டுகொண்டேன்.
மலேசிய நேரம் காலை 9 மணிக்கு பினாங்கு சென்று சேர்ந்தோம். பினாங்கு சர்வதேச விமான நிலையம் திருச்சி விமான நிலையத்தை காட்டிலும் சிறியது. இரண்டு மூன்று ஹெலிகாப்டர்கள் நின்றிருந்தன. பெரிய கெடுபிடிகள் ஏதுமில்லை. மலேசியாவிற்கு விசா இன்றி இந்தியர்கள் பயணம் செய்யலாம். வருகை பதிவு படிவத்தை இணையத்தில் நிரப்பியிருக்க வேண்டும். எங்களை அழைத்துச் செல்ல நண்பர் குமாரசாமி விமான நிலையத்திற்கு வந்திருந்தார். குமாரசாமியும் அவரது மனைவி ஜெயந்தி அவர்களும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். குமாரசாமி தமிழ் ஆசிரியர். ஜெயந்தி மலாய் ஆசிரியர். அவருக்கு தமிழ் பேச மட்டுமே வரும். இருவரும் சுவாமி பிரம்மானந்தரின் அணுக்க சீடர்கள். குமாரசாமி நல்ல இலக்கிய வாசகரும் கூட.
கோலாலம்பூர் நகரத்திற்கே உரிய நெரிசலை கொண்டது. அங்கே தெருவில் ஆங்காங்கு ஆங்கில இசை பாடல்களை இசைத்தவர்களை கண்டது நினைவிலிருக்கிறது. லிட்டில் இந்தியா, சீனா டவுன் போன்ற பகுதிகளை கடந்துவிட்டால் பினாங்கு மாகாணம் ஐரோப்பிய நிலப்பரப்பை போலிருந்தது. நான் ஐரோப்பா சென்றதில்லை என்றாலும் ஐரோப்ப நிலப்பரப்பு இப்படி இருக்கும் என்று கற்பனையில் உருவகித்து வைத்தது போலவே இதுவும் இருந்தது. பசுமை போர்த்திய மலைகள், கடலுக்கு மேலே செல்லும் நீண்ட பாலம். பச்சை மலைகளை அருகே சென்று நோக்கும்போது தான் அவை முழுக்க செம்பனை காடு என்பது புலப்பட்டது. மழைக்காடு அழிக்கப்பட்டு செம்பனை தோட்டமாக மாறியிருக்கிறது.
மலேசிய பொருளியலில் செம்பனைக்கும் பெட்ரோலுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு என்றார் குமாரசாமி. இந்தியாவில் பாமாயில் பயன்படுத்துவது உடல்நலக்கேடு என்றொரு பிரச்சாரம் செய்யப்பட்டதே என்று வினவினேன். அது அமெரிக்க சதி என்றார். இந்தியா தான் மிகப்பெரிய பாமாயில் இறக்குமதியாளர் என்பதால் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு சந்தையை ஏற்படுத்த அமேரிக்கா கட்டவிழ்த்த கதை என்றார். நீங்கள் இங்கே தான் ஒருவாரம் சாப்பிட போகிறீர்கள் அனுபவித்து தெரிந்து கொள்ளுங்கள் என்றார். ஒருவாரம் மிக குறுகியது என்றாலும் என் வயிறு ஒரு தொட்டாச்சிணுங்கி. ஏதாவது ஒரு சிக்கலை தருவித்து விடும். புதிய பிரதேசங்களுக்கு செல்லும்போது அந்த தேசத்திற்குரிய உணவுகளை உட்கொண்டு ரசிக்க வேண்டும் என விரும்பினாலும் வந்த இடத்தில் ஏதேனும் சிக்கல் வந்து விடுமோ எனும் அச்சத்தால் அவற்றை தவிர்த்து விடுவேன். மலேசியாவில் தினமும் டோஃபு உண்டேன். பனீரை போன்றது. சோயா பாலிலிருந்து தயாரிக்கப்படுவது. புரதச் சத்து மிகுந்தது. இங்கு பாமாயிலில் தான் எல்லாமும் சமைக்கிறார்கள். ஆனால் எனக்கு எதுவும் நேரவில்லை.
குமாரசாமியின் இல்லம் வந்து சேர்ந்தோம். அவருடைய இல்லம் இருக்கும் பகுதிக்கு லூனாஸ் என்று பெயர். இந்த பெயர் சில தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். நவீனின் பேய்ச்சி நாவலில் சாராய சாவு நிகழும் ஊர். ஊரைச் சுற்றி லூனாஸ் நதி ஓடுகிறது. கூலிம் ஒரு உயர் தொழில்நுட்ப தொழிற்பேட்டையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுக்கு பிறகு நாங்கள் சுவாமி பிரம்மானந்தாவை காணச் சென்றோம். வழியில் தமிழர்கள் நடத்தும் கடைகள் தனித்து தெரிந்தன. பெரும்பாலும் மலர் மற்றும் பூசை சாமான்கள் வணிகம், முடிதிருத்தும் அழகு நிலையங்கள், உணவங்காடிகள் ஆகிய கடைகள் தான் தமிழர்கள் நடத்துபவை. ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இதை கவனித்துவிட்டேன். இவற்றுக்கு பண்பாட்டு காரணிகள் இருக்கும் என்று ஊகிக்கிறேன்.
சுவாமியின் வீடு தான் ஆசிரமம். மற்றொரு ஆசிரமத்தை கூலிம் மலையின் மீது அமைத்திருக்கிறார். கூடுகைகள் நடத்தும் போது மட்டும் அங்கு செல்வது வழக்கம். பிற நாட்களில் இங்கு தானிருப்பார். இரண்டு காவல் நாய்கள் எங்களை முறைத்து பார்த்தன. துணிச்சலை நடித்தபடி உள்ளே சென்றோம். சுவாமிஜியின் அறையில் ஏகப்பட்ட நூல்கள் குறிப்பு அட்டைகளோடு கிடந்தன. தனது பூர்வாசிரமம் குறித்து பகிர்ந்து கொண்டார். நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். துறவிகளுக்கு உரிய இறுக்கம் ஏதுமற்றவர். விருந்தினர்களுக்கு அவரே தேநீர் கலந்து கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். மாலை அங்கு நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றோம். சாதி பாகுபாடு இல்லாமல் வேத மந்திரங்களும் சுலோகங்களும் கற்றுத்தரப்படுகின்றன. எப்படியும் அம்பது அறுபது பேர் வந்திருக்கக்கூடும். பிரார்த்தனை கூடத்தில் மையமாக காமாட்சியம்மன் திருவுரு அமைக்கப்பட்டிருந்தது. அவளுக்கு இருபுறம் விநாயகரும் முருகரும் வீற்றிருந்தார்கள். காமாட்சி பேரழகி. முகத்திற்கு கொஞ்சம் பொன் சேர்த்து வடித்ததாக சுவாமிஜி குறிப்பிட்டார். சில பஜனை பாடல்கள் பாடப்பட்டன. பெரும்பாலும் சாய்பாபா சமிதியில் பாடப்படும் பாடல்கள் என்பதை கவனித்தேன். நானும் சவுந்தரும் ஆளுக்கு இருபது நிமிடங்கள் எங்கள் வருகையின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினோம். 50- 60 பேர் தான் வரக்கூடும் என்பதில் அவருக்கு கொஞ்சம் வருத்தம். ஆனால் எங்களை பொறுத்தவரை எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வகுப்பு நடத்துவது சிரமமாக இருக்கும். ஆகவே 50 என்பதே நல்ல எண்ணிக்கை தான். அங்கேயே இரவுணவு உண்டுவிட்டு குமாரசாமி அவர்களின் இல்லத்திற்கு திரும்பினோம். இரவே கூலிம் ஆசிரமத்தை .சென்று சேர்ந்தோம். ஒரு சிறிய குன்றில் செம்பனை தோட்டத்திற்கு நடுவே அமையப்பெற்ற பெரிய ஆசிரமம். தங்கும் அறைகள், முன்னூறு பேர் அமரத்தக்க உள் அரங்கம், இருநூறு பேர் உண்ணும் அளவிற்கு வசதியுள்ள சாப்பாட்டு கூடம் என எல்லா வசதிகளும் கொண்ட அமைப்பு. பிரம்மானந்தர் குன்றின் மீது தக்ஷிணாமூர்த்தி ஆலயம் ஒன்றை எழுப்பி வருகிறார்.
வெள்ளிக்கிழமை முழுவதும் நானும் சவுந்தரும் மாறி மாறி வகுப்புக்கள் எடுத்தோம். வெள்ளிமலையில் எடுக்கும் ஆயுர்வேத வகுப்பை சற்றே மாற்றி அமைத்து திட்டமிட்டிருந்தேன். மருத்துவர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்டோர் மலேசியாவின் வெவ்வேறு மாகாணங்களில் இருந்து வந்திருந்தார்கள். உன்னிப்பாக கவனித்தார்கள், ஆர்வத்தோடு வகுப்பில் பங்கேற்றார்கள். சவுந்தர் அவரது வகுப்புக்களை சரியான திட்டமிடலோடு நடத்துகிறார். ஒவ்வொரு அமர்விலும் சில பயிற்சிகள், தியானம், உரை என சீராக நடத்திச் சென்றார். ஆர்வக்கோளாறில் யோக பயிற்சிகளை ஈடுபடுபவர்களை கண்டித்து வழிநடத்தினார்.
சனிக்கிழமை அன்று பாரதி விழா நடைபெற்றது. தமிழ் மாறன் அவர்கள் பதினோரு ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பெண் விடுதலை வேண்டும் எனும் பாரதியின் முழக்கம் பல நிகழ்ச்சிகளுக்கு முதன்மை உந்து விசையாக இருந்தது. மலேசியா போன்ற நாட்டில் இத்தகைய பேசுபொருள் முக்கியத்துவம் இழந்துவிட்டதாக எண்ணம் தோன்றியது. எனினும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் நிகழ்த்திய நாடகம் ஒன்று என்னை சட்டென நெகிழச் செய்தது. சரஸ்வதி சபதம் திரைப்படத்தின் கல்வியா செல்வமா வீரமா பகுதியை மீள அரங்கேற்றினார்கள். வித்யாபதிக்கு பதில் பாரதியை மூவரும் ஏற்றுக்கொண்டு அவன் கோரியவற்றை வழங்குவதாக செல்லும் நாடகம். பாரதி காணி நிலம் வேண்டும் என பாடப் பாட மூன்று தேவியரும் தந்தோம் தந்தோம் என ஆசிர்வதித்தார்கள். அவன் செத்து நூறாண்டுகளுக்கு பின்புதான் அவன் கோரியதை கடவுளர் மனமுவந்து வழங்கினர். அவன் கேட்டதை எல்லாம் கொடுத்திருந்தால் கவிதை எழுதாமல் இருந்திருப்பானோ? கவிதைக்கு பசி வேண்டும். தன்னையே உணவாக ஆக்கிக்கொள்ளும் பசி. ராஜ்குமார் பாரதியின் சீடர் விஜயகுமார் மிருதங்கம், வயலின் சகிதம் சில பாரதியின் பாடல்களை பாடினார். நல்ல குரல்வளம், சிறப்பான உச்சரிப்பு, அற்புதமான பாடல் தேர்வு.
நானும் சவுந்தரும் பாரதி விழாவில் உரையாற்றினோம். சவுந்தர் பாரதியின் கருத்துக்களை யோகத்தோடு இணைத்து செயல் யோகம் எனும் கருத்தை தொட்டு உரையாற்றினார். தேர்ந்த சமைய சொற்பொழிவாளராக அவர் தன்னை வரிந்துகொள்ளலாம் எனும் அளவிற்கு கச்சிதமான உரை. நான் பாரதியின் உரைநடை, குறிப்பாக புனைவுகள் குறித்து பேசினேன். சின்ன சங்கரன் கதை தான் என் நோக்கில் நவீன தமிழ் உரைநடையின் தொடக்க உச்சம். பாரதியின் புனைவுகள் குறித்து விரிவாக எழுத வேண்டும். வீரமான முண்டாசு கவி எனும் பாரதியை தாண்டி கேலியும் கிண்டலும் மிளிரும் வேறொரு பாரதியை அறிமுகம் செய்ததாக தமிழ் மாறன் உரைக்கு பின் குறிப்பிட்டார். எல்லா வரலாற்று ஆளுமைகளை நிகழ்வதுதான். அவர்கள் ஏதோ ஒரு விழுமியத்தின் குறியீடாக ஆகும் போதுதான் காலத்தை கடக்கிறார்கள். ஆனால் அந்நிலை அவர்களின் பன்முகத்தன்மையை மறைத்துவிடும். அச்சமில்லை அச்சமில்லை என்று பாடும் பாரதி மீண்டும் மீண்டும் அச்சத்தை பற்றி பேசிக்கொண்டே இருக்கிறான். பயமில்லாத நிலையே தெய்வம் என்கிறான். இன்பம் இல்லாத இடத்தில் பயம் ஏற்படும் என கூறுகிறான். அவன் பெரு வீரனாக தோன்றுவதற்கு மாறாக அன்றாடம் பயத்தை போக்கவும் எதிர்கொள்ளவும் போராடுபவனாக எனக்கு தென்படுகிறான்.
விஜயலக்ஷ்மி, பரிமிதா, அர்வின் குமார், தேவகுமார் போன்ற மலேசிய எழுத்தாளர்கள் வகுப்பில் பங்கு பெற்றார்கள். எழுத்தாளர் புண்ணியவான் சனிக்கிழமை மட்டும் நிகழ்வில் கலந்து கொண்டார். எங்கள் உரை முடிந்ததும் நவீனுடன் கொஞ்சம் ஊர் சுற்ற கிளம்பினோம். நவீன் லூனாஸில் அவர் வாழ்ந்த கம்போங் எனும் தோட்ட குடியிருப்பிற்கு அழைத்து சென்றார். அங்கிருந்த அம்மன் கோவிலுக்கு சென்றோம். நாவல் நிகழ்ந்த இடத்தை நேரில் காண்பது ஒரு அனுபவம். பேய்ச்சி நாவலில் சித்தரிக்கப்பட்ட ரம்புட்டான் மரம் இருக்கிறதா என்று கேட்டேன். இல்லை என்றார். லூனாஸ் நதியை ஒட்டியிருந்த விபாசனா மையத்திற்கு சென்றோம். சிறுவயதில் நவீனுக்கு படைப்பூக்கம் ஊற்றெடுத்த இடம் என்றார். நடை தியானத்தில் ஈடுபட்டிருந்த சீன பெண்ணை பார்த்தோம். மாலை எனது ‘குருதி வழி’ நாவல் மற்றும் சவுந்தர் எழுதிய யோக நூலான ‘ங போல் வளை’ நூலும் வெளியிடப்பட்டன. நவீனும் அரவின் குமாரும் நாவலுக்கு நல்ல அறிமுக உரையாற்றினார்கள். சவுந்தரை ஆசிர்வதித்து சுவாமி பிரம்மானந்தர் உரையாற்றினார்.
ஞாயிறு மதியத்தோடு வகுப்புகள் நிறைவடைந்தன. பரிமிதா, அரவின், தேவா போன்றோரோடு இலக்கிய விவாதத்தில் கொஞ்சம் ஈடுபட்டுவிட்டு மீண்டும் குமாரசாமி வீட்டிற்கு திரும்பினோம். திங்களும் செவ்வாயும் முழுக்க ஊர் சுற்றினோம். திங்கள் அன்று பினாங்கு தண்டாயுதபாணி ஆலயத்திற்கு சென்றோம். நகரத்தார் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில். உட்கூரையின் பக்கவாட்டில் ரவிவர்மாவின் ஓவியங்களும் தஞ்சாவூர் ஓவியங்களும் அலங்கரித்தன. அங்கிருந்து 513 படிகள் ஏறி தண்ணீர்மலையானை காணச் சென்றோம். மழை பெய்து ஓய்ந்த இனிய சூழல். படி ஏறும்போது தான் நமது உடற்தகுதியின் லட்சணம் விளங்கும். வழி எங்கும் கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் போன்றவற்றில் இருந்து சிறு சிறு மேற்கோள்களை பதாகைகளாக தொங்க விட்டிருந்தார்கள். அவற்றை ஆங்கில லிபியில் சில இடங்களிலும், மொழிபெயர்த்து சில இடங்களிலும் எழுதி இருந்தார்கள். அந்த சாலையே தைப்பூசம் அன்று எப்படி விழாக்கோலம் பூணும் என்பதை குமாரசாமி எங்களுக்கு விவரித்தார். இந்திய அருங்காட்சியகம் ஒன்றுக்கு சென்றோம் ஆனால் நாங்கள் சென்ற அன்று அது பூட்டியிருந்தது.
இரண்டாம் உலகப்போர் நினைவு அருங்காட்சியகம் ஒன்று பினாங்கிலிருந்து சற்று தொலைவில் ஒரு சிறிய குன்றின் மீது கடல் பார்க்க அமைந்திருந்தது. ஆங்கிலேயர்களின் ராணுவ தளமாக இருந்து பின்னர் ஜப்பானிய ஆக்கிரமிப்பில் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த இடத்தை இப்போது ஒரு தனியார் அமைப்பு பராமரிக்கிறது. அமெரிக்க, ஜப்பானிய, பிரித்தானிய ராணுவ சீருடைகள், தற்கொலை தாக்குதலுக்கு ஜப்பான் ராணுவம் பயன்படுத்திய காமிகேஸ் வெடிகுண்டு உடை, வெவ்வேறு வகையிலான துப்பாக்கிகள், வெடிக்காத ஷெல் குண்டு (ஷெல் குண்டு எத்தனை பெரியது என்பதை அன்று தான் நேரில் பார்த்தேன்) பீரங்கி, பீரங்கி தளம், தூக்கு மேடை, கில்லட்டின், பதுங்கு குழி, நிலவறை, வதை அறை என பல்வேறு விஷயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. என்னை எப்போதும் வெருட்டும் விஷயம் தான், மனிதனின் உச்சகட்ட கர்ப்பிணி வன்முறையிலும் பாலியலில் தான் வெளிப்படுகிறது. ஆங்காங்கு போருக்கு எதிரான முழக்கங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த அருங்காட்சியகத்தை விட்டு வெளியே வந்தால் அருகிலேயே ‘போர் விளையாட்டு’ அரங்கிருந்தது. அதாவது வண்ணப் பந்து சுடுதலுக்கான அரங்கு. போர் எதிர்ப்பும் போரை நடிப்பதும் வணிகனுக்கு ஒன்று தான். சலிப்பாக இருந்தது.
மதிய உணவிற்கு லிட்டில் இந்தியா சென்றோம். அங்கே ஒரு சைவ உணவகத்தில் நல்ல சாப்பாடு. சுண்டைக்காய் பிரட்டல் செய்திருந்தார்கள். அபாரம். சுண்டைக்காய் தொடங்கி பவளமல்லி வரை எல்லாமே இந்திய அளவை விட 2X அளவு பெரிதாக இருந்ததாக பட்டது. மலேசியாவின் நீர்வளம் தான் காரணம் என்றார் குமாரசாமி. சிங்காரம் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலில் சித்தரிக்கும் இடங்களை காண விரும்பினோம். அப்போதைய பெட்டியடி இப்போது சீனர்களின் வசம் உள்ளதாக குமாரசாமி குறிப்பிட்டார். அவற்றை படமெடுத்து கொண்டோம். லிட்டில் இந்தியாவில் இப்போதும் சில பெட்டியடி கடைகள் உள்ளதாக சொல்லி கூட்டிச் சென்றார். ஒரு கடையில் கணினியை வைத்துக்கொண்டு ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் தமிழ்நாட்டுக்காரராக இருக்க வேண்டும். ஏதும் விவரம் சொல்ல தெரியவில்லை.
அருகே இருந்த சைனா டவுன் பகுதிக்குள் நடந்து சென்றோம். கடற்கரையோரம் சதுப்புக்கு அருகே இருந்தது. சிங்கப்பூரிலும் லிட்டில் இந்தியாவும் சைனா டவுனும் அருகருகே இருந்ததை நினைத்து கொண்டேன். இவ்விரு சமூகங்களும் கடற்கரையோரம் உழைக்கும் வர்க்கமாக இருந்திருக்க வேண்டும். ஆங்காங்கு சில சீன கோவில்கள் இருந்தன. குழந்தைகளுக்கு டிராகன் பொம்மை வாங்கிக்கொண்டேன். களைத்துப்போய் மாலை வீடு வந்து சேர்ந்தோம். மலேசியாவில் இருந்த நாட்களில் மதராஸி, இட்லி கடை, தும்பாத், காந்தாரா 2 என வரிசையாக குமாரசாமி வீட்டில் எல்லோருமாக படம் பார்த்தோம்.
செவ்வாய்க்கிழமை காலை உணவை முடித்துக்கொண்டு நாங்கள் லெம்பா பூஜாங் எனும் இடத்திற்கு சென்றோம். பூஜாங் பள்ளத்தாக்கு. கெடா மாகாணத்தில் உள்ளது. அங்கே ஒரு தொல்பொருள் அருங்காட்சியகம் பராமரிக்கப்படுகிறது. கிடாரம் கொண்டான் எனும் ராஜேந்திர சோழன் வெற்றி கொண்ட கிடா இதுவாக இருக்கலாம் என பலரும் சொல்கிறார்கள். அங்கே விநாயகர், துர்க்கை, புத்தர் சிலைகள், சிவ லிங்கம், ஆவுடைகள், சோம சூத்திர அமைப்பு (அபிஷேக நீர் வெளியேறும் தடம்) போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. காப்பாளராக இருந்த மலாய்க்காரர் நாங்கள் தமிழர் என்று தெரிந்து கொண்டு ராஜேந்திர சோழன் அச்சடித்த நாணயங்கள் விற்பனைக்கு உள்ளது வேண்டுமா என்றார். ஒரு நாணயத்தை எங்களிடம் கொடுக்கவும் செய்தார். நூற்றி ஐம்பது ரிங்கிட்டுக்கு (அதாவது சுமார் 3000) ரூபாய்க்கு விற்க தயார் என்றார். தெரியாத்தனமாகவோ மறைந்தோ இதையெல்லாம் சொல்லவில்லை. அரிய பழம்பொருட்களை இப்படி விற்பார்களா என்ன? பேரம் பேசி 130 ரிங்கிட்டுகள் என்று சொன்னதும் குமாரசாமிக்கு சந்தேகம் வந்துவிட்டது. வேண்டாம் என்று நகர்ந்து வந்தோம். சில ஆலயங்களின் அடிப்பகுதிகள் மறு கட்டமைக்கப்பட்டிருந்தன. பூஜாங் பள்ளத்தாக்கு ஒரு நிலவியல் இடமும் கூட. மிக பழமையான பாறை அடுக்குகள் உள்ளன. அருகிலேயே அருவி குதித்தோடியது. எங்களுடன் சுவாமியின் முக்கிய சீடர்களில் ஒருவரான செல்வமும் சேர்ந்து கொண்டார். செல்வம் கல்லூரி பேராசிரியராக இருக்கும் பிரம்மச்சாரி. கூடிய விரைவில் சந்நியாசம் பெறுவார் என தோன்றியது. அங்கிருந்து சுங்கை பட் டு தொல்லியல் பூங்காவிற்கு சென்றோம். இரும்பு உலை தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது. வேறு சில கட்டுமானங்கள் தென்பட்டன. இப்பகுதி பழங்காலத்தில் மிக முக்கியமான வணிக மையமாக இருந்திருக்க வேண்டும். சுங்கை பட்டாணிக்கு சென்றோம். சீன சைவ உணவகத்தில் மதிய உணவு உண்டோம். சீன உணவை நாம் இங்கே கெடுதி செய்யும் ஜங்க் உணவாக கருதி வருகிறோம். ஆனால் உண்மையில் அபார ருசி. மிதமான உப்பு காரம். குறைவான மசாலாவுடன் மிக சிறப்பாக இருந்தது. பெத்தாய் எனும் உள்ளூர் காய்கறியை கொண்டு ஒரு கறி செய்திருந்தார்கள். உண்பதற்கு முன்னர் செல்வம் லேசாக எச்சரித்தார். இரண்டு நாட்களுக்கு மூத்திரம் கொஞ்சம் மணக்கும், மற்றபடி வேறொன்றும் இல்லை, இது சிறுநீரகத்தை சுத்திகரிக்கும் என்றார். ஊர்வந்து சேரும் வரை மூத்திரத்தில் அந்த வாடை இருந்தது. சுங்கை பட்டாணி முருகன் கோவில் மதிய வேளை என்பதால் பூட்டி இருந்தது. அருகே இருந்த ரொட்டி கடைக்கு அழைத்து சென்று குமாரசாமி சில உள்ளூர் ரொட்டி வகைகளை வாங்கி கொடுத்தார். பின்னர் மாலை எங்களை அவர் வழக்கமாக கோல்ப் விளையாடும் மைதானத்திற்கு அழைத்து சென்றார். சப்பாத்துக்கள், டி ஷர்ட், தொப்பி என நானும் சவுந்தரும் கிளம்பிச் சென்றோம். சவுந்தர் குளியலறை கதவில் விரலை நசுக்கி கொண்டால் பிளாஸ்திரி போட்டிருந்தார். எனினும் இது ஒரு வாழ்நாள் அனுபவம் என்பதால் தவறவிட மனமில்லை. கோல்ப் ஒரு பணக்கார விளையாட்டு எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. பெரிய பணக்கார வில்லன்கள் மட்டுமே விளையாடுவார்கள் அல்லவா. மேலும் சுத்தமாக சுவாரசியமே இல்லாத, உடற்தகுதி ஏதும் தேவையில்லாத மொக்கை விளையாட்டு எனும் எண்ணம் இருந்தது. குமாரசாமி வெவ்வேறு கோல்ப் மட்டைகளின் பெயர்களையும் அவற்றின் பயன்களையும் எங்களுக்கு விளக்கினார். ஆறு ரிங்கிட்டுக்கு நூறு பந்துகளை கொடுக்கிறார்கள். வெறுமே அடித்து பழகலாம். குமாரசாமி அடித்த பந்துகள் அனைத்தும் நூற்றைம்பது மீட்டரை தாண்டி சென்றன. நாங்கள் முக்கி முக்கி ஓரிருமுறை நூறை தொட்டோம். தமிழக வரலாற்றில் கோல்ப் விளையாடிய முதல் தமிழ் எழுத்தாளர் நானாகவே இருக்கக்கூடும். (சாரு விளையாடியிருக்கக்கூடும்) இந்த வரலாற்று தருணத்தின் எடை என்னை அழுத்தியது. ஜக்கி போன்ற யோகாசிரியர்களும் சாமியார்களும் விளையாடியதில் ஆச்சரியமில்லை. ஆகவே சவுந்தருக்கு முன்னோடிகள் உண்டு. பிறகு பயிற்சி மைதானத்திற்கு அழைத்து சென்று ஒரு பீட்டி வாத்தியாரை போல எங்களுக்கு விளையாட்டை பழக்கினார். பந்தை குனிந்து எடுக்காமல் இருக்க நீண்ட குழாய் போன்ற ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதில் பந்தை எடுப்பதே ஒரு சவால்தான். சரிவுக்கு ஏற்ப பந்தை அடிக்கும் விசையும் திசையும் மாறுகிறது. குழிக்கு ஒரு அடிக்கு பக்கம் வந்தால் கூட தவறவிட்டுவிடுவோம். கிரிக்கெட் மட்டை சுழற்றி பழக்கம் உள்ளதால் எனக்கு அதே போன்ற சுழற்றுதல் தான் கைவந்தது. கோல்ப் மட்டையை வேறு மாதிரி சுழற்ற வேண்டும். எனினும் பத்து நாட்கள் விளையாடினால் ஓரளவு பிடிகிடைத்துவிடும். உண்மையில் மிகவும் போதையூட்டக்கூடிய விளையாட்டுதான். அயர்ந்து வீடு வந்து சேர்ந்தோம். அன்று குமாரசாமிக்கு பிறந்தநாள் என்பதால் இரவு கேக் வெட்டி கொண்டாடினோம். சுவாமிஜியிடம் விடைபெற்று வந்தோம்.
விடிகாலை 5 மணிக்கு எழுந்து ஆறு மணிக்கு புறப்பட்டு பினாங்கு விமான நிலையம் வந்து சேர்ந்தோம். கள்ளம் கபடமற்ற மனிதர்களை சந்தித்த நிறைவுடன் இந்தியா வந்து சேர்ந்தோம்.
No comments:
Post a Comment