எங்கள் நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம்தான் இந்த நாவலின் கரு. கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தை அடையாளம் கண்டுகொண்டாலும் அவரால் நெருங்க முடியவில்லை. இன்னொரு வகையான தீர்வை நாடினார் என்பது வேறு விஷயம். ஆனாலும் மூதாதையர்களின் செயலுக்கும் வாழ்விற்கும் நாம் பொறுப்பேற்க முடியுமா? வேண்டுமா? போன்ற கேள்விகள் என்னைத் தொந்தரவு செய்தபடி இருந்தன. முதலில் சற்றுப் பெரிய சிறுகதையாக கொரோனா காலத்தில் எழுதினேன். ஆனால் அப்போது வெளியிடவில்லை. ஜெயமோகன் எழுதிய கொரோனா காலக் கதைகளில் ஒன்றான ‘பலிக்கல்’ கதையின் முடிவுடன் ‘வேல்’ எனத் தலைப்பிட்டு இருந்த அந்தச் சிறுகதையின் முடிவு நெருக்கமாக ஒத்திருந்தது. மன்னிப்பு வழங்குவது யார்? தெய்வமா? மனிதரா? திறந்த முடிவுடன் நிறைவுபெற்ற கதை. கதையைக் கைவிட மனதின்றி அப்போதைய சமயத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே வைத்துவிட்டேன். உள்ளுக்குள் அந்தக் கதை உறுத்திக்கொண்டே இருந்தது. பின்னொரு சமயத்தில் ஜெயமோகனிடம் நான் எழுதிய சிறுகதையைப் பற்றிக் கூற நேர்ந்தது. மையக் கேள்வியை இன்னும் பெரிதாக விரித்தெடுத்தால் இந்தக் கதைக்கு நாவலாக வளரும் சாத்தியம் உள்ளதாகக் கூறினார். அப்படி உருவானதுதான் இந்த நாவல். மூதாதையர் செயல் என்பது கடந்த காலம், வரலாறு என விரிந்தது. அவை நமது இன்றைய வாழ்வில் செய்யும் குறுக்கீடுகள் என்ன? அந்தச் சுமையை நாம் சுமக்க வேண்டுமா? கடந்த காலத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் விடுபட வேண்டுமா? முடியுமா?