ஆயுர்வேத மூல நூல்களில் ஒன்றான சரக சம்ஹிதையில் மருத்துவர்களை ‘உயிரை வளர்ப்பவர்’ (பிராணாபிசார) ‘நோயை வளர்ப்பவர்’ (ரோகாபிசார) என இரண்டாக பிரிக்கிறார். இன்று நாம் பயன்படுத்தும் போலி மருத்துவர் எனும் சொல் அன்று புழக்கத்தில் இல்லை. ‘போலி’ என்பது தகுதியை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. மையமான அதிகாரம் அங்கீகாரம் வழங்கும் நிறுவனமாக இன்று செயல்படுகிறது. கல்விநிலையத்தில் கற்றவர் அசலான மருத்துவர். கற்காதவர் போலி மருத்துவர். கற்ற அசல் மருத்துவர் திறனற்றவரா இல்லையா என்பது ஒரு பொருட்டே அல்ல. இந்த கோணத்திலிருந்து அசல் - போலி எனும் இருமை சார்ந்த உரையாடலை காட்டிலும் சரகரின் பகுப்பு பொருளுடையதாக இருக்கிறது. இதை யோகத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். பரந்தபார்வையோ திறமையோ அற்ற யோகாசிரியர்களுக்கும் தேர்ந்த பயிற்சியும் ஞானமும் கொண்ட ஆசிரியர்கள் மிகக்குறைவு. எங்களது குடும்ப நண்பரும் தேர்ந்த இலக்கிய வாசகருமான சவுந்தர் அருகிவரும் பிந்தைய பிரிவைச் சேர்ந்தவர். புற்றீசலாக யோகாசிரியர்கள் தோன்றுவதை எப்படிப் புரிந்துகொள்வது?
தமிழில் கவிதைகள் அளவிற்கு பிற இலக்கிய வடிவங்கள் நகலெடுக்கப்பட்டதில்லை. ஏன் என யோசிக்கும்போது, எங்கெல்லாம் நுட்பமும், மகத்துவமும் செயல்படுகிறதோ அங்கெல்லாம் போலிகள் அதிகமும் செயல்படுவார்கள். கவிதை பெருவாரியாக போலி செய்யப்படுவதற்கு காரணம் அதன் உன்னதத்தின் மீது சமூகம் கொண்டிருக்கும் உள்ளார்ந்த நம்பிக்கைதான். மேலும், வெகுமக்களின் அறியாமையை மூலதனமாக்கிக்கொள்ளும் வாய்ப்பிருக்கும் இடங்களிலேயே இவை அதிகமும் செல்லுபடியாகின்றன. வாசிப்பு பழக்கமற்றவருக்கு நல்ல கவிதை என சுட்டிக்காட்டப்படும் கவிதைக்கும் போலச் செய்யப்படும் நீர்த்த கவிதைகளுக்குமிடையே வேறுபாடை கண்டடைய முடியாது. ‘யோகமும்’ ஏறத்தாழ அத்தகையதானதொன்று. இந்தியாவின் ‘மென் ஆற்றலாக’ யோகம் நிறுத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை ‘சர்வதேச யோக நாளை’ அனுசரிப்பது இந்தியாவின் மென் ஆற்றலுக்கு கிடைத்த வெற்றி என சொல்லிக்கொள்பவர்கள் உண்டு. யோகத்திற்கான சர்வதேச சந்தை பெருகியுள்ளது என்பது ஐயமற்ற உண்மை. ஆன்மிக சுற்றுலாக்காக வரும் வெளிநாட்டவர்களை நாம் பல்வேறு புனித தலங்களில் காண்கிறோம். ‘யோகம்’ தான் வேரூன்றி இருக்கும் நிலத்தின் மெய்யியல் பரப்பிலிருந்து புதிய பண்பாடுகளை உள்ளிழுக்கும் வகையில் தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. யோகம் தன்னை ஆபத்தற்ற, மானுட மேன்மைக்கு உதவும் கருவியாக உலக அரங்கில் தன்னை முன்வைப்பதில் வெற்றியடைந்துள்ளது. ஆயுர்வேதத்திற்கு சர்வதேச ஏற்பும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பதை ஒப்புநோக்கி அறிந்துகொள்ளலாம். ஆயுர்வேதம் உட்கொள்ளும் மருந்துகளை பரிந்துரைக்கிறது. உடலியங்கியலுடன் தொடர்புள்ள வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது. ஆகவே அறிவியல் சமூகம் ஐயத்துடன் நோக்குகிறது. இந்நூலில் சவுந்தர் குறிப்பிடும் ‘ஷட் கர்மா’ போன்ற சற்றே வலுவான வழிமுறைகளை யோகம் உலக மேடையில் தன் முகமாக முன்வைப்பதில்லை. ஏறத்தாழ மூச்சுடன் இணைந்த உடற்பயிற்சியாக தன்னைச் சுருக்கி தகவமைத்துக்கொண்டே உலக அரங்கில் உலாவருகிறது. யோகம் அறிவியல் நிரூபணங்கள் கொண்ட முறையாக இன்று கருதப்படுகிறது. ஆனால் ஆயுர்வேதத்திலிருந்தே அது உடலைப் பற்றிய பார்வையை வளர்த்துக்கொள்கிறது. யோகம் உடல் நலம், மன நலத்திற்கான தீர்வாக தற்காலத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால் தன்னளவில் மானுட விடுதலையை கனவு கொண்ட மெய்யியல் பள்ளிகளில் ஒன்று. இந்த பரிணாமம் தவிர்க்கமுடியாதது, இயல்பானதும் கூட. யோகத்தின் மீதான இந்த சர்வதேச கவனம் நம்பகமான ஆசிரியருக்கான தேவையை பன்மடங்கு பெருக்கியுள்ளது. இந்திய அளவில் யோகம் முறைபடுத்தப்பட காரணமாயிருந்த பீகார் யோகப் பள்ளியில் முறையாக கற்றவர் சவுந்தர். அவரது ஆழ்ந்த நவீன வாசிப்பினூடாக யோகத்தைப் பற்றி தனித்துவமான புரிதலை அளிக்க முடிகிறது. யோகம் கோரிக்கொள்வது போல உண்மையில் அது ஆபத்தற்றதா? யோகத்தின் எதிர்பாரா விளைவுகள் குறித்து இங்கு யாரும் எதுவும் பேசுவதில்லை. குண்டலினி பயிற்சிகள் சிலருக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியதை கவனித்தேன். சவுந்தரிடம் தொடர்ந்து உரையாடுபவன் எனும் முறையில் அவருக்கு எவ்வித மிகை நோக்கும் கிடையாது என்பதை அறிவேன். ஆயுர்வேதமும் சரி யோகமும் சரி ஒவ்வொரு மனிதனின் நிலையையும் கருத்தில் கொள்ளவேண்டும் என அறிவுறுத்துகிறது. சில அடிப்படை பயிற்சிகளை பொதுவாக வழங்கலாம். அதற்கப்பால் செல்வதற்கு கவனம் தேவை. இந்நூலில் அவரே குறிப்பிடுகிறார் "எனினும் இது மூச்சை சரியான நிகர்நிலையில் உள்ளிழுத்தல் ,வெளியிடுதல், குறிப்பிட்ட விகிதத்தில் உள்ளே மற்றும் வெளியே நிலை நிறுத்துதல் என்கிற பல்வேறு அங்கங்களை கொண்டது என்பதால் , சிறு மாறுதல் கூட ஒவ்வாமையை , எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும்." என எழுதுகிறார். மிகைப்படுத்தாமல் யோகத்தைப் பற்றி அணுகும் குரல் முக்கியமானது. நடைமுறை பயனளிக்கும் யோக பயிற்சிகளுக்கும் யோகத்தின் அறுதி நோக்கம் குறித்தும் தெள்ளிய புரிதல் கொண்டவர் சவுந்தர் என்பதை அவருடனான தனிப்பட்ட உரையாடல்களின் வழி அவதானித்திருக்கிறேன். அப்பண்பை இந்நூலை வாசிப்பவர்களும் உணர முடியும். இந்தியாவில் ஒன்றை புனிதப்படுத்தவும், ஏற்பை உருவாக்கவும் அதை தொன்மைப்படுத்துவது நம் வழக்கம். இன்று உலகம் முழுவதும் பரவலாக பின்பற்றப்படும் சூர்யநமஸ்காரம் எனும் பயிற்சிமுறைக்கு வயது சில நூறாண்டுகள்தான் என குறிப்பிடுகிறார். 'மராட்டிய மன்னர்களின் குருவான ‘சமர்த்த ராம்தாஸ்’ எனும் துறவி தான், சூரிய வழிபாட்டை மேம்படுத்தி அதையொட்டி சில உடற்பயிற்சிகளை வடிவமைக்கிறார். அது படைவீரர்களுக்கு ,போர்த்தொழிலில் ஈடுபடுவோருக்குமான ஒரு பயிற்சியாக மாறுகிறது. இது அனைத்தும் 17ம் நூற்றாண்டில் தான் புழக்கத்திற்கு வருகிறது. ஆக சூரிய நமஸ்காரம் எனும் ஆசனப்பயிற்சி ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கே பயிற்சி செய்யப்படவில்லை, சூரிய வழிபாட்டில் இருந்த ஒன்று ஆசனங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. என்பதே நம்மிடமுள்ள சான்று.' என எழுதுகிறார். அதேபோல் ஹடயோக பிரதிபீகை போன்ற நூலில் மொத்தம் 84 ஆசனங்களே குறிப்பிடப்பட்டுள்ளன. இன்று அவை ஆயிரக்கணக்கான ஆசனங்களாக பெருகியுள்ளன. நேர்மாறாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள மூலிகைகள், மருந்துகளின் எண்ணிககை குறைந்தபடியே உள்ளன. யோகம் வளரும் துறையாக உள்ளது. ஆயுர்வேத மருத்துவர் இல மகாதேவனிடமிருந்து நான் பெற்ற முக்கியதாக்கம் என்பது அவருடைய நோயாளி மைய நோக்கு. சிகிச்சைக்காக யோக பயிற்சிகளை பயன்படுத்தும் போது 'நவீன மருத்துவம் சொல்லக்கூடிய மருந்து மாத்திரைகளை கைவிட்டு விட்டு இதை தொடங்கவேண்டிய அவசியமில்லை' என்கிறார்.
நமக்கான யோகாசிரியரை எப்படி தேர்ந்தெடுப்பது? 'ஒரு முழுமையான அறிவு அல்லது பாடத்திட்டம் என்பது மரபார்ந்த ஒன்றாக இருப்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு சமகால அறிவியல் சார்ந்ததாகவும் இருத்தல் அவசியமாகிறது, அதுவும் யோகம் போன்ற உடல், மனம், இயக்கம் ,போன்ற வாழ்வியல் அம்சங்களில் இந்த அணுகுமுறை முக்கியமான ஒன்று. ஆகவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் ,யோக ஆசிரியர் அல்லது நிறுவனம், உங்களுக்கு பரிந்துரைக்கும் பயிற்சிகள் சார்ந்து அறிவியல் பூர்வமான ஆய்வுகளை முன் வைக்கிறார்களா? அந்த பயிற்சிகளின் சாதக பாதகங்கள் விரிவாக சொல்லப்படுகிறதா ? எந்த வகையில் இந்த பயிற்சி உங்கள் உடலியல் /மனம் சார்ந்த உபாதைக்கு உதவும். உடலில் எந்த மாதிரியான முன்னேற்றத்தை ஏற்படுத்தும், முக்கியமாக தவறாக பயிற்சி செய்தல் நிகழும் பக்கவிளைவுகள் யாவை ? போன்ற அனைத்தும் அறிவியல் பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்திய அளவிலோ , உலக அளவிலோ, ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறார்களா? அதன் எதிர்வினை என்ன? போன்ற அறிவுசார் விவாதங்கள் நிகழ்திருக்கிறதா ? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், உலக அளவில் முக்கியமான நான்கு நிறுவனங்கள் இதை மிகச்சிறப்பாக செய்து வருவதை இணையத்தில் சற்று தேடினாலே கண்டு கொள்ள முடியும்.' மேலும் 'வெறும் ஆர்வத்தால் , அல்லது இணையத்தில் உலவும் யோகம் சார்ந்த அமானுஷ்ய காரணங்களால், அல்லது பொழுதுபோக்கிற்காக, என்கிற மேலோட்டமான , எவ்வகையிலும் நமக்கு உதவாத ஒன்றை செய்து பார்ப்பதை விட அதை செய்யாமலே இருக்கலாம். ' என எச்சரிக்கவும் செய்கிறார். 'இன்று பெரும்பாலான யோக மையங்களில் சொல்லிக்கொடுக்கபடுவது போல, கண்களை மூடி கையை ஒரு குறிப்பிட்ட முத்திரையில் வைத்து அமர்ந்திருப்பது தியானமல்ல. இங்கே ஒருவர் கண்களை மூடி எதையோ சிந்தித்துக்கொண்டு அல்லது எதோ ஒரு எண்ணத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார் என்பதே முழு உண்மை.' என தியான முறை குறித்து சொல்கிறார். இவற்றை எடுத்துக்கூறவே ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.
துறை சார்ந்த வல்லுனர்கள் பொதுமக்களுக்கான நுல் எழுதுவதில் உள்ள மிக முக்கியமான சவால்களென்பது எந்த அளவிற்கு தகவல் தர வேண்டும், மொழியை எப்படி எளிதாக்க வேண்டும் ஆகியவை தான். யோகம் குறித்த நல்ல அறிமுக கையேடு என இந்நூலை சொல்லலாம். தொன்மையான, நுட்பமான விஷயங்களை நடைமுறை தளத்தில் கொணர்ந்து பேசுவதே காரணம். எளிய உருவகங்கள் வழி நுட்பங்களை உணர்த்துகிறார். 'அதே பிராணன் தான் நம் உடல் மனம் புத்தி உணர்வு என ஒவ்வொரு தளமாக இயங்கிக்கொண்டு இருக்கையில் ஒரு தளத்திலிருந்து அடுத்த தளத்திற்கு செல்லும் இணைப்பாக இயங்குகிறது. ஒரு காரில் நாம் ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒருமுறை கியரை மாற்றுவது போல அப்படி மாற்றும் பொழுது நடுவே நியூட்ரல் நிலைக்கு வந்து பின் அடுத்த கியருக்கு மாற்றுவது போல நம்மில் பிராணன் இயங்குகிறது.' மனதை பாண்டோர பெட்டியாக உருவகிக்கிறார். ஒலிம்பிக் ஜோதியின் தொடரோட்டத்தை நரம்பு மண்டல செய்தி கடத்திகளுடன் ஒப்பிடுகிறார்.
சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஆசன பயிற்சிகள் போதும் என்கிறார். அவற்றைத் தேர்ந்தெடுக்க ஆசிரியரின் உதவி தேவை. வாத பித்த கப அமைப்புகள், கால - இட பிரக்ஞை என பல விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு பிரத்யேகமான பயிற்சியை வடிவமைக்க வேண்டும் என்கிறார்.'யோக மரபும் தன் பயிற்சிகளில் முதலில் ஒருவருக்கு வழங்குவது, இந்த அபானனை சமன்செய்யக்கூடிய பயிற்சிகள் தான், இதை ஒருவர் சரிசெய்து விட்டாலே ,பாதிக்கும் மேற்பட்ட பிரச்சனைகள் ஓரளவு சரியாகி விடுகிறது. ஆரோக்கியத்தின் திறவுகோல் என்று இந்த பகுதியை சுவாமி சத்யானந்தர் குறிப்பிடுகிறார்.'
எளிய மொழியில் ஆழத்துடன் அனைவருக்குமான யோக நூலை எழுதியுள்ள நண்பரும் ஆசிரியருமான சவுந்தருக்கு வாழ்த்துகள்.
No comments:
Post a Comment