காலச்சுவடு பதிப்பகம் நான் மொழியாக்கம் செய்த சத்திய சோதனை ஆய்வு பதிப்பிற்கு முன்வெளியீட்டு திட்டம் அறிவித்துள்ளது.
தமிழுக்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் தன்வரலாறு ஒன்றும் புதிதல்ல. 1948 ஆம் ஆண்டு T. விசுவநாதன் மொழியாக்கத்தில் ஒரு பதிப்பு வெளிவந்தது. கா. ஸ்ரீ. ஸ்ரீ யும் மொழியாக்கம் செய்துள்ளார். கல்கி மொழியாக்கம் செய்தபோதுதான் 'சத்திய சோதனை' எனும் தலைப்பு வழங்கப்பட்டது. சி.எஸ். தேவநாதன் மொழிபெயர்ப்பில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பதிப்பு வெளியானது. சமீப காலத்தில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி மொழியாக்கம் செய்துள்ளார். இன்று சர்வோதய பண்ணை மற்றும் காந்தி இலக்கியச் சங்கம் வெளியீடாக நமக்கு கிடைக்கும் பதிப்பு என்பது ரா. வேங்கடராஜூலு மொழியாக்கம் செய்ததுதான். இந்த மொழியாக்கமே பரவலாக கவனம் பெற்றது, வாசிக்க கிடைப்பது.
இன்று வாசிக்கும் போது கூட பெரிய அர்த்தப் பிழைகள் ஏதுமற்ற, சரளமான வாசிப்பை அளிக்கக்கூடிய மொழியாக்கம் அவருடையது. இந்நூலை வேங்கடராஜூலுவின் தன்னலமற்ற மகத்தான பணியையும் பங்களிப்பையும் நினைவுகூர்ந்தே தொடங்க வேண்டும். எனது மொழியாக்கத்திற்கு வழிகாட்டியாக நான் கருதியது அவரது மொழியாக்கத்தை தான்.
வேங்கடராஜூலுவின் புகைப்படம் கூட நமக்கு கிடைக்கவில்லை. அவரைப் பற்றிய தனிப்பட்ட செய்திகள் என பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. தொ.மு.சி ரகுநாதன் அவரது புதுமைப்பித்தன் வரலாறு நூலில் போகிற போக்கில் 'தினசரியின் துணையாசிரியர் ரா. வேங்கடராஜூலு நாயுடுவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் சௌஜன்யத் தொடர்பில்லை. புதுமைப்பித்தனோடு எந்தவித சுமுக பாவம் கொண்டிருந்தாரோ, அதே சுமுக பாவத்தோடு சொக்கலிங்கம் நாயுடுவோடும் பழகி வந்தார்.' என ஒரு சிறு குறிப்பை அளிக்கிறார். தால்ஸ்தாயின் போரும் வாழ்வும் நாவலை மொழியாக்கம் செய்த டி.எஸ். சொக்கலிங்கம் திணமணியிலிருந்து விலகி ‘தினசரி’ என ஒரு இதழை தொடங்குகிறார். அதில் புதுமைப்பித்தனும் ரா. வேங்கடராஜுலுவும் துணை ஆசிரியர்களாக பணியாற்றியுள்ளார்கள். நமக்கு கிடைக்கும் மற்றொரு குறிப்பு என்பது க.நா.சு வின் 'பெரிய மனிதன்' எனும் நாவலின் முன்னுரையில் இந்த நாவலை அழகாக வெளியிட்ட வேல் புத்தக நிலையத்தின் ரா. வேங்கடராஜூலுவுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். ராஜேந்திர பிரசாத்தின் 'அண்ணல் காந்தி அடிச்சுவட்டில்' எனும் நூலும் வேல் புத்தக நிலையத்தால் வெளியிடப்பட்டது. மற்றொரு தகவல் என்பது எழுத்தாளர் கு. அழகிரிசாமியும் வேங்கடராஜுலுவுடன் இணைந்து காந்தியின் எழுத்துக்களை மொழியாக்கம் செய்துள்ளார்கள். மிக சமீப ஆண்டுகளில் வாழ்ந்து மறைந்த ஒருவரைப் பற்றி நமக்கு எதுவுமே தெரியவில்லை. அதுவும் தமிழில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்கும் ஒரு நூலின் மொழிபெயர்ப்பாளர் அவர்!
இந்த புதிய மொழியாக்கத்திற்கு தேவை என்ன? முந்தைய மொழியாக்கத்தில் இருந்து இது எப்படி வேறுபடுகிறது? திரிதீப் சுஹ்ருத் கொணர்ந்திருப்பது உரையுடன் கூடிய ஆய்வு பதிப்பு. மூலமொழியான குஜராத்தியில் எழுதப்பட்ட பிரதியை, காந்தியின் காலத்தில், அவரது மேற்பார்வையில் செய்யப்பட ஆங்கில மொழியாக்கத்துடன் ஒப்பிட்டு நோக்குகிறது என்ற வகையில் தனித்துவமானது, முக்கியத்துவம் வாய்ந்தது. சுஹ்ருத் சபர்மதி ஆசிரமத்தில் இயக்குனராக பணியாற்றியவர். காந்திய அறிஞர் என்பதால் அவர் அளிக்கும் அடிக்குறிப்புகளில் பல தரவுகள் புதியவை. காந்தியின் எழுத்துக்களை தாண்டி காந்திக்கு வந்த கடிதங்களை ஆங்காங்கு அடிக்குறிப்பில் அளித்திருக்கிறார். ஹரிலால் காந்தியின் வாழ்க்கை வரலாறை குஜராத்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததற்காக மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த காலகட்டத்திற்குரிய மொழியில் மறு மொழியாக்கம் செய்யப்படுவதன் வழி பிரதியின் ஆயுள் நீட்டிக்கப்படுகிறது. புதிய வாசகர்களை சென்றடைகிறது. ஏதோ ஒருவகையில் சமகால பொருத்தப்பாடு இருக்கும் பிரதிகளே காலந்தோறும் மீண்டும் மீண்டும் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. மொழியாக்கம் என்பது மூல பிரதியை, அதன் ஆசிரியரை இன்னும் இன்னும் என நெருங்கி செல்வதற்கான ஒரு வழிமுறையாக காண முடியும். 'தன்வரலாறின்' முக்கியத்துவம் என்பது ஒரு வகையில் காந்தியின் முக்கியத்துவமும் கூட. எனினும் காந்தியின் தன்வரலாறுக்கு தனித்த இலக்கிய மதிப்பும் இடமும் உண்டு. மகத்தான புனைவுத் தருணங்களால் நிரம்பியது. காந்தியை அவரது மன ஊசலாட்டங்களுடன் நமக்கு நெருக்கமாக அறிமுகப்படுத்துவது. ஒரு பெரும் யதார்த்த நாவல் வாசிக்கும் கிளர்ச்சியை அளிப்பது.
இந்த புதிய மொழியாக்கம் குஜராத்தி மூலத்துடன் ஒப்பிட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் கிடைக்கும் காந்தி ஒருவித பண்படுத்தப்பட்ட காந்தி, மூல மொழியில் அவர் வேறு மாதிரி இருப்பார் என்பது டாக்டர். அம்பேத்கர் காந்தி மீது வைக்கும் விமர்சனங்களில் ஒன்று. இந்த மொழியாக்கத்தில் ஈடுபடும்போது அம்பேத்கர் எதை குறிப்பிடுகிறார் என்பதை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. பண்படாத உணரப்படுவதை நான் உள்ளூர் தன்மை என்று குறிப்பிடுவேன். காந்தியின் எழுத்தில் மிளிரும் இந்த ‘உள்ளூர்’ தன்மை அவரது மெய்யியலுக்கு முரணானது இல்லை. விமர்சன பூர்வமாக நிராகரிக்கப்பட வேண்டிய அம்சம் இல்லை என்பதே என் பார்வை. ‘உள்ளூர் தன்மை’ என்பதை ‘நாட்டார் தன்மை’ என்று சொல்லலாம். நாட்டார் வழக்குகள் மிகச் சரளமாக வந்து விழுவதைக் காண முடிகிறது. எனக்கு காந்தி சில இடங்களில் கி.ராவிற்கு நெருக்கமானவராக தோன்றியிருக்கிறார். சற்றே துடுக்கான கேலியும் கிண்டலும் மொழியில் விரவிக் கிடக்கிறது. ஒரு உதாரணம் அளிக்கலாம் என்றால் இந்நூலில் இரண்டு மூன்று இடங்களில் தனது நிலையை விளக்க காந்தி 'between devil and the deep sea' எனும் உவமை சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார். இவற்றை நாம் ஒன்றுபோலவே மொழியாக்கம் செய்துள்ளோம் ஆனால் திரிதீப் சுஹ்ருத் குஜராத்தி மூலத்தில் ஒவ்வொன்றும் வேறு வேறு சொல்வழக்குகள் என்பதை காட்டுகிறார். 'ஆட்டுக்கல்லின் இரண்டு கற்களுக்கு நடுவே அரைபடுவது போல்' என கும்பமேளா அத்தியாயத்தில் வருகிறது, மற்றொரு இடத்தில் 'பாக்குவெட்டியில் சிக்கிய கொட்டைப்பாக்கைப் போல' எனும் சொல் வழக்கு வருகிறது. ஆங்கிலத்தில் எல்லா மதத்தையும் சகித்துக்கொள்வது எனும் பொருளில் 'tolerance' என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் காந்தி மூலத்தில் அளித்திருக்கும் சொல்லை மொழியாக்கம் செய்தால் 'equability' என்று வருகிறது. எல்லா மதங்களையும் ஒரே மாதிரியாக காணும் பார்வை என இதை சொல்லலாம். ஒன்றை சகித்துக் கொள்வதற்கு சமபாவத்தில் நோக்குவதற்கும் வேறுபாடு உண்டு. இன்னொரு உதாரணத்தைச் சொல்லலாம் எனில் ஃபெரோஸ்ஷா மேத்தாவிற்கு காந்தி ஆற்றிய உரை பிடித்திருந்ததாக அறியும் போது, தற்போதைய ஆங்கில வடிவத்தில் உள்ளபடி மொழியாக்கம் செய்தால் 'மிகவும் மகிழ்ச்சியாக' உள்ளதாக பொருள்படும். புதிய மொழியாக்கத்தில் காந்தியின் சொற்கள் அந்த மகிழ்ச்சியை இப்படி விவரிக்கிறது 'எனக்கது கங்கையில் நீராடியதற்கு இணையாகும்.' இந்த இரண்டு வெளிப்பாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடை நாம் கவனிக்க முடியும் என எண்ணுகிறேன். இந்த புதிய மொழியாக்கம் காந்தியை மேலும் நெருக்கமான ஆளுமையாக நமக்கு அறிமுகப்படுத்தும். இவைத்தவிர திரிதீப் சுஹ்ருத் அளிக்கும் அடிக்குறிப்புகள் மிக முக்கியமானவை. துதா பாய், ஷேக் மேத்தாப் என பலரையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
திரிதீப் சுஹ்ருத் இந்நூலில் இரண்டுவிதமான குறிப்புகளை அளித்துள்ளார். பக்கவாட்டில் மேம்பட்ட மொழியாக்கத்தையும் அடிக்குறிப்பில் குறிப்புரையும் அளித்துள்ளார். ஆங்கில - குஜராத்தி பிரதிகளுக்கு இடையேயான மொழி ரீதியான மாற்றங்களை பதிவு செய்வதே அவர் நோக்கம். அதிலிருந்து மூலத்திற்கு நெருக்கமான வடிவத்தை அடைய முயல்கிறார். ஒரு நூலிற்குள் இரண்டு பிரதிகளை உருவாக்குகிறார். அவற்றை இணை வாசிப்பு செய்ய வழிவகை செய்கிறார். தமிழ் மொழியாக்கத்தில் அத்தகைய ஒரு பாணி பொருந்தாது. மூல மொழியிலிருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் என இரண்டு கட்ட மொழிபெயர்ப்புக்கு பின் வெளிவருகிறது. ஆங்கில மொழியாக்கத்தை மூலமாக கொண்டு, குஜராத்தி மூலத்தில் பயன்படுத்தியிருப்பவற்றை அடிக்குறிப்புகளாக அளித்திருக்கிறோம். பிற அடிக்குறிப்புகள் மூல நூலில் உள்ளபடியே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அடிக்குறிப்பு எண்ணிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திரிதீப் சுஹ்ருத் பகுதி வாரியாக எண்ணிக்கையை அளித்துள்ளார். வாசிப்பதற்கு எளிதாக இருக்க வேண்டும் எனும் நோக்கில் இப்பதிப்பில் அத்தியாய வாரியாக எண்ணிக்கை இடப்பட்டுள்ளது.
இந்த மொழியாக்கத்தை முடிக்க ஏறத்தாழ ஐந்தாண்டுகள் ஆகியுள்ளன. முதல் ஒன்றரை ஆண்டுகள் அத்தனை முனைப்புடன் ஈடுபடவில்லை என்றாலும் கூட, அதற்கு பிந்தைய ஒன்றரை ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் மொழியாக்கப் பணியில் ஈடுபட்டேன். ஆங்கில பிரதியோடு ஒப்பிட்டு திருத்தங்கள் செய்ய மட்டும் மூன்று மாதங்கள் ஆயின. வளர்ந்து வரும் புனைவு எழுத்தாளராக இந்த முக்கியமான காலகட்டத்தை மொழியாக்கத்திற்கு அளித்தது புத்திசாலித்தனமான செயல் அல்ல என நண்பர்கள் பலர் அக்கறையுடன் எச்சரிக்கை விடுத்தனர். அவர்களின் அன்பையும் அக்கறையையும் புரிந்து கொள்கிறேன். இந்நூலில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் நான் வேறு பலவற்றையும் எழுதினேன். ஆனால் அவை எனக்கு குற்ற உணர்வை அளித்தன. மலைபோல ஒரு பணி காத்துக்கொண்டு இருக்கிறது எனும் எச்சரிக்கை மணி உள்ளே ஒலித்தபடி இருக்கும். பல பணிகளை ஒத்தி போடவும் கைவிடவும் நேர்ந்தன. எனினும் காந்தியின் தமிழ் குரலாக இருப்பதற்கான பெரும் வாய்ப்பு இது என்பதை நான் உணர்ந்துள்ளேன். அது அவரை உட்செரிப்பதற்கான பயிற்சி. புத்திசாலித்தனமான முடிவா என்றால் எனக்கு சொல்லத் தெரியவில்லை ஆனால் நிறைவான, ஆன்மீக ரீதியான அனுபவம் என்பதை உறுதியாகச் சொல்வேன். நிறைவளிக்கும் ஒன்று ஆற்றலை பெருக்குமே ஒழிய குன்றச் செய்யாது.
மொழியாக்க அனுபவத்தை கொஞ்சம் பகிர்ந்துகொள்ள வேண்டும். செப்டம்பர் 2022 ல் திருத்தப்பட்ட வரைவை காலச்சுவடிற்கு அனுப்பினேன். 2023 மார்ச் மாதத்தில்தான் 200 பக்க அடிக்குறிப்புகள் காணாமல் போன விஷயத்தை அறிந்து கொண்டேன். எப்படி இறுதி கோப்பிலிருந்து அவை காணாமல் போயின என்பதை என்னால் இப்போதும் அறியமுடியவில்லை! மீண்டும் இரண்டு மாதங்கள் அவற்றை மொழியாக்கம் செய்தேன். மொழிபெயர்ப்பாளர் தி.அ. ஸ்ரீனிவாசன் பிரதியை திருத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். முதற்கட்ட மொழியாக்கத்தில் அவர் இந்த நூல் மொழியாக்கம் செய்யப்பட்ட விதம் குறித்து சில கேள்விகளை எழுப்பினார். சிற்றிதழ் தமிழ், தனித்தமிழ் சொற்களை சரளமாக பயன்படுத்தி இருந்தேன். அவை இந்த மொழியாக்கத்தில் என்னுடைய பங்களிப்பு என்றொரு எண்ணம் எனக்கிருந்தது. ‘சரிதான், காந்தியின் மொழி எளிமையானது, நேரடியானது சாமானிய மக்களை சென்று சேர வேண்டும் என்பதை இலக்காக கொண்டது, அவர் இத்தனை சிடுக்கான சொற்களை பயன்படுத்தி இருப்பாரா என்பதை யோசியுங்கள்’ என்றார். எனக்கு பெரும் திறப்பை அளித்தது. காந்திக்கு, அவரது குரலுக்கு உண்மையாக இருப்பது எல்லாவற்றையும் விட முக்கியம் என்பதை எனக்கு உணர்த்தியது. பாடகர்கள் சுருதி சேர்ப்பது என்று சொல்வார்கள். மொழிபெயர்ப்பும் மொழி வழி ஆசிரியருடையுடைய சுருதியுடன் இயைவது தான். அடிக்குறிப்புகள் பயன்பாட்டில் சில குழப்பங்களை ஸ்ரீனிவாசன் சுட்டிக்காட்டினார். உச்சரிப்பிற்கு frovo, யு ட்யூப் போன்ற ஆங்கில தளத்தின் உதவியை நாடினேன். ஸ்ரீனிவாசனுக்கு இந்தி தெரியும். ஆங்கிலத்தில் குழப்பம் நேரும்போது இந்தி பிரதியுடன் ஒப்புநோக்கும் முறையை பின்பற்றினார். ஆங்கிலத்தை விடவும் இந்தி மொழியாக்கம் குஜராத்திற்கு நெருக்கமாக இருக்கும். இந்தியை சரளமாக பொருள் கொள்ள தெரியாது என்றாலும் சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்க தெரியும். உச்சரிப்பு சார்ந்த குழப்பங்களுக்கு நானும் இதே முறையை பின்பற்றினேன். பெரிய விஷயங்களை சிடுக்கான மொழியில் சொல்ல வேண்டியதில்லை, சத்தியத்தின் ஆற்றல் சொற்களில் தோயும் தோறும் எளிய சொற்களை கொண்டு பெரிய விஷயங்களை சுட்டிவிட முடியும் என்பதே இந்த மொழியாக்கம் வழி நான் கற்றுக்கொண்டது. இயன்றவரை ஒழுங்காக செய்துள்ளேன் என நம்புகிறேன்.
சுனில்கிருஷ்ணன்
1-5-2025
காரைக்குடி
மொழிபெயர்ப்பாளர் நன்றி குறிப்பு
மொழியாக்கத்தை வரைவு வடிவத்தில் வாசித்து திருத்தங்கள் அளித்த திரு ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றி. மொழியாக்கத்தை சுலபமாக்கியதில் நவீன தொழில்நுட்பத்திற்கு பங்கு உண்டு. ஏறத்தாழ 1000 பக்கங்கள் கொண்ட இந்நூலின் 700 பக்கங்களாவது கைப்பேசியில் எழுதியவை தான். தமிழ் விக்சனரி இணைய தளம் பல துறை சொற்களுக்கான தமிழ் சொற்களை அளித்து உதவியது. forvo இணையதளம் உச்சரிப்புக்கு வழிகாட்டியது.
2018 ஆம் ஆண்டு காந்தி குறித்து ஒரு நூலை கொண்டு வருவோம் என காலச்சுவடு கண்ணன் பேசினார். வேறு சில நூல்களை பரிசீலித்த பின் இந்நூலை முடிவு செய்தோம். ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பொறுமையாக காத்திருந்து வெளியிட முன்வந்ததற்கு காலச்சுவடு கண்ணனுக்கும், எழுத்தாளர் அரவிந்தனுக்கும் நன்றி.
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் தி.அ ஸ்ரீனிவாசன் ஏறத்தாழ இணை ஆசிரியரை போல் செயல்பட்டு இந்த பிரதியை மேம்படுத்தியுள்ளார். மொழியாக்கம் செய்வதற்கும் அதை மேம்படுத்துவதற்கும் எத்தனை அர்ப்பணிப்பு வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. காந்தியரான திருமதி. சித்ரா பாலசுப்பிரமணியன் இந்த பிரதியை வாசித்து மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த பிரதியை நூலாக்கம் செய்வது மிகச்சவாலான பணி. திறம்பட செய்த திரு பெருமாளுக்கும், காலச்சுவடு குழுவினருக்கு நன்றி. பலகட்ட திருத்தங்களை சுணங்காமல் செய்தார் பெருமாள். அம்மா ரமாதேவி, மனைவி டாக்டர். மானசா, குழந்தைகள் சுதிர் மற்றும் சபர்மதிக்கு அன்பும் நன்றியும்.
மிகச் சிறப்பான பணி. வாழ்த்துகள் சுனில். நூலை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ReplyDelete