பொள்ளாச்சி எதிர் பதிப்பக கடையில் 26.1.25 அன்று நிகழ்ந்த நூல் அறிமுக கூட்டத்தில் ஆற்றிய உரையின் குறிப்புகளை கொண்டு தொகுத்து எழுதிய கட்டுரை
விஜய ராவணனின் இரண்டாம் சிறுகதை தொகுப்பான ‘இரட்டை இயேசு’ மொத்தம் ஆறு நீள் கதைகள் கொண்டது. ‘எதிர்’ வெளியீடாக கடந்த ஆண்டு வெளிவந்தது. இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் தமிழில் எழுதப்பட்ட உலக கதைகள் என குறிப்பிடுகிறார் எம். கோபாலகிருஷ்ணன். உள்ளூர் உலகமாளவிய எனும் இருமை மெல்ல பொருளிழந்து வருகிறது என தோன்றியது. உலகளாவிய நிகழ்வுகள் ஏதோ ஒருவகையில் உள்ளூர் வாழ்வில் தாக்கம் செலுத்துகிறது.
விஜய ராவணனின் இந்த தொகுப்பை வாசித்தபோது முதலில் தோன்றியது, அவரது புனைவுகளின் வழி எழுப்பும் கேள்விகள் சிலவற்றை நானும் பகிர்ந்து கொள்கிறேன் என்பதே. தொகுப்பின் முதல் கதை ‘ஆரஞர் உற்றன கண்’ பிரியத்திற்குரியவர்களின் பிரிவு துயரால் மூடாத விழிகள் என்று பொருள். திருக்குறளில் இருந்து எடுத்தாளப்பட்ட சொல்லாட்சி. இப்படியான பழந்தமிழ் தலைப்புகள் கதைகளுக்கு ஒரு வசீகரத்தை அளிக்கின்றன. ‘ஹன்னா’ எனும் ஜெர்மனியை சேர்ந்த முதுகலை கலை கல்லூரி மாணவியின் தன்னிலை கூற்றில் கதை சொல்லப்படுகிறது. இன்னொரு பிரதான பாத்திரமான அப்துல் அரீஃப் குர்தீஷ் மொழி பேசும் ஈராக் நாட்டை சேர்ந்தவன். கதை ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் நிகழ்கிறது. ‘அகாலம்’ ஆப்பிரிக்க அமெரிக்கனை முதன்மை பாத்திரமாக கொண்டது. ‘இரட்டை இயேசுவில்’ ஃபிரெஞ்சு நாட்டவருடன் தமிழ் இளைஞனும் வருகிறார். கதை இந்தோனேசியாவில் நிகழ்கிறது. ‘என்றூழ்’ கதையில் ஆபிரகாமை யூதராக புரிந்துகொள்ள இடமுண்டு. ‘தங்க மீன்கள்’ கதை மாந்தர்கள் இஸ்ரேல் பாலஸ்தீனத்தை சார்ந்தவர்கள். போர்முனையில் கதை நிகழ்கிறது. ‘அகாலம்’ ‘என்றூழ்’ ஆகியவை நிலமற்ற வெளியில் நிகழ்கிறது. வெவ்வேறு களங்கள், வெவ்வேறு கதை சொல்லிகள் (நாடு, இனம், பாலினம்) என எழுதும்போது நம்பகத்தன்மை சார்ந்து சில சவால்கள் எழும். பொதுவாசிப்பு எழுத்தில் இத்தகைய போக்குகளை காண முடியும். தீவிர வெவ்வேறான களங்கள் இருந்தாலும் எழுத்தாளர் தனது ஆதார கேள்வியை தொடர்கிறாரா என்பதை முக்கியமான அளவுகோலாக கொள்வேன். அவ்வகையில் விஜய ராவணன் தனது கதைகளின் ஊடாக வரலாறு, கடந்த காலம் குறித்து விசாரணை செய்கிறார்.
புத்தாண்டுக்கு முந்தைய இரவில் கொண்டாட்டங்களில் பங்கேற்காமல் ‘அவன் மட்டும் ஒரு விடுபட்ட சொல்லை போல் தனித்திருந்த படி ’ புத்தகத்தை வாசிப்பவனாக அகமது அரீஃப் அறிமுகம் ஹன்னாவிற்கு அறிமுகம் ஆகிறான். நினைவுகளில் புதைந்து போன பழைய கருப்பு வெள்ளைப் புகைப்படங்களை சமகால வண்ண ஓவியமாக்குவதில் தான் எனக்கு ஆர்வம் அதிகம் என்கிறாள் ஹன்னா. அரீஃபுக்கு எல்லாமே கருப்பு வெள்ளைதான். இந்த இருமை வழியாக அவர்களின் ஆளுமைகளை கட்டமைக்கிறார். நிறங்கள் உயிர்ப்பான கடந்த காலத்தின் குறியீடாக கொள்ளலாம். ஹன்னா கருப்பு வெள்ளை புகைப்படங்களை கூட நிறமுடையதாக மாற்றுபவள். கடந்தகாலத்தை உயிர்ப்பிப்பவள். வரலாற்றை பெருமிதத்தோடு காண்பவள். அதை மீட்பவள் என்று கூட வாசிக்க இடமுண்டு. நிறங்களற்ற நிகழ்காலத்தில் வாழ்பவன் அரீஃப். நிறங்கள் நிறைந்த கடந்த காலத்திற்கு செல்ல விரும்பாதவன். அவனுக்கு அந்த வாய்ப்பு அகதி என்பதாலேயே மறுக்கப்படுகிறது. வண்ணங்களை நேசிப்பவளால் கருப்பு வெள்ளையை நேசிப்பவனை ஏற்க முடியாது என்கிறான்.
முடிவற்ற ஏணியில் ஏறி வானவில்லில் மோதி அதன் வண்ணங்களை பூசிக்கொண்டு கீழே விழும் சிறுவனை பற்றிய கதையை அரீஃப் ஹன்னாவிற்கு சொல்கிறான். நிறங்களற்ற வானவில் வானில் எஞ்சி இருக்கிறது. அரீஃப் தனது பணியிடத்திற்கு அழைத்து செல்லும் போது தான் இந்த கதையின் அர்த்தம் துலங்குகிறது. நூலகத்து தளங்களை சென்றடையும் ஏணிகள் முடிவற்ற ஏணியாக உருமாறுகிறது. புத்தகங்களின் வண்ணவண்ண அட்டைகள் வானவில்லாகிறது. புற உலகத்தின் வண்ணத்தை போர் பறித்துக்கொண்டது ஆகவே அவனுக்கு வெளியே வண்ணங்கள் இல்லை. ஆனால் புத்தகங்கள் வழி அவன் எல்லா நிறங்களையும் உணர்கிறான்.
விஜய ராவணன் கதைக்குள் சொல்லும் குட்டி நாட்டுப்புற கதைகள் மைய கதையை ஏதோ ஒருவகையில் வலுப்படுத்த உதவுகிறது. இந்த கதைகள் அளிக்கும் அடர்த்தியின் காரணமாக செவ்வியல் சிறுகதை வடிவிலலிருந்து மீறியதாக ஆகிறது. ‘ஆரஞர்’ கதையிலே கில்காமேஷ் குறிப்பும் இடம்பெறுகிறது. கில்காமேஷ்- என்கிடு போல அமெரிக்காவும் சதாமும் மோதி கொள்கிறார்கள் என்றொரு வரியை கொண்டு இந்த கதை சுட்டும் அரசியலை புரிந்து கொள்ளலாம். இதே கில்காமெஷ் கதை மரணத்தின் முன்பான கையறு நிலையை சுட்டுவதாக மாறுகிறது.
ஹன்னா தன்னிடமிருந்து சட்டென வெளிப்பட்ட மேலமை உணர்வுக்காக வருந்துகிறாள். அகதிகளை வெறுக்கும் உள்ளூர் காரர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அரீப்பின் சொற்கள் தீர்க்கமானது. ‘வரலாற்று அகராதியில் ‘அகதி’ என்ற வார்த்தைக்கு மட்டும் பொருள் எப்போதும் மாறிக்கொன்டே இருக்கும்.’ நிறம் நோக்கும் திறனிழந்த அகதிக்கு ஜெர்மனியும் ஈராக்கும் ஒன்றுதான் என சொல்லும்போது அவன் நாடு திரும்பினாலும் கூட அகதி தான் என பொருள்படுகிறது. அரீஃபின் சிறுவயது நினைவுகள் நிறங்களாலானவை. குண்டு வெடிப்பில் அவன் பார்வை திறனை இழக்கிறான்.அகதிகள் பண்பாட்டை அழிக்க வந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் இந்த அகதிகள் உருவாக்கத்தில் வளர்ந்த நாடுகளின் பங்கையும் பொறுப்பையும் சேர்த்தே பேச வேண்டியிருக்கிறது.
‘அகாலம்’ ஒரு டிஸ்டோபிய கதை. புகைப்படங்களை அரசு தடை செய்கிறது. கடந்தகாலத்தை அழிப்பது பெரும் அழித்தொழிப்பு என்று கருதுபவர்களுக்கும் கடந்த காலம் பெரும் சுமை அதை விட்டொழிக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கும் இடையேயான முரண் தான் கதை. முந்தைய கதையின் பேசு பொருளின் தொடர்ச்சி. சுவாரசியமான விவாதங்களை உருவாக்குகிறார்.
‘நமக்கும் கடந்த காலத்திற்குமான சரடை மெல்ல அறுப்பது.’ என்றால் ‘எல்லோருக்கும் கடந்த காலம் பொக்கிஷம் இல்லை.’ என்கிறான்.
‘வரலாறு தெரியாதபோது மனிதன் கீழ்ப்படியும் இயந்திரம்’ என எச்சரிக்கும் போது ‘வரலாறு என்பதே எழுதப்படும் பேனாவை பொறுத்தது தானே’ என வரலாறை நிராகரிக்கிறான். வரலாற்று நூல்கள் தடைசெய்யப்பட்டதை எதிர்க்கும் போது ‘திறக்கப்படாத எல்லை கதவுகளில் போக்கிடமற்றவர்கள் முட்டி நின்றபோதெல்லாம் உங்கள் வரலாற்று நூல்கள் எந்த உண்மையை பேசிக்கொண்டிருந்தன?’ என கேள்வி கேட்கிறான். ‘இனிமையான கடந்த காலத்திற்காக’ ஏங்கும் போது ‘கோல்டன் டேஸ் என்பவை நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது தானே’ என மறுக்கிறான். ‘தனிமனித சுதந்திரம் அடியோடு ஒழியும்’ என பயம்கொள்ளும்போது ‘நீ சிலாகிக்கும் வரலாறு என்பதே அகதிகளையும் அடிமைகளையும் உற்பத்திசெய்ய உதவும் புனைவுதான்’ என பதில் சொல்கிறான்.
இடையிடையே கதைசொல்லியின் வலிமிகுந்த கடந்தகாலம் நினைவு கூறப்படுகிறது. அம்மா அவனை கைவிட்டு சென்ற நினைவுகள் வருகிறது. புகைப்படங்கள் நாம் மறக்க முயலும் பொழுதுகளின் தடயங்கள் தான் என நம்புவதால் அம்மா குழந்தையாக அவனை தூக்கி வைத்திருக்கும் படத்தில் அவளுடைய பரிதவிப்பு தொந்தரவு செய்கிறது. கடந்தகால படிக்கட்டில் நின்று கொண்டு அவனையும் இறங்கிவர அழைக்கிறாள் என அதை கிழித்து போடுகிறான்.
வன்முறையும் அழித்தொழிப்பும் தான் வரலாறு. போரும் பழிவாங்கலும் தான் மானிட சரித்திரம் என சொல்கிறது. வரலாற்றின் கொடுங்கோன்மை அல்லது பயனின்மையை ஏற்கும் அவன் நினைவுகள் விஷயத்தில் தடுமாறுகிறான். நினைவுகள் தான் நாம். வரலாற்று நூல்கள் ஆய்வு கட்டுரைகள் ஆவணங்கள் சரித்திர புனைவுகள் தடை செய்யப்படுகிறது. அவனுக்கு பிடித்த, நெருக்கமான புத்தகத்தை எரிக்கிறான். ஆனாலும் அதில் புதைத்து வைத்திருந்த புறா இறகை தீயிலிருந்து மீட்கிறான். வரலாற்றிலிருந்து அந்தரங்கமான நினைவை மீட்பது. கூட்டு நினைவுதானே வரலாறு. அப்படியான பிரித்தல் சாத்தியமா என்றொரு கேள்வியும் எழுகிறது. அடுக்ககத்தில் அடிபட்ட புறாவை காண்கிறான். புறா அவனது நினைவுகளுக்கான குறியீடாகிறது. அதை பெட்டிக்குள் வைத்து பராமரிக்கிறான். பறக்க யத்தனிக்கும் சிறகுகள் அட்டைப்பெட்டியின் மூலைகளில் முட்டிமோதுகிறது. வெளியே சென்று விட்டு திரும்பும் போது, துர்நாற்றம் வீசுகிறது, அறை முழுவததும் புறா இறகுகள் பிய்ந்து கிடக்கிறது. பூனை புறாவின் தலையை கொய்து கொன்று விடுகிறது. பூனையை அரசாக பார்க்க முடியும். அதற்கு வரலாறு நினைவு என எந்த பாரபட்சமும் இல்லை. அதனளவில் எல்லாமே அழிக்கப்பட வேண்டியது தான். புகைப்படங்கள் நீக்கப்பட்ட சுவரில் மர பறவைகளை மாட்டுகிறான். ஜன்னல் கம்பிகளின் நிழலில் அவை வானளாவிய கூண்டுக்குள் பறப்பதாக தோன்றுகிறது. பறக்கும் பறவைகள் கடந்த காலத்தின் எடையில்லாத நிகழ்த்தருணத்தின் குறியீடு. சென்ற கதையை போலவே கடந்த காலத்திற்கு செல்ல இவனும் விரும்பவில்லை. அரவணைக்கும் மடி இருந்திருந்தால் அவனுக்கும் கடந்த காலம் இனித்திருக்கும். இந்த கதையின் பேசு பொருளையொட்டி இரண்டு கதைகள் நினைவுக்கு வந்தன. பெருந்தேவியின் ‘ஒருகாலத்தில் குறுங்கதை’ நிகழ்காலத்திலிருந்து தப்பிக்க கடந்த காலத்திற்குள் புதைத்துக்கொண்டு அழியும் சித்திரத்தை அளிப்பது. இன்னொரு கதை சித்துராஜ் பொன்ராஜின் ‘கயிற்றரவு.’ நினைவுகளின் தொகுப்பு தான் வரலாறா? ஆம் எனில் நினைவுகளை மாற்றினால் வரலாறு மாறுமா? என்றொரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.
மூன்றாவது கதை ‘இரட்டை இயேசு.’ கொரோனா காலத்து கதை. இந்த கதையிலும் ஒரு தொன்ம கதை சொல்லப்படுகிறது. விஜய ராவணனின் பெரும்பாலான கதை நிகழ்வதில்லை. சொல்லப்படுகிறது. இது அதன் எல்லையாகவும் தனித்துவமாகவும் கொள்ளலாம். காலன் அருகமர்ந்து இருப்பது போல கனவு காண்கிறான்.
கதைசொல்லி பத்தாவது படிக்கும்போது தற்கொலை முயற்சி செய்தவன் ஆனால் இப்போது மரணத்தை அஞ்சுகிறான். ‘சில நேரங்களில் மரண பயம்தான் வாழ வைக்கிறது’ என்றுணர்கிறான். ‘மரணத்தின் முகம் எப்படி இருக்கும் என்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று தொடக்கத்தில் துணிவுடன் சொல்லும் ஐரோப்பியர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். மனைவி பிலிப்பைன்ஸ் நாட்டவர், வியட்நாமுக்கு விசா உள்ளது. ஆனால் இத்தனை நாடுகள் இருந்தும் அனாதையாக உணர்கிறார். தன் நாட்டுக்கே திரும்பும் முடிவுக்கு வருகிறார்.
ஐரோப்பியர் சொல்லும் கதையில் சவப்பெட்டி செய்பவன் தனது வாழ்வாதாரம் பெருக வேண்டும் என கர்த்தரிடம் வேண்டுகிறான். காலரா கொத்துக் கொத்தாக உயிர்பலி கொள்ளும் போது அவனது பிரார்த்தனையின் பலனாகத்தான் அது நிகழ்வதாக எண்ணி கொள்கிறான். அவனது குடும்பமே இறந்து போனாலும் நல்லடக்கத்திற்காக சவ பெட்டிகளை செய்து கொண்டே இருந்தான். இனியும் சவப்பெட்டிகளை செய்யக்கூடாது என தீர்மானிக்கிறான். தான் செய்வதாலேயே சாகிறார்கள் என எண்ணுகிறான். தனக்கான சவப்பெட்டியை மட்டும் ரகசியமாக செய்து கொண்டான். சவப்பெட்டி இல்லாமல் நல்லடக்கம் நிகழவில்லை. அரசின் ஆணையை மீறியதற்காக மரண தண்டனை வழங்கப்படுகிறது. தனக்காக தானே செய்த சவப்பெட்டியை முதுகில் சுமந்தபடி நடந்து வருகிறான். ஊரின் ஒட்டுமொத்த பாவத்தையும் அவனே சுமந்தான். இயேசுவை போல. சிலுவையில் தொங்கும் இயேசுவின் உருவத்திற்கு பின்பக்கம் அறையப்படுகிறான். சிலுவை எடை தாளாமல் விழவிருந்த நிலையில், மக்கள் சாபத்தை அஞ்சும்போது, சிலுவையிலிருந்து தேவகுமாரன் உயிர்த்து எழுகிறார். ஊரை காக்கிறார். சிலுவையில் ஒருவர் இருந்தால் போதும் என்று எண்ணினாரா? ஊரை காத்த தேவகுமாரன் அவனை காக்கவில்லை. மனிதன் ஒரு பக்கமும் மீட்பர் மறுபக்கமும் எனும் சிந்தனையே வினோதமாக இருந்தது. இந்த படிமத்தை என்னால் துல்லியமாக கதை தருணத்தில் பொருத்தி பார்க்க இயலவில்லை. இந்த பூடகமே வசீகரமாக உள்ளது. மனிதன் தன்னை பற்றி மிகையாக மதிப்பிட்டு கொள்கிறான். இயற்கையின் திட்டங்களுக்கு அவன் பொறுப்பேற்க முடியுமா? மனித ரத்தம் தேவனை எழுப்புமா? கிறிஸ்தவ இறையியலில் போலி கிறிஸ்துவை இகழ்ச்சியுடன் காண்கிறது. அவனுக்கு சிலுவை தான் தண்டனை. ஒருவகையில் அவன் சிலுவையில் ஏறியதால் தான் கிறிஸ்து உயிர்த்து எழுந்து ஊரை காக்கிறார். தொற்றுநோய் காலத்து களச்செயல்பாட்டினர், முன்கள பணியாளர்கள்- குறிப்பாக மருத்துவர்களை இன்னொரு இயேசுவாக கற்பனை செய்து கொண்டேன். இயேசுவே காப்பவரும் அழிப்பவரும். அழிவுக்கு பின்னே தானே காக்க முடியும்.
‘என்றூழ்’ ஒரு அறிவியல் புனைவு. சூரியனில் செயற்கை நுண்ணுணர்வு ரோபோவை கொண்டு செய்ய முற்படும் ஆய்வு தோல்வி அடைகிறது. சாரா எனும் எட்டாம் தலைமுறை ரோபோவை ஆபிரகாம் வாங்குகிறார். வருங்காலத்தில் நிகழும் கதை என்பதால் விரிவாக தொழில்நுட்பங்களை விவரிக்கிறார். உலகத்தை கட்டமைப்பதில் புதிதாக ஒன்றும் இல்லை. பறக்கும் கார்கள் போன்ற வழக்கமான இயந்திரங்கள் தான். அலுவலகத்தில் மூவர் மட்டுமே மனிதர்கள். பிற அனைவரும் ரோபோக்கள். செயற்கை நுண்ணுணர்வு நம்முள் எழுப்பும் ஆதாரமான கேள்வி என்பது மனிதனாக இருப்பது என்றால் என்பதுதான். அண்மையில் மாலனின் ‘வித்துவான்’ நம்பி கிருஷ்ணனின் ‘இறைவர்க்கோர் பச்சிலை’ ஆகிய கதைகளை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். கதையில் விஜய ராவணன் எழுப்பும் வரையறைகளை நோக்கலாம். ரோபோக்களிடம் பொய் சொல்ல முடியாது. ரசனை உணர்வு மனிதர்களுக்கானது மட்டுமா? சாரா ரசனை உணர்வை வெளிப்படுத்தும் போது அதிர்கிறார். மனிதர்களை போல இயந்திரத்திற்கு வாழும் இச்சை உள்ளதா? சாரா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறாள். குடும்பமும், குழந்தைகளும் கூட அதன் பொருட்டு தான் தேவைப்படுகிறது. இன்னொரு கோணத்தில் இருந்து நோக்குவதாக இருந்தால், சூரியனை அடையும் திட்டம் தோல்வி அடைந்ததற்காக வெறுக்க படுகிறாள். உலகை மாற்றும் இயந்திர- மனித கூட்டு குழந்தையை உருவாக்க விரும்புகிறாள் என்று பொருள் கொள்ளலாம். இயந்திரங்கள் ஒன்று போலவே, தனித்துவம் என்று ஏதேனும் உண்டா? சாரா தனித்துவத்தை வெளிப்படுத்துகிறாள். உயிர் நேசம், பாசம், பந்தம் போன்றவை மனிதர்களின் தனித்தன்மையா? சாராவும் ஏங்குகிறாள்.
கதையில் அண்டார்டிகா பனிக்கட்டிகளை பாலைவன தேசங்களுக்கு திருப்புவது பற்றிய ஒரு சிறிய பகுதி வருகிறது. இயற்கையின் போக்கில் விடுவதே சரி என ஆபிரகாம் சொல்கிறான். ஆனால் மனித இனத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு இயற்கை விரோதமாக இருந்தாலும் இவை காலத்தின் தேவை என்று பதில் உரைக்கிறது. சாராவின் பிள்ளை பேறு சார்ந்த விழைவையும் ஆபிரகாமின் தயக்கத்தையும் இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக காண வேண்டும். ‘உன்னையும் என்னையும் போல அவளும் இயற்கையின் அங்கம்- உயிராக அங்கீகரித்தல் எது மனிதன்? எது இயந்திரம்? இயற்கைக்கு இருவருமே பிள்ளைகளா? இயற்கைத்தாய் ஒரு முலையில் மனிதனுக்கும் இன்னொரு முலையில் இயந்திரத்துக்கு தாய்ப்பால் ஊட்டுகிறாளா? அப்படியானால் இங்கு எல்லா நியதிகளும் இருவருக்கும் பொதுதானே.’ என்று யோசிக்கிறான். செயற்கை நுண்ணுணர்வு சார்ந்து நான் வாசித்த இறைவர்க்கோர் பச்சிலை தொடங்கி டெட் சியாங்கின் கதைகள் வரை ஏறத்தாழ இதே முடிவை நோக்கி வருவதை காண்கிறேன். விலக்கி நோக்காமல் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக நோக்குவது.
அறிவியல் புனைவில் மனிதன் எதிர் இயற்கை எனும் இருமை மிக முக்கியமான பேசுபொருள். இந்த இருமையே கூட கொஞ்சம் அபத்தம் தான். மனிதனை இயற்கைக்கு எதிராக நிறுத்த முடியுமா என்ன? அவனும் அதன் ஒரு பகுதிதான். சமயங்களில் அவனது விழைவுகளுக்கு ஒத்துழைப்பு நல்குகிறது சமயங்களில் நல்குவதில்லை. நவீன இலக்கியத்தின் முதல் அறிவியல் புனைவாக கருதப்படும் மேரி ஷெல்லியின் ‘பிரான்காய்ன்ஸ்ட்டின்’ தொடங்கி இயற்கை- மனிதன் முரண் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அறிவியல் புனைவுகள் அறிவியலின் ஆபத்துகளையே தொடர்ந்து பேசிக்கொண்டு உள்ளது. மனிதனின் சுயேச்சையின் மீதான ஐயம் பைபிளின் தடுக்கப்பட்ட கனியை உண்பதிலிருந்தே தொடங்குகிறது. எதிர் அறிவியல் புனைவு அத்தனையிலும் இந்த உணர்வு செயல்படுகிறது. இந்த கதையிலும் ஒரு தொன்ம கதை சொல்லப்படுகிறது. பூலோக சக்கரவர்த்தியின் மகளை சூரியன்களை அழிக்கும்படி கடவுள் பணிக்கிறார். ஒரேயொரு சூரியனை மட்டும் அதன் பிரம்மாண்டத்தில் மயங்கி வீழ்த்தாமல் விடுகிறாள். கடவுள் அவளுக்கு கன்னி தன்மையை இழக்காமல் பிள்ளை பெற்றுக்கொள்ளும் வரத்தை அளிக்கிறார். அவள் சிருஷ்டித்தவை தான் இந்த கணக்கற்ற நட்சத்திரங்கள். சாராவின் கதையோடு இந்த தொன்ம கதை ஊடாடுகிறது. சாராவின் பிள்ளைப்பேறு கோரிக்கையை ஏற்க மறுக்கிறான். இந்த கதையின் முடிவு அபாரமானது. அவனுடைய துணையின்றியே பிள்ளைப்பேறுக்கான வழியை கண்டடைந்த்துவிட்டாள் என்பதால் அவள் மானுட பெண் தோற்றத்தில் இருக்க வேண்டிய தேவையில்லை என்று உணர்ந்து உலோக நிர்வாணத்தில் வயிற்றை தடவியபடி சூரிய ஒளியில் கிடக்கிறாள். அல்லது குந்தியை போல் நேராக இயற்கையின் வடிவமான சூரியனிடம் தனக்கு பிள்ளை வரம் வேண்டுகிறாள் என்றும் வாசிக்க முடியும்.
‘இன்னொருவன்’ முட்டை மனிதனை பற்றி சொல்ல தொடங்குகிறது. வீடு தேடி அலைபவனுக்கு மிக குறைந்த வாடகையில் நகரின் மையத்தில் வீடு கிடைக்கிறது. அந்த வீட்டை சுற்றி மர்மம் கட்டமைக்கப்படுகிறது. நட்சத்திரம் கருந்துளைக்குள் காணாமல் போவது போல, முட்டைக்குள் விழித்து எழுகிறான். வேத தொன்மம் ‘ஹிரண்ய கர்ப்பம்’ என சொல்கிறது. பிரபஞ்சம் ஒரு முட்டையிலிருந்து புறப்பட்டதாக. பூட்டப்படாத கூண்டிற்குள் அடைப்பட்டு கிடக்கிறான். முயன்றால் திறந்து வெளியேறிவிட முடியும். தன்விருப்பின் பேரில் மனிதன் கூண்டுக்குள் தன்னை அடைத்து கொள்கிறான். உருவகங்கள் கொண்ட கதைகள். கண்ணாடிக்குள் நுழைந்து கண்ணாடிகளால் ஆனா உலகிற்குள் நுழைகிறான். கண்ணாடி பேழைக்குள் வெவ்வேறு ‘நான்’களோடு உரையாடுகிறான். சிதறிய ‘நான்’கள் சேர்ந்து வெடிக்கிறது. விழித்து எழும்போது முழுமையாக உணர்கிறான். பேழைக்குள் மட்டும் சுதந்திரமான குரலை கேட்கிறான். கடிகார முட்களுக்கு அஞ்சி ஓடவேண்டாம் என்பதே போதுமானதாக உள்ளது. அங்கே எவருடைய பெயரும் தெரிந்துகொள்ளவில்லை. அடையாளமற்ற இருப்பு. அங்கே தூவும் அழிவதும் இல்லை. எனினும் அந்த வாழ்க்கையும் அலுக்கிறது. அதையும் சிறையாக உணர்கிறான். என்றூழ் கதையில் சாரா உதிர்க்கும் ஒரு வசனம் தான் இந்த கதையின் சாரம் என்று புரிந்து கொள்கிறேன். ‘மனிதன் ஒரு விசித்திரமான சமூக பிராணி, குழுவாய் இருக்கும்போது தனிமையை விரும்புவான். தனித்து விடப்பட்டதும் துணைக்காக ஏங்குவான்.’ அன்றாடம் அலுப்பாக இருக்கிறது. தப்பிக்க மனம் ஏங்குகிறது. ஓய்வும் தனிமையும் அலுக்கிறது. அன்றாடத்திற்கு மனம் ஏங்குகிறது. இந்த சிக்கலை பேசுவதாக புரிந்து கொண்டேன்.
தொகுப்பின் இறுதி கதை ‘தங்க மீன்’ போர் களத்தில் எதிரெதிர் தரப்பில் இருக்கும் ராணுவ வீரனும் போராளியும் உரையாடுவது தான் கதை. கூறிய விதம், பேசு பொருள் சார்ந்து சற்று பழகிய தன்மை இக்கதைக்கு. தங்க மீன்களை பிரசவிக்கும் தனியொருத்தி. அவளது மர்மமான வசீகரம், இவையெல்லாம் மெலீனா திரைப்படத்தை எனக்கு நினைவூட்டியது. பதின்ம வயதில் அக்கா மீது ஏற்படும் இனம் புரியாத ஈர்ப்பு என்பதும் தமிழில் நிறைய எழுதப்பட்ட களம் தான். எனினும் இந்த எல்லைகளை தாண்டி தங்க மீன் என்பதை வலுவான படிமமாக வளர்த்தெடுத்துள்ளார். போர் களத்தில் அழகுக்கும் ரசனைக்கும் என்ன வேலை? கலை தான் போருக்கு எதிராக இருக்க முடியும் என்று எண்ணி கொண்டேன். ‘என்றூழ்’ கதையும் ஏறத்தாழ இதே தரிசனத்தை கொண்டுள்ளது. கலை ரசனை அளிக்கும் கூருணர்வு மீதான நன்னம்பிக்கை. சண்டை மூளாத சிறு நிலம், அவளின் படத்துக்கு பத்து மீன் கடையாக தான் இருக்கும். வண்ண மீன்கள் சாந்தமான சூழலை உருவாக்க. அவளது மீன் எதுவும் போரில் இறப்பதில்லை. இரண்டு நியாயங்கள் மோதும் போது புனைவு எழுத்தாளருக்கான வேலை தொடங்குகிறது. போராளியும் ராணுவ வீரனும் ஒரே பாலியத்தின் சுனையில் நீரருந்த தான் முயல்கிறார்கள். தங்களது கடந்தகாலத்தை மீட்டு எடுக்க போராடுகிறார்கள். ஒருவகையில் கடந்த காலத்தை மீட்டெடுப்பதன் வன்முறையை விஜய ராவணன் கதைகள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது. போராளியின் தங்க மீன்கள் சிறுவனாக இருந்த ராணுவ வீரனிடம் சென்று சேரும்போது கூழாங்கற்களை நிரப்ப முடியாமல் தோட்டா ரவைகளை கொண்டு மீன்தொட்டியை அலங்கரிக்க தொடங்குகிறான் என்பதாலா என்னை வெகுவாக தொந்தரவு செய்தது. போராளியும் ராணுவ வீரனும் ஒரே நிறுவனத்தின் துப்பாக்கியை கொண்டு எதிரெதிர் நின்று போர் புரிகிறார்கள்.
தமிழுக்கு அந்நியமான புதிய உலகை உயிர்ப்புடன் சித்தரித்த வகையில் விஜய ராவணன் முக்கியமான எழுத்தாளராக ஆகிறார். உலகளாவிய அரசியல் விஷயங்களை கருப்பொருளாக கொள்ளும்போது பிரசாரம் ஏதும் இல்லாமல் சரியான செல்திசையில் கதைகளை அவரால் கொண்டு செல்ல முடிகிறது.
No comments:
Post a Comment