Monday, February 5, 2024

புவியெனும் கொலைக்களம் – கர்ட் வோன்னுகாட் ‘ஸ்லாட்டர் ஹவுஸ் 5’ சித்திர நாவலை முன்வைத்து


 


'யாவரும்' சித்திர நாவல் சிறப்பிதழில் வெளிவந்தது. 

சிறுவயது முதல் படக்கதைகள் காமிக்ஸ்கள்  வாசித்து வந்திருந்தாலும் சித்திர நாவல் உலகிற்கு நான் புதியவன். அவற்றை வாசிக்க முதல் தடை அவற்றின் விலை, மேலும் அவை சிறுவர்களுக்குரியது எனும் மனப்பதிவு. எழுத்தாளராகச் சொற்களின் இடத்தை காட்சிகள் எடுத்துக்கொள்வது என்பது சொற்களின் போதாமையைச் சுட்டுவது எனும் எண்ணம் கூட எனக்கு உண்டு. எனக்கு காணக் கிடைத்த பெரும்பாலான கிராஃபிக் நாவல்கள் வெகுமக்கள் ரசனைக்குரிய மிகு புனைவாகவே இருந்தது. ஆகவே எப்போதாவது யதார்த்தம் அலுக்கும்போது சாய்ந்துகொள்ளும் சாய்மானம் எனும் எண்ணமே எனக்கிருந்தது. சிங்கப்பூர் வாசத்தின்போதுதான் நான் சித்திர நாவல்களை வாசிக்க தொடங்கினேன். வாசித்துப் பார்க்க வேண்டும் எனும் ஆர்வம், அவை நூலகங்களில் இலவசமாக வாசிக்கக் கிடைத்தது என்பவைதான் காரணங்கள். சித்திர நாவல்கள் வாசிப்பதில் உள்ள பெரும் சவால் நல்ல நாவலை / நமக்கான நாவலைக் கண்டடைவதுதான். ஏனெனில் சந்தையில் பதின்ம வயதினருக்கான சித்திர நாவல்கள் காமிக்ஸ்கள் அநேகம் காணக் கிடைக்கின்றன. சித்திர நாவல்கள் மெல்ல என்னை ஈர்த்துக் கொண்டன. ஒவ்வொரு முறை நூலகம் செல்லும்போதும் அங்கேயே ஒன்று அல்லது இரண்டு நாவல்களை வாசித்துவிட்டு வீடு திரும்புவதை வழக்கமாக்கிக் கொண்டேன். சித்திர நாவல்கள் வாசிக்கவே நூலகம் செல்வது எனும் நிலையை நோக்கி வெகு விரைவிலேயே நகர்ந்தேன்.




இலக்கியம் போலவே சித்திர நாவல்களிலும் பொழுதுபோக்கு படைப்புகள் தீவிர இலக்கிய படைப்புகள் எனும் பகுப்பு உண்டு. ஓவியம் வழி கதை சொல்லுதல் என்பது ஒன்றும் நமக்கு புதிதல்ல. சித்தன்னவாசல் ஓவியத்தில் மலர் கொய்யும் துறவியை பெரிய கதையின் பகுதியாக நம்மால் காண முடியும். சித்திர நாவலை திரைக்கதையுடன் ஒப்பிடலாம் எனத் தோன்றுகிறது. திரைப்படம் அசையும் காட்சிகளால் ஆனது எனில் சித்திர நாவல் உறைந்த சட்டகங்கள் கொண்ட ஓவியங்களால் ஆனது. ஓவியம் காட்சியை மட்டும் காட்டுகிறது பொருள்கொள்ளுதலை முழுக்க நம் கற்பனையில் நிகழ்த்த சொல்கிறது. நாவல் பொருள்கொள்ளுதலை எளிதாக்குகிறது ஆனால் காட்சியை கற்பனைக்கு உரியதாகச் சொல்கிறது. சித்திர நாவல் நாம் இதை காண வேண்டும் என நம் கற்பனைக்கு திண்ணமான வழிகாட்டுதலை அளிக்கிறது, திரைப்படம் நாம் இதைக் காண வேண்டும், அதை இன்ன வேகத்தில் தான் காண வேண்டும் என்றும் சொல்கிறது. சித்திர நாவலை திரைப்படத்திற்கும் நாவலுக்கும் இடையேயான ஒரு வடிவமாக வரையறை செய்ய  முடியும்.


ஓவியங்களை அதிகமாகப் பயன்படுத்தி சொற்களைத் துணைக்கழைத்து கதை சொல்லும் முறை எனச் சொல்லலாம். ஓவியத்திற்கு எது தேர்ந்தெடுக்கப்படுகிறது? அது எந்த அளவிற்கான சட்டகத்தைப் பயன்படுத்துகிறது? சில ஓவியங்கள் முழு பக்கத்தை எடுத்துக்கொள்ளலாம். அந்த ஓவியத்திற்கான முக்கியத்துவம் என்ன? இப்படியாகச் சித்திர நாவல் காமிக்ஸிலிருந்து வேறுபடுவதை கவனிக்கலாம். முக பாவனைகள், உடல்மொழிகள் எளிதாக கடத்தப்படுகின்றன. இப்படி தனக்கென சில பாதைகளை வகுத்துக்கொண்டு, தனக்கென சில இலக்கணங்களை உருவாக்கிக்கொண்டு சித்திர நாவல்கள் முன் நகர்கிறது.

ராணுவவீரனின் உடை 



ஓர் இலக்கிய நாவல் சித்திர நாவலாக உருமாற்றம் அடைந்தால் எப்படி இருக்கும்? அமெரிக்க எழுத்தாளரான கர்ட் வோன்னுகாட்டின் ‘ஸ்லாட்டர் ஹவுஸ் 5’ சித்திர நாவலாக வடிவம் பெற்றுள்ளது. ரியான் நார்த் எழுத்தாக்கத்தில், ஆல்பர்ட் மான்டிஸ் சித்திரங்களுடன் 2020 ஆம் ஆண்டு வெளியானது. ஓர் இலக்கிய நாவல் சித்திர நாவலில் என்னவாக உருமாற முடியும் என்பதற்கு இந்நாவல் மிகச்சிறந்த உதாரணம்.  ரியான் நார்த்தால் அசல் நாவலாசிரியரின் பகடியையும் பார்வையையும் அபாரமாகக் கொண்டுவர முடிந்திருக்கிறது. தனக்கேயுரிய சுதந்திரத்துடனும் துடுக்குத்தனத்துடனும் நாவலுக்கு சித்திர வடிவத்தை அளித்துள்ளார். உதாரணமாக நாவல் தொடங்கும் இடத்திலேயே இரண்டு வடிவங்களுக்கு இடையேயான ஒற்றுமையைச் சொல்கிறார், இரண்டும் ஒரே இடத்தில் தொடங்குகிறது, ஒரே இடத்தில் முடிகிறது என்கிறார். பின்னர் கதை மாந்தர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். துணைப் பாத்திரங்களின் இயல்புகளைச் சொல்கிறார். ஒவ்வொரு துணைப் பாத்திரங்களையும் மூன்று சட்டகங்களில் அறிமுகப்படுத்தும் உத்தியைக் கையாள்கிறார்.

வன்முறை சார்ந்த கற்பனையின் அதீத நாட்டம் தேசப்பற்றாகவும் வீரமாகவும் மடைமாற்றம் செய்யப்படுகிறது. 



நாவலின் மையம் பில்லி பில்க்ரிமின் வாழ்க்கையைச் சுற்றி நிகழ்கிறது. பில்லியின் காலக்கோடு என ஒரு சட்டகத்தை வரைந்துள்ளார். அவன் எப்போது பிறந்தான், எப்போது அவனிடம் சிலுவையில் அறையப்பட்ட இயேசு சிலை வந்தடைந்தது, எப்போது ராணுவத்தில் சேர்ந்தான், எப்போது போர்க்கைதியாக ஆனான், எப்போது மனநோயாளியாக ஆனான், பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான், வெற்றிகரமான கண் கண்ணாடி நிபுணராக திகழ்கிறான், அயல்கிரகவாசிகளால் கடத்திச் செல்லப்படுகிறான், பின்னர் தான் காலம் குறித்து அறிந்துகொண்டதை விளக்குகிறான். லயன்ஸ் சங்கத் தலைவராக இருக்கிறான், மரணமடைகிறான். பூமிவாசிகள் காலத்தை நேர்கோடாகக் காண்கையில் அந்நிய கிரகவாசிகளான ட்ராஃபல்டோர்காரர்கள் காலத்தை நான்கு நிலைகளில் காண்பவர்கள். அவர்களுடைய கோணத்திலிருந்து பில்லி ஒரே சமயத்தில் ஒரு இடத்தில் உயிருடன் கண்ணாடி நிபுணனாக இருக்கும்போது இன்னொரு இடத்தில் மரணமடைந்த சடலமாக இருக்கிறான். அவர்கள் கோணத்தில் மனிதர்களுக்கு மரணமே இல்லை. மரணம் என்பது எத்தனையோ செயல்பாடுகள் போல அதுவும் ஒன்று. அந்நிய கிரகவாசிகள் காலத்தை மலைத்தொடரைக் காண்பது போல காண்கிறார்கள்.



பில்லி எப்படியோ ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுகிறான். அவனுக்கு அதற்கான தகுதியோ விருப்பமோ இல்லை என்பதை அவனது நண்பர்கள் அவனுக்கு சுட்டிக்காட்டுகிறார்கள். ஜெர்மானியர்களின் போர்க்கைதியாக அவனும் அவனது நண்பன் ரோலாண்ட் வியரியும் முகாமிற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். சரியான காலணி கூட அணியாத பில்லி  பரிதாபகரமான நிலையில் உடன்வருகிறான். தலைக்கு தொப்பியோ கவசமோ கூட இல்லை. ரியான் நார்த் ரொலாண்டை அவனது முழு ராணுவ உடையில் ஒரு பக்கம் முழுக்கச் சித்தரித்து இருப்பார், எதிரியைப் பற்றி கையேடு, கிளர்ச்சியூட்டும் நிர்வாணப் படம், பருத்தி உள்ளாடை, அதற்கு மேலாக கம்பளி உள்ளாடை, அதற்கு மேலாகக் கம்பளி மேலாடை, அதன்மேல் ஸ்வெட்டர், ஜாக்கெட், கோட் தொடங்கி முக்கோணக் கத்தி வரை அவனது சகலத்தையும் அட்டவணைப்படுத்தியிருப்பார் நார்த். குரூரங்களின் மீதும் நாயக வாழ்வின் மீதும் அதீத ஈடுபாடு கொண்டவன் வியரி. பில்லியைப் பலமுறை காப்பாற்றியதாகச் சொல்லிக்கொள்வான். வியரியின் இந்த வினோதக் கோலத்தை கண்ட ஜெர்மானியர்கள் அவனிடமிருந்து காலணிகளைப் பிடுங்கி பில்லிக்கு கொடுப்பார்கள். அவனது காலணி பறிக்கப்பட்ட ஒன்பதாவது நாளில் காலில் புண் வந்து மரித்துப் போவான். அவனது மரணத்திற்கு காரணம் பில்லிதான் எனச் சாகும் தறுவாயில் சொல்லிவிட்டு செல்வான். அப்போது உடனிருந்த பால் லாசரோ அவனுக்காக பில்லியைக் கொன்று பழி தீர்ப்பதாக உறுதி எடுத்துக்கொள்வான். அதை இறுதியில் நிறைவேற்றவும் செய்வான்.

பில்லி வேற்றுகிரக வாசியை சந்தித்து உரையாடி ஞானம் பெறுகிறான். மனிதனுக்கு மரணமே இல்லை  கண்டடைகிறான். 


இந்த நாவலுக்கு ‘குழந்தைகளின் போராட்டம்’ அல்லது ‘மரணத்துடனான கடமையின் நடனம்’ எனப் பெயரிட்டுள்ளார். ஸ்லாட்டர் ஹவுஸ் போரை நிராகரிக்கும் நாவல். போரில் நியாயம் என்பது என்ன? உண்மையில் நாம் நினைக்கும் அளவிற்கு எதிரெதிர் தரப்புகள் வெவ்வேறானவையா? ட்ரெஸ்டன் நகரத்தின் மீதான அமெரிக்க தாக்குதலின் பின்புலத்திலிருந்து இந்தக் கேள்விகளை எழுப்புகிறார். நாவலின் மையமான பேசுபொருள் மனிதனுக்கு சுயத்தேர்வு என்று ஏதேனும் உண்டா? அப்படி ஏதுமில்லை என அன்னியகிரகவாசிகளின் வழியாக அறிந்துகொள்கிறான் பில்லி. அப்படியானால் நாம் விதியின் அல்லது காலத்தின் கைப்பாவைகள் தானா? தனக்கென எதையும் வகுத்துக்கொள்ள முடியாத, எல்லாவற்றிற்கும் பிறரை சார்ந்திருக்கும் குழந்தைகளின் நிலையிலிருந்து நாம் போரிட்டோம், அவை தவிர்க்க முடியாதது ஆகவே நிகழ்கிறது. ட்ராபல்டோர்வாசிகள் பிரபஞ்சம் எப்படி அழியும் என்பதை விளக்குகிறார்கள், அவர்களில் ஒருவர் ஒரு சுவிட்சை தவறாக இயக்க எல்லாம் அழிகிறது, பில்லி ‘அப்படியானால் அதை நீங்கள் தடுக்கலாமே?” என கேட்பான். இல்லை நாங்கள் அதை அனுமதிப்போம், பிரபஞ்சம் முந்தியும் அழிந்தது, பிறகும் அழியும் அதை எதற்கு தடுக்க வேண்டும்!’ என்பார்கள். விமான விபத்திலிருந்து தப்பிப் பிழைத்த ஒரேயொருவனாக பில்லி மருத்துவமனையில் இருக்கும்போது அவனருகே அமெரிக்க ஜெனெரல் அதே மருத்துவமனையில் படுத்திருப்பார். வெளியுலகிற்கு ட்ரெஸ்டன் குண்டுவெடிப்பு பற்றிய தகவலை மூடி மறைக்க முயலும்போது, நான் அங்கிருந்தேன் என பில்லி அவரிடம் கூறுவான், பேரழிவின் சாட்சியாக குழந்தைகளும் பெண்களும் மொத்தமாக வான்வழி தாக்குதலில் மரணித்ததை அவன் கண்களால் பார்த்திருப்பான். ஜெனெரல் அவனிடம் ‘அது தவிர்க்க முடியாதது’ என்பார். பில்லியம் ஆமோதிப்பான். கர்ட் வோனேனுகாட் மனிதர்களின் இந்தப் பொறுப்பற்ற தன்மையை இடித்துரைக்கிறார். உண்மையில் மனிதன் தனது சுயத்தேர்வு எனும் வாய்ப்பை தவறாக பயன்படுத்திவிட்டு காலத்தின் மீதும் விதியின் மீதும் பழிபோடுகிறான் என்பதே அவரது பிரதான குற்றச்சாட்டு. 


கல்லறை வாசகம் 


நாவல் முழுவதும் ‘இப்படியாக இது நடந்தது’ (So it Goes) எனத் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. நிகழ்வுகளின் தவிர்க்க முடியாத தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. உண்மையில் நமது தேர்வுகளின் விளைவுகளுக்கு விதியின்மீது பழி சுமத்துகிறோம் என்பதே நாவலாசிரியர் மனிதர்கள் மீது வைக்கும் குற்றசாட்டு. கில்கோர் எனும் வெளியுலகம் அறியாத அறிவியல் புனைவு எழுத்தாளர் கதைகளால் பில்லி மிகவும் ஈர்க்கப்படுகிறான். ட்ராஃபல்டோர்வாசிகள் மற்றும் அவர்களது காலக்கோட்பாடு கில்கோரின் காலக்கோட்பாடுகளுடன் நெருக்கமாக இருப்பதைக் காண முடியும். தனது மரணம் என்பது உண்மையில் மரணமல்ல, தன்னுடையது மட்டுமல்ல, எவருடைய மரணமும் மரணம் அல்ல, அவை புகைப்பட ‘போஸ்’ போல ஒரு நிலை மட்டுமே எனும் அறிதல் அவனுக்கு ஆசுவாசத்தை அளித்திருக்க வேண்டும். எஞ்சியிருப்பதன் துயரத்தையும் குற்ற உணர்வையும் மட்டுப்படுத்தியிருக்க வேண்டும். உண்மையில் இவை யாவும் பில்லி உலகில் தரித்திருக்க அவனது மனம் உருவாக்கிக்கொண்ட மாயைகள், சல்ஜாப்புகள் என உளவியல் கோணத்திலிருந்து வாசிக்க ஒரு இடமுண்டு. 

பில்லியன் வாழ்க்கை ஒரு காலக்கோடு. ஆனால் இது ஒரு நேர்கோடு அல்ல. ஒரே சமயத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 


ரியான் இந்தச் சித்திர நாவலை கர்ட் வோன்னுகாட்டின் மேற்கோள் ஒன்றுடன் தொடங்குகிறார். “ட்ரெஸ்டன் குண்டுவீச்சினால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை, என்னைத் தவிர, இந்த நாவலை எழுதிய வகையில் அங்கே செத்த ஒவ்வொருவரும் எனக்கு இரண்டு டாலரோ மூன்று டாலரோ ஈட்டித் தந்திருக்கிறார்கள்”. சுயமாக முடிவெடுக்கத் தெரியாத, எல்லோராலும் கைவிடப்பட்ட உயிரினமாகவே மனிதன் சித்தரிக்கப்படுகிறான். வாழ்க்கைக்கு எந்த அர்த்தமோ இலக்கோ இல்லை.  இனிய நினைவுகள் கொண்ட காலத்திற்கு துன்பம் வரும்போது திரும்பிச் செல்வதைத் தவிர வேறேதும் செய்வதற்கு இல்லை. வேற்று கிரகவாசிகள் பூவுலகிலிருந்து ‘மோண்டானா’ எனும் நீலப்பட நடிகையை கவர்ந்து வருகிறார்கள். அவளுக்கும் பில்லிக்குமான உடலுறவை ஆராய்கிறார்கள். அங்கு அவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது. பில்லி ‘காலத்தடையை’ கடந்தவனாக வாழ்கிறான். பில்லி எவ்வித லட்சியவாதமும் இல்லாதவன். பிறரை வென்று முன்செல்லும் திண்மையும் கூட  இல்லாதவன். அமெரிக்க நாஜியாக ஆகும் பாப் போல பச்சோந்தியும் அல்ல, அவனை எதிர்த்து குரல்கொடுத்து தேநீர் கோப்பையை எடுத்ததற்காகச் சுட்டுக்கொல்லப்படும் எட்கர் டெர்பி போல நாயகனும் அல்ல. பில்லி தன்னை ‘எவருமில்லாதவன்’ என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறான். லட்சியமற்று, எவருமில்லாதவனாக வாழ இங்கு இடமிருக்கிறதா என்பதே கேள்வி. ஷோபா சக்தியின் நாவல்களுடன் இந்தக் கேள்வியை ஒப்பிட்டு நோக்கலாம் என்றே தோன்றுகிறது.



வன்முறையின் மீதான நமது அதீத நாட்டத்தை சுட்டிக் காட்டுகிறார். நாயகத்தன்மையின் பேராலும் நீதியின் பேராலும் அவை நிகழ்த்தப்படுகின்றன. ரொலாண்ட் வியரி மனிதர்களைக் கொல்வதற்கு தானே சிந்தித்து உருவாக்கிய ஆகக் குரூரமான முறையை விளக்குகிறான். ஏறத்தாழ முக்கால் பக்கத்திற்கு இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. பாலைவனத்து எறும்பு புற்றுக்களுக்கு அருகே ஒருவனின் கைகால்களைப் பிணைந்து தேனை ஆண்குறி மற்றும் விதைப்பந்துகள் மீது ஊற்றிச் சாகடிப்பதே வியரி கண்டுபிடித்த முறை. பால் லாசரோ எல்லாவற்றையும் விட பழி தீர்ப்பதையே தனது வாழ்க்கைக்கான குறிக்கோளாகக் கொள்கிறான். தொந்தரவு செய்த நாய்க்கு விஷ உணவு கொடுத்துக் கொன்ற அனுபவத்தைப் பெருமையாகச் சொல்கிறான். யூதர்களின் உடல் கொழுப்பிலிருந்து உருவான மெழுகுவர்த்திகள் வெளிச்சத்தில் சிறை முகாம் ஒளிவிடுகிறது என்பது நம்மைக் கடுமையாகத் தொந்தரவு செய்கிறது. நாவல் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் பேசுகிறது.


பில்லிக்கு மிகவும் பிடித்த அறிவியல் புனைவு எழுத்தாளர் கில்கோர் கால இயந்திரத்தின் மூலம் கிறிஸ்துவைக் காணச் செல்லும் நாயகனைப் பற்றி நாவல் எழுதுகிறார். இயேசுவே பாலகனாக இருக்கும்போது தனக்கான சிலுவையை வடிவமைக்கிறார். உண்மையில் சிலுவையில் அறையப்பட்டுதான் இயேசு மரித்தாரா என அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறான். அவன் கொண்டுவந்த ஸ்டெதஸ்கோப் கொண்டு சிலுவையில் தொங்கும் கிறிஸ்துவின் நெஞ்சைப் பரிசோதித்து உறுதிசெய்து கொள்கிறான். மனித குலத்தின் பாவங்களுக்காக தன்னைத்தானே பலியிட்டுக்கொண்ட கிறிஸ்துவின் வாழ்க்கைச் செய்தி கைவிடப்படுவதன் துயரத்தை எழுதுகிறார். ட்ராஃபல்டோர்வாசிகள் இரண்டாம் பைபிளை உருவாக்கி மனிதர்களுக்கு அளிக்கிறார்கள். அப்போதும் கிறிஸ்து சிலுவையில் அறையப்படுகிறார், அப்போதும் மனிதர்களுக்கு சில உபதேசங்களைச் சொல்கிறார். கிறிஸ்துவுக்கும் கிறிஸ்தவத்துக்குமான இடைவெளியை நாவல் சுட்டிக் காட்டுகிறது. நமது வன்முறையின் வெளிப்பாடாகவே சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைக் காண்கிறார். ட்ரெஸ்டனின் கசாப்பு விடுதிக்குள் பதுங்கி உயிர்பிழைப்பார்கள் பில்லியும் அவனது சகாக்களும், நாவலின் தரிசனம் என்பது இந்த உலகத்தையே ‘ஸ்லாட்டர் ஹவுஸாக’ காண்பதுதான். போர் புனிதப்படுத்தபப்டுகிறது. மரணம் ‘உயிர்த்தியாகம்’ எனப் போற்றப்படுகிறது. இன்றைய சூழலில் அவற்றின் அபத்தத்தை நமக்கு உணர்த்தும் முக்கியமான படைப்பாகவே ஸ்லாட்டர் ஹவுஸ் சித்திர நாவலைக் கருத முடியும்.

No comments:

Post a Comment