Saturday, January 6, 2024

சிறுகதை வாசிப்பின் 41 விதிகள்

(சிங்கப்பூரில் சிறுகதை வாசிப்பது பற்றி புங்கோல் வட்டார நூலகத்தில் எடுத்த வகுப்பிற்காக தயார் செய்த குறிப்பு. மயிலனின் ' ஆகுதி' மற்றும் லதாவின் 'பச்சை நிற கண்களுடைய கறுப்பு பூனை'  ஆகிய கதைகளை விவாதிக்க எடுத்துக்கொண்டோம்.)  
சிறுகதை என்பது  சிறிய கதை அல்ல. பக்க அளவோ வார்த்தை எண்ணிக்கையோ அறுதியான வரையறை அல்ல. சிறுகதை என்பது ஒரு கதை கட்டுமானம். முடிவின் வழியாக திறந்து கொள்ளும் கதையமைப்பு. 


சிறுகதையை அணுகும்போது நாம் கருத்தில் கொள்ளவேண்டியவை 

 

 • கதை சொல்லி 
 • கரு 
 • தலைப்பு 
 • சொல்முறை 
 • படிமம் 
 • உரையாடல் 
 • விவரணை 
 • தரிசனம் – கண்டடைதல் 
 • அசல் தன்மை 
 • நுண்மை சிறுகதை வாசிப்பு- சில அடிப்படைகள்


 1. நிறைய வாசிக்க வேண்டும். 
 2. கடினமானதாக/ புரியாததாக இருப்பவற்றை அஞ்சாமல் வாசிக்க வேண்டும். 
 3. மீள மீள வாசிக்க வேண்டும். 
 4. கதையின் மையத்தை தொட்டு உணர வேண்டும். 
 5. நல்ல சிறுகதை பல்வேறு அடுக்குகள் கொண்டதாக இருக்கலாம். 
 6. முடிவிலிருந்து வேறொன்றாக திறந்து கொள்வதே நல்ல சிறுகதை.
 7. சிறுகதையின் முதன்மையான நோக்கம் தகவலை தருவது அல்ல. 
 8. சாரத்தை விட்டுவிட்டு தகவல்களை சுற்றி வரக்கூடாது. பழத்தை எறிந்துவிட்டு தோலை ஆராய்வது போல. 
 9. நம்பகமான உலகை படைத்து காட்ட முடிகிறதா என்பதே கேள்வி 
 10. வாக்கியய அமைப்பு - ஒருமை பன்மை, தன்னிலை படர்க்கை குழப்பம் இல்லாமல் இருக்கிறதா. 
 11. வாசித்த இலக்கியமும் நமது சொந்த வாழ்க்கை அனுபவங்களும் இலக்கியத்தை மதிப்பிடும் கருவிகள். 
 12. அதிர்ச்சி மதிப்பீடு சிறுகதையில் மலினமான உத்தி. 
 13. கதையில் ஒருமை உள்ளதா. 
 14. அசல்தன்மை உள்ளதா 
 15. பேசுபொருளை நேர்மையாக அணுகுகிறதா 
 16. கற்பனையை தூண்டுகிறதா 
 17. பொதுவாக சிறுகதைகளில் அதிக கதை மாந்தர்கள் இருக்கக்கூடாது. பெயராக கதைக்குள் வருபவர் கதையில் எதையோ நிகழ்த்த வேண்டும். 
 18. சிறுகதையோ, நாவலோ- அடிப்படை விதி- சொல்லாதே காட்டு. வளவளப்பு இன்றி கதையை காட்ட முடிகிறதா? 
 19. புற விவரணையை அக சலனத்தின் குறியீடாக ஆக்குகிறதா? 
 20. மனதையோ அறிவையோ ஆட்கொள்கிறதா?
 21. கவித்துவமாக இருக்கிறதா?
 22. உரையாடல் பேச்சு மொழிக்கு அருகில் இருக்கிறதா?
 23. மெல்லிய முரண்களை காட்டிவிட்டு நின்றுவிடுபவை நல்ல சிறுகதைகள் அல்ல.
 24. அனுபவத்தை எழுதுதல்  சிறுகதையாகாது. 
 25. நினைவேக்கங்கள்/நினைவுகள் சிறுகதையாகாது.
 26. பேசுபொருள் சிறுகதையின் தரத்திற்கான அளவுகோல் இல்லை. 
 27. என்ன சொல்கிறது என்பதல்ல எப்படி சொல்கிறது என்பதே இலக்கியத்தில் முக்கியம். 
 28. மனவோட்டம் தன்போக்கில் அலைபாய்கிறதா? அல்லது கதைக்கு பங்களிக்கிறதா?
 29. ஒரு கேலிச்சித்திரக்காரர் போல குறைந்த சொற்களில் கதை மாந்தரை துலங்க செய்கிறதா?
 30. முடிவு கதையின் ஒருமையை சிதைக்கிறதா வலுப்படுத்துகிறதா? 
 31. வாசக பங்கேற்புக்கு இடமளிக்கிறதா? எல்லாவற்றையும் தானே சொல்லிவிடுகிறதா?
 32. அதீத நாடகீய தருணங்களை தவிர்க்கிறதா? சிறுகதையில் இத்தனைக்கு எத்தனை இறுக்கமாகவும் செறிவாகவும் உணர்வு வெளிப்படுகிறதோ அத்தனைக்கு அத்தனை வாசகரை ஆழ்ந்து தொந்திரவு செய்யும். 
 33. தன்னகத்தே விமர்சன பண்பை கொண்டதாக இருக்கிறதா?
 34. இலக்கியம் அறிவு செயல்பாடுதான். எனினும் கலை மூளை செயல்பாடு எனும் எல்லையை மீறுவது. அத்தகைய பித்தும் அசல்தன்மையும் வெளிப்படுகிறதா? வடிவ ஒருமையை மீறி அவை வெளிப்படும்போது அதை கண்டுகொள்ளும் நுண்ணுணர்வு வேண்டும். 
 35. வடிவம் என்பது சிறுகதையை மதிப்பிட முக்கியமான கருவி, ஆனால் அது மட்டுமே முதன்மையான கருவியல்ல. 
 36. மேதையின் வடிவமீறல்களையும் அமெச்சூர்களின் வடிவ போதமின்மையையும் கண்டுகொள்ளும் நுண்ணுணர்வு வேண்டும். 
 37. இந்த பண்பு இருக்கிறதா அந்த பண்பு இருக்கிறதா என கவனித்து கவனித்து டிக் மார்க் போடவேண்டியதில்லை. 
 38. வாசிக்க வாசிக்க அனிச்சையாக நல்ல சிறுகதைகளை நம்மால் இனங்காண முடியும். 
 39. வாசகராக இலக்கியத்திற்கு முன் உங்களை திறந்து வையுங்கள். முன்முடிவுகளுடன் இலக்கியத்தை அணுகாதீர்கள். புரியவில்லை என்றால் ஒன்றும் பாதகமில்லை. எல்லாமும் எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் புரிந்துவிடாது. வாசித்த கதைகளை பிறருக்கு சொல்லுங்கள், விவாதியுங்கள். 
 40. பேசுபொருள், வெளிப்பாட்டுமுறை, சிந்தனை என எல்லாவற்றிலும் தேய்வழக்குகளை தவிர்க்கிறதா? 


41. சிறுகதை எழுதுவதிலும் வாசிப்பதிலும் நாம் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விதி - The golden rule is that there is no golden rule! நாம் பின்பற்றியே ஆகவேண்டிய பொன் விதி என ஏதுமில்லை. விதிவிலக்குகள் தான் கலையையும் கலைஞர்களையும் உருவாக்குகின்றன. ஆகவே திறந்த மனதுடன் உங்கள் முழு நம்பிக்கையை படைப்பிற்கு அளித்து வாசிக்க தொடங்கவும். வாசித்ததை விவாதிக்கும் தோறும் புரிதல் பெருகும். நமக்கு புரியாததால் மோசமான படைப்பாக இருக்க வேண்டியதில்லை. நமக்கு புரிகிறதாலேயே உன்னதமான படைப்பாக இருக்க வேண்டியதும் இல்லை. 


 

No comments:

Post a Comment