Thursday, January 5, 2023

சமகால சிறுகதைகளின் பரிணாமம் & பிற கட்டுரைகள் - முன்னுரை

 


2012- 2013 ஆண்டுகளில் ஆம்னிபஸ் என்றொரு இணைய தளத்தை நண்பர்கள் கிரி ராமசுப்பிரமணியமும் நட்பாஸும் தொடங்கினார்கள். அப்போது சமூக ஊடகங்களில் 365 நாட்கள் சவால் என்றொரு விஷயம் பிரபலமாக இருந்தது. கிரி 365 நாட்கள் 365 புத்தக அறிமுகங்கள் செய்யலாம் எனும் யோசனையை முன்வைத்தார். ஏழு நண்பர்கள, ஒவ்வொருவாரமும் ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்து எழுத வேண்டும். புத்தகத்தை வாசித்து தொகுத்துக்கொள்ளும் வழக்கத்தை அங்குதான் கற்றுக்கொண்டேன். வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. 2018 ஆம் ஆண்டிற்கு முன்னர் எழுதிய கட்டுரைகளை இப்போது வாசிக்கும்போது சில இடங்களில் முதிர்ச்சியின்மை புலப்படுகிறது. மொத்தம் நான்கு பகுதிகளை உள்ளடக்கியது இந்நூல். முதல் பகுதி பொதுவான விமர்சன கட்டுரைகள். பரந்த பரப்பை தொடுபவை. இரண்டாம் பகுதி ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் முழு தொகுப்பை முன்வைத்து எழுதப்பட்டவை. இக்கட்டுரைகள் தனிப்பட்ட அளவில் எனக்கு நிறைவை அளித்தவை. புனைவு எழுதிய நிறைவையும், துப்பறிந்து எதையோ கண்டடையும் போது ஏற்படும் உவகையும் அளித்தவை. இவ்வகையான கட்டுரைகளை வருடத்திற்கு இரண்டுமுறையாவது எழுத வேண்டும் என எண்ணிக்கொண்டேன். மூன்றாம் பகுதியில் மூத்த எழுத்தாளர்களின் சில கதைகளை வாசித்து எழுதியவை. இவை முழுமையானவை அல்ல. நான்காம் பகுதி இளம் எழுத்தாளர்களின் முதல் தொகுப்புக்கள் பற்றிய கட்டுரைகள். சமகால சிறுகதைகள் தொகுப்பில் மயிலன், திருச்செந்தாழை ஆகியோர் முக்கியமான விடுபடல்கள். வேறு பலரும் அடுத்தடுத்த தொகுப்புக்களை கொணர்ந்துள்ளார்கள். இந்த எல்லைகளை எப்போதுமே நினைவில் கொண்டிருக்கிறேன்.  இந்த தொகுப்பை நண்பன் வினோத்திற்கு சமர்ப்பணம் செய்துள்ளேன். இன்று 'கனாத்திறமுரைத்த கதைகள் ' எழுதிய சித்ரனாக அறியப்படும் வினோத் என் கல்லூரி நண்பன். கல்லூரி மருத்துவமனைகளில் ஒன்றாக இரவுப்பணி பார்த்த்தோம். அவன் வழியாகத்தான் ஜெயமோகனும், ஷோபாவும், லக்ஷ்மி சரவணகுமாரும் எனக்கு அறிமுகம் ஆனார்கள். இன்றுவரை நட்பு தொடர்கிறது. எப்போதும் போல் விஷ்ணுபுரம், சிற்றில், பதாகை மற்றும் மரப்பாச்சி நண்பர்களுக்கு நன்றிகள். விமர்சன நோக்கை கூர்மைப்படுத்தியதில் பங்காற்றியவர்கள்.  எனது விமர்சன முறைமையை நான் ஜெயமோகன் வழியாகவே கூர்மைப்படுத்திக்கொண்டேன். ஆசிரியரான அவருக்கு எனது நன்றி.. அவரிடமிருந்து வேறுபடும் புள்ளிகளை இத்தொகுப்பின் கட்டுரைகளில் வாசகர் காணக்கூடும். எனது முதன்மை கேள்வி படைப்பாளி பின்தொடரும் கேள்வி எது? அவரை எழுதத்தூண்டும் காரணிகள் எவை? எவை அவரை தொந்திரவிற்கு உள்ளாக்குகின்றன? ஆகியவை தான். எழுதும் சூழலை உறுதி செய்யும் அம்மா, மானசா, சுதிர், சபர்மதி ஆகியோருக்கு அன்பு. இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளை வெளியிட்ட கனலி , தமிழினி, சொல்வனம், பதாகை, ஜெயமோகன் இணையதளம், ஓலைச்சுவடி மற்றும் வாசகசாலை ஆகிய இதழ்களுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் நன்றி. விமர்சன கட்டுரைகளை தொகுப்பாக்கி புத்தகம் ஆக்குவது என்பது பதினெட்டாம் பெருக்கில் ஓலைச்சுவடிகளை வீசுவதற்கு சமானமானது என்று உணர்ந்தும் நண்பர் ஜீவ கரிகாலன் இதைப் பதிப்பிக்க முன்வந்திருக்கும் தியாகச்செயலையும் தீரத்தையும் மெச்சியாக வேண்டும். 'யாவரும்' பதிப்பகத்துக்கு இன்னும் பல தியாகங்கள் வாய்க்கட்டும்.   


சுனில் கிருஷ்ணன் 

காரைக்குடி 

2-12-2022No comments:

Post a Comment