Sunday, July 11, 2021

விஷக் கிணறு & பிற கதைகள்- வாசிப்பு- அனீஷ் கிருஷ்ணன்



(நண்பர் அனீஷ் கிருஷ்ணன் கைபட எழுதிய கடிதத்தை தட்டச்சு செய்து வலையேற்றியுள்ளேன். கையால் எழுதப்பட்ட கடிதத்தை பார்க்கும் போது அதில் ஒரு மெனக்கிடலும் உழைப்பும் தெரிகிறது. கவிஞர் ஜெயபாஸ்கரன் தொடர்ச்சியாக கடிதங்கள் எழுதுவார்.‌ பதில் போடாத குற்ற உணர்வு இப்போதும் உள்ளது. விஷக்கிணறுக்கு வந்துள்ள இரண்டாம் வாசிப்பு கடிதம் இது. நன்றி அனீஷ்)

அன்புள்ள சுனில்

வணக்கம். நான் இங்கு நலம். நீங்களும் குடும்பத்தினரும் நலமாகவே உள்ளீர்கள் என்று எண்ணுகிறேன். இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுவதின் முக்கிய நோக்கம் உங்களது புதிய புத்தகமான "விஷக்கிணற்றை" குறித்து எனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான். போகனிடம் சொல்லி சென்னை புத்தகத்திருலிழாவில் இருந்து வாங்கி வரச்சொன்னேன். புத்தகத்தை ஒருநாள் இரவு எட்டு மணிக்கு படிக்கத்தொடங்கினேன். ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். இப்போதெல்லாம் பெரும்பாலும் முன்பு வாசித்ததை அசை போடுதல் அல்லது வாசித்ததையே வாசித்தல் என்பதில் தான் பொழுது போகிறது. புதிதாக வாசிப்பது என்பது தகவலுக்காக மட்டுமே என்றாகிவிட்டது. இந்த பின்புலத்தில் தான் உங்கள் புத்தகத்தை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன் என சொல்கிறேன். வாசிப்பின் மீதிருந்த விலக்கதீதை மீறி என்னால் மனம் ஒன்றி அதை செய்ய முடிந்தது. 

லித்தியத்தில் வர்ணனைகள், குறிப்பாக மனம் சிதறும் முன்பு பரவும் அந்த இரும்பு சுவை குறித்த வர்ணனை மிகத்துல்லியமாக இருந்தது. உளவியல் படிக்கும் காலத்தில் அதைக்குறித்து வாசித்திருக்கிறேன். பயிற்சியளிக்க வந்த மருத்துவர் அத்தகைய ஒரு உலோக வாசனை மனச்சிதைவீஉடைய நபர்களிடமிருந்து வீசும் என்று சொன்னார். A characteristic metallic smell. உண்மையா என்று தெரியாது. இந்தக் கதையில் அக்கணவன் லித்தியத்திடம் அடைக்கலமாகும் தருணம் மிக முக்கியமானது. மனநோயாளியான மனைவியை கவனித்து கொள்வதில் கூட பிரச்சனை இல்லை, அதை ஒரு தியாகமாகக் கருதி பெருமிதத்துடன் கடந்து செல்ல முடிகிறது. ஆனால் மனைவியும் ஒரு கலைஞர் அதிலும் தன்னைவிட மேலான கலைஞர் என்று தெரியும்போது அஹங்காரம் சுக்குநூறாகி விடுகிறது. இனியும் மனைவியைக் குறித்து தெரியாத பக்கங்கள்/ விஷயங்கள் எத்தனை எத்தனை இருக்குமோ என்ற எண்ணம் தலைச்சுற்ற வைக்கிறது. லித்தியம் தான் இதனை சமாளிக்க உதவி செய்யும் போல. 

சிதலை வாசிக்க தொடங்கியதும் நீலகண்டத்தில் இருந்த பகுதி நினைவுக்கு வந்தது. அதனை விரித்து ஒரு கதையாக்கி இருப்பது நன்றாக தான் இருந்தது. கர்மவினை. சபித்தவன் குடும்பம் பரதேசம் போய் நன்றாக இருக்கிறது. சாபம் பெற்றவன் குடும்பத்திற்கு மண்சரிவும் கரையானும் பிறகு ஒருவழியாக ஊர்விட்டு நீங்கும் விமோசனமும். அந்த வீட்டில் இருந்ததால்தான் மீனாவின் கணவரும் அகாலமாக இறந்தாரா? வீட்டில் இருக்கும் புற்று சாபமா அம்மனா என்று கர்ம கணக்குகளின் முடிவற்ற சிக்கல்களை குறித்து சிந்திக்க வைத்தது. 

களி சிறுகதை குறித்து சொல்ல வேண்டும். சில நேரங்களில் நாம் தோற்க நினைத்தாலும் தோற்றுக்கொடுப்பது என்பது பிழைப்பிற்கு இன்றியமையாதது என்று புத்தி சொன்னாலும் அதை செய்ய முடிவதில்லை. எனக்கே நேர்முக தேர்வில் அப்படியொரு அனுபவம் உண்டு. செய்யும் காரியம் தற்கொலைக்கு துல்லியமானது என்று போதமனம் கதறிச் சொல்லிய பிறகும் அதை செய்வதற்கான காரணம் என்ன? ஆணவமா? எனக்கு அப்படித்தோன்றவில்லை. நம் இருப்பிற்கு நியாயம் கற்பிக்கும் விஷயத்திலும் சமரசம் செய்துகொண்டால் வாழ்வதிலேயே அர்த்தமில்லை என்றாகிவிடும் என்ற எண்ணம்தான் காரணமாக இருக்க முடியும். தூசும் துரும்பும் நிறைந்த கணேசன் வீட்டில் ஒழுங்காக இருப்பது அந்த ஷட்டில் மட்டை மட்டும்தானே‌. 

இந்த தொகுப்பில் நான் மிகவும் ரசித்து படித்த ஒரு கதை இந்திர மதம். எனக்கு ஓரளவிற்கு நன்றாக புரிககற பின்னணி என்பதாலோ அல்லது இக்கதையை மிக எளிதாக எனக்கு தெரிந்த சிலருடன் பொருத்தி பார்க்க முடிந்ததாலோ - என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்திரமதம் தான் இந்த தொகுப்பின் சிறந்த சிறுகதை போலத் தோன்றுகிறது. உணவோ கல்வியோ உள்ளே போனது செரிக்க வேண்டும். இல்லாவிட்டால் வெளியேற்றப்பட வேண்டும்.‌ இவை இரண்டில் ஒன்று நடக்காவிட்டால் உள்ளே சென்றதே விஷமாகிவிடும். இரத்தத்தை குடித்து குடித்து அதுவே போதையாகி அதனாலேயே நோய் வந்து மேலும் ரத்தம் குடிக்க வழி இல்லாமல் இருக்கும் அட்டையும் பேராசிரியர் சேஷாத்ரியும் ஒன்றுதான். இருவருக்கும் இருப்பது ஒரே நோய்தான். பேராசிரியர் தனது மரபு சார்ந்த நூல்களை முழுமையாக நம்பியதால் ஒரு உயிரை காவு வாங்கவில்லை. அதையும் தாண்டி தனது ஆணவத்தை முன்வைத்ததால்தான் ஒரு உயிர்போனது. இந்திரமதத்தால் பாதிக்கப்பட்ட பேராசிரியருக்கு வசப்படாத சூக்ஷ்மம் அரோக்யமாக இருந்த அந்த அட்டைக்கு பிடிபட்டது. அதனால்தான் கட்டியில் இருந்து இரத்தத்தை உறிஞ்ச அது மறுத்துவிட்டது. ஒரு தத்துவத்தையோ/ சித்தாந்தத்தையோ முரட்டு பிடியாக பிடிப்பதில் இல்லை பிரச்சனை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று சொல்வதில் தான் பிரச்சனை. 
"சார், நான் அட்டையின் வாயையும் குதத்தையும் நன்றாக கண்டுபிடித்துவிட்டேன்" என்று சொல்வது அக்ஷர லக்ஷம் பெறக்கூடிய வரி. 

இயல்வாகை அவ்வளவு ஒட்டவில்லை. அது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அடிப்படையில்தான். கறை இருப்பது என்பதும் கறையை கண்டுக்கொள்ளாமல் இருப்பது என்பதும் எனக்கு ஏற்ற விஷயமில்லை. எல்லா நேரத்திலும் எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டாம் அல்லது எல்லா நேரத்திலும் அறிவின் கூர்மையை நிரூபிக்கவேண்டாம் என்று சொல்லும்விதமான கதையாகவே அதை எடுத்துக் கொள்கிறேன். ஒருவேளை எனது புரிதல் தட்டையானதாகக்கூட இருக்கலாம். 

விஷக்கிணறு இருண்டு கதைகளாக இருந்திருந்தால் எனக்கு இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும் என்று புரிகிறது. மஞ்சள் பறவை என்றதும் எனக்கு canary பறவைதான் நினைவிற்கு வந்தது. சுரங்க தொழிலாளர்கள் இப்பறவையை கூண்டிலிட்டு தங்களுடன் சுரங்கத்திற்கு எடுத்துச்செல்லும் வழக்கம் உண்டு என்றும், சுரங்கத்திற்குள் இப்பறவை பாடிக்கொண்டிருக்கும் காலம்வரை விஷவாயு கசிவு ஏதுமில்லை என்று உணர்ந்துகொள்ளலாம் என்பதால் இந்த ஏற்பாடு என்று ஏதோ வாசித்த நினைவிருக்கிறது. காணாமல் மஞ்சள் பறவை என்பதை காணாமல் போகும் மானுடம்/ மனசாக்ஷி என்று புரிந்துகொள்கிறேன். 

இரண்டாம் உலகபோரும், யூதர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்பும் பல ஐரோப்பிய சிந்தனையாளர்களுக்கு Enlightment என்னும் விஷயத்தின் மீதிருந்த நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டது என்றும், அந்த நம்பிக்கையின்மை/ அவநம்பிக்கைதான் பின்னர் பின் நவீனத்துவத்திற்கு வித்திட்டது என்றும் கோட்பாடு வரலாற்றாசிரியர்கள் கூறுவார்கள். ஒருவகையில் பார்த்தால் இந்த பெருந்தொற்று காலமும் அப்படிப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. சுகாதாரத்துறையில் பணிபுரியும் நண்பர்கள் சொல்லும் விஷயங்கள் அயர்ச்சியடைய வைக்கின்றன. கணவரை வீட்டுக்குள் விட மறுக்கும் மனைவி, சொந்த மகனை பிடித்துக்கொண்டு போங்கள் என்று மன்றாடும் தாய்... என்று எத்தனையோ விஷயங்கள். ஆயிரம் அறம் பேசினாலும் அவனவன் உயிருக்கு மிஞ்சி ஏதுமில்லை என்பதே பெரும்பான்மையவர்களுடைய அடையாள கோஷமாக இருக்கிறது. இந்நிலையில் இச்சூழலே மையமாக வைத்து இலக்கிய ஆக்கங்கள் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. 

"வசுதைவ குடும்பகம்" என்னும் தலைப்பில் இருந்த நக்கலை வெகுவாக ரசித்தேன். தொழில்நுட்பம் உலகை சுருக்கிவிட்டது. We arw now in a Global village என்றெல்லாம் மார்தட்டினார்கள். அது உண்மைதான். ஆனால் அதன் விளைவுதான் இன்று பட்டிதொட்டி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கோவிட் 19. 1980 களில் இதே தொற்று வந்திருந்தால் அது இந்த அளவிற்கு சந்து பொந்தெல்லாம் பரவியிருக்காது. எல்லா நாணயத்திற்கும் இரு பக்கங்கள் உண்டு.லௌகீகமான ஒரு விஷயத்தில் நன்மை உண்டு என்றால் அதே விஷயத்தால் தீமையும் உண்டு. 'வியத்தலும் இலமே; இகழ்தலும் இலமே'. மேற்படி கதையை வாசித்தபோது இதுதான் நினைவுக்கு வந்தது. 

தன் விருப்பத்திற்கு ஏற்ப உருவத்தை மாற்றிக்கொள்ளும் மாய ஆற்றல் உடைய நாகத்தை இச்சாதாரி என்பார்கள்.‌ 'இச்சை' விருப்பம். ஒவ்வொரு மனிதனும் ஒருவகையில் இச்சாதாரிதான். உயிர்வாழும் இச்சையை கொண்ட இச்சாதாரி. அந்த இச்சையால் அந்த இச்சையின் பொருட்டு அவன்/ அவள் தன் உருவத்தை மாற்றாவிட்டாலும் தனது நம்பிக்கை, லக்ஷியம், அறம் என அனைத்தையும் நொடியில் மாற்றி புதிய நியாயங்களையும் கற்பித்துவிடுவார்கள். இதிலும் தலைப்பின் தேர்வு மிகச்சிறப்பு. 

"நஞ்சு" மற்றொரு கோணத்தை முன்வைக்கிறது. எது முக்கியம்? உயிர்பிழைத்திருத்தலா? சுதந்திரமா? பாதுகாப்பாக இருக்கும்போது சுதந்திரம் முக்கியமானதாகப்படுகிறது. மரணம் கண் முன் தோன்றினால் உயிர்வாழ்வதற்காக ஆயுள் தண்டனையைக்கூட ஏற்றுக்கொள்ள தோன்றுகிறது. இது ஊரடங்கு காலத்தில் சமூக ஊடகங்களில் நம்மவர்கள் கூச்சலிட்ட திசைகளை பார்க்கும் போது தெளிவாக புரிகிறது. 

'எப்போதும் முடிவிலே இன்பம்' புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்றின் பெயர் இல்லையா? அழகான வரி. பெயர் நினைவில் இருக்கிறது. சிறுகதை எப்படியோ மறந்துவிட்டது. நஞ்சின் தொடர்ச்சியான இந்தக்குறுங்கதை மூன்று தளங்களின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்று எண்ணுகிறேன். மேலை நாடுகளில் anti vaccine காரர்கள் கொண்டாடும் measles party போன்றவை. தடுப்பூசிக்கு பதிலாக வசதியான ஆரோக்கியமான நேரத்தில் நோயை வலியச்சென்று பெறுதல் மேல் என்ற எண்ணத்தால் உருவானது இது. பிறகு எல்லா ஆன்மீக/ தத்துவ ஞானமும் மூளையில் உள்ள இரசாயனங்களின் விளையாட்டே என்ற neurological reductionism. மூன்றாவதாக இருப்பது தற்கொலை சாய்வு. எந்த ஒரு விஷயத்தையும் அஞ்சுவது அல்லது அலஷ்ய படுத்துவது என்ற மனித குணம். மீண்டும் மீண்டும் வாசிக்க கட்டாறப்படுத்தும் கதை. 

Bacerm "நல்ல விரிவுரை என்பது அது முடிந்ததும் மாணவர்கள் ஆர்வத்தோடு நூலகத்திற்கு சென்று மேலும் அது தொடர்பாக படிக்கத்தூண்டுவதாக இருக்க வேண்டும் என்பார். இலக்கியமும் அப்படித்தான். நல்லதொரு நூலை வாசித்தால் அது குறித்து யாரிடமாவது பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்ற திணறல் வரும். "விஷக் கிணறு" அத்தகைய ஒரு எண்ணத்தை உருவாக்கிய நூல். வாழ்த்தும் நன்றியும். 
அனீஷ் கிருஷ்ணன்
7/7/21

No comments:

Post a Comment