Thursday, April 8, 2021

இமாம் பசந்த்- சிறுகதை

கனலி சூழலியல் சிறப்பிதழில் வெளியான கதை. 

1

மாம்பழ மழை. மேகத்தை பொத்துக்கொண்டு மாங்கனிகள் விழுவது போல. ஒரு கனவு காட்சியைப்போல. கதைகளில் மட்டும் கொட்டும் பனியார மழைபோல. புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் கணவனுக்குப் படைக்க வேண்டிய மாங்கனியை சிவனடியார் வடிவில் வந்த சிவபெருமானுக்குப் படைத்து கணவன் மாங்கனி கேட்கும் போது சிவனே அளிப்பார். புனிதவதியின் கணவன் என்ன வகையைக் கொடுத்திருப்பான்? தெரியவில்லை. ஆனால் சிவபெருமான் அளித்தது இமாம் பசந்தாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் கார்மேகத்திற்கு எந்தக் குழப்பமும் இல்லை. சப்பரம் வரும் சர்ச் வீதியிலும் பாரதியார் வீதியிலும் மாம்பழ நெடி சொக்கியது. கார்மேகம் இளமையை மீட்டியபடி அந்தத் தருணத்தில் முழுமையாகத் திளைத்திருந்தான். மாடிகளில் இருந்து கூடைகூடையாக பழங்கள் கவிழ்க்கப்பட்டன. சிலர் தனித்தனியாக தூக்கி வீசினார்கள். உயரத்திலிருந்து எவர் கையிலும் வசப்படாமல் வீம்பாக குதித்த பழங்கள் கும்பலில் மிதிபட்டு தலை நசுங்கி கொட்டை பிதுங்கி சாறு கக்கி பரிதாபமாக கிடந்தன. கார்மேகத்துக்கு படபடத்தது. இயன்ற வரை எதன் மீதும் கால் வைக்காமல் நடந்தான். கூட்டம் நெட்டித் தள்ளியபோது அவன் கால் தவறுதலாக ஒரு மாங்கனியின் கொழகொழப்பை அறிந்தது. கால் கூசி சட்டென பின்னுக்கு இழுத்துக் கொண்டது. தனக்கு முன் இன்னும் எவர் கால்பட்டும் நசுங்காமல் கீழே கிடந்த மாம்பழத்தை கண்டபோது அவன் முகம் ஒளிர்ந்தது. அதை எடுக்க நகர்ந்தபோது, மாடியிலிருந்து வீசப்பட்ட மாங்கனி ஒன்று அவனுடைய கண்ணாடியை நோக்கி வந்துகொண்டிருந்ததை கவனிக்கவில்லை. கனியைப் பிடிக்கும் முயற்சியில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த நீலச்சட்டைக்காரர் கையைத் தலைக்கு மேலே ஏந்தி தாவி குதித்தார். அவருடைய முழங்கை தாடையில் குத்தியதில் கண்ணாடி பறந்து சென்று விழுந்தது. அவருடைய செருப்புக் காலில் மாங்கனி மிதிபட்டு நசுங்கியபோது உடல் விதிர்த்தது. ‘சாரிங்க’ என இடித்துத் தள்ளிக்கொண்டு பூரிப்புடன் கூட்டத்தில் கரைந்தார். ரேவதி ஊடே புகுந்து கண்ணாடியை மீட்டுக் கொடுத்தாள். ஒரு பக்கக் கண்ணாடி உடைந்திருந்தது. நசுங்கிய பழத்தைப் பார்த்து ‘இமாம் பசந்த்’ என முனங்கிகொண்டான். 

கையைப் பிடித்து இழுத்து சாலையோரம் இருந்த திட்டில் அமரச் செய்தாள் ரேவதி. ‘சாமி நெல திரும்ப போவுது… மூணு மணி நேரமா உனக்கு ஒரு பழத்தப் புடிக்க துப்பில்ல... என்ன மனுசனோ… இங்கயே கெட இந்தா வாரேன்' என கத்திவிட்டு கூட்டத்திற்குள் புதைந்துபோனாள்.

ஆறு வருடங்களுக்கு முன் விடாது மழை ஊற்றிக்கொண்டிருந்த ஒரு தைமாத முகூர்த்தத்தில்தான் அவனுக்கும் ரேவதிக்கும் சோலையாண்டவர் கோயிலில் திருமணம். பரம்பரையாகவே வெள்ளிப் பட்டறையில் வேலை. அவன் தந்தை ஆறுமுக ஆசாரிக்குப் பற்பம் புடம் என மருத்துவக் கிறுக்கு. செவப்பட்டி வைத்தியருக்கு வெள்ளி பற்பம் செய்து கொடுக்கத் தொடங்கி அப்படியே ஆர்வமடைந்து மொத்தமாக திசைமாறினார். மூலிகை பறிக்க, மருந்து செய்ய என கார்மேகத்தையும் கூட்டிக்கொண்டு அலைவார். திருமண முகூர்த்தம் முடிந்து எவர் வீட்டுக் கல்யாணத்திலோ திருட்டு சாப்பாடு சாப்பிடுவதுபோல கடைசி பந்திக்கு அழுக்கேறிய உடைகளுடன் சாப்பிட வந்தபோதுதான் அவரைக் கடைசியாக பார்த்தது. ரேவதி அவனைச் சீண்டவேண்டுமென்றால் 'இப்படியாப்பட்ட மாமனார் உலகத்துலயே வேற எவளுக்கும் இல்ல' என கொளுத்திவிட்டால் போதும். வேறு எல்லாவற்றையும் கடந்து செல்லும் அவன் அப்பன் மீதான வசையை மட்டும் தாங்கிக்கொள்ள மாட்டான் என்பது அவளுக்கும் நன்கு தெரியும்.

குழந்தைக்காக அலைந்து ஓய்ந்து போதுமென களைத்துப் போன சூழலில்தான் திருமல்ராய பட்டினத்தில் வாக்குப்பட்ட ரேவதியின் அக்கா மாங்கனித் திருநாளுக்கு அவர்களை வரச்சொன்னாள். "இம்புட்டு பழத்தக் கூடையில அள்ளிக் கொட்டுங்க… புறவு வீசி எறியிற பழத்த புடிச்சு வேண்டிக்கிட்டு திண்ணுங்க… தன்னால புழுபூச்சி உண்டாவும்" என்றாள். மேற்கொண்டு இப்படி நேர்த்தி கடன் நிறைவான பலருடைய கதைகளை தன் கூற்றுக்குச் சான்றாக சொன்னாள்.

கார்மேகத்திற்கு திருமணமான அந்த ஆண்டுக்குப் பின் இந்த ஆண்டுதான் மாங்கனி திருநாள் பழையபடிக்கு நிகழ்கிறது என்பதால் பெரும் கூட்டம். மாங்கனித் திருநாளுக்கு வர கார்மேகம் ஒப்புக்கொள்ள குழந்தைபேறின் மீதான ஆர்வம் என்பதைக்காட்டிலும் மாம்பழக் கிறுக்கு முக்கியக் காரணம் எனச் சொல்லலாம். வீட்டிலேயே பாதிரி, பங்கனப்பள்ளி என ஒட்டுகண்ணுகளை நட்டு வளர்த்திருந்தான். திருமணப் பரிசாக அவனுக்கு மிகவும் பிடித்த இமாம் பசந்த் கன்றை ரேவதி திருமணம் முடித்து வீட்டுக்குள் நுழைந்த அன்று அவள் கையால் நடச்சொன்னான். மழை நீரில் கொவர்த்த மண்ணில் புதுப்புடவையில் எரிச்சலுடன் வேறுவழியின்றி கன்றை நட்டுவந்தாள்.

நீலம், ருமானி, கல்லாம, காதர், மல்கோவா என எத்தனை வகைகள் இருந்தாலும் மாம்பழங்களின் சக்கரவர்த்தி இமாம் பசந்த் தான் என்பது அவனுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ரேவதிக்கு இமாம் பசந்தோ ருமானியோ எதுவானாலும் மாங்காய் அல்லது மாம்பழம் மட்டும் தான்.‌ மதியச் சோறு மாம்பழம் இல்லாமல் அவனுக்கு இறங்கவே இறங்காது. அதுவும் அவனுக்கு மாம்பழத்தை நாகரீகமாக இப்படி வெட்டி துண்டுகளாக்கி உண்பதில் எல்லாம் நம்பிக்கையில்லை. முழு பழத்தையும் தோலோடு உறிஞ்சி உண்பான். இந்தப் பித்தை ஆறுமுகத்திடமிருந்து தான் அவன் பெற்றுக்கொண்டான். அத்தனை நாட்டு வகைகளையும் தேடித்தேடி உண்பான். 'தோல் தடிச்சிருந்தா சூடு குறைவு உடம்புக்கு நல்லது ஆனா ருசி கம்மியாருக்கும்' 'நார்சத்து கூட இருந்தா வயித்துக்கு நல்லது ஆனா வாய்க்கு உகக்காது' என்று ஒவ்வொரு பழத்தைப் பற்றியும் சொல்வார். தெளிவாக இருந்தவர்தான் ரச மணி செய்கிறேன் பேர்வழி என மூச்சு திணறி மயங்கி விழுந்ததிலிருந்து வீட்டுள் கால் தரிப்பதில்லை.

ரேவதிக்கு தனது மாம்பழ ஞானத்தைப் புகட்டலாம் என கனவுகொண்டிருந்தான். ஆனால் அந்த ஆண்டு மாம்பூ பூத்து மாம் பிஞ்சாகி மாவடுக்களாகவே மரத்திலிருந்து உதிர்ந்தன. மாங்காயாகக் கூட ஆகவில்லை. மருமக வந்த ராசி மாமரம் பட்டுபோச்சு என மாமியார்காரி புலம்பியதைக் கேட்டு அழுதுக்கொண்டிருந்தாள் ரேவதி. அவள் நட்டுவைத்த இமாம் பசந்த் ஆறிலைகளுக்கு மேல் வளரவும் இல்லை குன்றவும் இல்லை. அவனுக்கும் எதையும் விளக்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் சந்தையில் கூட மாம்பழ வரத்து இல்லை என்பதை கவனித்தான். விசாரித்துப் பார்த்ததில் எல்லா இடங்களிலும் இதுவே கதை என்று அறிந்து கொண்டான்.‌ அப்போதிலிருந்து இப்போது வரை எல்லா மாம்பழப் பருவங்களும் இப்படியேதான் கடந்தன.

சித்திரை வைகாசியில்கூட புயல் அடித்தது. அந்த ஆண்டும் அதற்கடுத்த ஆண்டும் வகைதொகையற்று பொழிந்தது.  மாதத்திற்கு இரண்டு புயல்கள் கரையைக் கடந்தன. பிறகு வந்த ஆண்டுகள் கடும் வறட்சி; அனல் கக்கியது. பெரும் பணம் கொடுத்து ஓரிரு கூடைகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து திருவிழாவை பெயருக்கு நடத்தினார்கள். பிச்சாடனார் சப்பரத்தில் சவ ஊர்வலத்திற்கு வந்து செல்வதுபோல் சோபையிழந்து சுற்றிவிட்டு நிலை திரும்பினார். கடந்த ஆண்டு மேகங்களைத் திரட்டவும் பருவத்தே மழையைக் கொணரவும் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. விமானங்கள் செயற்கை மழையைக் கொணர்ந்தன. காலத்தே தருவிக்கப்பட்டது மழை.

இந்த ஆண்டு மாசி தொடங்கி மாங்காய்கள் வழக்கம்போல் பழுக்க தொடங்கின. ஆனி பவுர்ணமிக்கு வழக்கத்தைவிட அதிக மாங்கனிகள். மாங்கனி என்றில்லை பொதுவாகவே அந்தாண்டு நல்ல விளைச்சல். பயிர்கள் தழைத்தன. வழக்கமாக அரிக்கும் இலை பூச்சிகள் அந்தாண்டு வரவேயில்லை. ஒவ்வொரு மாதமும் மூன்று முறை பலூனை பறக்கவிட்டால் மாதம் மும்மாரி பொழிய வைக்கலாமே என யோசித்தான் கார்மேகம்.

ரேவதி கையில் மாம்பழத்துடன் வந்தாள். 'காசாலட்டா? இமாம் பசந்த் இல்லியா?' எனக் கேட்டதும் அவள் முகம் சுருங்கியது. 'இந்த வாயிருக்கே... சாமி பிரசாதத்துலயும் நொட்ட நொள்ள... நீயா போன... நாந்தானே போனேன்… உன்னால முடியலதானே… இதுக்கே பெரும்பாடு' என கூட்டத்தின் எதிர்திசையில் மாம்பழங்கள் கூழாகிக்கிடந்த பாதையைக் கடந்து நடந்தார்கள்.

'சாமிகிட்ட வச்சுட்டு துன்னுறு பூசிக்கிட்டு நல்லா மனசார வேண்டிக்கிட்டு நறுக்கி ஆளுக்குப் பாதியா சாப்புடுங்க' என்றாள் ரேவதியின் அக்கா. கண்ணை மூடி வேண்டிக்கொண்டு நறுக்கி அவனுக்கு அளித்தாள். பழம் உள்ளே சென்ற சில நொடிகளில் தலை கிறுகிறுத்தது.‌ நாக்கு சுர்ரென எரிந்தது.‌ உலகம் சுழன்றது. தரை நெகிழ்ந்தது. கால்கள் புதைந்தன. கார்மேகத்திற்கு அந்தரத்தில் மிதப்பது போலிருந்தது. எங்கோ வெகு தொலைவில் என தேய்சலாக ரேவதியின் எக்காளச் சிரிப்பு ஒலித்தது. வெகு அருகில் அவனுக்குள்ளே, தலைக்குள்ளே, ஈசான மூலையிலிருந்து ஆறுமுகத்தின் குரல் ஒலித்தது. 'தம்பி நல்லா சாப்புடு'. சுழன்று எங்கோ என பறந்து கொண்டிருந்தான்.

2

கண்கூசும் வெள்ளை வெளிச்சம் சூழ்ந்த விசாரணை அறையில் கார்மேகம் அமர்த்திவைக்கப்பட்டிருந்தான். அவனுக்கு எதிரே இருந்த மேஜையில் ஒரேயோரு கையடக்க கணினி இருந்தது.

எங்கிருந்து ஒலிக்கிறது என அறிய முடியாதபடி அறைக்குள் பெண் குரல் ஒன்று ஒலித்தது.

'காலை வணக்கம் திருவாளர். கார்மேகம் இந்த விசாரணை சட்ட காரணங்களுக்காக காணொளிப் பதிவு செய்யப்படுகிறது,' எனக் கூறிய அக்குரலில் கனிவு ததும்பியது. ஆறுமுகம் 'நீயும் ஒரு காலை வணக்கம் சொல்லுப்பா… நல்லாயிருக்காது தம்பி' என்றார். வாயை இறுக மூடிக்கொண்டான்.

'இன்று என்ன கிழமை'

'வெள்ளிக்கிழமை' என கம்மிய குரலில் சொன்னான். 'நல்லா பெலமா சொல்லுப்பா' என்றார் ஈசானியத்து ஆறுமுகம்.

'காலையில் என்ன உண்டீர்கள்'

'சோறும் மீன் குழம்பும்.' 'எளவு உப்புசப்பில்லாம இருந்துச்சு' என்று பின்பாட்டு பாடினார் ஆறுமுகம்.

'உங்களுக்கு இப்போது எத்தனை வயது'

‘53’

மாம்பழங்கள் தடைசெய்யப்பட்டது தெரியுமா?

‘தெரியும்.’ 'தெரியாது' என்றார் ஆறுமுகம்.

'எத்தனை ஆண்டுகளாகத் தடையுள்ளது என அறிவீர்களா?'

'இருபது ஆண்டுகளாக.' அவன் ஒவ்வொரு பதிலையும் பெரும் போராட்டத்தினூடேதான் சொல்ல முடிந்தது. ஆறுமுகத்தை கவனிக்காமலிருக்க முயன்றான்.

'உங்கள் கடந்த காலத்தை ஆய்வு செய்ததில் தடைக்குக் காரணமான மாங்கனித் திருநாள் சம்பவத்தில் நீங்களும் பாதிக்கப்பட்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மைதானே.'

'ஆமாம்'

'நன்றி. அப்படி இருந்தும் ஏன் தடைசெய்யப்பட்ட கனிகளை வைத்திருந்தீர்கள்?'

தலைகவிழ்ந்து மவுனமாக அமர்ந்திருந்தார். 'மாம்பழம்னா இஷ்டம்னு சொல்லுப்பா வாயதொறந்து... அட சும்மா சொல்லு... தப்பா எடுத்துகிட மாட்டாக' என்றார் ஆறுமுகம்.

எரிச்சலில் கையைத் தூக்கி நிறுத்து என சமிக்ஞை செய்தான். 'உன் நல்லதுக்குத்தான் சொன்னேன். எப்பவுமே உனக்கு கோவம்தான் சத்ரு. எனக்கென்ன வந்துச்சு' என்று மவுனமானார் ஆறுமுகம். 

'என்ன?'

'கொஞ்சம் தண்ணீர் வேண்டும்' என சமாளித்தான்.

'விசாரணை முடிந்ததும் அளிக்கப்படும்'

'நன்றி'. 'என்னத்த நன்றி தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்காதவிங்க அடுத்த செம்மத்துல கெவுலியா பொறப்பானுவ' ஆறுமுகம் சீறினார்.

'இவை ஏன் தடைசெய்யப்பட்டன என தெரியுமா?'

'கொஞ்சம் தெரியும்.‌ அது கஞ்சாவைப்போல் லாகிரி வஸ்துவாக மாறிவிட்டது என்றார்கள்'

'ஓரளவு சரி. முழுவதும் உங்களுக்கு விளக்க வேண்டியது சட்டப்படி எங்கள் கடமை. ஆகவே சொல்கிறேன். மாங்கனிகளில் புதிதாக mangicide எனும் ரசாயனம் உருவானது. எப்படி இந்த மாற்றம் உருவானதென தெரியவில்லை. அது மெஸ்கால் போன்ற காளான் வகையில் கிடைக்கும் போதையை அளிப்பது. ஆகவே மாமரங்கள் அழிக்கப்பட்டன. மாங்கனிகள் தடைசெய்யப்பட்டன.‌ உங்களுக்கு இதில் ஏதேனும் ஐயங்கள் உண்டா?'

'இல்லை'. 'அதென்ன நொப்புடி மாத்தம் கண்டுச்சுன்னு தெரியல... தங்கம் தகரமா மாறும்... தகரம் தங்கமா மாறும் இதெல்லாம் ரசவாத வித்தை… எது எதுவாவேணாலும் மாறும்' ஆறுமுகம் ஆத்திரமாகச் சொன்னார்.

சட்டென எழுந்து நடந்தான் கார்மேகம். அவனுக்கு அந்தக் குளிர்ந்த அறையில் வியர்க்க தொடங்கியது.

'இந்த கனிகள் எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தன?'

'அது எங்கப்பன் கணேசன் தகப்பன் சிவன்கிட்ட வாங்கின ஞானப்பழம்' என சொல்லி சிரித்தார் ஆறுமுகம். 'சும்மா தமாசு கோச்சுக்கிடாத' என சமாதானம் சொன்னார். தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான்.

'இதை யாருக்காவது விற்க முயன்றீர்களா?'

'இல்லை. யாருக்காகவும் இல்லை.'

'உங்களுக்கு இதை அளித்தவரை அடையாளம் காட்ட முடியுமா?

‘உங்களுக்கு தண்டனையைக் குறைக்க பரிந்துரைப்போம்.'

'ஆளு கட்ட குட்டையா ஒத்த தந்தத்தோட நீளமான மூக்குக்கையோட இருப்பார். ஆனா இது தமாசு இல்ல. எல்லாமே அந்த கற்பக விநாயகம் கொடுத்தது தானே' என்றார் ஆறுமுகம் நிதானமாக.

'எனக்கு யாரும் எதையும் அளிக்கவில்லை.' என்றான் கார்மேகம்.

'அப்படியானால் நீங்களே இதை உற்பத்தி செய்தீர்களா? மரம் எங்கிருக்கிறது என சொல்லிவிடுங்கள். மாமரம் வளர்ப்பது போதைப் பொருள் தடைச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்குரியது என எச்சரிக்க விரும்புகிறேன்.'

மவுனமாக தரையையே வெறித்துக்கொண்டிருந்தான். 'மாங்கா தின்னதுக்கு தூக்கு தண்டனையா?' ஆறுமுகம் புலம்பினார்.

'உங்கள் ஒரு மாத கால நடவடிக்கைகளைப் பின்தொடர்ந்து எங்களால் மரத்தை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். நிச்சயம் அதை அழிக்கவும் செய்வோம். உங்களுக்கு வேறு குற்றப் பின்புலம் ஏதுமில்லை என்பதாலேயே இத்தனை பொறுமையாக கேட்டுக்கொண்டிருக்கிறோம்.'

'எல்லாம் இந்த அப்பனால்' என மனதிற்குள் சொல்லிக்கொண்டான். 'உன் நன்மைக்கு தானே சொன்னேன். நல்ல மாமரத்த உருவாக்கிட்ட காலத்த திருப்பிடலாம்னு:

'சரி குற்றத்தை ஒப்புகொள்கிறீர்கள் தானே.'

தலையசைத்தான். 'எது குத்தம்? எல்லாம் கலிகாலம். தருமம் ஒத்த கால்ல நடக்குது' என வருந்தினார் ஆறுமுகம்.

குற்றத்தை ஒப்புகொள்வதாக உங்கள் எதிரே உள்ள திரையில் கைசாந்திடவும்.

மறுக்காமல் கைசாந்திட்டார். 'நீ ஒன்னும் கவலப்படாதப்பா. அப்பா நா உங்கூடயே இருப்பேன்'

'இந்நாள் நன்நாள் ஆகட்டும். ஒத்துழைப்பு நல்கியதற்கு நன்றி'

'ஒரு நிமிடம் எனக்கு மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உண்டா?'

'சட்டப்படி இல்லை.'

'நன்றி'

'அவங்கட்ட ஒரேயொரு கேள்வி கேளுப்பா… குரலக் கேட்டா சின்ன வயசாட்டாம் இருக்கு… இதுவர உன் வாழ்க்கைல ஒரு துண்டு மாம்பழமாவது சாப்டிருப்பியா நீ? அதோட ருசி என்னன்னு தெரியுமா உனக்கு?'

வேண்டாம் என்பதாக தவையை வேகவேகமாக ஆட்டினான். 'நீ கேக்க போறதே இல்ல... நானே கேக்குறேன்' என்றதும் அதை நிறுத்தும் முயற்சியாக புரிபடாத ஒரு பெரும் ஓலம் கார்மேகத்தின் உள்ளிருந்து எழுந்தது.

3

'காலை வணக்கம். இன்று தண்டனை நாள் 7102/ 7300. ‌உங்கள் பகலவன் நேரம் தொடங்குகிறது,' என வழக்கம் போல் அசரீரிக் குரல் அறிவித்தது.

உயர்ந்த கூரை விலகி ஒளிபுகு திரைக்கு மேலே ஆதவன் ஒளிர்ந்தான். ஒடுங்கிக்கொள்ள ஒரு இருண்ட மூலைகூட இல்லாத வெளிச்சப் பெருவெள்ளம் அவனைக் கூசச் செய்தது.  கால்களுக்கிடையே தலையைப் புதைத்துக்கொண்டான். நொடிநொடியாக எண்ணினான். சரியாக முந்நூறு வந்ததும் கூரை மீண்டும் மூடிக்கொண்டது. ஆசுவாசமடைந்து நிமிர்ந்தான். தோல் எரிந்தது. இனி பத்து நாட்களுக்குப் பிறகுதான் இந்த வேதனை. கழிப்பிடத்தில் அமர்ந்தான். துளித் துளியாக மலம் வேதனையுடன் இறங்கிக் கொண்டிருந்தது. 'கருணக்கிழங்கு லேவியம் சாப்பிட்டா மூலக்கடுப்பு குறையும் தம்பி' என்றார் ஆறுமுகம். அவர் குரலைக் கேட்டதும் ஆசுவாசமடைந்தான். ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஒவ்வொருநாளும் அந்த அந்தகாரத் தனிமையை அவர் துணையுடன்தான் கடந்தான். 'தங்கம் செய்யிறத ரசவாதம்னு புரிஞ்சு வெச்சுருக்காய்ங்க. அது தப்பு. அது ஒரு அனுபவம். அம்புட்டுக்குள்ளார ஓடுறதும் ஒரே ரசம்தாங்குற அனுபவம். அந்த ரசத்த என்னவா வேணாலும் மாத்தலாம். எது எதுவா வேணாலும் மாறலாம்.' என ரசவாதத்தின் அடிப்படையைச் சொல்வார் ஒருநாள். 'காய்ஞ்ச இலதானப்பா வைரம். அது வீணாக்காம பாத்திக்கு பக்கத்துல லேசா மண்ண பிரட்டி மூடிவிட்டா போதும். நெகுநெகுன்னு காய்க்கும்,' என விவசாயக் குறிப்பளிப்பார். சிறைக்குள் வரும்வரை அவருடன் பேசுவதைத் தவிர்த்தான். இங்கே வந்து சிலநாட்களில் இயல்பாக அவருடன் பேசத் தொடங்கினான். காலையில் எழும்போதுதான் ஆறுமுகத்திற்குள் இருக்கும் கார்மேகமா அல்லது கார்மேகத்திற்குள் இருக்கும் ஆறுமுகமா எனும் குழப்பங்கள் தோன்றி அவனை பீதிக்குள்ளாக்கியது. தினமும் காலையில் எழும்போதும் இரவு உறங்குச்செல்லும் முன்னும் 'நான்‌ கார்மேகம்' 'நான் கார்மேகம்' என செபித்துக் கொள்வான். அவ்வப்போது ரேவதி இப்போது எங்கிருப்பாள் என எண்ணிப்பார்ப்பான். மாங்கனித்திருநாளின் பலமணி நேர போதை தெளிந்த பின் வீடு வந்து சேர்ந்ததும் தன் தந்தை தன்னோடு இருப்பதாக தயங்கித் தயங்கி சொன்னதும் பீதியில் வெளியேறிச் சென்றவள் திரும்பவேயில்லை. அம்மா அவனை மனநல மருத்துவரிடம் கூட்டிச்சென்றாள். மாத்திரையை போட்டால் ஆறுமுகம் மறைந்துவிடுவார். பிறகு அவருமில்லாத வாழ்க்கை சுவாரசியமற்றதாக இருந்ததால் மாத்திரையை நிறுத்தினான். ஆறுமுகம் சற்று எல்லை மீறும் போதெல்லாம் அவரை வழிக்கு கொண்டுவரும் மிரட்டல் உத்தியாக மாத்திரையைக் கைக்கொண்டான். அப்பன் அதே வயதில் அவனுடனிருக்க அவன் அப்பனைக்கடந்த மூப்படைந்தான். அப்போது 'உன்ன விட எனக்கு இப்ப வயசும் அனுபவமும்கூட' என எதிர்வாதம் புரிந்தான். அவ்வப்போது வாக்குவாதம் வந்து பரஸ்பரம் பேசிக்கொள்ளாமல் கழித்த காலமும் உண்டு. குறிப்பாக ஒரேயொரு நல்ல மாமரத்தை வளர்த்தால் காலச்சக்கரத்தை திருப்பிவிட முடியும் என அவர் பேச்சு கேட்டதன் விளைவாகத்தான் சிறைக்கு வந்தது என்பதில் அவனுக்குத் தீராத கோபமுண்டு. அத்தனைக்கு பின்னும் அவரைக் காட்டிக்கொடுக்கவில்லை எனும் நன்றிகூட இல்லையே எனக் கத்துவான். காட்டிக்கொடுக்கவில்லை என்றால் என்ன நான் தான் உன்னுடன் சேர்ந்தே சிறையிலிருக்கேனே என்பார் அவர்.

கழிப்பிட சிந்தனைச் சரடை அறுத்துக்கொண்டு ஒரு குரல் கேட்டது. 'வாழ்த்துக்கள் திரு. கார்மேகம். உங்கள் நன்நடத்தை காரணமாக தண்டனை காலத்தில் 198 நாட்கள் குறைக்கப்பட்டு நீங்கள் இன்று விடுவிக்கப்படுகிறீர்கள்' என்றது அசரீரி பெண் குரல். சுதாரித்து எழுவதற்குள் சிறைகதவு திறந்துகொண்டது. மினுங்கும் திசைகாட்டி அம்புகுறிகள் வெளியேறும் வழியைக் காண்பித்தது. மிகச் சோர்வாக உணர்ந்தான். ஆனால் ஆறுமுகம் உற்சாகமாகத்தான் இருந்தார். 'விடுதலை விடுதலை' என சீட்டியடித்தார். மெல்ல நடந்து அவ்வழியே சென்றான். ஒரு உடைமாற்றும் அறையில் அவருக்கேன வைக்கப்பட்டிருந்த புதிய உடைகளை அணிந்து கொண்டு நகர்ந்தான். 'நமச்சிவாயம் துன்னூறு இல்லயா' கேட்டார் ஆறுமுகம். சிறை வளாகத்தின் வரவேற்பு பகுதிக்கு சென்றான். அங்கே இருந்த அதிகாரி. 'வாழ்த்துக்கள் திரு. கார்மேகம்' என பூச்செண்டு அளித்தார். ‘இந்த விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்யலாமா? எனக்கு வெளியே யாரும் இல்லை... எதுவும் தெரியாது... எங்கு செல்வதென்றும் தெளிவில்லை' என்றான் உடைந்த குரலில். 'அப்பன ஜெயில்லியே சாவடிச்சிரலாம்னு நினக்கிறியா நீ' என தழுதழுத்தார் ஆறுமுகம். 

'கவலைகொள்ள வேண்டாம். உங்கள் மறுவாழ்வுக்கு அரசு உரிய ஏற்பாடுகள் செய்துள்ளது. இவர்கள் தான் உங்களை வெளிக் கொண்டுவர கோரியவர்கள். அவர்களுடைய நிறுவனத்தில் உங்களுக்கு பணியளிக்க முன்வந்துள்ளனர்.' என வரவேற்பறை நாற்காலிகளில் சீருடையணிந்த நால்வரைச் சுட்டிக்காட்டினான். அவர்கள் எழுந்து கைகுலுக்கி அவரை அழைத்துச் சென்றனர். 'உங்கள மாதிரியான நல்ல உள்ளங்களால் தான் சார் மழ பெய்யிது' என கண்ணை கசக்கினார் ஆறுமுகம்.

4

வெளிச்சம் கண்ணை உறுத்தியது.

பயணம் தொடங்கியதுமே உறங்கிப்போனான். எழுப்பியபோது மரங்கள் சூழ்ந்த பசுமையான பகுதியில் இருந்தார். சூரியத்திரை மிதமான தட்பவெப்பத்தை அனுமதித்தது. சற்று சுதாரித்து நோக்கியதும் தான் தானொரு மாந்தோப்பில் இருப்பதைப் புரிந்துகொண்டார். எல்லா மாமரங்களும் நான்கடி உயரம் இருந்தன. அவை ஒன்று போலத்தோன்றின. அதில் காய்த்து தொங்கிய மாங்காய்களும் பழங்களும் கச்சிதமாக ஒரே அளவும் ஒரே எடையும் கொண்டதாகத் தென்பட்டன. கனிகள் யாவும் ஒரே மஞ்சள் அடர்வில் இருந்தன.

'நீங்கள் இப்போது இருப்பது பிராகிருதிஸ்தான் முழுமைக்கும் மாம்பழம் உற்பத்தி செய்து அளிக்கும் மாம்பழத் தொழிற்சாலை. வெற்றிகரமாக எங்கள் ஆய்வின் மூலம் போதைத்தன்மை அற்ற மாங்கனிகளை ஆய்வுகூடத்தில் உருவாக்கியுள்ளோம்.' என்றான். 'மரத்த ஜெராக்ஸ் எடுத்துருக்கானுவ தம்பி... கார்டூன் மரம் மாதிரி எப்படி வெச்சுருக்கானுவ பாரு… சூதானம் தம்பி' என்று கிசுகிசுத்தார். 

கார்மேகத்திற்குச் சுற்றிக் காண்பித்தான். 'சரியாக 21 நாட்களில் மாம்பழத்தை உருவாக்குவோம்' ஒரு மரத்திற்கு முன் சென்று நின்றவன் அதன் நடுத்தண்டில் பொறிக்கப்பட்ட பார்கோடுகளுக்கு நேராக தனது கைக்கடிகாரத்தை காண்பித்தான். கடிகாரத்திரையில் '144' எனும் எண் மிளிர்ந்தது. 'ஒவ்வொரு மரத்திலும் 144 பழங்கள் ஒரு சமயத்தில் காய்க்கும்'. கடிகாரத்தில் 40லிருந்து எண்ணிக்கை நொடிக்கு நொடி குறைந்தது. மரத்தின் நடுத்தண்டிலிருந்து குடைமாதிரி எல்லா பக்கமும் வலை விரிந்தது. எண்ணிக்கை சரியாக சுழியத்திற்கு வந்தபோது ஒரே சமயத்தில் அனைத்து பழங்களும் காம்பிலிருந்து விடுபட்டு வலைக்குள் விழுந்தன. 'பெரிய வித்தக்காரனுவ தம்பி' என்று வியந்தார் ஆறுமுகம்.

'ஏம்பா இம்புட்டு மரம் வச்சுருக்கானுவ ஆனா தக்குனூண்டு வாசம்கூட இல்லியே… என்னனு கேளுப்பா' என்றார். அந்தக் கேள்வியில் ஒரு நியாயம் இருந்தது. ஆகவே 'இத்தனை மாங்கனிகள் இருந்தும் ஏன் வாசம் வரவில்லை?' எனக் கேட்டான் கார்மேகம். 'அதற்குதான் உங்கள் உதவி தேவை' என்றபடி அவரை ஒரு அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றான். ஒரு நிமிடம் என தலையைச் சாய்த்து ஒரு குப்பியிலிருந்து இரண்டு மூக்கிலும் இரண்டு சொட்டுக்களை விட்டான். விர்ரென இருந்தது. உடலும் மனமும் விழித்துக்கொண்டது. 'அஞ்ச வேண்டாம். மூக்கு என்பது மூளையின் வாசல் அல்லவா' என்றான். பிறகு ஒரு துண்டு மாம்பழத்தை நறுக்கி கொடுத்தான். தயக்கத்துடன் அதைக் கையில் எடுத்தான். அவன் கையிலிருந்த திரையில் எதையோ அழுத்தினான். குப்பென மாம்பழ வாசம் கிளர்ந்தது. ருசித்தான். 'காசாலட்டு' அவன் கண்கள் மின்னின. அடுத்த துண்டை அளித்தான் 'நீலம்' அவன் கண்கள் கசிந்தன. 'நீலம் என்றா சொன்னீர்கள்?'. 'ஆம்'. 'அப்போது இதைச் சாப்பிடுங்கள்' என ஒரு துண்டை நீட்டினான். விண்டதும் 'கல்லாம' என்றார் ஆறுமுகம். அதையே கார்மேகமும் சொன்னான். 'உறுதியாகத் தெரியுமா?'. 'பொய்யாச் சொல்றேன்' என ஆறுமுகம் மருகினார். 'ஆம் சந்தேகமே இல்லை' என்றான் கார்மேகம். 'இப்போது எங்கள் தகவல் சேகரிப்பின்படி முதலில் உண்டது கல்லாமை. அடுத்து உண்டதே நீலம்‌.' 'இல்லை எனக்கு உறுதியாக தெரியும்'. 'நன்றி எங்கள் தொழில்நுட்ப குழுவிற்கு உங்கள் மாற்றத்தைப் பரிந்துரைக்கிறேன். இங்குதான் எங்களுக்கு உங்களைப் போன்ற துறை நிபுணர்களின் துணை தேவை'. ஒவ்வொரு துண்டும் வெவ்வேறு வாசமும் ருசியும் கொண்டதாக இருந்தது.

'இப்போது இங்கே பசி ஒரு சிக்கலில்லை. ஆனால் ருசிக்கான அலைச்சல் ஓயவில்லை. ருசியைக் கைகொள்ளவே அவனுடைய ஆக்கப்பூர்வ நேரமும் உழைப்பும் பெரும்பகுதி செலவாகிறது. ஆகவே இந்தத் திட்டம். உங்கள் மூக்கில் விடப்பட்ட இரண்டு சொட்டுக்கள் மூளையில் உள்ள நரம்பு முடிச்சு தொகைகளுடன் பிணைந்துள்ளது. செயலி வழியே நீங்கள் விரும்பும் ருசியைப் பணம் கட்டி தரவிறக்கிக் கொள்ளலாம். வெண்ணிலா, ஸ்ட்ராபெரி ருசிகள் கொண்ட மாம்பழம்கூட உண்டு. முயற்சிக்கிறீர்களா?'

'இல்லை வேண்டாம்'

'எல்லா உணவுவகைகளையும் நாங்கள் இதில் இணைத்துள்ளோம். சாத்தியமான அத்தனை ருசி வேறுபாடுகளையும் கொணர்ந்துள்ளோம். உயர்தர, அரிதான ருசியைத் தேர்ந்தெடுக்கும் தோறும் அதற்கான கட்டணம் அதிகரிக்கும். எல்லா உணவுபொருட்களின் உற்பத்தியும் இப்போது தரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே விதமான மதுதான் தயாரிக்கப்படுகிறது. உங்கள் பண வசதிக்கு ஏற்ப அது வோட்காகவும் நூறாண்டு கால ஒயினாகவும் ருசிக்கப்படும்.'

'எங்களால் இருப்பதிலேயே சிறந்த வகையான இமாம்‌ பசந்த் வகை மாம்பழ ருசியை ஆவணப்படுத்த முடியவில்லை. உங்கள் ஆவணங்களின்படி நீங்கள் அந்த வகை பழங்களை வைத்திருந்ததால் தான் சிறையில் அடைபட்டதாக அறிந்தோம்.'

இமாம் பசந்த் எனும் பெயரைக் கேட்டதும் கார்மேகத்தின் நாவில் எச்சில் ஊறியது. அதன் ருசியும் மனமும் நினைவில் எழுந்தது. மாம்பழங்களைக் கூடைகூடையாக அடுக்கியிருக்கும் பண்டகசாலை அறை. அதன் நெடி. தயிர்சோற்றில் ஊறிய மாம்பழத்தின் ருசி.‌ உறிஞ்சி உண்ணும்போது எழும் ஓசை. ஊறிய மாவடின் கார்ப்பும் புளிப்பும். பால் மாங்காயின் புளிப்பு.

ருசியற்ற மாம்பழத் துண்டை மென்று படிப்படியாக அதன் இனிப்பை கூட்டச்சொன்னான். 'இது ரொம்ப இனிக்குது', 'இது ரொம்ப கம்மி', 'இனிப்பாவே இருக்கக்கூடாது’, கொஞ்சம் சாக்கட்டி மாதிரி இறங்கனும்', 'ரொம்ப சவசவன்னு இருக்கு', 'காரக்குறிச்சி கச்சேரி மாதிரி மேல் ஸ்தாயிக்கு போயிட்டு அப்புறம் அமைதியா தவழ்ந்து முடியனும்', 'ரவை எலுமிச்ச சேத்த மாதிரி கொஞ்சம் புளிப்பு கூடனும்', 'அக்பரும் அவுரங்கஜீபும் சாப்புட்ட பழம்னா சும்மாவா', 'பல்லுல நார் சிக்கக்கூடாது', 'ஒரேடியா மைய மாவாட்டம் அரச்சிப்புட்டானுக' அவனும் ஆறுமுகத்தின் கூற்றுக்களை ஒத்து மாற்றங்களைச் சொல்லிக்கொண்டே வந்தான். அவனால் துல்லியமாக இமாம் பசந்தின் ருசியைக் கொணர முடியவில்லை. ராப்பகலாக அவர்கள் உழைத்தார்கள். ஆனால் அவனுக்கும் ஆறுமுகத்திற்கும் திருப்தியில்லை. 'மண்ணு மூட்டைகளா இருக்காய்ங்க' எனப் புலம்பினார் ஆறுமுகம். இமாம் பசந்தின் முப்பத்தாறு ருசி பேதங்களை உருவாக்கியிருந்தார்கள். ஒருகட்டத்தில் நிறுத்திவிட்டு இந்த முப்பத்தாறில் இமாம் பசந்துக்கு ஆக நெருக்கமான ருசியை தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். ஒவ்வொரு சமயமும் வாயில் இட்டதும் இதுதான் என தோன்றும். ஆனால் ஆறுமுகம் மறுப்பார். உண்மையில் தான் உண்டதும் தன் தந்தை உண்டதும் ஒரே பழம்தானா என அவனுக்குச் சந்தேகம் வந்தது. பற்பசையால் பல் விளக்குபவருக்கும், சாம்பல் உப்பில் விளக்குபவருக்கும், பல்லே விளக்காதபவருக்கும் வேறு வேறு ருசி தென்பட்டிருக்குமா என யோசித்தான்.  ஒரே நேரம் இதுதான் இமாம் பசந்த் என்றும் இது இல்லவே இல்லை என்றும் தோன்றி அவனைக் குழப்பியது. ஆறுமுகத்தின் தீர்மானமின்மை அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் சலித்துவிட்டார்கள். நடைமுறை வழக்கத்திற்காக இதுதான் இமாம் பசந்த் என ஒன்றுக்குச் சான்றளிக்க சொன்னார்கள். 'தம்பி உள்ளதுலயே இது ரொம்ப நல்ல ருசியாக்கும். ஆனா இது இமாம் பசந்த் இல்லய்யா' என்றார் ஆறுமுகம்.‌ அவனுக்கும் அது தீர்மானமாகத் தெரிந்தது. ஆனால் என்ன செய்ய? ஒப்புதல் கைசாந்து இட்டான். 'நெஞ்சறிய பொய் சொல்லலாமா. உங்கப்பன் ஆறுமுகம் வளத்த வளப்பு இப்படி சிரிச்சுபோச்சே' என விசும்பினார்.

அத்துடன் ஒரு தொகையை அவனிடம் அளித்து 'எங்களுக்காக பணியாற்றியதற்கு நன்றி. இனி நீங்கள் உங்கள் இஷ்டம் போல் எங்கும் செல்லலாம்' எனக் கூறி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார்கள். 'காரியக்காரனுவ கோவணத்த உருவிடுவானுவன்னு சொன்னனா இல்லியா' என வருத்தப்பட்டார் ஆறுமுகம்.

கார்மேகத்திற்கு எங்கு செல்வதெனத் தெரியவில்லை. முற்றிலுமாக மாறியிருந்த நகரத்தில் அவனுக்கு நடந்து கடப்பது விநோதமாக தென்பட்டது. முதியவர்களுக்கான சலுகைக் கட்டணப் பேருந்து எங்கோ தெற்கே வெகுதொலைவுக்குச் செல்வதாக சொன்னார்கள். ஏறி அமர்ந்தான்.

நிழலற்ற பொடிமணல் பாலையில் தொண்டை வரள நடந்து கொண்டிருந்தான். கால்கள் புதைந்தன. கீழே நோக்கியபோது கால் புதையும் அளவுக்கு மாம்பழங்கள் கிடந்தன. ஆவல் மின்ன கையில் அள்ளியதும் அவை பலூன் வெடிப்பதுபோல் வெறும் மணலாக உடைந்து ஊற்றியது. பித்தேறி எல்லாவற்றையும் வெறும் பொடிமணலாக ஆக்கினான். வியர்த்து கண்விழித்தபோது எங்கோ ஒரு சிற்றூரில் பேருந்து இளைப்பார நின்றிருந்தது. மெல்ல இறங்கி ஒன்றுக்கிருக்க போனவன் குத்துச்செடிகளும் புதரும் மண்டிய வெட்டவெளியைப் பார்த்தான். அடர்நீலத்து கரு ஊமத்தைகள் இதழ்விரித்து மண்டியிருந்தன. முள்படர்ந்த காய்கள். பச்சைநிறத் தோல் வெடித்து உதிரச்சிவப்பும் அந்தியின் பொன்நிறமும் கொண்ட சதைப்பகுதியும் விதைகளும் தென்பட்டன. வெப்பத்தில் தோல் எரிந்தது. கொப்பளங்கள் கிளம்பின. ஆறுமுகம் சலனமின்றி இருப்பதை உணர்ந்ததும் போதும் என முடிவெடுத்தான். சட்டென ஊமத்தை பழத்தை எடுத்து விழுங்கினான். திடுக்கிட்டு விழித்தவர் 'அப்பனக் கொல்லுறியா சண்டாளா' என கதறினார். இறுகிய முகத்துடன் கண்ணை மூடிக்கொண்டான். நாக்கிலிருந்து தொண்டைக்கு இறங்கும் முன் சட்டென விழிவிரிய கண்ணைத் திறந்தான். ஆச்சரியம் தொனிக்க ஊமத்தையைப் பார்த்து இருவரும் ஒரே நேரத்தில் 'இமாம் பசந்த்!' என்றார்கள்.No comments:

Post a Comment