Thursday, August 20, 2020

மோக முள் – ஒரு வாசிப்பு

TNPSC notes: தி.ஜானகிராமன்-தமிழ் அறிஞர்கள்

இந்த ஆண்டு தி.ஜா நூற்றாண்டு. தி. ஜானகிராமனின் சிறுகதைகள் பற்றி ஒரு கட்டுரை கனலி சிறப்பிதழுக்கு எழுதலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் என்னிடம் இருப்பது எழுபது கதைகள் கொண்ட ஐந்திணை வெளியீடாக வந்த பழைய தொகுதி. முன் அட்டையும் பின் அட்டையும் காணவில்லை. தவிர முன்னுரையின் சில பக்கங்களும் அக்கு அக்காக போய்விட்டன. புத்தகத்தை கையாளும்போது மேலும் கிழிந்து விடுமோ என அஞ்சி அதை எடுக்கவில்லை. முன்னரே வாசித்த மரப்பசு அம்மா வந்தாள் பற்றி எழுதலாம் என் யோசித்தால் மீள வாசிக்க சோம்பல். இப்படியாக ‘மோக முள்’ வாசிப்பது எனும் முடிவுக்கு தள்ளப்பட்டேன். அப்போதும் கூட அடி, நளபாகம் வாசிக்கலாம் என தோன்றியது. நாஞ்சில் நாடன் ‘செம்பருத்தி’ மோக முள்ளை விட நல்ல நாவல் என நேர்பேச்சில் ஒருமுறை பரிந்துரை செய்தது நினைவுக்கு வந்தது. இயல்பாக எழக்கூடிய கேள்வி – இத்தனை ஆண்டுகளாக ஏன் வாசிக்கவில்லை? வாசிப்பதில் என்ன தயக்கம்? தயக்கத்திற்கு முக்கியமான காரணம் இதன் தீவிர வாசகர்கள்தான். அவர்கள் இதை தாங்கள் பாபுக்களாக இருந்தபோது சந்திக்க நேர்ந்த யமுனாக்களை பற்றி நீர் கசிய தொண்டை நெகிழ பேசிப்பேசி இந்த காரணத்தினாலேயே இது தமிழின் முதன்மையான நாவல்களில் ஒன்று என்றார்கள். எப்படி முக்கியம்? எப்படி முதன்மையானது? என்றெல்லாம் கேட்டால் எங்களுக்கும் இந்நாவலுக்குமான உறவு  அந்தரங்கமானது என முற்றிலும் அகவயமான ஒரு பதிலை சொல்வார்கள். நம்மூரில் அந்தரங்கம் வேறு புனிதமானது ஆயிற்றே. ஆகவே மேற்கொண்டு எதையும் பேசாமல் நகர்ந்து விடுவேன்.. இது ஒரு விடலை பருவத்து காதலை நினைவேக்கமாக சொல்லும் கதை என்பதே என் மனப்பதிவாக இருந்தது. தேசிபாபா பார்த்து வளர்ந்த தலைமுறையில் வயது வித்தியாச காதல் பெரும் கிளர்ச்சி தரும் பேசுபொருளாக, அதுவும் இருபத்தி மூன்று வயதிற்கு மேல் நான் வாசிக்க தொடங்கிய காலத்தில், என்னை ஈர்க்கவும்  இல்லை. 

அணுக்க வாசகர்களே ஒரு ஆக்கத்திற்கு சத்ருக்களாக ஆகிவிடுவதும் உண்டு. இவற்றை மீறி எப்போதும் மோக முள் வாசிக்க வேண்டும் எனும் குறுகுறுப்பு உண்டு. இப்போது முப்பத்தி நான்கு வயதில் முதன்முறையாக மோகமுள் வாசித்து முடித்தேன். ஒருவேளை நானும் என் பதின்மத்தில் இந்நாவலை வாசித்திருந்தால் இது அந்தரங்கமான நாவலாக இருந்திருக்க கூடும். இப்போது எனக்கு இந்நாவல் முக்கியமானது தான். ஆனால் வேறுவகையில். 

 ‘மோக முள்’ ஒரு காதல் கதையா? காதல் கதையும் தான் ஆனால் காதல் கதை மட்டுமல்ல. இதை சமூக ஒழுங்கிலிருந்து விலகிய காதல் கதையாக, நினைவேக்க கதையாக சுருக்கி நிறுவியது ஒரு பிழை. நான் இந்நாவலை எப்படி வகுத்துக் கொள்வேன்? மூன்று அடுக்குகள் கொண்டது இந்நாவல். மனிதனின் ஆன்மீக லட்சியத்திற்கும் அதை அடைய விடாமல் இழுத்தடிக்கும் உலகியலுக்கும் இடையிலான ஊசலாட்டம் என்பது ஒன்று. கலைக்கும் கலைஞனுக்கும் இடையிலான உறவு என்ன என்பதை பரிசீலிப்பது இரண்டு. மனித உறவுகளை பற்றிய சாராம்சமான கேள்விகளை கொண்டது மூன்று. நாவலின் கதை மாந்தர்கள் மூன்று தளங்களுக்கும் ஊடாடி வருகிறார்கள்.   

முதல் இரண்டு கேள்விகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. நாவலின் ஆன்மீக தளம் என்பது நாத யோகம் மற்றும் தேவி உபாசனை என இரு தளங்களை கொண்டது. ரங்கண்ணாவை சந்திக்கும் முன்னரே பாபு இசை என்பது ஒரு தியானம். ஆன்ம சாதகத்தின் வழி எனும் அடைதலை ராஜத்திடம் பகிர்ந்து கொள்கிறான். இசை வெளிப்படுவதால் தான் அதன் மகத்துவம் தெரிகிறது என்பது ராஜத்தின் வாதம். அப்படி எதுவும் அவசியமில்லை என்பது பாபுவின் தரப்பு. ஏறத்தாழ பாபுவின் தரப்பின் உருவமாக தனது கலையையே ஆன்மீக சாதனையாக வரிந்து கொண்டவர் ரங்கண்ணா. நாத பிரம்மமாகி கலந்து விடுபவர். கலைஞனின் லட்சிய பேருரு. ‘உலகமே ஒரு இசையில் ஓடும் பாவுமாக இழைந்து ஒலிக்கிறது.’ லய யோகம் அல்லது நாத யோகம் என சொல்லலாம். ரங்கண்ணாவிற்கு ‘தீயும் சூடும் போல சுருதி சேர்கிறது,’ இப்படியான இரண்டற்ற நிலையை கலையின் வழி அடைய முற்படுவதே பாபுவின் இலக்கும் கூட.சில்வண்டு, காக்கா, நள்ளிரவு ஒலிக்கும் ரிக்ஷா என எல்லாவற்றையும் ஸ்வரமாக காணும் பேறு ரங்கண்ணாவால் அவனுக்கு அளிக்கப்படுகிறது. சீடர்கள் சூழ இசையை கேட்டபடி ரங்கண்ணா உடலை உதிர்க்கும் சித்திரம் என்றன்றைக்கும் மனதை நிறைப்பது. 

bol.com | மோக முள் / Moga Mul (ebook), தி ...
பாபுவின் தந்தை வைத்தியும் ஒரு பாகவதர். அவர் இரவெல்லாம் ஜபித்து கொண்டே இருப்பவர். அவர் வழியாக அவருடைய குரு ராஜூ பாபுவிற்கு அறிமுகம் ஆகிறார். அவருடைய காமாட்சி தரிசன கதை ஒரு நாட்டார் தன்மை உடையது என சொல்லலாம். ‘ராஜூ கடவுளை தாயாக உபாசிக்கிற சம்பிரதாயத்தில் சித்தி கண்டு அருள் கண்டவர்.’ என வைத்தி குறிப்பிட்டு பாபுவிற்கு மந்திர உபதேசம் அளிக்கிறார். இந்த உபதேசம் பெறுவதற்கு முன்னரே இப்படியான ஒரு வழிமுறையை உற்ற நண்பன் ராஜத்திடம் இருந்து அறிந்து கொள்கிறான். இது சார்ந்து அவர்களுக்குள் நிகழும் உரையாடல் சுவாரசியமானது. ஒரு பெண்ணை வணக்கத்திற்குரியவளாக வரிந்து கொண்டபிறகு அவளுடைய நடத்தை வேறானதாக இருந்தால், அவள் நீ எண்ணும் அளவிற்கு தூய்மை இல்லாதவளாக இருந்தால் அப்போதும் நீ வணங்குவாயா என்று ராஜத்திடம் கேள்வி எழுப்புகிறான். அதற்கு பதில் அளிக்கும் ராஜம் அவளுக்கு என்னவானாலும் அதுவொரு பொருட்டல்ல. என்னளவில் அவள் தூய்மையானவள். தொழத்தகுந்தவள் என்கிறான். இந்தப் புள்ளியில் இருந்தே பாபு- யமுனா உறவை பரிசீலிக்க முடியும்.   

உண்மையில் பாபுவிற்கு யமுனா யார்? இது ஒரு தொடர்கதையாக எழுதப்பட்டது என்பது நினைவிலிருக்க வேண்டும். நாவலின் தொடக்கத்தில் யமுனா அத்தனை அழகுள்ளவளாக கம்பீரமானவளாக எல்லாம் சித்தரிக்கப்படவில்லை. யமுனாவையும் அவளுடைய தாய் பார்வதியையும் சேர்த்து நோக்கினால் பார்வதி தான் அழகு என குழந்தையும் சொல்லிவிடும் என்கிறார். யமுனாவின் முகத்தில் அத்தனை முழுமை அல்ல என வேறு சொல்கிறார். யமுனாவா பார்வதியா? யாரை தொடர்வது என்பதில் அவருக்கு ஒரு ஊசலாட்டம் இருந்திருக்க கூடும் என ஊகிக்க முடிகிறது. அடுத்த அத்தியாயத்தில் யமுனா என முடிவாகி அவள் அவருடைய இதயத்தில் குடி கொண்ட தெய்வமாக ஆகிறாள். ஏறத்தாழ யமுனாவின் சகோதரனை போல், அவள் மடியில் உறங்கி, ஆவலுடன் விளையாடி வளர்பவன். அவளுடைய திருமணத்திற்காக கோவையிலிருந்து வரும் மாப்பிள்ளையை அழைத்து வருபவன், அவர் அவமதித்ததும் சண்டைக்கு நிற்கிறான். அவள் மீதான காதலையும் உணர்ந்து கொள்கிறான். நாவலின் கடைசியில் முதிர் கன்னியாகிப்போன நாற்பது யமுனாவுடன் உறவு கொள்கிறான். அவள் அவனிடம் “இதற்குத்தானா?” என கேட்டு “இதற்குத்தான்” என பதிலும் சொல்கிறாள். எது புனிதம்? எது இழிவு? ஒன்று மற்றொன்றாக தலைகீழாக்கம் பெறுகிறது. நாவலின் தொடக்கத்தில் காவேரியும் கும்பகோணமும் பற்றிய விவரணை அதையே சுட்டுகிறது. ‘இவ்வளவு புழுதி, இவ்வளவு சாக்கடைத் தேக்கங்கள் எல்லாவற்றையும் பற்றி நினைக்கக்கூட நினைக்காமல் ஒரு கவலை இல்லாமல் இருக்கும் இந்த ஊருக்குக் கூட அழகு உண்டு என்று இந்த காவேரி மன்றாடிக் கொண்டிருக்கிறது.’ காவேரி கலை அலல்து ஆன்மீக அருள் என கொள்ளலாம். அழுக்குகளை பொருட்படுத்தாமல் அது ஓடிக்கொண்டிருக்கிறது. தங்கம்மா அறிமுகம் ஆகி மனம் சபலமடைந்த தருணத்தில் ‘காவேரி புனிதமாக ஓடிக்கொண்டிருந்தது. இவ்வளவு வேகம் எதற்கோ? சொல்லைக் காப்பாற்றதவர்களின் கண் அவ்வளவு சுடுமா? அந்தச் சூடு தாங்காமலா தப்பித்து ஓடுகிறது இந்தப் பிரவாகம்? அகவுவமான மனிதர்களை கண்டு தூர விலகும் விரைவா?’ என எழுதும்போது இந்த உருவக நேர்த்தி முழுமை அடைகிறது. ஓடும் காவேரி படைப்பூக்கத்திற்கு அல்லது ஆன்ம ஒளியை குறிக்கிறது என்றால் தி.ஜா தேங்கிய நீரை என்னவாக சித்தரிக்கிறார் என்பதை வகுத்துக்கொள்ள வேண்டும். யமுனாவை பெண் பார்க்க வந்தவருடன் சண்டையிட்டு எரிச்சலில் திரும்பும் போது கும்பகோணம் கோவில் குளத்தை பற்றிய ஒரு சித்தரிப்பு வருகிறது. ‘குளத்தின் வடமேற்கு மூலையில் பெரிய மண்டபத்தை நெருங்கும் போது, மூலையில் நுரையும் பத்தையுமாகப் பாசிக் குப்பலின் நாற்றம் வயிற்றைக் குமட்டிற்று. குமட்டலைத் துப்பினபோது கண்ணில் ஜலம் வந்துவிட்டது அவனுக்கு அந்தப் பாசிக்குப் பக்கத்திலேயே ஒரு கூட்டம் துணிகளுக்கும் தோலுக்கும் சோப்பைப் போட்டுக் கழுவிக்கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சகித்து சகித்து இந்த நாற்றத்தில் திளைக்கப் பழகி கொண்டுவிட்டார்கள். பாபுவுக்கு கோபம் கோபமாக வந்தது. கோயம்புத்தூர்க்காரர், யமுனா, பார்வதி, குளத்தில் குளிப்பவர்கள்- எல்லார்மீதும்தான்.’ இங்கே தேங்கிய நீர் உலகியல் வாழ்க்கை, அல்லது குடும்ப – சமூக அமைப்பு என பொருள் கொள்கிறது. குடும்ப சூழல் காரணமாக முதிய கணவனை திருமணம் செய்துகொண்ட தங்கம்மா மகாமக குளத்தில் தான் இறந்து தற்கொலை செய்து கொள்கிறாள். குளம் தொடர்ச்சியாக உயிர்களை பலிவாங்கிக்கொண்டே இருக்கிறது. காவேரி எனும் கட்டற்ற பிரவாகமும் குளம் எனும் தேங்கிய நீரும் எதிரெதிர் உருவகங்களாக நிலைபெறுகின்றன.    

பாபு யமுனா உறவில் கவனிக்கத்தக்க சில புள்ளிகள் உள்ளன. ‘தூய்மையின் காலடி படும் ஒவ்வொரு இடமும் புனிதமாகிவிடுமா? எல்லையில்லாத சக்தியை ஊட்டும் அருளாக கனிவது போலிருக்கிறது.’ என யமுனாவின் இருப்பை பற்றி எழுதுகிறார். யமுனா இங்கே காவேரிக்கு இணை வைக்கப்படுகிறாள். நதிகளின் பெயர்களில் உள்ள ஒப்புமையையும் கவனிக்கலாம். அதன் வழியாக உள்ளே பொங்கும் படைப்பூக்கத்திற்கும் ஆன்மீக நிலைக்கும் கூட இணை வைக்கப்படுகிறாள்.  அவர்களுள் உறவு நிகழ்வதற்கு முன் ‘ஜுரத்தில் இருக்கும்போது ‘உலகத்து ஆறுகள் எல்லாம் கணவனான கடலை தான் இறுதியில் அடைகின்றன. எந்த தேவனுக்கு வணக்கம் செய்தாலும் அது கடைசியில் பரம்பொருளைத் தான் அடைகிறது என்று தினமும் சொல்லுகிற செய்யுள் பாபுவின் மனதில் ஒலித்தது.’ என எழுதுகிறார். காமாட்சியை காணும்போது பாபு சொல்கிறான்- ‘பெயருக்கு தகுந்தார்போலத்தான் இவளைக் கல்லில் வடித்திருக்கிறான் சிற்பி. அதைப் பார்க்க பார்க்க என்னமோ செய்கிறது எனக்கு. மேலே போகக் கூட இந்த வாசல் வழியாகத்தான் போக வேண்டியிருக்கிறது.’ யமுனா அவனுடைய ஆன்மீக உன்னதத்திற்கான வாசல் என்றே அவன் நம்புகிறான். தங்கம்மா மீது அவனுக்கு இருப்பது கிளர்ச்சி. அந்த வேறுபாடும் பதிவாகிறது. ‘வெறுப்பது நியாயம் தானா? வெறுத்து வெறுத்தா அருளை அடைய முடியும்? அவளை வணங்கி வணங்கி வெறுப்பை வண்ணக்கமாக மாற்றிவிட்டால் என்ன?ஆனால் மனதிற்குள் தகாதபடி வந்து நிற்கிறாள்.’ தங்கம்மாவிடம் பாபுவிற்கு இருந்தது மோகம் என்பதும் யமுனாவிடமிருந்தது அதுவல்ல என்பதும் தெளிவாகிறது.  தங்கம்மாளின் இந்த சித்தரிப்பு காதுகளின் நாசகாளியை எனக்கு நினைவுறுத்தியது. பெண் அருளும் அன்னையாகவும் வீழ்த்தும் மாயையாகவும் உருக்கொள்கிறாள். ‘மோக முள் முப்பதுநாள் குத்தும் பின்ன மழுங்கிப்போயிடும்பாங்க..எட்டின மோகம் மட்டும் இல்லை எட்டாத மோகமும் அப்படித்தான். ஆனா நீ அப்படி இல்லை.’ என்கிறாள் யமுனா. இதன் வழியாக அந்த வேற்றுமை சுட்டிக்காட்டப்படுகிறது. நாவலின் இறுதியில் ‘சபரி ராமனை வரவேற்றது போல் உன்னை வரவேற்பது சந்தோஷமாக இருக்கிறது.’ என சொல்வதன் வழியாக உபாசகன்- தேவதை உறவு தலைகீழாககப் படுகிறது. ‘உடலையும் உள்ளத்தையும் செருப்பாக தைத்து போடும் இந்த வாழ்வை எப்போதாவது கனவு காண முடியுமா நம்மால்?’ என பாபு வியந்துகொள்கிறான். அவன் காத்துக்கொண்டிருந்த அருளின் கனிவு அது. வைத்தியை பார்வதியுடன் தொடர்பு படுத்தி பேசும் பட்டப்பாவை பற்றி சங்கு சொன்னபோது ‘பாபுவுக்கு ஒரே குழப்பமாயிருந்தது. சரீர சம்ப்வந்தத்தைத் தவிர வேறு ஒன்றுமே மனிதர்களுக்கு புரியாதா? வேறு தினுசாக எதையும் அர்த்தம் செய்துகொள்ளும் கற்பனையே இல்லையா?’ என எழுதுகிறார். இங்கிருந்து நாம் ‘இதற்குத்தானா?’ எனும் கேள்விக்கு ஒரு இணைப்பை இட்டுக்கொள்ளலாம். யமுனா பாடலை கேட்ட பிறகு சொல்வது ‘ஆமாம் நல்லதா ஒண்ணை அனுபவிச்சதுக்கப்புறம் உசிரோட இருக்கலாமா? மறுபடியும் மன்னிலேதானே வந்து புரள வேண்டியிருக்கு’ என்கிறாள். பாபு ஆட்கொள்ளப்பட்டதை பற்றி சொல்லும்போது ‘ஆனால் எங்கேயோ தொத்திண்டு இருக்கிற கம்பியிலே இடி மின்னல் இறங்குவது போல அது வந்து இறங்கி என்னை ஸ்தம்பிக்க அடித்துவிட்டது.’ என எழுதுகிறார். பாபு- யமுனா என இருவருக்குமே இங்கு இருநிலைகள் உண்டு. மண்ணிலிருந்து மீண்டும் மீண்டும் விண்ணுக்கு எழும்ப முயல்பவர்களாக இருக்கிறார்கள். பாபு- யமுனா உறவை தரைத்தளத்திலும் அதன் உன்னத தளத்திலும் இணைத்தே புரிந்துகொள்ள வேண்டும். இந்த இரு நிலைகளுக்கு இடையிலான முரணே நாவல் என சொல்லலாம்.   

பாபு யமுனா உறவு என்பது நாவலின் முக்கியமான சரடுகளில் ஒன்று. பாபு- ராஜம் நட்புறவு, பாபு- ரங்கண்ணா குரு சீட உறவு, வைத்தி- பாபு தந்தை மகன் உறவு ஆகியவை ஏறத்தாழ இதேயளவு முக்கியதத்துவம் வாய்ந்தவை. பாபு- யமுனா உறவை யதார்த்த தளத்தில் இன்று எழுதுவது எளிது, ஆனால் உண்மையில் பாபு- ராஜம் நட்புணர்வு போன்ற ஒன்றை நம்மால் யதார்த்த தளத்தில் இன்று எழுத முடியுமா என்றொரு கேள்வியை எழுப்பிக்கொண்டேன். அப்படி இயலாமல் போனதற்கு மாறிப்போன இலக்கிய/ வாழ்க்கை எப்படி காரணம் என யோசித்துக் கொண்டிருந்தேன். நாவலில் எம்.வி.வி ஒரு சிறிய பாத்திரமாக வருகிறார். அவருடைய ஆளுமை சித்திரம் நன்றாக பதிவாகியுள்ளது. கு.ப.ராவின் ஒரு கதை குறிப்பிடப்படுகிறது. மோக முள் நாவலில் வரும் தண்டபாணி அய்யர் பற்றிய சித்திரம் கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடத்தில் காட்டப்படும் ஒரு சித்தரிப்பின் தொடர்ச்சி என சொல்லலாம். தண்டபாணி அய்யர் அன்னதாதா என பிராமணர்களுக்கு உணவிட்டு பெயர் எடுத்தவர். பிற சாதிகாரர்களை துரத்தி விடுபவர். அக்காவின் சொத்தை ஏமாற்றி கையகப்படுத்தி கொள்பவர். மற்றொரு இடத்தில் சிறு வயதிலேயே முண்டனம் செய்து விதவையாகும் பாட்டியை பற்றிய சித்திரத்தின் வழியாக சமூக விமர்சனத்தை முன்வைக்கிறார். பெண்களின் நிலை பற்றியும், சாதி பற்றியும் சில விமர்சனங்கள் வந்து செல்கின்றன. காந்தியின் மரணம் கூட நினைவுக்கூரப் படுகிறது.

பாபு- யமுனா- தங்கம்மா முக்கோணம் போலவே ரங்கண்ணா- பாபு- பாலூர் ராமு என்றொரு முக்கோணமும் உருகொள்கிறது. கர்நாடக இசை வடக்கிந்திய இசைக்கும் இடையிலான வேறுபாடு சார்ந்து ஒரு விவாதமும் நாவலுக்குள் நிகழ்கிறது. வடக்கத்திய பாடகரான விஸ்வம்பர காணே பாபுவின் மற்றொரு லட்சியம். அவரிடமே பாபு இசை பயில இறுதியாக செல்கிறான். பாலூர் ராமு தொடக்கத்தில் நிராகரிக்கப்பட வேண்டிய போலி கலைஞன் என்றே கருதப்படுகிறார். நாவலின் இறுதியில் வெகு மக்களுக்கு கலையை கொண்டு செல்ல சமரசம் செய்துகொண்டாலும் நல்ல கலைஞன் எனும் பரிணாமத்தை அடைகிறார். கலை குறித்த லட்சியவாத உரையாடல்கள் பலவும் இங்கு நிகழ்கின்றன.

இவை அல்லாது நாவல்களில் பல சிறு கதை மாந்தர்கள் புழங்குகிறார்கள். யமுனாவின் அண்ணா சுந்தரம், பாபுவின் அண்ணன் சங்கு, பெரியப்பா, அக்கா. சிறுவயதில் டெட்டனஸ் வந்து இறந்து போகும் அக்கா மகள் பட்டு. பட்டுவின் சித்தரிப்பு எனக்கு லாசராவின் அபிதாவை நினைவுபடுத்தியது. பிறகு தி சாவின் சொற்களில் காவேரியும் கும்பகோணமும் வெகு சுகம். கல்லூரிக்கு படகில் ஏறி செல்கிறார்கள். இடைவேளையில் கானோ ஓட்டுகிறார்கள் என்பதெல்லாம் இன்றைய கும்பகோணத்தில் கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை.      

நாவலின் சிக்கல்கள் எவை? முதன்மையாக தொடர் கதையாக எழுதுவதாலேயே நேரும் சிக்கல்கள் என சிலவற்றை சொல்லலாம். பாத்திரங்கள், முடிவுகள் கணப் பொழுதில் நிகழ்ந்து விடுபவையாக உள்ளன. ராஜத்தின் மனமாற்றம், யமுனாவிடம் பாபு சொல்வது, மீண்டும் சொல்வது, யமுனா ஏற்பது என பல முக்கிய தருணங்கள் கணநேர உந்துதல் வழியாகவே சொல்லப்படுகிறது. எதை தேர்வது? எதை வளர்ப்பது? எதை கைகொள்வது போன்றவற்றில் இருக்கும் தடுமாற்றங்கள் சில இடங்களில் புலப்படுகின்றன. இதை ஒரு அழகியல் பிழை என்றே மனம் கருத்தில் கொள்கிறது. நாவல் வாசித்து முடித்ததும் மெல்லிய ஏமாற்றமே மேலோங்கியது. காரணம் நாவலின் முரண்களும் முடிசுகளும் வலுவாக உருவாகியிருந்தது அந்த வலு முடிவில் இல்லை. மிகவும் கற்பனாவாதத்தன்மை கொண்ட முடிவு என்றே தோன்றியது. தி.ஜா நாவலில் எல்லாம் எப்படி நடந்திருக்க வேண்டும் என நான் விரும்பினேனோ அப்படி எழுதி இருக்கிறேன் என எழுதி இருக்கிறேன் என்கிறார். எப்படி வந்திருக்க வேண்டுமோ அப்படி வந்திருந்தால் இந்நாவல் எடுத்துக்கொண்ட பேசு பொருட்களுக்கும் உருவகங்களுக்கும் நியாயம் செய்திருக்கும் எனத் தோன்றியது. தி ஜாவின் கூறுமுறையில் உள்ள சிக்கல் என்பது வாசகர் மீது அவர் கொள்ளும் அவநம்பிக்கை என சொல்லலாம். யானையை சித்தரித்தாலே வாசகன் அது யமுனாவை குறிக்கிறது என உய்த்து கொள்ள முடியும். ஆனால் பின்னர் அதையும் அவரே விளக்கி சொல்கிறார். எனினும் இவை அனைத்தையும் மீறி மோக முள் இன்றும் வாசிக்க வேண்டிய, வாசிக்கத்தக்க முக்கிய நாவலாகவே இருக்கிறது.    


.

4 comments:

  1. யமுனா, பாபு உறவுக்குள் புதைந்துள்ள மோகத்தின் சரடு காதலாக நீட்சி பெரும் எழுத்து காவிரி ஓட்டமாக அமைந்த விமர்சன நடை. இது தான் விமர்சன கலை. சிறப்பு. வாழ்த்துக்கள்

    ReplyDelete