Wednesday, June 3, 2020

விமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும்(விஷ்ணுபுரம் ஊட்டி காவிய முகாமில் மே 6 ஆம் தேதி ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம். பதாகை இதழில் வெளிவந்தது)

தேர்ந்த விமர்சகனின் இயல்புகள் எவை? விமர்சகனின் பங்களிப்புகள் எத்தகையவை? விமர்சகன் தவறும் இடங்கள் எவை? இக்கேள்விகளையொட்டி விமர்சனத்தின் சவால்களையும், முறைமைகளையும் இக்கட்டுரை விவாதிக்க முனைகிறது.

எதற்காக வாசிக்கிறேன்? கலை யாருக்காக? எழுத்தாளன் கருவியா, கர்த்தாவா? இலக்கியத்தின் பயன்மதிப்பு என்ன?- என காலம்காலமாக விவாதிக்கப்படும், இறுதி விடை என ஏதும் எட்டப்படாத, சில கேள்விகளை முதலில் விமர்சகன் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அக்கேள்விகளுக்கான விடையைப் பொருத்தே அவனுடைய விமர்சன அளவுகோல் உருவாகிறது.

எதற்காக வாசிக்கிறேன் எனும் கேள்விக்கான விடை ‘இதன் அழகியல் நுட்பங்களில்’ லயிப்பதற்காக என்றிருக்கும்போது என் விமர்சனப் பாணி ரசனை விமர்சனமாகவே இருக்கும். ரசனைப் பாணியை நான் முன்னெடுக்கிறேன் என்பதன் பொருள், மார்க்சிய, கட்டுடைப்பு, நவ-வரலாற்றுவாத, பெண்ணிய மற்றும் இன்னபிற கோட்பாடுகளின் மீதான அக்கறை எனக்கு இரண்டாம் பட்சம் என்பதே. ஒரு படைப்புருவாக்கத்தின் சமூக ஆற்றல்களின் பங்களிப்புகளை அறிந்து கொள்வது ரசனை வாசிப்புக்கு அடுத்தபடியான மேலதிக ஆர்வம் என்ற அளவில் அதற்கொரு இடமுண்டு என்பதையும் மறுக்கவில்லை.

ஹெரால்ட் ப்ளூம் அழகியல் வாசிப்பைத் தவிர பிற அனைத்தையும் வாசிப்பே அல்ல என்கிறார். இலக்கியத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என்று காட்டமாகவே சொல்கிறார். பிற வாசிப்புகளை முழுமையாக நிராகரிக்க முடியாது என்பதே நான் அவரிடமிருந்து வேறுபடும் புள்ளி. ஆனால் ஒரு படைப்பின் பெறுமதியை நிலைநாட்ட அது உருவான சமூக, வரலாற்று, அரசியல் பின்புலத்தை காரணமாக முன்வைக்கக் கூடாது. பிரதியின் அழகியல் வாசிப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு அரசியல் காரணங்கள் அதன் இடத்தை நிர்ணயிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அழகியல் ரீதியாக சாதாரண படைப்புகள் அரசியல் உள்ளடக்கத்தின் காரணமாக விதந்தோதப்படுவது இலக்கியச் செயல்பாடுக்கு எதிரானது. அழகியல் வாசிப்பிற்கு மேலதிகமாக கோட்பாட்டு சட்டகங்களை பயன்படுத்தும்போது அது வாசிப்பை மேன்மை செய்யும் வாய்ப்பு உண்டு. நவீன மனிதன் எப்படி உருவாகி வருகிறான், அவனுடைய கவலைகள் எத்தகையவையாக உள்ளன, என்பதை சமூக வரலாற்று சூழலைக் கருத்தில் கொண்டு வரையறை செய்யும்போது ஒரு இலக்கிய பிரதியின் உருவாக்கத்தை மேலதிகமாக உள்வாங்க முடிகிறது. ஜார்ஜ் ஆர்வெல்லை புரிந்துகொள்ள ஐரோப்பிய சர்வாதிகாரத்தின் வரலாறு தெரிந்திருப்பது வாசிப்பை ஆழப்படுத்துகிறது.


ப்ளூமின் பிரசித்தி பெற்ற மேற்கோள் ஒன்றுண்டு- “ஷேக்ஸ்பியரை ஃபிராய்டிய கண்ணோட்டத்தில் வாசித்தால் அது குறைத்தல்வாதம், நாம் பெறுவதற்கு எதுவுமே இல்லை, ஆனால் ஃப்ராய்டை ஷேக்ஸ்பியரின் கண்ணோட்டத்தில் வாசிக்கும்போது பல புதிய கோணங்களை திறக்கும்”. கோட்பாட்டு விமர்சனங்கள் வழியாக புனைவுகளைப் அறிவதைக் காட்டிலும் அக்கோட்பாட்டைப் பற்றிதான் நாம் அதிகம் அறிகிறோம். கொஞ்சம் மெனக்கிட்டு வாசித்தால் நாம் கோட்பாடுகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ளலாம். புதிய நுட்பங்கள் என எதுவும் அங்கு வந்து சேர்வதில்லை. எனினும் காலப்போக்கில் புதிய கோட்பாடுகள், வரையறைகள் உருவாகியவண்ணம் இருக்கின்றன. ரசனை ரீதியாக முக்கியத்துவம் பெற்ற படைப்புகளின் மீதான மேலதிக வாசிப்பை அளிக்கும் வகையில் உலகம் முழுவதும் கோட்பாடுகள் பயன்படுத்தப்படும் சூழலில், தமிழில் மட்டும் தேர்ந்த படைப்புகளை உதாசீனப்படுத்துவதற்கே அவை பயன்படுத்தப்படுவது விந்தைதான்.

புனைவுகளைச் சமூக மாற்றத்திற்கான கருவியாக காண்பது இங்கு பெண்ணிய, தலித்திய (பொதுவாய் அரசியல் அதிகாரத்தை மையப்படுத்தும்) வாசிப்பு. விடுதலையைப் பேசவில்லை என்றால் அதை அவர்கள் ஏற்பதில்லை. வர்க்கப் போராட்டத்தில் புனைவின் நிலைப்பாடு என்ன, இப்பிரதி அதை துரிதப்படுத்துமா, என்ற கேள்விகளே மார்க்சிய கவலையாக இருக்கிறது. நவவரலாற்றுவாதிகள் இப்புனைவு எங்கே அதிகார மாற்றம் அல்லது அதிகாரக் குவிப்பை நிகழ்த்த உத்தேசிக்கிறது, எவருடைய பிரதிநிதி என்று கேட்கின்றனர். இந்த புனைவை உருவாக்கிய சமூக, வரலாற்று காரணிகள் எவை என ஆராய்கின்றனர். நவவரலாற்றுவாதம் எழுத்தாளனின் பங்களிப்பை மறுக்கிறது. சமூக வரலாற்று காரணிகள் திரண்டு நிற்கும்போது அதை வெளிப்படுத்தும் ஊடகமாக மட்டுமே எழுத்தாளன் இருக்கிறான் என்கிறது. கவிஞரும் விமர்சகருமான டி.எஸ். எலியட் அவருடைய புகழ்பெற்ற ‘மரபும் தனித்திறமையும்’ எனும் கட்டுரையில் வேறு வகையில் எழுத்தாளனை மறுக்கிறார். எழுத்தாளன் ஒட்டுமொத்த கவிமரபைக் கற்றவன். அவன் வழியாக ஏற்கனவே உள்ளவை தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன என்கிறார். எழுத்தாளனின் தனித்தன்மையைத் தேடித் தேடி கொண்டாடுவதையே அவர் ஏற்க மறுக்கிறார்.

இதுவரை பேசப்பட்ட மேற்கத்திய கோட்பாடுகளை அப்படியே இறக்குமதி செய்யாமல் அவற்றுக்கு மாற்றாய் இந்தியச் இலக்கியச் சட்டகங்களை உருவாக்க வேண்டும் எனும் வாதம் கவனத்துடன் பரிசீலிக்கப் படவேண்டும். அதுவும் மற்றுமொரு கோட்பாட்டு விமர்சனமாகி விடலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வாசிப்பு என்பது தனித்த அந்தரங்க செயல்பாடு என்பதே ரசனை விமர்சனத்தின் அடிப்படை.

எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் என்னவிதமான தொடர்பு உள்ளது எனும் கேள்வியை நாம் எழுப்பிக்கொண்டால் நம் விமர்சன முறைமை மேலும் துலக்கமாகும். எழுத்தாளனின் தனித்தன்மையை, திறமையை, உழைப்பைக் கொண்டாடும்போது ரசனை விமர்சனமாகவும் அவனை மரபின் குரலாக அல்லது சமூக ஆற்றலின் குரலாகக் காண்பது கோட்பாட்டு விமர்சனமாகவும் ஆகும். ஏனெனில் இதன் உட்பொருள் மரபோ, சமூக ஆற்றல்களோ தமது ஊடகத்தை தேர்ந்து எடுக்கின்றன என்பதே. ஷேக்ஸ்பியரோ தால்ஸ்தாயோ தாஸ்தாயேவ்ஸ்கியோ இல்லையென்றால் வேறொருவர் வழியாக இவை வெளிப்படும் எனும் நம்பிக்கையை அடிநாதமாகக் கொண்டவை. எழுத்தாளன் கருவியா, கர்த்தாவா, என்ற கேள்விக்கு என்னிடம் தீர்மானமான விடையில்லை. கர்த்தா என நம்ப விழைந்தாலும் அவன் கருவியாகவும் இயங்குகிறான் என்றே தோன்றுகிறது. எனினும் கருவியாக கலையை வெளிபடுத்தக்கூட எழுத்தாளன் தொடர்ந்து தன்னைக் கூர்மை செய்து, முனைப்புடன் அயராத உழைப்பை செலுத்த வேண்டியிருக்கிறது. அதற்கொரு தனியாளுமை உருவாக வேண்டும்.

பொதுவாக மார்க்சிய/ நவவரலாற்றுவாத சட்டகங்கள், அல்லது அது போன்ற பிற கோட்பாட்டுச் சட்டகங்கள், நாம் அறியாமலேயே நமக்குள் இருப்பதைக் கண்டடைவதே விமர்சகனின் சவால். எனக்குள் ஒரு நவவரலாற்றுவாதி இருந்ததை விமர்சன முறைமை குறித்தான வாசிப்புகள் வழியாக கண்டடைந்து திகைத்தேன். ஒருவேளை அதுதான் நாம் செல்ல விரும்பும் பாதை என்றால், அதற்குமுன் புனைவின் பயன்மதிப்பு என்ன எனும் கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். புனைவுகள் சமூக மேம்பாட்டிற்கான கருவி எனும் நம்பிக்கை நம்மிடமிருந்தால் நாம் ரசனை விமர்சகர் அல்ல.

இத்தருணத்தில் வு மிங் யி யின் சொற்களை பொருத்திக் கொள்கிறேன் “சில நேரங்களில் எல்லா கலைகளுமே கடைசியில் சுயநலம் மிகுந்தவை என்று தோன்றுகிறது, அது பிறர் மனதில் உறுதியாக மாற்றம் ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது- ஆனால் என்ன மாறுகிறதோ அதை நாம் மட்டுமே அறிய முடியும்”. ப்ளூம் நாம் இலக்கியத்தின் வழியாக மேம்படுவோம் என்பதை மறுக்கிறார். நம் அகக்குரல், இன்னும் சற்று துல்லியமாக கேட்கும் என்பதை மட்டுமே இலக்கிய வாசிப்பின் பயன்மதிப்பு என்கிறார். இலக்கிய பிரதிகள் சமூகத்தை மேம்படுத்துமா, வரலாற்றுப் போக்கை மாற்றியமைக்குமா, என்று கேட்டால், அப்படி நிகழ வாய்ப்புள்ளது. சில முன்னுதாரணங்களையும் சுட்ட முடியும். ஆனால் இத்தகைய நோக்கத்தை பிரகடனப்படுத்திக்கொண்டு ஒரு இலக்கியம் படைக்கப்படுமேயானால் அதன் ஆதாரமான கலையம்சம் காணாமல் போய்விடும் அபாயம் உண்டு.

முதன்மையாக, விமர்சகன் ஒரு வாசகன்தான். ஆனால் வாசகனுக்கு இருக்கும் தேர்வும் சுதந்திரமும் விமர்சகனுக்கு இருப்பதில்லை. அவனுக்குரிய கூடுதல் பொறுப்பின் காரணமாக அவனுக்குப் பிடித்தது, பிடிக்காதது எனும் பேதமின்றி, வசதிகளை துறந்து, அவனை சங்கடப்படுத்தும், நேரத்தை விழுங்கும், புதிய உலகிற்குள்ளும் பயணித்தாக வேண்டும். பெரும்பாலான சமயங்களில் இது அவனுக்கு வாதையாக இருந்தாலும்கூட, வேறு எவரும் கண்டடையாத ஒன்றை, ஒரு புதிய வாசிப்பைக் கண்டறிந்து அதை உலகிற்கு அறிவிக்கும் சாத்தியம் அவனை இயக்குகிறது. அரிதான தருணங்களில் அப்படி நிகழும்போது ஏற்படும் போதையே அவனுக்கு இப்பாதையில் பயணிக்க ஆற்றல் அளிக்கிறது.

தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களே விமர்சகர்களாகவும் இருப்பதால் இங்கு ரசனை விமர்சனமே மேலோங்கியுள்ளது. எழுத்தாளன் விமர்சகனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு சக எழுத்தாளனிடமும், முன்னோடிகளிடமும் கற்றுக்கொள்ள, உள்வாங்கிக்கொள்ள ஏராளமான நுட்பங்கள் கிட்டும். உள்ளூர அவன் தனது கலையுடன் ஒப்பிட்டு சுயமதிப்பீடு செய்துக்கொண்டே வருவான். ஆனால் எழுத்தாளன் விமர்சகனாக இருப்பதில் சில சிக்கல்கள் இல்லாமல் இல்லை. அவனுடைய படைப்பு மனம் சில சாதாரணமான சாத்தியங்களை கற்பனையாற்றலால் வளர்த்துப் பெருக்கிக் கொள்ளும். ஆகவே சில சமயங்களில் சாதாரண படைப்பும்கூட அவன் பார்வையில் அசாதாரணமாக ஆகிவிடும். ஒரு விமர்சகனாக அந்தப் படைப்பின் மேன்மையை அவனால் நிறுவ முடியாமல் போகும். ஆகவே எழுத்தாளர்- விமர்சகர்களை அவர்களுடைய சாய்வுகளுடன் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ரசனை விமர்சனத்தின் அளவுகோல் என்பது முற்றிலும் விமர்சகனின் வாசிப்பு விசாலம் மற்றும் நேர்மையை சார்ந்தது. அவன் சுட்டிக்காட்டுவதாலேயே ஒரு படைப்பு மேலானதாக ஆகிவிடாது. வாசக பரப்பும் ஏற்கும்போதே அது நிகழ்கிறது. ஒரு பிரதியை அதன் எழுத்தாளனோ அல்லது விமர்சகனின் பட்டியலோ ‘கேனானாக’ உயர்த்த முடியாது என்பதை தெளிவாக சொல்கிறார் ப்ளூம். வாசகனை விடவும், எழுத்தாளனை விடவும் விமர்சகன் வாசிப்பில் ஒருபடி முன்னே செல்ல வேண்டியது அவசியமாகும். அதுவே அவனுடைய விமர்சனத்தின் எல்லையை தீர்மானிக்கும். கோட்பாட்டு விமர்சகர்கள் ரசனை விமர்சனத்தின் மிகப்பெரிய குறைபாடாகச் சுட்டிக் காட்டுவது இந்த அகவய அம்சத்தைத்தான். சமூக பொறுப்பிலிருந்து நழுவி, ரசனை விமர்சனத்தின் பெயரால் எதையும் நியாயப்படுத்திவிட முடிகின்ற அபாயம் உள்ளது. புறவயமான அலகுகள் ஏதுமில்லை. மேலும் படைப்பிற்கும், படைப்பாளிக்கும் சமூக அக்கறையும் பொறுப்பும் உள்ளதா எனும் வினாவை அவர்கள் எழுப்புவார்கள். என்னளவில் எழுத்தாளன் தான் எழுதிய சொற்களை அன்றி வேறெதற்கும் பொறுப்பில்லை.

பரந்த வாசிப்பு விமர்சகனுக்கு தேவை என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதுவே தடையாகவும் ஆகிவிடக்கூடும். ஒவ்வொரு முறையும் படைப்பின் முன் தான் சேகரித்தவற்றை, சுமந்து வருபவை அனைத்தையும் களைந்து நிற்க வேண்டும். விமர்சகன் தனக்கென உருவாக்கிக் கொண்ட அளவுகோலை களையவில்லை என்றால் தன் அளவுகோலுக்கு பொருந்தாதவை அவனுள் புகாது. நல்ல விமர்சகன் தனது எல்லையைக் கடக்க முயல்வான். ஒரு திறந்த வாசகனாகவே இருப்பான். தீர்மானமான அளவுகோல் வாசகனுக்கும் விமர்சகனுக்கும் பேரிழப்பு. அவன் ஒரு போதும் பனைமரத்தைப் பார்த்து, “நீ ஏன் இத்தனை உயரமாக, குறைந்த இலைகளுடன் இருக்கிறாய், செறிவான மாமரத்தைப் போல் இல்லை?” என வினவமாட்டான். நவீனத்துவ பிரதியின் அளவுகோலாக செவ்வியல் பிரதியையோ பின்நவீனத்துவ பிரதியையோ பயன்படுத்தமாட்டான். வரலாற்று நாவலை மிகுபுனைவு நாவலுடன் ஒப்பிட முடியாது என்பதை அறிவான். படைப்புகளுக்குதான் அளவுகோலே ஒழிய அளவுகோலுக்கு உகந்த படைப்புகள் அல்ல.

விமர்சகன் வறண்ட மனநிலை கொண்ட நீதிமான் எனும் எதிர்பார்ப்பு போலியானது. நல்ல விமர்சகன் ஒரு படைப்பாளியும்கூட. படைப்பு மனத்தின் தடுமாற்றங்களும், தத்தளிப்புகளும் அவனுக்கு உண்டு. அவனுடைய பழக்கப்பட்ட வாசிப்பு தளத்திற்கு வெளியே வரும் புத்தகங்களை எதிர்கொள்ளும்போது அதை உள்வாங்கத் திணறுவான். எழுத்தாளனின் படைப்புடன் சேர்ந்தியங்கும் சக படைப்பாளி என்றே விமர்சகனைச் சொல்ல வேண்டும்.

விமர்சனம் யாருக்காக என்றொரு கேள்வியை எழுப்பிக்கொண்டால், ஒரு புனைவெழுத்தாளனாக, ரசனை விமர்சனம் எழுத்தாளனை நோக்கி எழுதப்படுவது அல்ல, என்பதை உணர்கிறேன். எழுதத் துவங்கும் காலகட்டத்தில் அவனுடைய செய்திறனுக்கு சில விமர்சனங்கள் உதவலாம். அதற்கப்பால் எழுத்தாளன் விமர்சனத்தால் உருவாவதும் இல்லை,மேம்படுவதும் இல்லை. தான் எழுதியவற்றை இப்படியெல்லாம் வாசிக்கிறார்கள் எனும் புரிதலுக்கு மேல் அவனுக்கு விமர்சனம் எதையுமே அளிப்பதில்லை.

தமிழ்ச் சூழலில் விமர்சகருக்கும், பிரதி மேம்படுத்துனர், பதிப்பாசிரியர் வேறுபாடுகள் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். படைப்பு குறித்து கருத்து சொல்பவர்கள் அனைவரையுமே நாம் விமர்சகர் என்றே சொல்கிறோம். நேர்மறை விமர்சனங்கள் சொற்ப காலத்திற்கு அவனை ஆற்றுப்படுத்தலாம். ஏனெனில் புனைவின் கருப்பொருள் அவன் தேர்வது அல்ல, அது அவனுக்கு அளிக்கப்படுகிறது.

விமர்சனம் வாசகரை நோக்கியே பேச வேண்டும். இத்தெளிவு இருந்தால் எழுத்தாளனை தனிப்பட்ட முறையில் அடித்து வீழ்த்தும் விசை அவசியமற்றது என்பது பிடிபடும். மார்க்சிய, நவ வரலாற்றுவாத விமர்சகர்கள் எழுத்தாளனின் நோக்கத்தின் மீது கேள்வி எழுப்பி அவனை முத்திரை குத்த முனைவது போல் ரசனை விமர்சகன் ஒருபோதும் செய்யக்கூடாது. அவனுடைய அக்கறை முழுவதும் படைப்பில் வெளிப்படும் கலைத்தன்மை பற்றியதாக மட்டுமே இருக்க முடியும். அதிலுள்ள போலித்தனங்களை, பாவனைகளை சமரசமின்றி சுட்டிக்காட்ட வேண்டும். ரசனை விமர்சகன் எழுத்தாளனை வகைப்படுத்த மாட்டான், வரிசைப் படுத்துவான் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். அவ்வரிசை எழுத்தாளனின் படைப்புகளில் இப்பிரதியின் இடம் என்ன, ஒட்டுமொத்த இலக்கிய மரபில் இந்த பிரதியின்/ எழுத்தாளனின் இடம் என்ன, என இருவகையானவை.

ஆகவே, ஒரு தேர்ந்த விமர்சகனின் வேலை என்பது வாசகனிடம் படைப்பின் புதிய வாசிப்பு கோணங்களை, நுட்பங்களை கொண்டு சேர்ப்பதே. இலக்கிய வரலாற்று ஆசிரியனைப் போல் எழுத்தாளனையும் அவனுடைய பிரதியையும் இலக்கிய வரலாற்று வெளியில் பொருத்திக் காட்டுவதே. அதன் அழகியலை வேறு ஆக்கங்களுடன் ஒப்பு நோக்குவதே. எழுத்தாளனின் தனித்தன்மையை அடையாளபடுத்தும் பொறுப்பு அவனுக்கு இருக்கிறது. எழுத்தாளனை, பிரதியை ஒரு வரிசையில் வைக்கும்போது முன்னோடிகளிடம் இருக்கும் தொடர்ச்சியையும் அதிலிருந்து இவன் கிளைத்துப் பிரியும் புள்ளியையும் அடையாளம் காட்ட வேண்டியது விமர்சகனின் கடமை. பல சமயங்களில் விமர்சகனின் இத்தகைய செயல்பாடு எழுத்தாளனுக்கு உவக்காது. வாசகனில் இருந்து விமர்சகன் மேலெழும் புள்ளி என்பது அவனால் தன் நிலைப்பாடுகளை ஓரளவு தர்க்கபூர்வமாக முன்வைக்க முடிவதில் உள்ளது. தர்க்கமும்கூட ஒரு எல்லை வரைதான். ஏனெனில் அழகியல் ரசனை அந்தரங்கமானதும் கூட.

விமர்சகனின் சுட்டிக்காட்டுதல்கள் அது எத்தனை அப்பட்டமாக, சில வேளைகளில் வன்மம் தொனிப்பதாக இருந்தாலும்கூட அவன் இலக்கியத்தின் மீதான பெரும் காதலினால் மட்டுமே அதைச் செய்கிறான் எனும் புரிதல் முதலில் சக விமர்சகனுக்கும் பின்னர் வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் அவசியமாகிறது.

இறுதியாக ஒன்று, ஒரு நல்ல விமர்சகன் கடல் அலையை அல்ல, அந்த அலைகளுக்கு அடியில், ஆழத்தில், நீரின் திசையை, அதன் விசையைத் தீர்மானிக்கும், டெக்டானிக் தட்டுக்களின் அசைவை காட்டுவதற்கே முயல்கிறான்.

1 comment:

  1. நல்ல பதிவு.... வாழ்த்துக்கள்

    ReplyDelete