Saturday, May 18, 2019

சிங்கப்பூர் - மலேசியா பயணம்- 1


தமிழ் முரசு நாளிதழ் மற்றும் சிங்கப்பூர் கலை மன்றம் இணைந்து நடத்தும் ஒருநாள் அறிவியல் புனைவு - வரலாற்று புனைவு பயிலரங்கிற்காக என்னை அழைத்திருந்தார்கள். சிங்கப்பூரோ தஞ்சாவூரோ எங்கு சென்றாலும் உரிய தயாரிப்புடன் செல்ல வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அறிவியல் புனைவு, வரலாற்று புனைவு தொடர்பாக இரண்டு மாதங்கள் தொடர்ந்து  வாசித்து என்னை தயார் செய்து கொண்டேன். வழக்கமாக செல்லும் ஊட்டி கூட்டத்திற்கு கூட இந்தமுறை செல்லவில்லை.  வெளிநாட்டிற்கு தனியாக பயணிப்பது இதுவே முதல்முறை எனும் பதட்டம் வேறு லேசாக பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டது.

மே எட்டாம் தேதி நள்ளிரவு திருச்சியில் இருந்து புறப்பட்டு ஒன்பதாம் தேதி காலை சிங்கப்பூர் சென்று சேர்ந்தேன். சரண் விமான நிலையத்திற்கு வந்து அழைத்து சென்றார். லிட்டில் இந்தியாவில் உள்ள மெட்ராஸ் ஸ்ட்ரீட், ஹோட்டல் தவுலத்தில் தங்கினேன். சிறிய பால்கனி கொண்ட அறை. தொலைக்காட்சியில் ஒரேயொரு சிங்கப்பூர் தமிழ் சேனல் ஓடியது. அதுவே அவ்வப்போது எப்.எம் ஆகவும் மாறியது. புதிய ஊர்களுக்கு செல்லும்போது, அதுவும் தனித்திருக்கும்போது தொலைகாட்சியையோ வானொலியையோ ஓடவிடுவது வாடிக்கை. வேறென்ன தனிமை குறித்தான பயம்தான். அசந்து உறங்கும் வரை ஏதேனும் ஒன்று ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். மெல்லிய வெளிச்சம் பரவியிருக்க வேண்டும். குளியலறை விளக்குகள் எரியும். லேசாக திறந்து வைத்தபடி தான் உறங்குவேன். 

காலை நேராக நண்பர் கணேஷ் அவர்கள் நடத்தும் உணவகத்திற்கு சிற்றுண்டி உண்பதற்கு சென்றோம். ஹோட்டலில் இருந்து நடந்து செல்லும் தொலைவுதான். கணேஷ் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். பெராக் ரோட்டில் செட்டிநாடு கறி பேலஸ் எனும் ஹோட்டலை நிர்வகித்து வருகிறார். இலக்கிய பரிச்சயம் உள்ளவர். ஜெயமோகனோடு இமையப் பயணம் சென்றவர். பொங்கலையும் வடையையும் பேசிக்கொண்டே உண்டு முடித்தோம். சரண் சிங்கப்பூர் ரயிலில் என்னை செந்தோசா அழைத்து சென்றார். எம்.ஆர்.டி ரயில் பிடித்து பின்னர் மோனோ ரயில் மாறி சென்றோம். மோனோ ரயில் சென்னைக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காது எனும் எண்ணமே தோன்றியது. 

சிங்கப்பூரின் பொது போக்குவரத்து அமைப்பு அபாரமானது. புதியவரும் கூட தனியாக பயணம் செய்துவிட முடியும் அளவிற்கு எளிமையானது. நகரத்தின் குறுக்கும் மறுக்கும் ஓடும் ரயில் பாதைகள் நாட்டின் அத்தனை இடத்தையும் முழுமையாக இணைக்கிறது. எந்த ரயில் நிலையத்திலும், எந்த பேருந்து நிலையத்திலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் வாகனம் வருவதற்காக காத்திருக்கவில்லை. ஏறத்தாழ காரில் செல்லும் அதே காலம் தான் பொதுபோக்குவரத்திலும் எனும்போது பெருவாரியான மக்கள் பொதுபோக்குவரத்தையே பயன்படுத்துகிறார்கள்.  

ஒரு புதிய தேசத்திற்கு சென்றதும் இயல்பாக இந்தியாவுடன் ஒப்பிட்டு நோக்கக் கூடாது என்ற எண்ணியிருந்தேன். அது சார்ஸ் பறவை காய்ச்சல் போலவே புதுப் பயணிகளுக்கு மட்டும் தொற்றும் வியாதி. சிங்கப்பூரின் நிலப்பரப்பு மிகச் சிறியது. செல்வ வளமோ அபாரமானது. இந்தியாவுடன் எவ்வகையிலும் ஒப்பிட முடியாது. ஆனால் அவற்றை மீறி மனம் அந்த ஒப்பீட்டை நிகழ்த்த துவங்கியது. மலேசியாவில்தான் சற்று ஆசுவாசம் கொள்ள முடிந்தது. ஏனெனில் ஏதோ ஒருவகையில் அது மலபார் பகுதியின் நீட்சி எனும் எண்ணமே ஏற்பட்டது. சிங்கப்பூர் அழகிய நெற்றியில் வைக்கப்பட்ட மினுங்கும் அழகிய நெற்றிப் பொட்டு என எண்ணிக்கொண்டபோது சமாதானம் ஆனேன்.
  
அரசு அனைவருக்கும் இலவசமாக ஸ்மார்ட் வாட்ச் அளித்து, அதிகம் நடப்பவர்களை ஊக்குவிப்பதாக சரண் கூறினார். நடக்கும் தொலைவிற்கு ஏற்ப பயண கட்டணங்களில் சலுகை உண்டு என்றார். ரயிலில் அத்தனைப்பேரும் தங்கள் மொபைல் போனில் ஆழ்ந்தபடி பயணிக்கிறார்கள். பாதாள பாதையில் செல்லும்போது சாளரத்தில் காண்பதற்கு ஏதுமில்லை என்பது வேறு விஷயம். இதை ஒரு குற்றமாக காணவில்லை எனும்போது நமக்கு இன்னும் வயதாகவில்லை எனும் நிம்மதி நிறைந்தது.
யுனிவர்சல் ஸ்டுடியோ ஆப்டிமஸ் ப்ரைம்

செந்தோசாவில் யுனிவர்சல் ஸ்டுடியோவிற்கு சென்றோம். சரண் முன்னரே நுழைவு சீட்டுக்களை இணையம் வழி வாங்கி இருந்தார். வாரநாள் என்பதால் கூட்டம்  இருக்காது என எண்ணியது தவறு. விதவிதமான ஹாலிவுட் படங்களின் அரங்குகள். ட்ரான்ஸ்பார்மர் வரிசையில் சென்று நின்றோம். ஏறத்தாழ முக்கால் மணிநேரம் வரிசை நீண்டது. வெறும் வரிசை என்றில்லாமல் ட்ரான்ஸ்பார்மர் பட  அமைப்புகள், காட்சிகள் என நம்மை ஒரு அனுபவத்திற்கு தயார் செய்யும் வகையில் பாதையை அமைத்திருந்தார்கள். வளைந்து, மடிந்து சென்ற வரிசை, இதோ முடிந்துவிடும் இதோ முடிந்துவிடும் எனும் போது புதிதாக நீண்டது. ஒரு காப்காத்தனமான உலகத்தில் சிக்கிக்கொண்டது போல் உணர்ந்தேன். ஆனால் சுமார் ஒருமணிநேரம் நின்றதற்கு நல்ல அனுபவம். 3d கண்ணாடிகள் அணிந்து ஒரு வண்டியில் ஏறி அமர்ந்தோம். ஆப்டிமஸ் ப்ரைம் மற்றும் அவரது தோழர்கள் எங்களை காப்பாற்ற முயன்றார்கள். ஒரு காட்சியை காண்பது வேறு அந்த காட்சியின் பகுதியாக, பங்கேற்பாளராக ஆவது என்பது வேறு. இறங்கி வெளியே வந்தபோது தொலைதூரம் ஓடி தப்பித்த களைப்பு, ஆசுவாசம். இதையே தாங்கி பிழைத்துவிட்டோம், இனி எதையும் தாங்கிவிடலாம் என மனிதர்களுக்கு சொல்வதற்குதான் எத்தனை முறைகள். பெரும் அழிவிலிருந்து தப்பிப்  பிழைத்தவர்களின் முகங்களில் பெருமிதத்தை காணும்போது மொபைல் போன் ஸ்க்ரீனில் என் முகத்தை கண்டேன்.
யுனிவர்சல் ஸ்டுடியோ
அடுத்து மம்மி ரைடுக்கு சென்றோம். கூட்டமே இல்லை என்பதால் அதிகநேரம் நிற்கவில்லை. ஏன் கூட்டம் இல்லை என்பது உள்ளே சென்றதும் தான் புரிந்தது. இப்போது நாங்கள் உயிர்த்தெழும் மம்மியிடம் இருந்தும் தப்பிக்க வேண்டும். கிட்டத்தட்ட ஒரு ரோலர் கோஸ்டர் ரைட். மூளை ஜிவ்வென சூடாகி, முகம் வியர்த்து வெளியே வந்தேன். இரவு விமான பயணம், தூக்கமின்மை, காலையில் சாப்பிட்ட பொங்கல் வடை என எல்லாம் சேர்ந்து எனது ஆஸ்ட்ரல் உடல் எனக்கு முன் நடப்பதை காணச் செய்தது. பின்னர் தேவதை உலகிற்கு சென்று ஷ்ரெக் பார்த்தோம். மடகாஸ்கர் பயணம் சென்றோம். இந்தமாதிரி உடல் தாங்கக் கூடியவற்றுக்கு மட்டும் கூட்டிச் செல்லுங்கள் சரண் என கண்ணீர் மல்க கேட்க வேண்டும் போலிருந்தது. வாட்டர் வேர்ல்ட் சென்றபோது அங்கு ஒரு ஹாலிவுட் படத்தையே ஸ்டன்ட் மாஸ்டர்கள் சேர்ந்து நிகழ்த்தி காட்டினார்கள். நாங்கள் சென்ற அன்று வெய்யில் பிளந்தது. ஒவ்வொரு அரங்கிலிருந்து வெளியேறும்போதும் அந்த திரைப்படம் சார்ந்த ஒரு அங்காடிக்குள் சென்று விட்டுதான் வெளியேற முடியும் என்பதாக ஒரு அமைப்பு இருந்தது. லாஸ்ட் வேர்ல்ட்லிருந்து ஒரு டைனோசரை ட்ரக்கில் ஏற்று அழைத்து வந்தார்கள். அத்துடன் வரிசையில் நின்று அனைவரும் படம் எடுத்து கொண்டார்கள். என் குரல் என் செவிகளில் தொலைதூரத்தில் இருந்து ஒலிப்பதாக தோன்றியபோது இனியும் தாங்க முடியாது என அங்கேயே உணவு உண்டு அறைக்கு திரும்பினோம். அயர்ந்து உறங்கி எழுந்தபோது சரண் நாற்காலியில் கண்ணயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.
கோவிந்தராஜனுடன் சிங்கப்பூர் நதிபாலத்தில்

அபூர்வமாக இன்று வரை தொடரும் பள்ளிக்கால நட்பு சில உண்டு. கோவிந்தராஜன் அப்படியான நண்பன். பள்ளிக்கால, கல்லூரிகால நட்புகள் தொடரும்போது பேசுவதற்கு பழைய நினைவுகளுக்கு அப்பால் ஏதுமில்லை எனும் நிலை வரும்போது நாமும் அவரும் வெவ்வேறு ரசனைகள், வெவ்வேறு நிலைகளில் இருப்போம் என்பதை உணர்ந்து கொள்வோம். ஒருவித அசந்தர்ப்பமான மவுனச் சுவரை முட்டிக்கொண்டு நின்றிடுவோம். ஆனால் தொடர்பில் இருக்கும் நட்புடன் நாம் தொடர்ந்து பேசுவதற்கு விஷயங்கள் உண்டு. கோவிந்தராஜன் கால்நடையாக அழைத்து சென்று சாந்தி விலாசில் நெய் ரோஸ்ட் வாங்கிக் கொடுத்தான். பின்னர் நடந்தே வீரமாகாளிஅம்மன் கோவிலுக்கு சென்றோம். அங்கிருந்து பலத் தெருக்கள் சுற்றி நடந்தோம். அப்பகுதி எங்கும் தமிழ் குரலும் தமிழ் முகமும் சாதாரணமாய் புழங்கின. அனைத்து அறிவிப்புகளிலும் தமிழ் இடம்பெற்றது. பிறகு லதா எங்களோடு இணைந்து கொண்டார். மோடி வடை உண்பதற்கு முன்பே பிரபலமான கோமளவிலாஸ் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு இரவுலாவ சென்றோம். அறையை விட்டு வெளியேறும்போது எதிர் அறையில் யாரோ கன்னத்தில் அறைந்து பரவசத்துடன் ‘ஓ மை காட்’ என கத்திக்கொண்டிருந்ததை கேட்கமுடிந்தது. இனி அறைகள் எடுக்கும்போது கேமெரா இருக்கிறதா என சோதிப்பது போல் ஒலி வெளியே வராமல் இருக்கிறதா என்பதையும் சோதிக்க வேண்டும். சீக்கிரம் இதற்கான முறைமைகளை வாட்சப் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் வெளியேறினோம். நண்பர்களின் முகத்தை பார்த்தால் இச்சமயங்களில் வெடித்து சிரித்துவிடும் அபாயம் உண்டு. முன்னனுபவமும் உண்டு.

சிங்கப்பூர் இரவு

பேருந்து பிடித்து முன்னாள் தபால் அலுவலகமாக இருந்த புல்லர்டன் ஹோட்டல் அருகே சென்றோம். சிங்கப்பூர் நதி இரவின் விளக்குகளை பரப்பியபடி தளும்பிக் கொண்டிருந்தது. இருள் விளக்குகளுக்கு மேலும் பொருள் அளிக்கிறது. ரசனையுடன் ஒளியமைப்பு செய்திருந்தார்கள். நாம் அழகென கருதுவது எல்லாம் ஒளி விளையாட்டு என்றே தோன்றியது. எந்தக் கலையிலும் ஒளியையும் அதன் இன்மையையும் பயன்படுத்தத் தெரிந்தவனே கலைஞன். படரும் இருளில் எங்கெங்கே ஒளி பாய வேண்டும் என தீர்மானிப்பது அன்றி கலைஞன் வேறெதுவும் செய்வதற்கில்லை. இரவு அறைக்கு திரும்பினேன். அங்கே நள்ளிரவு ஆகும்போது இந்தியாவில் 9.30 ஆகும். உறக்கம் பிடிக்கவில்லை. வீட்டிற்கு அழைத்து அன்றைய கதைகளை பேசினேன். ஹோட்டலின் அடுத்த கட்டிடத்தில்இருந்த பப்பில் இசை துடித்துக் கொண்டிருந்தது. சிங்கப்பூரின் முதல் நாள் முடிவுக்கு வந்தது.    

இரண்டாம் நாள் காலை செந்தோசா அக்வாரியம் பார்க்கலாம்  என யோசித்திருந்தேன். ஆனால் முந்தைய நாள் உரையாடலின் போது லதா சிங்கப்பூருக்கு வருபவர்களுக்கு இந்த செந்தோசாவில் அப்படி என்னதான் பிடிக்குமோ என்று சொல்லிக்கொண்டிருந்தார். மேலும் எனக்கு அது பிடித்திருக்காது என்பதையும் தீர்மானமாக சொல்லிவிட்டார். ‘இல்லை, உண்மையில் இந்த பூஷ்வா விளையாட்டு ரொம்ப பிராமதம்’ என சொல்லத் தோன்றியதை மென்று விழுங்கினேன். இந்த வெற்று கேலிக்கைகளை நாடியே அத்தனைப்பேரும் செல்கிறார்கள் என அலுத்துக்கொண்டிருந்தபோது தொலைதேசத்தில் இருந்து வந்த எழுத்தாளனாகிய எனக்கும் வேறுவழியில்லை. 

செட்டிநாடு கறி பேலஸில் உண்டுவிட்டு கணேஷின் வழிகாட்டுதலின் பேரில் ஜலன் பசார் எம்.ஆர்.டி ரயிலில் ஏறி சீனா டவுன் சென்றேன். அங்கிருக்கும் புத்தர் நினைவுச்சின்ன ஆலயம் பற்றி முந்தைய நாள் லதா கூறினார். அவருடைய எம்.ஆர்.டி கார்டையும் கொடுத்தார். அதில் கோவிந்தராஜன் இருபது டாலருக்கு டாப் அப் செய்து கொடுத்திருந்தான். சிங்கப்பூர் வந்த இரண்டாம் நாளே தனித்து பயணிக்கத் துவங்கினேன். எவ்வித குழப்பமும் இல்லை. இன்டர்நெட்டிற்காக சரண் எனக்கொரு சிம்கார்ட் அளித்திருந்தார். வாட்சப் அழைப்புகள் தெளிவில்லை என்றாலும் கூகுள் வரைபடங்கள் துல்லியமாக உதவின. சீனா டவுன் ரயில்நிலையத்திற்கு வெளியே மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. உள்ளே தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளின் நாட்டார் தெய்வங்கள் குடியிருக்கிறார்கள். வேள்வி ஒன்று நிகழ்ந்து கொண்டிருந்தது. சற்று தொலைவு நடந்தால் புத்தர் நினைவுச்சின்ன ஆலாயம் வந்தது. திபெத்திய புத்தர் கோவில். அதன் வாயிலிலேயே அந்த தெருவில் இருந்த மரண இல்லம் பற்றிய குறிப்பு இருந்தது. சீனர்கள் பெருந்திரளாக இங்கு தங்கியிருக்கிறார்கள். கவனிப்பாரற்று கிடப்பவர்கள் இங்குள்ள மரண இல்லங்களுக்கு சென்றார்கள். பெரும்பாலும் உள்ளே சென்றவர்கள் திரும்புவதில்லை. பின்னர் அரசு இதை தடை செய்தது. இன்றும் அந்த தெருவில் மரண சடங்கு சார்ந்த பொருட்கள் விற்கப்படுகின்றன.
புத்தர் நினைவுச்சின்ன ஆலயம்

நான் சென்றபோது பிக்குகளும் பக்தர்களும் மந்திர உச்சாடனத்தை துவங்கியிருந்தனர். மத்தியில் பிரம்மாண்டமான மைத்ரேய புத்தர் அமர்ந்த நிலையில் கிரீடம் அணிந்து உள்ளார். இரு பக்கமும் அவருடைய துணைவர்கள். மைத்ரேயர் வருங்கால புத்தர். போதி சத்வர் நிலையில் உள்ளவர். உலகம் முழுக்க, உயிர்கள் அனைத்திற்கும் ஞானம் வழங்குபவர். சுவர்களில் சிறிய புத்தர் சிலைகள் இருந்தன. பிக்குகள் வணங்குவதற்காக வைத்திருப்பவை என குறிப்புகள் கூறின. அகல் மாடம் போன்ற சிறிய மரக்குடவைக்குள் புத்தர் வெவ்வேறு முத்திரைகளுடன் அமர்ந்திருந்தார். ஆயிரகணக்கான புத்தர்கள் பக்கச் சுவர் முழுவதும் நிறைந்திருந்தார்கள். போதி சத்வர்களின் சிலைகளும் இருந்தன. ஆயிரம் கரங்கள் கொண்ட அவலோகிதேஸ்வரர், ஒரு கையில் வாளும் மறுகையில் ஏடும் ஏந்தி தாமரையில் அமர்ந்திருக்கும் மஞ்சுஸ்ரீ, நீலநிறத்தில் கோரைப் பற்களுடன் பாறையில் நிற்கும் அசலா என விதவிதமான வடிவங்களில் போதிசத்வர்களை பார்த்தேன். மொத்த ஆலயமும் பொன்னிறத்தில் மினுங்கியது. மொத்தம் ஐந்து மாடிகள் கொண்ட வளாகம். நான்காம் மாடியில் புத்தரின் பல் ஒரு பேழையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை பார்த்துக்கொண்டிருந்தபோது சரண் இணைந்து கொண்டார். இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லாந்து, ஜப்பான் என விதவிதமான புத்தர் வடிவங்களை அருங்காட்சியகத்தில் வைத்திருந்தார்கள். புத்த பிக்குகளின் மெழுகுச் சிலைகளும் இருந்தன. புத்தரின் மொத்த உடலும் சிறு சிறு துண்டுகளாக பகுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. வெளித்திண்ணையில் சற்று நேரம் அமர்ந்திருந்தோம். தேசிய நூலகத்தின் அருகே ஒரு பழைய புத்தகக் கடை இருப்பதாக லதா சொன்னார். பிராஸ் பசா. நேராக அங்கு சென்றோம். இப்போது இது ஒரு பழக்கமாக ஒட்டிக்கொண்டது. சென்ற ஆண்டு கோவாவிற்கு செல்லும்போதும் அங்கிருக்கும் பழைய புத்தக கடையை தேடினேன். சில புத்தகங்களை வாங்கினேன். எழுத்தாளனுக்கு இதுதானே நல்ல நினைவு பரிசாக இருக்க முடியும். ஒருமணிநேரம் தேடி ஏழு புத்தகங்களை பொறுக்கினேன். சல்மான் ரஷ்டி, ஜின்ஜியாங், ஹா ஜின், எக்கார்ட் டோலே, எட்கர் ஆலன் போ, ஜீத் தாயில் மற்றும் நைபால் புத்தகங்களை வாங்கினேன். மொத்தம் 28.50 சிங்கப்பூர் டாலர். இந்திய பழைய புத்தகை சந்தையின் அதே மதிப்பு தான் இருந்தாலும் ஒரு நிறைவு. சரணுக்கு கையில் ஒரு சின்ன காயம் என்பதால் மதியம் இரண்டு மணிக்கு மருத்துவமனைக்கு செல்லவேண்டியிருந்தது. மருத்துவமனை வளாகமும் கூட ஒரு மால் போலத் தோன்றியது. டெட்டால் வாசனை இல்லாத ஒன்றை மருத்துவமனையாக மனம் ஏற்கவில்லை. லாபியில் ஒரு இதயச் சிற்பம் வடித்திருந்தார்கள். கீழே கம்மின்சின் ஒரு கவிதை வேறு இருந்தது. மருத்துவமனையில் கவிதைகள் வாசிக்கப்படும்போது இந்தியா வல்லரசாகிவிடும் எனத் தோன்றியது. மரப்பாச்சி கூடுகைகள் காவேரி மருத்துவமனையில் ஏன் நிகழ்கிறது எனக் கேட்டால் சொல்வதற்கு நல்லதொரு காரணம் புலப்பட்டது. சரவணன் அவருடைய வங்காள மருத்துவரை சந்தித்துவிட்டு ஓரிரு நிமிடங்களில் வந்தார். ஒரு மருத்துவ சந்திப்பிற்கு 40 $. கையில் சிறிய அடியும் வீக்கமும் தான். ஆனால் இங்கே சாதாரணமாக பொது மருத்துவர் பார்ப்பார்கள். அல்லது தற்காலத்தில் எலும்பு மருத்துவர் பார்க்கக்கூடும். சரவணன் சந்தித்தது கர மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணரை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மருத்துவமனை உள்ளேயே இருந்த பெரிய புட் கோர்ட்டில் உண்டோம். ரெட் பீன் பாவ் மற்றும் மரவள்ளி சாஸில் டோஸ்ட் செய்யப்பட ரொட்டி. ரெட் பீன் பாவ் என்பது அரிசி மாவு கொழுக்கட்டை போல் வேக வைத்தது. அதனுள் பாசிப்பயிறு போன்ற ஒன்றை (அல்லது அதுவேதானா) இனிப்பு பூரணமாக நிரப்பி அளித்தார்கள். நல்ல சுவை. குங்க்பு பாண்டாவில் பாண்டாவின் விருப்ப உணவு இந்த கொழுக்கட்டை தான். ஷிபு கொழுக்கட்டை வழியாக குங்க்பு சொல்லிக்கொடுப்பார்.
ஆசிய நாகரீக அருங்காட்சியகம், கண்ணாடி உருளை

அங்கிருந்து ஆசிய நாகரீக அருங்காட்சியகம் சென்றோம். சிங்கப்பூரில் நான்கள் பார்த்த ஒரே அருங்காட்சியகம். இன்னும் தேசிய அருங்காட்சியகம், பொம்மைகள் அருங்காட்சியகம் என பார்க்காத பல அருங்காட்சியகங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தின் முதல் பகுதியில் சிங்கப்பூரின் வணிக தொடர்பை, அதன் தொன்மையை உறுதிப்படுத்தும் கப்பல் உடைவு எச்சங்களை காட்சி படுத்தி இருக்கிறார்கள். இது ஒரு பெரும் வரலாற்று நிகழ்வாக சொல்லப்படுகிறது அங்கு. இந்து, இஸ்லாம், பவுத்த, கிறிஸ்தவ அருங்காட்சியம் மிகச் சிறப்பாக இருந்தது. இலவச குறிப்பேடுகளை ஒவ்வொரு பகுதியிலும் வைத்திருந்தார்கள். எல்லா பகுதிகளிலும் தமிழ் குறிப்பேடுகள் இருந்தன. வெளியே வந்து சிங்கப்பூர் நதியை நோக்கிக்கொண்டிருக்கும் நேருவின் சிலையை பார்த்ததும் ஒருநிமிடம் மனம் பொங்கியது. அவர் தோள்மீது கைபோட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். மேலும்,  அவரிடம் மோடி உங்களை தினமும் திட்டுகிறாரே உங்களுக்கு வருத்தமாக இல்லையா என்று காதோரம் கேட்டேன். மவுனமாக நதியைப் பார்த்தபடி புன்னகைத்தார். பெரும் கண்ணாடி உருளைகள் முன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அறைக்கு திரும்பினோம். மாலை சிங்கப்பூர் மரபுடைமை வாரியத்தில் எழுத்தாளர் சங்கம் மற்றும் தமிழ் முரசு இணைந்து நடத்தும் ஒரு உரை ஏற்பாடு ஆகியிருந்தது. ‘கதைவழி பயணம்’ எனும் தலைப்பில் பேசுவதாக இருந்தேன். காரட் அல்வாவும் வடையும் வைத்திருந்தார்கள். மரபுடைமை வாரியத்தில் மலாக்கா செட்டி பற்றிய ஒரு அருங்காட்சியகம் இருந்தது. சிங்கப்பூர் எழுத்தாளர் சங்கத்தினர் பலரையும் அறிமுகம் செய்து கொண்டேன். சரியாக ஏழு மணிக்கு உரை துவங்கி 7.50 வரை பேசினேன். கதைகள் நமக்கு ஏன் தேவைப்படுகின்றன? கதைகள் என்ன செய்யும்? இப்படியான ஒரு உரை. நாற்பது ஐம்பது பேர் வந்திருந்தார்கள். எழுத்தாளர் சங்க வெளியீடான சில புத்தகங்களை அளித்தார்கள். மொத்தம் 110 உருப்பினர்களிருப்பதாகவும் அத்தனைப்பேரும் எழுதுபவர்கள் என்றும் சங்கத்தின் தலைவர் ஆண்டியப்பன் சொன்னார். 

நேருவுடன் நலம் விசாரித்தபோது
இரவுணவிற்கு மீண்டும் செட்டிநாடு கறி பேலஸ் சென்றோம். விஷ்ணுபுரம் வட்டத்து தோழர் சுபஸ்ரீ வந்திருந்தார். ஹோட்டலில் எழுத்தாளர் சித்ரா ரமேஷ் அவர்களை சந்தித்தோம். உரையாடியபடி உணவுண்டு முடித்து அறைக்கு திரும்பியபோது நள்ளிரவு. மறுநாள் முழுவதும் வகுப்பு. அதற்காக தயார் செய்திருந்த கோப்புகளில் சிலவற்றை சீரமைக்க வேண்டி இருந்தது. பங்கேற்பாளர்கள் அனுப்பிய புதிய கதைகளை வாசித்து குறிப்புகளை எடுத்துக்கொண்டு உறங்கச் சென்றேன்.    


சித்துராஜ் பொன்ராஜ்ஜின் ‘ரேமான் எனும் தேவதை’ சமீபத்தில் வாசித்திருந்தேன். எனக்கு அதில் சில கதைகள் பிடிக்கவும் செய்திருந்தது. மரபிலக்கிய பரிச்சயம், உலகளாவிய தன்மை என பலவற்றின் கலவை. ஆனால் அவரிடம் சொல்வதற்கு முன் சில சர்ச்சைகள் ஏற்பட்டு போயின. இப்போது அவரிடம் பேசினால் இதன்பொருட்டு என புரிந்துகொள்ளப் படுமோ எனும் தயக்கம் இருந்தது. எனினும் சிங்கப்பூர் கிளம்புவதற்கு முன்னரே உரையாடினேன். சிங்கப்பூரில் சந்திப்பதாக முடிவானது. சனிக்கிழமை காலை சித்துராஜ் பொன்ராஜ் அறைக்கு வந்து அழைத்து சென்றார். ஒரு காபி குடித்து பேசிக்கொண்டிருந்தோம். எழுத்து என்பதைத்தாண்டி இந்திய மரபு சார்ந்து பலவற்றில் எங்களுக்கு பொதுவான அனுபவங்கள் பேசு தளங்கள் இருந்ததை கண்டுகண்டோம். சின்ன மஸ்தா, அனாஹதம், பவுத்த சிற்பவியல் என சுவாரசியமான உரையாடல். அவருடைய நாவலை பரிசளித்தார். ஆச்சரியம் என்னவென்றால் இன்று தமிழ் எழுத்தாளர்களில் அவரளவிற்கு அதிக மொழி தெரிந்தவர்கள் பிறர் இல்லை என்றே எண்ணுகிறேன். இந்திய மொழிகள் தவிர்த்து ஸ்பானிஷ் பயின்றிருக்கிறார். நிகழ்வு நடக்கும் எஸ்.பி.ஹெச் (singapore press holdings) வளாகத்திற்கு கொண்டு விட்டார். எஸ்.பி.ஹெச் சிங்கப்பூரின் நான்கு மொழிகளிலும் இதழ்கள் நடத்தி வருகிறது. தமிழ் முரசு மிகப் பழைய நாளிதழ். நவீனின் மீண்டு நிலைத்த நிழல்கள் வழியாக கோ. சாரங்கபாணி மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது.
பய்லரங்கின் போது

இட்லி வடை சாப்பிட்டோம்.  பயிலரங்கில் சுமார் 28 பேர் பங்குகொண்டார்கள். மூத்த எழுத்தாளர்கள் துவங்கி கல்லூரி மாணவர்கள் வரை பலதரப்பட்ட பேர் அடங்கிய குழு. கல்லூரி கால செமினார்களில் இருபது நிமிட வகுப்புக்கள் எடுத்தது உண்டு. இலக்கிய உரை என்று கணக்கில் கொண்டால் கூட முதல்நாள் பேசிய ஒருமணிநேர உரைதான் அதிகபட்சம். ஒருநாள் முழுக்க வகுப்பு எடுப்பது என்பது எனக்கு புதிய அனுபவம். மூன்று பிரசெண்டஷங்களை கொண்டு வந்தேன். சிறுகதை அதன் வடிவங்கள், இலக்கணம் என்பது ஒரு வகுப்பு. பின்னர் அறிவியல் புனைவு பற்றிய ஒரு வகுப்பு. பயிற்சி கேள்விகள். அறிவியல் புனைவு கதைகள் சார்ந்த விவாதம். பயிலரங்கில் பங்கேற்றவர்கள் அனுப்பிய கதைகளை பற்றிய விமர்சன அமர்வு, வரலாற்று புனைவு பற்றிய அறிமுகம் மற்றும் தேர்ந்தெடுத்த கதைகள் பற்றிய விவாதம் மற்றும் பயிற்சி கேள்விகள் என தோராயமாக பகுத்துக்கொண்டேன். முதலில் வந்திருந்தவர்களை அறிமுகம் செய்து கொண்டு, அவர்கள் இந்த பயிலரங்கில் எதிர்பார்ப்பது என்ன என்பதை கேட்டுக்கொண்டேன். நான்கு கல்லூரி மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களை மையப்படுத்தியே இந்த வகுப்பை அமைக்க வேண்டும் என விரும்பினேன். அவர்களுக்கு புரியும் பட்சத்தில் எழுத்து அறிமுகம் கொண்ட பிறருக்கும் எளிதாக சென்று சேர்ந்து விடும். சிங்கப்பூரின் தங்கப் பேனா பரிசு பெற்ற எம்.கே.குமார் வந்திருந்தார். அழகுநிலா போன்றவர்கள் அறியப்பட்ட எழுத்தாளர்கள். கிருத்திகா, ஹேமா, பாரதி, மலையரசி போன்றோரும் தொடர்ந்து வாசிக்கவும் எழுதவும் செய்பவர்கள். பலருக்கும் ஜெயமோகன் தலம் நன்கு பரிச்சயமாகி இருந்தது. ராஜிக்கண்ணு, துரை மாணிக்கம் போன்றோர் வயதில் மூத்தவர்கள். ஒருவகையில் எனக்கே இது வியப்பாகத்தான் இருந்தது. நாள் முழுக்க உற்சாகமாக பாடம் நடத்த முடிந்தது. தொண்டை வறண்டு அவ்வப்போது சுடுதண்ணீர் குடித்துக் கொண்டேன். பங்கேற்ற அனைவரும் நிறைவான நேர்மறை எதிர்வினைகளையே அளித்தார்கள். பங்கேற்பாளர்கள் அளவிற்கே நானும் கற்றுக்கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுடைய புத்தகங்களை பரிசளித்தார்கள். தேசிய கலை மன்றமும் அவர்களுடைய சில வெளியீடுகளை அளித்தார்கள். அதில் சிங்கப்பூரின் பிற மொழி இலக்கியங்கள் இருக்கக்கூடும். வாசித்து பார்க்க வேண்டும். பின்னர் அறைக்கு திரும்பினோம். ஒரு பையை மட்டும் எடுத்துக்கொண்டு இன்னொரு பெட்டியை கணேஷ் அவர்களின் கடையில் வைத்துவிட்டு சென்றோம்.

பயிலரங்கு பங்கேற்பாளர்கள்

இரவு ஷானவாஸ் அவர்களின் கடையில் உண்டோம். ‘வாசகர் வட்டத்தின்’ பொறுப்பில் இருப்பவர். அங்கே பலரையும் வேலை வாங்க வேண்டிய இடத்தில் இருப்பவர். அது வழியாக வாழ்க்கையில் அவர் சந்தித்த நெருக்கடியான தருணங்களைப்  பல கதைகள் வழியாக சுவாரசியமாக சொல்லிக் கொண்டிருந்தார். அவர் நல்ல கதைகளை எழுத முடியும். அதற்கான வாசிப்பும் வாழ்வனுபவங்களும் உள்ளன. அங்கிருந்து விடைப்பெற்று லாவண்டர் எம்.ஆர்.டிக்கு சென்றோம். மலேசிய பேருந்து நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு அங்குதான் வரும். ஆனால் அங்கு அதற்கான சுவடே இல்லை. லாவண்டர் எம்.ஆர்.டியில் இருந்து புறப்படும் ஒரு ரயில் நின்றுவிட்டது என்பதால் நாங்கள் அங்கிருந்த இரண்டு மணிநேரமும் சின்ன ஒலிப்பெருக்கி வழியாக ஒரு பாட்டியம்மா ஆதி அறிவித்தபடி இருந்தார். அருகாமை பேருந்து நிலையத்தில் வரும் பேருந்தில் ரயிலில் செல்பவர்கள் ஏறிக்கொள்ளலாம் என்றார். காலையிலிருந்து நின்றபடி வகுப்பெடுத்தது, அலைச்சல் எல்லாம் சேர்ந்து தூக்கம் சொக்கியது. ஒருமணிக்கு பேருந்து வந்து சேர்ந்தது. நல்ல வசதியான இருக்கைகள் கொண்ட பேருந்து. ஒருமணி நேரத்தில் சிங்கப்பூர் எல்லையை அடைந்ததும் பையைத் தூக்கிக்கொண்டு இம்மிக்ரேஷன் கடந்து மறுபுறம் ஏறிக்கொண்டோம். ஒரு பாலத்தை கடந்ததும் மலேசியா வந்தது. மீண்டும் இதேப்போல் ஏறி இறங்கி கடந்தோம். ஒருவழியாக உறங்கி விழித்தபோது காலை ஏழு மணி. பேருந்தை விட்டு இறங்கியதும் நவீன் காத்திருந்தார். 

No comments:

Post a Comment