Wednesday, November 21, 2018

சிதல் - சிவமணியன் கடிதம்


அன்புள்ள சுனீலுக்கு,


நலம் மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். 


‘சிதல்’ சிறுகதை முதல் வாசிப்பில் உங்கள் சிறுகதையான ‘குருதிச்சோறு’வின் நீட்சி போலத் தோன்றியது. நிலத்தால் தொலைவினில் இருந்தாலும் என் மனமொழியில் என்றும் இருக்கும் வட்டாரச் சொற்களான துப்புரவாக, சுளுவில் , சகட்டுமேனி, தந்தரை, மொகரை, ரவைக்கு போன்ற சொற்கள் நிரம்பிய வர்ணனை வாசிப்பினை  அணுக்கமாக்கின. பெரிய செந்தியின் குழந்தைக்கால நினைவுகளின் மீட்டெடுப்பின் சூழல் விவரம் குறியீட்டு ரீதியாக அவனின் அணுக்கமான உறவுகளை சுட்டுகிறதோ என எண்ண வைத்து கதைக்குள் ஆழ்ந்து இழுத்தது. சிங்கங்களை அய்யா, அப்பா எனவும், பவளமல்லி செடியை அன்னையாகவும்,  முன்பு வெள்ளி நிறத்திலிருந்து  இப்போது கருப்பேறியிருக்கும் தாமரைக்கதவினை அப்பத்தாவாகவும் அடையாளமிடத் தோன்றியது.  கரையான்கள் ‘பவளமல்லி’ தண்டு முதலாக அனைத்து அழிக்கும் கணமும், செந்தியின்  கனவுகளில் கரையான்கள் மாறி மாறி வேறு உருவேடமணிந்து வரும்  வரிகளையும் மீண்டும் மீண்டும் வாசித்தேன். 


வாசிக்கையில் நினைவில் பதிந்த விவரணைகள்


கைவைத்த  இடத்தில் தூசி மறைந்து துலக்கமடைந்தது. 


செந்தியின் அப்பத்தாவிடம் ‘குட்டி கொடுத்து’ வந்தவள் மீனா. (தத்துகொடுப்பது போல நிகழ்வோ?)


ஆத்தங்குடி கற்கள்


வாடகை எதுவும் தரவேண்டாம். மாதமொரு முறை வீட்டை கூட்டி மொழுக வேண்டும் (அவ்வளவு பெரியவீட்டிற்கு மாதமொருமுறையே அதீதம்தான்)


சூலத்தின் இரு பிரிகளில் தொங்கும் வளையல்களை கொண்டுதான் அது காளியாத்தா என உறுதி செய்து கொண்டார்களாம்காவன்னா லேனாவிடம் வதைபடும் சாத்தையா , சோலச்சியின் வாழ்வு தருணத்தின் விவரிப்பு மிகையற்ற சொற்களானாலும், அழுத்தமாக அமைந்திருந்தது. பாண்டியின் சுருக்கமான விவரிப்பிலிருந்து அவன் பெற்ற தண்டனைக்கு காரணம் என்னவென ஊகிக்க முடிந்தது.  ஈர்க்குச்சி வழியாக மண் உதிர்ந்து, சாவித்துளை வழியாக தெரியவந்தஅறையளவு கரையான் புற்றிலும், நீரைக்கண்டு அஞ்சும்  மக்கள் நெருப்பைக் கண்டு அஞ்சவில்லை போலும் , கரையான் மண்ணுக்குள் ஒரு தீக்கங்கைச் சுமந்து கொண்டு திரிகிறது போன்ற வரிகளிலும் மனம் மீண்டும் மீண்டும் சென்று குவிகிறது. பரிவற்ற லேவாதேவித்தனத்தினால் மனிதமனங்கள் மட்டுமில்லாமல், சூழலும் ஈரம் துவர்ந்து பாலையாகிப்போகும் என இந்தக் கதையிலிருந்து பெற்றுக்கொண்டேன். வாழ்த்துக்கள்.


அன்புடன்,

சிவமணியன்

நன்றி சிவமணியன்.

No comments:

Post a Comment