Wednesday, July 4, 2018

சைக்கிள் எனும் கால யந்திரம்- வு மிங் யி எழுதிய தி ஸ்டோலன் பைசைக்கிள்

(ஜூலை மாத கணையாழியில் வெளிவந்த கட்டுரை)

“கொள்ளை நோய்கள் கொன்றதற்கு குறைவில்லாமல் காய்ச்சல் கொண்ட மனித மனங்களும் கொன்று குவித்திருக்கிறது”- வு மிங் யி, ஸ்டோலன் பைசைக்கிள்  
Image result for the stolen bicycle wu ming yi
இவ்வாண்டு மேன் புக்கர் பரிசுக்குரிய நீள் பட்டியலில் உள்ள நாவல்களை ஆளுக்கொன்றாக படித்து பார்க்கலாம் என்று பதாகை நண்பர்கள் முடிவு செய்துகொண்டோம். கிடைத்த பிரதிகளில் பிறர் எடுத்துக்கொண்டது போக எஞ்சியிருந்தது வு மிங் யி (Wu Ming Yi) எழுதிய the stolen bicycle நாவல். சரி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படித்து தான் பார்ப்போமே என்று வாசிக்கத் துவங்கினேன். 


வு மிங் யி தைவானைச் சேர்ந்த எழுத்தாளர். நாவலின் களமும் தைவான் தான். சீன மாந்தரின் மொழியில் எழுதப்பட்ட இந்நூல் சென்றாண்டு ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் ஆனது. விளையாட செல்லும் சிறுமிகளில் போர் காட்சியை எதிர்கொள்வதுடன் நாவல் துவங்குகிறது.அதன் பின்னர் கதைசொல்லியின் நினைவுகளின், அனுபவங்களின் வழியாக நாவல் நகர்கிறது. கதைசொல்லி அவருடைய குடும்ப கதையை சொல்கிறார், வெவ்வேறு தருணங்களில் தொலைந்துபோன சைக்கிள்களின் கதைகளை சொல்கிறார். இருபது வருடங்களுக்கு முன் கதைசொல்லியி தந்தை அவருடைய சைக்கிளுடன் மாயமாக மறைந்துவிடுகிறார். தந்தையின் சைக்கிளை தற்செயலாக கண்டுபிடிக்கிறார். அது எவரிடமிருந்தெல்லாம் கைமாறி வந்திருக்கும் என்று கண்டுபிடித்தால் தந்தை என்ன ஆனார் என்பதையும் கண்டுபிடிக்கலாம் என புறப்படுகிறார். இந்தப் புதிரை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது தற்செயலாக கதைசொல்லி சாங் சந்திக்கும் ஆளுமைகள், அவர்களுடைய கதைகள் என விரிகிறது. இவை எல்லாம் திரண்டு அபார வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. இணைகோடாக தைவானின் சைக்கிள்களின் வரலாறை சுவாரசியமாக சொல்கிறார். தொலைந்து போன சைக்கிள்களின் கதையாக துவங்கிய நாவல், உலகப்போர், தைவானின் பட்டாம்பூச்சி கைவினைக் கலை, போர் புகைப்படக்கலை,  மிருகக் காட்சிசாலையின் அழிவு, பர்மிய போர் முனை, போர் யானைகளின் கதை என பல உப கதைகளையும் சேர்த்து சொல்கிறது.  
Image result for the stolen bicycle wu ming yi

வு தனது பாத்திரங்களின் வழியாக இரண்டாம் உலகப் போரின் வரலாறை உணர்வுபூர்வமாக சித்தரிக்கிறார். கதை சொல்லியின் நண்பன் போர் புகைப்பட கலைஞன் அப்பாஸ் அவனுடைய கதையை சொல்லும் போது முதியவர் சோ வின் கதையும் வந்து சேர்ந்துகொள்கிறது. இரண்டாம் உலகப்போரில் விமானப்படை தளமாக  இருந்து சிதைந்த கிராமத்தில் தனியாக வாழ்ந்து வரும் கிழவரை அப்பாஸ் சந்திக்கிறான். அவருடைய தோளில் அமர்ந்திருக்கும் புல்புல் இறந்த ஜப்பான் போர்வீரன் என்று அறிமுகம் செய்கிறார். அவர்கள் இருவரும் கடலோரம் உள்ள வீட்டின் நிலவரை வழியாக கடலுக்குள் செல்லும் போது விவரிக்கும் விந்தையான காட்சி கற்பனையின் அபார வெளிப்பாடு. சட்டென நாவல் யதார்த்த தளத்திலிருந்து மேலெழும்பிவிடுகிறது. 

அப்பாசின் தந்தை விட்டுச்சென்ற நாட்குறிப்பின் வழியாக மலேயா மற்றும் பர்மிய போர் முனைநோக்கி கதை விரிகிறது. முதியவர் சோ அப்பாசுக்கு அளித்த சைக்கிளை எடுத்துக்கொண்டு ஜப்பானிய படை விரைந்த அதே பாதையில் மலேயாவிற்கும் சிங்கப்பூருக்கும் சைக்கிளில் பயணிக்கிறான் அப்பாஸ். அங்கே அடர்காடுகளில் கொட்டும் மழையில் தனித்து இருக்கும் போது அவன் தன்னை உணரும் கணம் அவனுக்கு வாய்க்கிறது. . தந்தையின் சைக்கிளை வைத்திருந்த ஜெனெரல் மு இறந்த பிறகு அவருடைய தோழி ஷிசுகோ முவின் கதையை சொல்கிறார். அப்போதும் பர்மிய போர் சித்தரிக்கப் படுகிறது. போரில் யானைகளின் பயன்பாடு, அவற்றின் மரணமும் பாடுகளும் மிகவும் தொந்தரவு செய்கின்றன. பாடம் செய்யப்பட யானைக்கால் நாற்காலியை பழம்பொருட்கள் சேகரிப்பாளரிடம் சாங் காண்கிறான்.   

புல்ககோவ் எழுதிய ‘Master and Margarita’ நாவலில் ஒரு பகுதி வரும். சாத்தானின் மற்றுமொரு சகாவான அபாடான் குறித்து பெருமையாகச் சொல்வான். மரித்து கிடக்கும் பிறந்த குழந்தையை காண்பித்து, “பாவம் செய்வதற்கு கூட அவனுக்கு நேரமில்லை. அபாடானின் பணி அற்புதமானது. அவன் ஒரு போதும் சமநிலை தவறாதவன், போரின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இரு பக்கத்திற்கு சம அளவிலேயே பாதிப்பை அளிப்பவன்.” என்பான். சாங்கின் தந்தை ஜப்பானின் விமான உருவாக்கத்தில் பங்காற்றியவர். அவர் என்ன செய்தார் என்பது எவருக்கும் தெரியாது. அதைப் பற்றி அவர் எவரிடமும் பேசியதில்லை. ஜெனெரல் மு சீனாவின் சார்பாக போரில் பங்கெடுத்தவர். அப்பாசின் தந்தை ஜப்பானிய போர் வீரனாக பர்மாவிற்கு போரிட சென்றவர். இம்மூவரின் கதைகளும் பின்னி உருவாவதே இந்நாவல். வெவ்வேறு தருணங்களில் உருவாகும் முடிச்சுகள், கேள்விகள் நாவலின் முடிவில் ஒரே சரடில் கோர்க்கப்படுகின்றன. அது இந்நாவலுக்கு அழகிய வடிவத்தை வாசிப்பனுபவத்தை அளித்து பிரமிப்பை ஏற்படுத்தினாலும் நம்பகத்தன்மை சார்ந்த சிறிய நெருடல் தோன்றியது. சிலவற்றை மெலிதாக கோடிட்டு காட்டியதோடு நிறுத்தி இருந்தால் வாசகன் தன் கற்பனையால் அவர் உத்தேசித்த இடங்களை சென்றடைந்திருக்க முடியும். 

உலகப்போரைப் பற்றி வேறு வேறு கோணங்களில் எத்தனையோ படைப்புகள் எழுதிக் குவிக்கப்படுகின்றன. நாவலில் முதிய ஷிஷுகோ தனது நினைவுகளைப் பகிரும் போது “நாம் போரைப் பற்றி பேசவில்லை என்றால் பேசுவதற்கு வேறு எதுவுமே இல்லை” என்கிறார். போரைப் பற்றி எழுதாமல் இருக்கவே முடியாது என்று தோன்றியது. இரண்டாம் உலகப்போரில் சைக்கில் பயன்பாட்டை ஆவணப் படுத்துகிறது நாவல். ஜப்பான் ராணுவத்தின் சைக்கிள் படை எப்படி மலேயா, சிங்கப்பூரை வென்றது என காட்சிப் படுத்துகிறார் 

நாவலுக்குள் வரும் குறுநாவலாக தைவான் நாட்டின் பட்டாம்பூச்சி கைவினைக் கலையின் கதையும் வரலாறும் வருகிறது. யு பட்டாம்பூச்சி ஆர்வலரும் கூட. அவருடைய பட்டாம்பூசிகள் பற்றிய நூல் சீனாவில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பட்டாம்பூச்சியின் பல வண்ண  ரெக்கைகளை வெட்டி அதை வைத்து கொலாஜ் செய்யும் கலை வழியாக வு மிக முக்கியமான கேள்வியை எழுப்புகிறார். கலைக்கு பரிவு என்பது கிடையாதா? அதன் உட்கிடக்கை குரூரமும் தன்முனைப்பும் தானா? “சில நேரங்களில் எல்லா கலைகளுமே கடைசியில் சுயநலம் மிகுந்தவை என்று தோன்றுகிறது, அது பிறர் மனதில் உறுதியாக மாற்றம் ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது- ஆனால் என்ன மாறுகிறதோ அதை நாம் மட்டுமே அறிய முடியும்”

நாவலின் மிக உணர்ச்சிகரமான பகுதிகள் என்பது போருக்கு பயந்து மிருகக் காட்சி சாலையின் மிருகங்களை அதை கவனித்தவர்களே கொல்வது. போருக்கு தேவையான உணவாக அவை மாறிவிடுகிறது. கொல்லப்படும் மிருகங்கள் போர் வீரர்களின் அதிகார வரிசைக்கு ஏற்ப பங்கிடப்பட்டன. நாவலில் வரும் யானையின் கதையும் அமைதியிழக்கச் செய்தது. வு சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும் கூட.. ஒரு எழுத்தாளராக மனிதர்கள் மீதும், உயிரினங்கள் மீதும் இப்பிரதியின் வழியாக மிகுந்த கரிசனத்தை வெளிப்படுத்தியுள்ளார் வு.  இந்நாவல் ஒரு குடும்பக் கதையும் கூட. தந்தைக்கும் மகனுக்குமான உறவு முக்கியமாகப் பேசப்படுகிறது. சாங்கின் சகோதரன், அன்னையுடன் இருக்கும் பிணைப்பும் விலக்கமும் கூட தொட்டுக்காட்டப் பாடுகிறது. 

சீன தைபே முதலில் ஜப்பான், பிறகு சீன ஆதிக்கத்தில் உள்ளது. அங்கு நிலவிய அதிகார மாற்றத்தை அதன் சிடுக்குகளை நாவல் சன்னமாக சுட்டிக்காட்டுகிறது. சாங் பழைய சைக்கிள்களை சேகரிக்கும் ஓர் உலகைக் காட்டுகிறார். ஒவ்வொரு சைக்கிளும் ஒரு கதை சொல்கிறது. சைக்கிள் சக்கரத்தில் பிசிறின்றி சைக்கிள் டியுப் மாட்டுவது கூட ஒரு கலையாகிறது. அதில் தேர்ந்த பெரும் மாஸ்டர் மெக்கானிக்குகள் உள்ளனர். ‘பழம்பொருட்கள் மீதான நேசம் என்பது காலத்திற்கு மரியாதை செய்யும் ஒரு முறை” என்கிறார். அபு, லிங் போன்ற பழம் பொருள் மீது கலையார்வம் கொண்ட சேகரிப்பாளர்களின் அனுபவங்கள் ஜென் தன்மைக் கொண்டவை. நேர்த்தியும் ஆன்மீகத்தின் வழிமுறைதான். 

ஒட்டுமொத்தமாக இது கடந்த காலத்தைப் பற்றிய நினைவேக்க நாவல் என்று ஒதுக்கிவிட முடியாது. “நான் இந்த நாவலை நினைவேக்கத்தால் உந்தப்பட்டு எழுதவில்லை. நான் அனுபவிக்காத காலக்கட்டத்தின் மீதான மரியாதையின் காரணமாக, வாழ்க்கையின் ஒருபோதும் திரும்பாத தன்மையின் மீதான பெருமதிப்பின் காரணமாகவே எழுதினேன்” என்கிறார் வு மிங் யி. இப்போது மேன் புக்கர் பரிசின் குறும்பட்டியல் வெளியாகி  விட்டது அதில் இந்நாவல் இல்லை என்பது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. 

சைக்கிள் ஒரு அபாரமான உருவாக்கம். மனிதன் காலத்தை வசப்படுத்தத்தான் தனது மொத்த ஆற்றலையும் கசக்கி புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகிறான் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் அறிமுகம் ஆகும் போதும் அவன் பரிணாமத்தில் சில படிகள் தாவிவிடுகிறான். சைக்கிள் புதிய தொழில் சாத்தியங்களை உருவாக்கியது. பல தலைமுறையினருக்கு கல்வியை கொண்டு சேர்க்கிறது. இயற்கைக்கு மிகக்குறைந்த சேதத்தை விளைவிக்கும் போக்குவரத்து இயந்திரம் சந்தேகமின்றி சைக்கிள் தான். வு மிங் யி அதன் சக்கரங்களின் சுழற்சியின் வழியாக ஒரு காலப் பயணத்தை மேற்கொள்கிறார். நாம் அன்றாடம் புழங்கும் ஒரு பொருள், அதற்கென்று நீண்ட வரலாறு உண்டு. அந்த பொருளின் வரலாறு என்பது ஒரு காலகட்டத்தின் மானுட வரலாறுடன், அதன் மனிதர்களுடன், அவர்களின் உணர்வுகளுடன் நுட்பமாக பிணைந்திருப்பதை யு மிங் யி அபாரமாக சொல்கிறார். அவசியம் வாசிக்க வேண்டிய நாவல். 

சுனில் கிருஷ்ணன் 
  


No comments:

Post a Comment