Sunday, January 21, 2018

சிறுகதை குறிப்புகள் - 1- குளத்தங்கரை அரசமரம் - வ.வே. சு. ஐயர்

(ஒரு பயிற்சிக்காக தினமும் சிறுகதைகளை வாசித்து அதைப்பற்றி கருத்துக்களை எழுதி தொகுக்கலாம் என நானும் விஷால் ராஜாவும் முடிவு செய்துள்ளோம். அப்படி நேற்று வாசித்த கதை)

குளத்தங்கரை அரசமரம் வ.வே.சு ஐயரால் எழுதப்பட்ட கதை. தமிழின் முதல் நவீன சிறுகதை என்று அடையாளப்படுத்தப் படுகிறது. இக்கதை தாகூரின் கதையால் உந்தப்பட்டதாக இருக்கலாம் என்றொரு ஊகமும் முன்வைக்கப்படுகிறது. அதேப்போல் பாரதியின் கதையை முதல் கதையாக நோக்கும் பார்வையும் உண்டு. எது எப்படியோ தமிழ் சிறுகதை வரலாற்றில் இக்கதைக்கு முக்கிய இடமுண்டு. 


தமிழின் முதல் சிறுகதையின் கதை சொல்லி மனிதன் அல்ல காலத்தின் சாட்சியாக குளத்தங்கரை ஓரம் நிற்கும் 'அரச மரம்'. ஆனால் இந்த நூதன துவக்க சாத்தியத்தைப் பயன்படுத்தி தமிழ் சிறுகதைகள் பயணிக்கவில்லை. யதார்த்த கதைகளே வெகுகாலம் வரை எழுதப்பட்டன என்பது தான் ஆச்சரியம். இலத்தீன் அமெரிக்க கதைகளை போல் வளர்ந்திருக்க ஒரு சாத்தியம் இருந்திருக்கிறது. ஆனால் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை வளர்த்த அரசியல் கொதி நிலை இங்கு இல்லை என்பதால் இயல்புவாத கதைகளை நோக்கி நகர்ந்திருக்கிறோம். 

கதை எழுதப்பட்ட காலகட்டத்தை சூழலை விவரிக்கிறது. பாலிய விவாகம், வர தட்சணை போன்ற சமூக சிக்கலை பேசு பொருளாக கொள்கிறது. ஆனால் இதை பிரச்சாரமாக முன்னெடுக்கவில்லை. எவரும் சீறி பாய்ந்து எதுவும் பேசுவதில்லை. ஆனாலும் கதையின் உணர்வு கடத்தப்படுகிறது. அறுபத்னாட் வங்கி திவால் ஆனதன் சமூக தாக்கத்தை ருக்மிணியின் குடும்ப சூழலை விவரிப்பதன் வழியாக இதை நிகழ்த்துகிறது. நாகராஜன் ருக்மிணியின் மிதக்கும் சடலத்தை மீட்டவுடன் ஜூலியத் மாதிரி நட்டாற்றில் இறந்து விட்டாயே என்று அழுது அரற்றுகிறான். ஐயரின் வாசிப்பை சூட்டுவதாக இருந்தாலும் கூட, பட்டணத்தில் இருந்து திரும்பி வந்த நாகராஜனின் பாத்திரத்திற்கு பொருந்தாமல் இல்லை. 

அரசமரம் அங்கு விளையாடி வளர்ந்த ருக்மிணியின் வாழ்வை அவளின் காதலை துயர முடிவை சொல்கிறது. இந்த வடிவில் எல்லா சாத்தியங்களையும் வ.வே.சு ஐயர் இக்கதையில் பயன்படுத்தி இருக்கிறார். பார்வையில் விழுவது, காதில் விழுவது, நிழலை பெருக்குவது என மரம் எனும் கதை சொல்லி முழுமையாக பயன்படுத்தப் பட்டிருக்கிறார். 

ஏன் கதை சொல்லி ஒரு அரச மரம் என கேட்டுக் கொண்டால்? கதை வேறு தளங்களில் இக்கேள்வி வழியாக விரிகிறது. அரசு மரம் ஞானத்தின் மரமாக, பிள்ளை பேறுக்காக என மரபில் அரச மரம் வகிக்கும் இடம் முக்கியமானது. வம்ச விருதியின் குறியீடாகவே மரபில் அரச மரம் போற்றப் படுகிறது. 'விதைக்குள் ஒளிந்திருக்கும் காடு' எனும் பயன்பாடு ஆல் - அரசு மரங்களுக்கு பொருந்துவது. இங்கே அரச மரம் காலதீதமாக, சாட்சியாக நிற்கிறது. தன் இனத்தை பெருக்கிய மூதாதையின் மண் வடிவாக எல்லாவற்றையும் காண்கிறது. இப்போது கதை வெவ்வேறு காலகட்டங்களின் அற மோதல்களாக பொருள்படும் சாத்தியம் கொள்கிறது. மூதாதை தன் வம்சத்து பெண் வரதட்சினையில் சிக்கி சீரழிவதை கையறு நிலையில் காணும் மூதாதை மரம் எனும் போது கதை மேலும் விரிகிறது.  

பெரிய விவரணைகள், துருத்தும் உவமைகள் என ஏதுமற்ற நவீன கதைகளுக்கு உரிய இறுக்கமான உரைநடை மற்றும் அடங்கிய தொனி இதை நவீன சிறுகதையின் துவக்ககால பெரும் பாய்ச்சல்களில் ஒன்றாக ஆக்குகிறது.   

1 comment:

  1. குளத்தங்கரை அரசமரம் சிறுகதையானது வாசிப்பவர் மனதில் ஆழமான சிந்தனையைத்தூண்டுகின்றது. ஏனெனில் பெண்களின் மனது பூப்போல மென்மையானது தங்களின் வாழ்க்கையில் தாங்கள் உயிராக நினைக்கும் கணவன்மார்கள் தங்களிடம் இருந்துவிலகினால் அந்த ஏக்கத்தை உயிரோடு இருக்கும் போது தாங்கமுடியாத மென்மையான நெஞ்சினராய் இறுதியில் தங்களின் உயிரையே இழக்கின்றனர் இதற்கு இலக்கணமாய் ருக்குமணியை ஆசிரியர் படைத்திருக்கின்றார்.இது சமுகத்தில் விளையாட்டுக்குக்கூட கணவன்மார்கள் தங்கள் மேல் உயிராய் இருக்கும் மனைவிகளை ஏமாற்றக்கூடாது என்ற ஆழமான சிந்தனையை காலம் மாறினாலும் இக்கருத்து வாசகர் மனதில் இருந்து நீங்காத ஓவியமாய் சித்திரித்துள்ளார் எனலாம்.

    ReplyDelete