Thursday, June 26, 2014

அந்தரங்க ஆனந்தம்

கிளாரிஸ் லிஸ்பெக்டர்- தமிழில் :நரோபா 
போர்ச்சுகீசியத்திலிருந்து ஆங்கிலத்தில்: ரேச்சல் க்ளீன்
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: நரோபா
(சொல்வனம் இதழில் வெளியான மொழியாக்க சிறுகதை) 

அவள் குண்டாக, குள்ளமாக, ஒருவித சிவந்த சுருட்டையான தலைமயிர் கொண்டவள். இன்னும் ​எங்களுக்கெல்லாம் ​தட்டையான மாரிருந்த போது, அவளுக்கு மார் பெருத்திருந்தது. போதாக்குறைக்கு, மாருக்கு மேலிருக்கும் அவளுடைய சட்டை பைகள் முழுவதும் கேரமெல்​ சாக்லேட்​களால் நிறைத்திருந்தாள். ஆனால் புத்தகங்கள் மீது தீராப்​பசி கொண்ட எந்த குழந்தையும் கனவு காணும் ஒன்று அவளுக்கு வாய்த் திருந்தது, புத்தகக்கடை உரிமையாளரான தந்தை.


அதை அவள் ஒன்றும் பெரிதாக பயன்படுத்திக்​கொள்ளவில்லைதான். நாங்கள் அவள் அளவிற்கு கூட பயன்படுத்திக்கொள்ளவில்லை. எங்கள் பிறந்தநாள்களுக்கு மலிவான சிறிய புத்தகத்தை கூட கொடுக்காமல், தன் தந்தையின் கடையிலிருந்து புகைப்பட வாழ்த்தட்டைகளை அவளே நேரில் ​கொண்டு வந்து ​ ​கொடுப்பாள். இதற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல், நாங்கள் வாழ்ந்த ரெசிஃபியின் காட்சிதான் அதுவும், ஒருபோதும் காணமுடியாத அளவிற்கு அதிக பாலங்கள் அதிலிருக்கும். அந்த அட்டையின் பின்புறம் பகட்டான தையலெழுத்தில் ‘பிறந்த தேதி’ மற்றும் ‘இனிய நினைவுகள்’ போன்ற சொற்களை எழுதியிருப்பாள்.

குரூரத்தில் தான் அவளுக்கு எத்தனை தேர்ச்சி இருந்தது​. பூரணமான பழியுணர்வால் நிறைந்திருந்தாள், சத்தமாக கேரமெல்களை மெல்லுவாள். மன்னிக்கமுடியாத அளவிற்கு அழகான, ஒடிசலான, உயரமான, மென்மையான கேசம் கொண்ட எங்களை இந்த பெண் எவ்வளவு​ வெறுத்திருக்க வேண்டும். என் மீது அவளுடைய சாடிஸத்தை ஒருவித உக்கிரமான அமைதியுடன் பிரயோகித்தாள். வாசிக்க வேண்டும் எனும் ஏக்கத்தில் அவள் என்னைக் அவமதித்ததைக்​கூட நான் கவனிக்கவில்லை. அவள் படிக்காத புத்தகங்களை ​எனக்குத் தரும்படி ​அவளிடம் யாசித்துகொண்டே இருந்தேன்.

அந்த நாள்வரை, அன்று தான் அவளுடைய சீனத்து வதைமுறையை என்மீது அவள் ​செலுத்தத் ​​துவங்கினாள். ஏதோ எதேச்சையாக என்னிடம் சொல்வது போல்​ தன்னிடம் மாண்டிரோ லோபெடோ எழுதிய ‘the adventures of little nose’ இருப்பதாக சொன்னாள்.

அது ஒரு தடிமனான புத்தகம், கடவுளே, உடன் வாழக்கூடிய புத்தகம் அது, அதையே உண்ணலாம், அதிலேயே உறங்கலாம். ஆனால் முற்றிலும் நானடைய முடியாத தொலைவில் அது இருந்தது. என்னை அவள் வீட்டிற்கு மறுநாள் வரச்சொன்னாள், புத்தகத்தை தருவதாகவும் சொன்னாள்.

மறுநாள் வரை, நான் மகிழ்ச்சியையே எதிர்நோக்கியிருந்தேன். நான் உயிர்த்திருக்கவே இல்லை, மென்மையான கடலில் மெதுவாக நீந்திகொண்டிருந்தேன், அலைகள் என்னை அங்குமிங்கும் கொண்டு சென்றது.

மறுநாள் அவள் வீட்டிற்கு சென்றேன், கிட்டத்தட்ட அங்கு ஓடினேன் என்றுதான் சொல்ல வேண்டும். அவள் என்னைப்போல அடுக்ககத்தில் வாழவில்லை, ஒரு ​தனி வீட்டில்​ வாழ்ந்தாள். அவள் என்னை உள்ளே அழைக்கவில்லை. நேராக என் கண்களை நோக்கியபடி, மற்றொரு பெண்ணிற்கு அப்புத்தகத்தை கொடுத்திருப்பதாக சொன்னாள், அதை பெற மறுநாள் வரசொன்னாள். வாய் பிளந்தபடி மெதுவாக அங்கிருந்து ​சென்றேன், ஆனால் நம்பிக்கை மீண்டும் முழுவதுமாக என்னை ஆக்கிரமித்தது, நான் தெருவில் குதித்தோடினேன், ரெசிஃபி தெருக்களை இப்படி விசித்திரமாக கடந்துபோவது தான் என் வழக்கம். இம்முறை நான் விழவில்லை; புத்தகம் கிடைத்துவிடும் எனும் ​நம்பிக்கை என்னை வழிநடத்தியது, நாளை வரும், இனி வரும் நாட்கள் தான் எனது முழு வாழ்க்​கை, இவ்வுலகின் நேசம் எனக்காக காத்திருக்கிறது, நான் தெருக்களில் வழக்கம் போல் ​தாவிக் ​குதித்தோடினேன், நான் ஒருமுறை கூட கீழே விழவே இல்லை.

ஆனால் விஷயம் அத்தனை எளிமையாக இல்லை. புத்தகக்கடை உரிமையாளரின் மகளுடைய ரகசிய திட்டம் ரகசியமானதும் மிககொடூரமானதும் கூட. இதயம் படபடக்க மறுநாளும் அவள் வீட்டு வாயிலில் சிரித்துக் கொண்டே ​ ​நின்றேன். அவளுடைய அமைதியான பதிலுக்கு தான் இத்தனையும், புத்தகம் இன்னும் திரும்பி​ வரவில்லை, நான் மீண்டும் நாளை வர வேண்டும் என்றாள். வாழ்க்கையின் போக்கில் பிற்காலத்தில், இந்த ‘மறுநாள்’ நாடகமும் அதனுடன் எனது இதய படபடப்பும் மீண்டும் மீண்டும் தொடருமென்று அப்போது நான் கற்பனையில் கூட எண்ணிபார்க்கவில்லை.

அப்படியே தொடர்ந்தது. எத்தனை காலம்? எனக்கு தெரியவில்லை. அவளுடைய பருத்த உடலில் இருந்து பித்தம் முற்றிலுமாக வடியும் வரை இதற்கு முடிவே இல்லை என்று அவளுக்கு தெரிந்திருக்கும். நான் ஊகிக்க தொடங்கினேன், எப்போதும் செய்வது தான், நான் துன்புறவேண்டும் என அவள் விரும்புகிறாள். ஆனால் அதை ஊகித்தாலும், நான் சிலவேளைகளில் அதை ஏற்றுகொள்வேன்; என்னை துன்புறுத்த முயலும் நபர் நான் துன்புற்றே ஆக வேண்டும் என வேறுவழியின்றி விரும்புகிறார் என்பதைப்போல்.

எத்தனை காலம்? நான் அவள் வீட்டிற்கு தினமும் சென்றேன், ஒருநாள் கூட தவறவில்லை. சிலவேளைகளில் நேற்று மதியம் என்னிடம் அந்த புத்தகம் இருந்தது, ஆனால் நீ இன்றுகாலை வரை வரவில்லை, அதனால் நான் அதை வேறோர் பெண்ணிடம் கொடுத்துவிட்டேன் என்று அவள் சொன்னாள். மேலும் எனக்கு கண்களுக்கு கீழே கருவளையங்கள் எல்லாம் பொதுவாக கிடையாது, கருவளையங்கள் எனது வியப்புறும் விழிகளுக்கு கீழே துளைத்துச்​ செல்வதை உணர முடிந்தது.

நான் அவள் வீட்டு வாயிலில் நின்று மவுனமாக புண்பட்டு அவளுடைய மறுதலிப்பை கேட்டுகொண்டிருந்த அந்த ஒரு நாள் வரை இது தொடர்ந்தது, அன்று அவளுடைய அம்மா வந்தாள். தினமும் ஊமையாக வீட்டு வாயிலில் தோன்றும் பெண்ணை பற்றி அவளுக்கு குழப்பமாக இருந்திருக்க வேண்டும். எங்களிருவரிடமும் விளக்கம் கோரினாள். ஒருவித குழப்பமான மவுனம் நிலவியது, துண்டுபட்ட சொற்கள் போதிய விளக்கத்தை அளிக்க வல்லதாக இல்லை. ஒவ்வொருமுறையும் அ​ ​ந்தப் ​பெண் இந்த ​ அந்நியரை புரிந்துகொள்வதில் உள்ள திறமையின்மையை கண்டுகொ​ண்டாள்.​ ​. ஆனால் ஒரு வழியாய் ​ ​​இந்த நல்ல அன்னை புரிந்துகொண்டாள். அவள் மகளை நோக்கி திரும்பி பெரும் வியப்புடன் வினவினாள்; இந்த புத்தகம் வீட்டை விட்டு வெளியே செல்லவே இல்லையே மேலும் உனக்கும் அதை வாசிக்க விருப்பமில்லையே!

அந்த பெண்ணுக்கு, என்ன நடந்தது என்பதை கண்டுபிடித்தது அல்ல, உண்மையில் தனக்கு எப்படிப்பட்ட மகள் வாய்த்திருக்கிறாள் எனும் அதிர்ச்சியூட்டும் கண்டடைதல் தான் இதன் மிக மோசமான பகுதியாக இருக்கக்கூடும். எங்களை மவுனமாக கவனித்தாள், தன் மகளிடம் ஒளிந்திருந்த மன வக்கிரத்தின் ஆற்றலையும், ரெசிஃபியின் தெருக்களில் வீசும் காற்றில் களைத்து வாயிலில் நிற்கும் இந்தப் ​பொற்குழல் பெண்ணையும். அதன் பின்னர் தான் தன்னை நிலைபடுத்திகொண்டு, அவள் மகளிடம் உறுதியான அதேவேளை அமைதியான குரலில் சொன்னாள்; “ இந்த புத்தகத்தை இப்போதே கொடுக்க போகிறாய்.” என்னிடம் “ இந்த புத்தகத்தை நீ விரும்பும் வரை வைத்திருக்கலாம்” உனக்கு புரிகிறதா? புத்தகத்தை என்னிடமே கொடுப்பதை காட்டிலும் மேலானது இது. “நான் விரும்பும் வரை” பெரியவர்களோ சிறியவர்களோ, எவராய் இருப்பினும் இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்.அதற்கடுத்து நடந்ததை என்னால் எப்படி விளக்க முடியும்? நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன், அந்நிலையில் தான் நான் அந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். ஒருவார்த்தை கூட எழவில்லை என்றெண்ணுகிறேன். புத்தகம் கிடைத்தது. இல்லை இல்லை, நான் எப்போதும் போல் குதித்தோடவில்லை. நான் அங்கிருந்து மெதுவாக நடந்தேன். என் இரு கரங்களிலும் அந்த தடித்த புத்தகத்தை பிடித்து நெஞ்சோடு அனைத்துகொண்டிருந்தேன் என்பதை அறிவேன். வீட்டுக்கு வர எத்தனை நேரம் ஆனது என்பதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல. என் நெஞ்சம் எரிந்தது, என் இதயம் சிந்தையில் ஆழ்ந்தது.

நான் வீட்டையடைந்தவுடன் படிக்க துவங்கவில்லை. அது என்னிடம் இல்லை என்பதை போலவே பாவனை செய்தேன், அப்போது தான் அது கிடைத்த இன்ப அதிர்ச்சியை என்னால் பின்னர் உணர முடியும். சிலமணி நேரங்களுக்கு பிறகு நான் அதை திறந்தேன், அற்புதமான சில வரிகளை வாசித்தேன், மீண்டும் மூடினேன், வீட்டை சுற்றி வந்தேன், கொஞ்சம் ரொட்டியையும் வெண்ணெய்யும் உண்ண சென்று மேலும் தாமதபடுத்தினேன். நான் புத்தகத்தை எங்கு வைத்தேன் என்று தெரியாதது போல் பாவனை செய்தேன், பின்னர் கண்டடைந்தேன், மீண்டுமொருமுறை திறந்தேன்.

​மகிழ்ச்சி என்றும் இந்த ரகசியத்துக்காக நம்ப முடியாததெல்லாம் செய்தேன்.​. ​ எனக்கு மகிழ்ச்சி என்பது எப்போது கள்ளத்தனமாகவே இருக்கும்.​ இதை ஏதோ நான் முன்பே உணர்ந்த மாதிரி, எத்தனை லாகவமாக அதை இழுத்தேன்! காற்றிலேயே நிலைத்தேன்..பெருமையும் தன்னடக்கமும் என்னிடம் மிகுந்தது. நானொரு மென்மையான மகாராணி.

அவ்வபோது நான் கயிற்றூஞ்சலில் அமர்ந்து புத்தகத்தை மடியில் வைத்துகொண்டு, அதிதூய பரவச ​ நிலையில் அதை தொடாமல் ஊஞ்ச​லாடினேன்.​

நான் ஒரு புத்தகத்துடன் இருக்கும் ஒரு பெண்ணல்ல; உண்மையில் நான் காதலனுடன் இருக்கும் காதலி.

-நரோபா 

No comments:

Post a Comment