Sunday, February 16, 2014

நீர் திவலைகள்

நேற்று மாலை மருத்துவமனைக்கு வயோதிக பெண்மணியொருவர் ஒரு பதினோரு மாத பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தார். கழுத்து நிற்கவில்லை, கையை முறுக்கிக்கொண்டே கிடக்கிறாள் எப்போதும் என்றார்கள். ஸ்வெட்டருக்கு உள் பல்லடுக்கு உடைகளுக்குள் ஆழத்தில் கிடந்தாள் அவள். மார் சளி கரட்டு கரட்டென்று இழுத்துகொண்டிருந்தது. மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டது. பிறந்ததும் அழவில்லையாம், பிறகு கொஞ்ச நாட்களில் வெட்டியதாம். மூளையின் எம்.ஆர்.ஐயில் சிறுமூளை சுருங்கிவிட்டதாகவும், மூளையின் வெள்ளை பகுதியில் பாதிப்பு இருப்பதாகவும் தகவல்கள் சொன்னது. என்னுடன் மானசாவும் சேர்ந்துதான் பார்த்துகொண்டிருந்தாள். சட்டென்று ஒருநிமிடம் என பக்கத்து அறைக்கு சென்றுவிட்டாள். குழந்தையின் தந்தைக்கு சென்னையில் ஏதோ ஒருவேலை. இரண்டு வயதில் மூத்த ஆண் குழந்தை வேறு உண்டு. மதுரை குழந்தைநல மருத்துவர் எழுதிய குறிப்பில், சரிவர தொடர் சிகிச்சை எடுத்துகொள்வதில்லை என்று எழுதியிருந்தார். நல்லவார்த்தை சொல்லி, தொடர் சிகிச்சையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி சில மருந்துகளை கொடுத்தனுப்பினேன். இவர்கள் எனக்கு புதியவர்கள் அல்ல. மாதம் மூன்று நான்கு குழந்தைகளையாவது பார்த்துக்கொண்டு தானிருக்கிறேன். தசை சிதைவும் மூளை பாதிப்பும் இணைந்த குழந்தைகளை மொத்தமாக கண்டு பெரும் அதிர்ச்சியில் உறைந்தது என்னவோ சேலத்தில் வானவன்மாதேவி- வல்லபி சகோதரிகள் நடத்திய முகாமில் பங்குகொண்ட போது தான்.

ராமநாதபுரம் முகாம்- வல்லபி, ஆட்சியர் நந்தகுமார், வானதி 


விஷ்ணுபுரம் விழாவிற்காக கோவைக்கு வந்திருந்த சமயத்தில் வானவன்மாதேவியையும் வல்லபியையும் சந்தித்தேன். கடந்த ஓராண்டிற்குள் நான்காவது சந்திப்பு.   சென்றாண்டு ஏற்காடு முகாமில் தான் முதன்முறையாக சந்தித்து கொண்டோம், அதன் பின்னர் சேலம் முகாமுக்கு சென்று வந்தேன், சேலம் பிரசாத் திருமணத்தில் திருச்சியில் சந்தித்துகொண்டோம். அவ்வப்போது தொலைபேசி வழியாக பேசிகொள்வதும் உண்டு.  அவர்களுடன் உரையாட கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பும் எனக்கு பெரும் உற்சாகமன்றி வேறெதையும் அளித்ததில்லை. அன்று வானதி  "சார் ஜனவரி இருபது ராமநாதபுரத்துல முகாம் ஏற்பாடு பண்ணிருக்கோம் வந்துருங்க" என்றார். அப்படிசொன்ன பிறகு "நீங்க அன்னிக்கு ஃப்ரீயான்னு கேக்கவே இல்லையே?" சிரித்துக்கொண்டேன். எவரோ ஒருவரின் நம்பிக்கையும் நட்பையும் பெறுவதும் தக்கவைத்துகொள்வதும் தான் எத்தனை அபூர்வமான நிகழ்வாகிவிட்டது! அப்படி பிரியத்தின் பேரால் உரிமைகொள்ளும் போது மகிழ்ச்சியே என்றைக்கும் எஞ்சியிருக்கிறது. அதைக்காட்டிலும் வேறென்ன வேலை அவசியம் வருகிறேன் என்று உறுதிகூறினேன். மானசா கர்நாடக சங்கீதம் பயின்றுவருகிறாள். திருவையாறு தியாகராஜர் ஆராதனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என கேட்டிருந்தாள் என்பது வீட்டிற்கு வந்து அவளுடன் பேசியபோது தான் நினைவுக்கு வந்தது. ஏற்கனவே வானதி-வல்லபி சகோதரிகளை பற்றி மானசாவுடன் பகிர்ந்திருந்தமையால் அவளும் முகாமிற்கு வர விருப்பம் தெரிவித்தாள்.

அதன் பின்னர் நம்மாழ்வார் மரணத்தை ஒட்டி வானதி ஒருவார காலம் மவுன விரதமிருந்த சூழலில் மற்றுமொருமுறை நினைவூட்ட வல்லபி அழைத்திருந்தார். ஏன் ராமநாதபுரம்? என்று கேட்டேன். ராமநாதபுர மாவட்ட ஆட்சியர், துனையாட்சியராக வடமாவட்டங்களில் பணியாற்றியபோதே இவர்களுக்கு தனிப்பட்ட பரிச்சயம் என்றும் எளிமையான மனிதர் என்றும் கூறினார் வல்லபி. அவருடைய வேண்டுகோளை ஏற்று DDRO அலுவலக வளாகத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சொன்னார். அதன் பின்னர் மவுனம் கலைந்து முகாமிற்கு நான்கைந்து நாட்கள் முன் வானதியும் அழைத்து பேசினார். " சார் நாப்பது பேரு வருவாங்கன்னு நினைக்கிறேன்"  என்றார். ஆனால் என் கணிப்பு வேறு மாதிரி இருந்தது. எங்கள் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்பதை நானறிவேன். ராமநாதபுரத்தில் இருந்து அதற்கு அப்பால் கூட காரைக்குடிக்கும் மதுரைக்கும் தான் மக்கள் வருவார்கள் என்று தெரியும். "கூட வருவாங்கன்னு நினைக்கிறேன்..நூறுக்கு மேல வந்துடுவாங்க பாத்துக்குங்க" என்றேன். அவர்கள் சேலத்திலிருந்து கிளம்புவதற்கு முன்னர் இது வரை நாற்பது பேர் பதிவு செய்திருக்கிறார்கள், இன்னும் பத்து பேர் அதிகம் வரலாம். என்றார்.

பொதுவாக ஆயுர்வேத மருந்துகள் விலையதிகம். எளிமையாக/விலை குறைவாக அதே வேளையில் பயனளிக்க கூடிய வகையில் மருந்துகள் அமைய வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டேன். இலவச மருத்துவ முகாம் என்பது ஒரு காரணம். மேலும் ஹோமியோபதி மருந்துகள் கொஞ்சம் பலனளிப்பதாக சகோதரிகள் கூறியதையும் கருத்தில் கொண்டு. அதற்கேற்றார் போல் எளிய மருந்து கூட்டுகளை அளிப்பது சிறந்தது. சில மூலிகைகளை உலர்த்தி சூரணம் செய்து கொண்டு செல்லலாம் என முடிவு செய்தேன். அதேப்போல் வெளிபிரயோகத்திற்கும் சில மருந்துகள் போட்டு மருந்தெண்ணெய் காய்ச்சி கொண்டு செல்வதாக இருந்தேன். ஐம்பது பேருக்குரிய மருந்துகளை தயார் செய்து கொண்டேன்.

பத்தொன்பதாம் தேதி குடும்பத்துடன் காரைக்கால் அருகே இருக்கும் திருமல்ராஜபட்டிணத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. நானூறு நானூற்றி ஐம்பது கிலோமீட்டர்கள் நானே ஒட்டி சென்றேன்.வானதி வல்லபி சகோதரிகள் பரிவாரங்களுடன் பத்தொன்பதாம் தேதியே வந்து ராமேஸ்வரம் சென்று வந்தார்கள்.

நானும் மானசாவும் இருபதாம் தேதி காலை ராமநாதபுரத்திற்கு பேருந்தில் புறப்பட்டோம். பத்துமணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் முகாம் தொடங்குவதாக ஏற்பாடு. நாங்கள் ஏறிய பேருந்து எங்கெங்கோ சுற்றிக்கொண்டு நான்கு மணிநேரத்தில் கொண்டு சேர்த்தது. தொடக்க நிகழ்வுகளுக்காக காத்திருந்த அவர்கள், அதை முடித்துக்கொண்டு அடுத்த வேலையை பார்த்து கொண்டிருக்கும் போது தான் நாங்கள் அங்கு போய் சேர்ந்தோம். அந்த அலுவலகம் மனிதர்களால் நிரம்பி வழிந்தது.

சுப்பு எங்களை அழைத்து சென்று ஒரு அறையில் இருத்தினான். சுப்பு, பிரியத்துற்குரிய தம்பி. சில மாதங்களுக்கு முன்னர் வரை நான் அவனை வானதி - வல்லபி சகோதரிகளின் உதிரவழி சகோதரன் என்றே எண்ணியிருந்தேன். ஏற்காடில் அவனை பார்த்த முதல் நொடியிலிருந்து அந்த எண்ணமே என்னுள் நிலைத்துவிட்டது. அப்படியில்லை என்று அறிந்தபின்னரும் அந்த எண்ணம் மாறவில்லை. 

வெவ்வேறு வயதினர், தசை சிதைவு உள்ளவர்கள் எவ்வளவோ மேல், ராமநாதபுரத்தில் வந்த பெரும்பாலானவர்கள் போதிய மூளை வளர்ச்சி இல்லாதவர்கள். நூற்றி நாற்பதுக்கு அதிகமான பிள்ளைகள் வந்திருந்தார்கள். இன்னதென்று சொல்ல முடியாது, தசை சிதைவு, செரிப்றல் பால்சி, மனநோய்கள், ஆட்டிசம் என பலவகை மனிதர்கள். எத்தனை முகங்கள்! குழந்தைகளை விட்டுவிடலாம், அவர்களை அழைத்துவந்த பெற்றோர்களின் முகத்தில் தான் எத்தனைப்பெரிய எதிர்பார்ப்பு. எப்போதும் எழும் கேள்வி தான், அப்பட்டமான உண்மை என ஏதும் உண்டா? உண்மையை எடுத்துரைக்கிறேன் பேர்வழி என்று அச்சுருத்துவதை காட்டிலும் அவர்கள் வேண்டி நிற்கும் நம்பிக்கையை அளிப்பதே மேல் எனும்  முடிவுக்கு அண்மைய காலங்களில் வந்துவிட்டேன். 

நாற்பது முதல் ஐம்பது பேர் ஆயுர்வேத சிகிச்சைக்கு வந்திருப்பார்கள். மானசாவிற்கு இது அதிர்ச்சியளிக்கும் அனுபவமாக இருக்கும் என்று எண்ணியிருந்தேன். அப்போதைய மக்கள் எண்ணிக்கையின் மீது கவனம் இருந்தபடியால் உணர்வு மட்டுப்பட்டு தர்க்கம் மேலோங்கி இருந்தது. சில எளிய நகைச்சுவைகளை கூட பரிமாறிக்கொள்ள முடிந்தது. என்னறையில் வானவன்மாதேவியும் அமர்ந்திருந்தார். இந்த ஐந்தாவது சந்திப்பில், சென்றமுறை கண்டு பேசியதை காட்டிலும் அதிக உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதாக தோன்றியது. மதியம் வல்லபியுடனும், வானதியுடனும் பேசிக்கொண்டிருந்தேன். பொதுவான அரட்டை தான். வெண்முரசை பற்றியும், வாசித்த புத்தகங்கள் பற்றியும் பேசிகொண்டிருந்தோம்.

மதியம் ஆட்சியருடன் அனைவரும் சேர்ந்து உணவருந்தினோம். சுவாரசியமான எளிய இளைஞர். காந்தி, இந்திய மருத்துவம், இலக்கியம் என்று இயல்பாக உரையாடல் விரிந்தது. மனிதர்களை நேசிக்கும் மனிதர்கள் அதிகாரத்தில் அமர்வதில் எப்போதும் சிக்கல்கள் இருக்கும், இவரைப்போன்றவர்கள் அதற்கு விதிவிலக்குகள் என்றெண்ணி கொண்டேன். ஆட்சியருடன் உணவருந்த சற்றே நீண்ட காத்திருப்பு அவசியமாய் இருந்தது. கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது, அங்கு ஆட்கள் காத்துகொண்டிருந்தார்கள்.  மாலை ஐந்துமணி வரை தொடர்ந்த முகாம் முடிவுக்கு வந்தது. வானதி - வல்லபி சகோதரிகள் கிளம்பினார்கள், அவர்களுடன் சுப்பு, அவர்களுடைய தந்தை, தாய், என பத்து பேர் கிளம்பினார்கள். ஹோமியோபதி மருத்துவர்கள் டாக்டர். பாபுவை நீண்ட நாட்களுக்கு பின்னர் அப்போது தான் சந்தித்தேன். டாக்டர் ரவிச்சந்திரனும் வந்திருந்தார். பிசியோதெரபிஸ்ட் நண்பரும் வந்திருந்தார். 

நாங்களும் சொல்லிக்கொண்டு பேருந்தில் கிளம்பினோம். 'அவர்களின் நிலை புரிகிறது, ஆனால் எனக்கு சிம்பதி எல்லாம் வரவில்லை' என்றாள் மானசா. ஏதேதோ பேசிக்கொண்டே வீடு வந்தோம். எழுதிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இத்தனை நாட்களாக எழுத உட்காரும்போதேல்லாம் மனம் குவிய மறுத்தது. அங்கு வந்திருந்த சிறுவன் நசிந்த குரலில் மழலையுடன் 'ஒத்தக்கடை ஒத்தக்கடை மச்சான்' பாடலை பாடியிருந்தான். ஒவ்வொருமுறையும் அவன் குரலும் முகமும் நினைவில் தோன்றி தொலைத்தன.

நேற்று அக்குழந்தை சென்றபின்னர் பக்கத்து அறையிலிருந்து மானசா வந்தாள். நீர்த்துளிகள் தேங்கி இருந்தன அவள் கண்களில். என்னவென்று கேட்டேன் ' அக்குழந்தைக்காக' என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்று அத்தனை பேரையும் பார்த்து கரையாத மனம் இன்று இந்த பிஞ்சு குழந்தைகளுக்கு நீர் சிந்தியதன் மர்மம் விளங்கவில்லை. அவளிடமே கேட்டேன். அதற்கு அவள் சொன்னாள். அன்று வந்த குழந்தைகளுடன் பெற்றோர்கள் வந்தார்கள். அக்கறை எடுத்துகொள்வார்கள். எல்லாம் ஒரு நம்பிக்கைதான். இக்குழந்தையின் பெற்றோர்கள் வரவில்லை. இத்தனை மார்சளி இருந்தும் மருந்து கொடுக்கவில்லை. அவர்களுக்கு அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை. கண்ணீர் பெருகியது. என் கண்ணிலும் தான். 

அர்த்தமின்மைக்கு மிக பிடித்த மனிதன் நான் தான் போலும்.


    

No comments:

Post a Comment