Saturday, February 5, 2011

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -11-முதுகு வலி

அன்றாடம் மருத்துவர்கள் சந்திக்கும் நோயாளிகளில் பெரும்பான்மை நிச்சயம் மூட்டு வலியாகவோ ,முதுகு வலியாகவோ தான் இருக்கும் .எனக்கு தெரிந்து நாற்பது வயதிற்கு மேல் உள்ள அனேகர் இவ்விரு வலிகளால் அவதி படுகின்றனர் .இவ்வகை நோய்களை பற்றிய அறிவும்,தீர்வும் நமக்கு மிகவும் முக்கியம் .

மனிதர்களுக்கு ஏன் முதுகு வலி ?
இயல்பாகவே இதர பாலூட்டி விலங்கினங்கள் போல் இல்லாமல் நாம் நிமிர்ந்து நடப்பது இதன் முக்கிய காரணம் ஆகும் .நான்கு கால்களில் இதர பிராணிகள் போல் நாம் நடந்தால் ,முதுகு புவி ஈர்ப்பு விசைக்கு ஆட்படாது ,நாம் நிமிர்ந்து நடப்பதால் உடலின் எடையை சமன் செய்யவும் ,தாங்கவும் முதுகெலும்பு நமக்கு உறுதுணையாக உள்ளது .ஆயினும் ,முதுகெலும்பின் ஊடாக இருக்கும் ஜவ்வு புவிஈர்ப்பு விசைக்கு ஆட்படுவதால் இயல்பாக அனைத்து மனிதர்களுக்கும் தேய்வு ஏற்படுகிறது .

முதுகு தண்டின் அமைப்பு

முதுகெலும்பு முப்பத்தி மூன்று எலும்புகள் வரிசயாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்க படுவதால் வரும் அமைப்பு .இந்த படத்தை பார்த்தீர்கள் ஆனால் புரியும் ,இந்த எலும்புகளுக்கு உள்,அல்லது நடுவாக போகும் ஒரு குழாய் தான் முதுகு தண்டு ,இது மண்டை ஓட்டின் அடிப்புறம் (நம் பின் மண்டையில் உள்ள ஓட்டை ) வழியாக மூளைக்கு நுழைகிறது .முதுகு தண்டிலிருந்து நம் உடல் முழுவதும் நெரம்புகள் -எலும்புகளின் ஊடாக வெளி வருகிறது .இந்த நெரம்புகள் -மூளையிலிருந்து நமது தசைகளுக்கு ,மூளையின் கட்டளையை எடுத்து செல்லும்,அதன் மூலம் நாம் கை கால்களை அசைப்பது எல்லாம் சாத்தியமாகிறது ,இதே போல் நமது உடலிலிருந்து நாம் பெரும் உணர்வுகள் இந்த நெரம்புகள் மூலம் உள்வாங்க பட்டு தண்டு வடம் மூலம் மின் அதிர்வு சமிங்கைகளாக மூளையை சென்று அடைகிறது .

ஒரு முதுகு எலும்பிற்கும் ,மற்றொன்றிற்கும் இடையில் ஒரு மெத்தை போன்ற அமைப்பு உள்ளது -இதன் பெயர் 'டிஸ்க்' ,இதில் பசை தன்மையும் ,நீர் தன்மயும் அதிகம் உண்டு ,இந்த டிஸ்க் (காண்க படம் ) இரு எலும்புகளுக்குள் உரசல் ஏற்படமால் ,அதிர்வுகளை தாங்கும் வல்லமை கொண்டது ,இதன் மூலம் நடுவில் செல்லும் தண்டுவடத்திற்கு எளிதில் பாதிப்பு வரமால் காக்கிறது .மேலும் முதுகு தண்டிலிருந்து வரும் நெரம்புகள் முதுகு எலும்புகளுக்கு நடுவில் உள்ள இந்த இடைவெளி மூலமாக வெளியில் வருகிறது .எலும்புகள் இந்த நெரம்பை அழுத்தாமல் இந்த டிஸ்க் ஒரு 'குஷன் ' போல செயல் படுகிறது .மொத்தம் முப்பத்தி ஒரு ஜோடி முதுகு தண்டு நெரம்புகள் நம் உடலில் உள்ளன .
இந்த நெரம்புகள் முப்பத்தி மூன்று எலும்புகளுக்கு மத்தியிலிருந்து வெளிவந்தும் ,உள் சென்றும் செயல் படுகின்றன .இதில் முதல் எட்டு ஜோடி நெரம்புகள் -கழுத்து மற்றும் கைகளை கவனிக்கின்றன .அடுத்த பனிரெண்டு ஜோடிகள் -நெஞ்சு,விளா,வயிறு பகுதிகளை கவனிக்கின்றன ,அடுத்து உள்ள ஐந்து ஜோடி நெரம்புகள் (லம்பார் ) கால்களின் தசைகளை கவனிக்கின்றன ,அடுத்து வரும் ஐந்து ஜோடிகள் (சாக்றல்) மற்றும் ஒரு ஜோடி வால் நெரம்பு(coccygeal ) இடுப்பு பகுதியை,மலகுடலை,பிறப்பு உறுப்புகளை கவனிக்கின்றன .

முதுகு தண்டு -முதுகெலும்பின் முழு நீளம் வரை இருப்பதில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ,பொதுவாக முதுகு தண்டு லம்பார் முதுகெலும்புகள் ( L1,L2 ) அத்தோடு முடிந்து விடும்,அதன் பின்பு எலும்புகளின் ஊடாக நெரம்புகள் மட்டும் வெளிவரும் .இன்னொரு முக்கியமான விஷயம் -நமது முதுகெலும்பு இயல்பாக முற்றிலும் நேராக இருப்பதில்லை ,சற்று வளைந்த வடிவம் உடையது (காண்க படம் ) இந்த வளைவுகள் கழுத்து பாகத்தில் கூடும் பொழுது மேல் முதுகு கூன் ,விழுகிறது ,இது இடுப்பு பாகத்திலும் நடக்கலாம் .நமது தண்டு முன்புரமாகவோ ,பின்புறமாகவோ ,பக்கவாட்டிலோ அதிகமாக வளைய கூடாது .அப்படி வளைந்தால் அதனால் வருங்காலத்தில் நிறைய சிக்கல்கள் வரலாம் .(காண்க படம் )பிரசவ காலத்தில் பெண்களுக்கு இயற்கையாகவே இத்தகைய கூடுதல் கூன் விழும் ,பின்பு அது சரி ஆகிவிடும் .

யாருக்கு முதுகு வலி வரும் ?

 • அதிகமாக அமர்ந்து வேலை பார்போருக்கு -குறிப்பாக முதுகு பக்கம் சரியான 'சப்போர்ட் ' இல்லாமல் அமர்பவர்களுக்கு ,கணினி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ,
 • அதிக தொலைவு -நேரம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு
 • பெண்களுக்கு -குறிப்பாக பிரசவித்த பெண்களுக்கு ,அதுவும் அறுவை சிகிச்சைக்கு ஆட்ப்பட்டவர்களுக்கு,மாதவிடாய் கடந்தவர்களுக்கு .
 • அதிக எடை தூக்கும் வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு
 • உடல் பருமனாக இருப்பவர்களுக்கு
இதை தவிர நாற்பது வயதிற்கு மேல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்

முதுகு வலி காரணங்கள்
 • பெரும்பான்மையான முதுகு வலி -வெறும் தசை பிடிப்பினால் ஏற்படுவது .
 • நேரடி விபத்து -முதுகெலும்பு முறிவு
 • முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு -டிஸ்க் அழுத்தம்(compression),நீர்த்து போகுதல் (dehydration), விலகுதல் (herniation),முற்றிலும் விடுபடுதல் (prolapse)
 • ஆட்டோ இம்முன் நோய்கள் ,ஆர்த்ரைடிஸ் ,முடக்கு வாதம் ,ருமடிக் ,அன்கிலோசிங் -போன்றவை முக்கிய நோய்கள் ஆகும் .இது எந்த மூட்டுகளையும் தாக்கலாம் .முதுகெலும்புகளை தாக்கினால் வலி பயங்கரமாக இருக்கும் .

 • சிறு நீரக கற்கள் -இடுப்பிலும்,கால் சந்து பகுதியிலும் வலி இருக்கும்,சிறு நீர் கழிக்கும் பொழுது எரிச்சல்,வலி ,ரத்தம் கலந்து வெளியேறுதல் என்பது அதன் குறிகள் .
 • மல கட்டு -பல நேரங்களில் கீழ் முதுகு வலிக்கு இதுவே காரணம் ஆகிறது .முதுகு வலியை தவிர்க்க குடலை தினமும் சுத்தமாக வைத்தல் முக்கியமானது .
 • பெண்களுக்கு -மாதவிடாய் சமயங்கள் ,கருப்பை கட்டிகள்,கரு முட்டை கட்டிகள் ,பால்லோபியன் குழாய் அடைப்பு ,வெள்ளை படுதல் ஆகியவையும் முக்கியமான காரணங்கள் .
 • வாய்வு பிடிப்பு
 • முதுகெலும்பு புற்று நோய்
 • முதுகெலும்பு -டி.பீ
 • வைரஸ் காய்ச்சல்கள் -வைரஸ் அல்லது பாக்டீரியா கிருமிகள் முதுகு தண்டின் உள்ளே இருக்கும் திரவத்தை (cerebro spinal fluid) தாக்குவது
 • வால் எலும்பு வலி -coccydyna
இதை எல்லாம் விட ஒரு முக்கிய காரணம் -மன அழுத்தம் .ஆம் ! மன அழுத்தத்தின் பொழுது மூளை நம்மை திசை திருப்ப செய்யும் ஒரு லீலை தான் பல நேரங்களில் முதுகு வலியாக வெளிவருகிறது .எலும்பை ஒட்டி உள்ள தசைகளுக்கு செல்லும் பிராணவாயுவை மூளை தன் சமிங்கை மூலம் குறைக்கிறது அதனால் இது ஒரு எலும்பு வலியை போலோ ,இல்லை நெரம்பு வலியை போலோ நமக்கு தெரிகிறது .இவ்வகை வலிகளுக்கு சிறந்த தீர்வு -இது நம் மன அழுத்தத்தால் வருகிறது என்பதை நாம் உணர்வது தான் ,இந்த அறிவே நம் மூளையின் சித்து வேலையே பலிக்காமல் செய்து விடும் .

இதை தவிர சில காரணங்களும் உண்டு .ஆகினும் பொதுவாக இவைகளே பிரதான காரணங்கள் .
நோய் அறிதல்
 • எக்ஸ் ரே
 • எம் ஆர் ஐ ஸ்கேன்
 • சீ டி ஸ்கேன்
போன்றவை உதவும் .
சிலநேரங்களில் சில ரத்த பரிசோதனைகள் உதவலாம் .
பொதுவாக இவ்வகை ஸ்கேன் -எல்லாம் உடனடி தேவை என்று எல்லாம் இல்லை ,நோயாளிகளின் நோய் குறிக்கு ஏற்ப நாம் நோய்களை புரிந்து கொள்ளலாம் .ஆயுர்வேத சிகிச்சை பொறுத்த வரை -ஸ்கேன் அவளவு அவசியம் இல்லை .நவீன மருத்துவம்- முதுகெலும்பு அறுவை சிகிச்சை போன்றவை என்றால் இது நிச்சயம் தேவை படும் .
முதுகு வலி -ஆயுர்வேத பார்வை
பொதுவாகவே வலி என்பது வாத தோஷத்தின் வெளிப்பாடு என்று ஆயுர்வேதம் நம்புகிறது .முதுகு வலியை தனி நோயாக ஆயுர்வேதம் அணுகவில்லை ,ஆயினும் கூட பல நோய்களின் குறிகளில் முதுகு வலி உண்டு .
நாபிக்கு கீழ் பகுதி வாதத்தின் இடம் என்று வரையறுக்கிறது .மூட்டுகள் கபத்தின் இடம் என்றும் விவரிக்கிறது மேலும் அசைவு ,செயல் என்பதும் வாதத்தின் குணங்கள் .மேலும் ஜவ்வு நீர்த்து போகுதல் என்பது -சவ்வின் நீர் தன்மை வற்றி போகுதல், அதாவது அங்கு ஒரு வித வறட்சி ஏற்படுகிறது -வறட்டு தன்மை வாதத்தின் குணமாகும் .வாத தோஷத்தின் நேர் எதிர் துருவமாக கப தோஷம் இருக்கிறது.கபம் ஸ்திரத்தன்மை கொடுப்பது .பொதுவாக எந்த ஒரு நோயும் வாத பித்த கப தோஷங்களின் பங்கு இல்லாமல் உருவாகாது .ஏதோ ஒரு மட்டத்தில்,ஒரு விகிதத்தில் இந்த தோஷங்கள் நோய்களுக்கு காரணமாகும் .அதிக பிடிப்பு உள்ள நோய்கள் வாத -கப தோஷ கூட்டினால் வரும் .மேலும் உடலில் உள்ள அக்னி மந்தமாகும் .வாதம் செல்லும் இயல்பான பாதை அடைப்பட்டு அது வேறு திசையில் பயணிப்பது என்றும் எடுத்து கொள்ளலாம் ..
சிகிச்சை
 • முதுகு வலியின் காரணத்தை பொறுத்தே சிகிச்சை அமையும் .வெறும் தசை வலிகள்,பிடிப்புகள் இளம் சூடாக தான்வன்தரம் தைலம்,நாராயண தைலம் ,பிண்ட தைலம் போன்றவை நன்றாக தேய்த்து சுடு நீர் அல்லது இலை ஒத்தடம் கொடுத்தால் போதும் .
 • டி பீ ,புற்று நோய் ,வைரஸ் பாதிப்பு ,விபத்து -போன்றவைகளுக்கு உடனடி கவனமும் சிகிச்சையும் தேவை .இங்கு ஆங்கில நவீன மருத்துவ சிகிச்சை பிரதானமாகும் ,ஆயுர்வேதம் உப மருந்தாக பயன்படுத்தலாம் .

 • சிறு நீரக கற்கள் ,பெண்களின் பிரச்சனைகளுக்கு -ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் நல்ல தீர்வுகள் உண்டு ,அக்காரணத்தை சரி செய்வதன் மூலம் முதுகு வலியிலிருந்து அடியோடு விடுபடலாம் .பெண்களின் நோய்களுக்கு உண்டான தீர்வை பற்றி மற்றொரு சமயத்தில் விரிவாக விவாதிக்கலாம் .

 • மலக்கட்டு வராமல் பார்த்து கொள்ள வேண்டும் .தினம் சரியான அளவில் நீர் குடித்து ,காலை சிறிய உடல் பயிற்ச்சிகளை செய்தல் முக்கியமாகும் .இரவு உணவு எளிதாக செரிக்கும் வண்ணம் உட்கொள்ளுவது மலசிக்கலை தவிர்க்க உதவும் .

 • வாய்வு தொல்லையை பொறுத்தவரையில் ஜீரண உறுப்புகள் சரிவர இயங்காததும் ,நாம் உட்க்கொள்ளும் உணவும் முக்கிய காரணம் .அதை தவிர-உறங்கும் பொழுது வாயை திறந்து கொண்டு உறங்குகிரோமா என்று கவனிக்க வேண்டும் ,மூச்சு குழாய்க்கு பதிலாக காற்று உணவு குழாயில் புகுவதால் வயிறு முழுவது காற்று நிறைந்து இருக்கும் .(aerophagia).இதை தவிர்த்தல் நலம்.வயிற்று பொருமல் ,வாய்வு தொல்லைகளுக்கு -சிறிது பெருங்காயத்தை நெய்யில் வதக்கி சுடு நீரில் சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும் .அஷ்ட சூரணம்-இதற்க்கு ஏற்ற மருந்தாகும் .வாயு குளிக,அபாயரிஷ்டம் போன்றவயும் உதவும் .
 • டிஸ்க் சார்ந்த நோய்களுக்கு -ஆயுர்வேதத்தில் நல்ல சிகிச்சை முறைகளும் ,மருந்துகளும் உண்டு .கடி வஸ்தி(காண்க படம்),சிநேக வஸ்தி,கஷாய வஸ்தி ,அப்யங்கம் ,இல கிழி ,மணல் கிழி ,பேதி போன்றவையும் ,வர்மம் சிகிச்சையும் நல்ல பலன் தரும் .
 • முதுகு பிடிப்பு மற்றும் வலி ஆகியவயிலிருந்து விடுபட -இரவு எண்ணெய் தேய்த்து பின்பு காலை ,ஆத்து மணலை ஒரு இரும்பு சட்டியில் வறுத்து ,துணியில் பொட்டலம் கட்டி ,அடுப்பில் உள்ள தோசை கல்லில் வைத்து எடுத்து ஒத்தடம் கொடுக்கலாம் .நல்ல பலன் தரும் .

 • யோகா ஆசனங்கள் -தினமும் செய்து வந்தால் வலி நன்றாக குறையும் ,ஆகினும் டிஸ்க் விலகி இருந்தாலோ ,விடுபட்டு இருந்தாலோ முதுகை அதிகமாக வளைக்கும் ஆசனங்கள் செய்வது விபரீதமாக முடியலாம் ,கவனம் தேவை .பொதுவாக -அனைவரும் பவன முக்த ஆசனம்,புஜங்க ஆசனம் ,சலாப ஆசனம் ,ஷஷாங்க ஆசனம் ,வஜ்ரா ஆசனம் போன்றவையை தினமும் செய்யலாம் .சாமானியர்கள் இதை செய்தால் முதுகு வலி வராது .


 • கணினி முன் அமர்ந்து அதிக நேரம் செலவிடுபவர்கள் சரியான முறையை பின்பற்ற வேண்டும் .(காண்க படம்)

இன்னும் இதை பற்றி எழுதி கொண்டே போகலாம் ,ஆயினும் நண்பர்களுக்கு ஏதேனும் கேள்வி இருப்பினும் அதற்க்கு ஏற்றவாறு ,அதை மட்டும் விவாதிக்கலாம் என்று எண்ணி உள்ளேன் .
பிசியோ தெரபி ,உடல் பயிர்ச்சி ,வாழ்க்கை முறை மாற்றம் மூலமாக முதுகு வலியை எளிதில் நாம் குணபடுத்தலாம் .நோயின் காரணத்தை அறிவதே முக்கியம் ,பின்பு அதற்க்கு ஏற்ற தீர்வை நோக்கி பயணிக்கலாம் .
ஆயுர்வேதத்தில் நல்ல தீர்வுகள் உண்டு .எனக்கு தெரிந்த ,உங்களுக்கு பயனளிக்க கூடிய பொது தகவல்களை இங்கு தொகுத்து தந்துள்ளேன் .மேலதிக விவரங்கள் ஏதும் வேண்டுமென்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம் .

எங்க ஊரு டாக்டர் தேவ குமார் -அவரோட தமிழ் துளி தளத்துல ,இதை பற்றி விரிவாக அணுகி உள்ளார் .அதையும் பார்க்கலாம் .அவர் ஒரு எலும்பு மற்றும் மூட்டு மருத்துவ நிபுணர் என்பதால் அவரது கருத்துக்கள் முக்கியமானவை .


7 comments:

 1. சபாஷ் ! நல்ல முயற்சி ! தமிழில் மருத்துவம் சார்ந்த தகவல்களை எழுதுவதென்பது, அசாத்தியமானது, எல்லா நுட்ப சொற்களையும் மொழி மாற்றம் செய்திட இயலாது. தங்களின் உயரிய முயற்சிக்கு நன்றி . நானும் தான் என்னோட படிவளையிலே எழுதினேனே ஒன்னு, தமிழ்லே, இதை பார்க்கும்போது அதை,"அடங்கொக்க மக்கா " என்று தான் சொல்லவா வேண்டும். வாழ்க வளமுடன். தொடர்க நின் பாணியில் நினது பணி.

  ReplyDelete
 2. very informative....

  in detail.... Thank you.

  ReplyDelete
 3. ரங்கா சார் ,நீங்கள் வாழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது .நீங்கள் ஆற்றி வரும் பங்கை இதனோடு ஒப்பிட்டால் ,இது ஒன்றும் இல்லை .உங்கள் ஊக்கத்திற்கு நன்றி .

  நன்றி சித்ரா மேடம் :)

  ReplyDelete
 4. மிகவும் உபயோகமான பதிவு போட்டிருக்கீங்க. அனைவருக்குமே பயன்படும் தகவல்கள். நன்றி.

  ReplyDelete
 5. அன்பின் நண்பருக்கு இனிய வணக்கம்,
  உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

  ReplyDelete
 6. நன்றி

  எனக்கு டிஸ்க் ப்ரோலப்ஸ் (c5-c6 cervical ) ஏற்பட்டுள்ளது ...இதை ஆயுர்வேத மருத்துவத்தில் முழவதுமாக சரி செய்ய முடியுமா ...

  ReplyDelete
 7. முதுகு வலி கட்டுரை அருமை.... நானும் முதுகுவலியால் அவதிபடுகிறேன்...டாக்டர் தேவகுமாரின் முகவரி தர இயலுமா? நான் தமிழ்நாடு...

  ReplyDelete