Saturday, April 11, 2026

வாழும் தமிழ் இலக்கிய விழா நினைவுகள்- 3

Lamentations 

 

நன்கு உறங்கி எழுந்தேன். பிரபுவும் பாலாஜியும் மதியத்தோடு கிளம்பவிருந்தார்கள். உஷாம்மா கனடா செல்வதால் நான் யுவன் அறைக்கு மாறினேன். முதல் நாள் போலயே கிச்சடி வடை காலை சிற்றுண்டிக்கு கொடுத்தார்கள். பிறந்தநாளின் போது யுவனோடு இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அவருடைய படைப்புகளுக்காக ஒரு ரீடர் கொண்டு வரும் திட்டம் சற்று பின் தங்கிவிட்டது. மீண்டும் அவற்றை முடுக்கிவிட வேண்டும். அவர் எழுதி வரும் நுண்கதைகளில் இரண்டை வாசிக்க கொடுத்தார். அவரோடு இருக்கும் போது இயல்பாகவே உற்சாகமாக உணர்வேன். சவுந்தர் இறுக்கம் தளர்ந்து நெகிழ்ந்திருந்தார். ஊருக்கு அனுப்பி வைக்கும்வரை கொஞ்சம் பதட்டம் இருக்கும் தான். நியூயார்க் கடைத்தெருவுக்கு செல்வதாகத்தான் திட்டம். ஆனால் மழை தூறியதால் மெட் அருங்காட்சியத்திற்கு அழைத்து செல்வது என திட்டம் மாறியது. 

Friday, April 10, 2026

வாழும் தமிழ் இலக்கிய விழா நினைவுகள்- 2


Courtyard Marriot, where we stayed
பாலாஜியும் பத்மநாப பிள்ளையும் வேலைகளை இழுத்து போட்டு செய்தார்கள். காபி, காலை உணவு வாங்கி வருவது தொடங்கி நிறைய பணிகள். விடுதியருகே இருந்த ஸ்டார்பக்ஸுக்கு பிரபு அழைத்து சென்றான். ஏறத்தாழ கசாயம் போலிருந்த மின்ட் தேநீர் அந்த ஊர் குளிருக்கு இதமாக இருந்தது. அமெரிக்கர்கள் செல்வது போல் ஜாக்கெட் மட்டும் அணிந்து கொண்டு ஹட்ஸன் நதிக்கரையோரம் இருந்த ஸ்டார் பக்ஸ் கடைக்கு சென்றேன். கைகள் குளிரில் விறைத்து விட்டது. எதற்கும் இருக்கட்டும் என எடுத்து வந்திருந்த கையுறையை அணிந்து கொண்டேன். சிதம்பர ரகசியத்தின் டெல்லி கணேஷ் கொலை செய்வதற்கு அணிவாரே அத்தகைய கையுறை. காலை பொங்கல் இட்லி வடை கொடுத்தார்கள். அறையில் ஓவன் இருந்ததால் சூடு செய்து உண்டோம்.

Thursday, April 9, 2026

வாழும் தமிழ் இலக்கிய விழா நினைவுகள்-1





A Church at NewYork 



நியூயார்க் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் ஏப்ரல் 3, 4 தேதிகளில் நிகழ்ந்த வாழும் தமிழ் இலக்கியத் திருவிழாவின் கதையை எங்கிருந்து தொடங்குவது? உடலும் மனமும் அமெரிக்க நேர இயைவிலிருந்து விடுபடவில்லை. அநேக தருணங்கள் மனத் திரையில் ஒடியபடி உள்ளன. எத்தனை முகங்கள், எத்தனை இடங்கள்! சரியாக சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவிற்கு விசா பெற தூதரகத்திற்கு சென்றதிலிருந்து இந்த கதையை தொடங்க வேண்டும். ஜனவரி 8 ஆம் தேதி எனக்கும் சாம்ராஜுக்கும் திருச்செந்தாழைக்கும் விசா நேர்காணல். சாம் எங்களுக்கு அரைமணிநேரம் முன்னரே சென்று விட்டார். நானும் செந்தாழையும் பையை லாக்கரில் வைத்துவிட்டு தூதரகம் சென்றோம். புத்தகங்கள், அழைப்பு கடிதம் , வங்கி விவரங்கள், ஆவணங்கள் என என்னென்ன கொண்டு வரவேண்டும் என ஒரு பட்டியலை மகேஷ்வரி முன்னரே அளித்திருந்தார். நான் ஒரே ஒரு கோப்பை தூக்கிக்கொண்டு வந்தால் செந்தாழை ஒரு பெரிய பை நிறைய தாள்களோடு  வந்தார். மூன்று மாத வங்கி வரவு செலவு கணக்கு மட்டும் முன்னூறு பக்கமிருக்கும். செந்தாழை தமிழில் நேர்காணல் கோரியிருந்தார் அவரை காத்திருக்கச் சொன்னார்கள். எதற்காக போகிறீர்கள், எங்கு தங்குவீர்கள், எத்தனை நாட்கள், யார் செலவு செய்கிறார்கள், நீங்கள் மருத்துவரா, என்னென்ன எழுதியிருக்கிறீர்கள், செலவை யார் ஏற்கிறார்கள் போன்ற கேள்விகளை கேட்டார்கள். நற்பயணம் வாய்க்கட்டும் எனும் வாழ்த்தோடு ஐந்து நிமிடத்தில் நேர்காணல் நிறைவடைந்தது.

Sunday, January 11, 2026

முனை காந்திய யாத்திரை ஒரு வாழ்த்து




சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் ‘முனை’ இளையோர் அமைப்பினர் வாக்குக்கு பணம் பெறக்கூடாது எனும் செய்தியை தாங்கி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள காந்தியவாதி லட்சுமண ஐயர் விடுதியில் இருந்து  சென்னைக்கு நடைபயணம் தொடங்கியுள்ளனர். இது தேர்தல் ஆண்டு. தலைநகரம் நோக்கிய பயணம் என்பதால் கூடுதல் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். கவனமும் கூடுதலாக கிடைக்கும். சென்ற ஆண்டு பயணம் சென்ற சிபி, அனு ஸ்ரீ, சௌமியா ஸ்ரீ, கௌதம், அர்ச்சனா மற்றும் லைலா பானு ஆகிய அறுவரோடு தீபிகாவும் இணைந்துள்ளார். காரைக்குடியில் இருந்து நானும் நாராயணனும் கிளம்புவதாக இருந்தோம். சென்ற ஆண்டு இவர்களை சுதிரும் சந்தித்திருந்ததால் தானும் வர பிரியப்பட்டான். 

Friday, January 9, 2026

வாசு முருகவேலின் ‘மணிபல்லவம்’ - முன்னுரை


 


வாசு முருகவேலின் ‘மணிபல்லவம்’  அறுபது எழுபது பக்கங்கள் உள்ள சிறிய நாவல்தான். கடந்த ஆண்டு வெளிவந்த ‘அன்னா’ போன்றதே இதுவும். சிறிய நாவல்களின் வலுவும் எல்லையும் அதன் வடிவம் தான். அலைந்து திரிந்தபிறகு நேரும் உளைச்சலை சிறிய நாவல்கள் கடத்த முடியாது. ஆனால் கூர்மையான சொல்முறையாலும் கதை மாந்தர்களின் நுணுக்கமான சித்தரிப்புகளாலும் வாசக பங்கேற்பை அதிகரிக்கும். மனதிற்குள் விரியும். அவ்வகையில் வாசுவின் முந்தைய நாவலான ‘அன்னாவை’ காட்டிலும் ‘மணிபல்லவம்’ கூடுதல் தேர்ச்சியுடன் வெளிப்பட்டிருக்கிறதாக உணர்கிறேன். தொல்தமிழ் இலக்கியங்களில் மணிபல்லவம் என்று குறிக்கப்படும் ‘நயினாத் தீவு’ தான் நாவலின் களம். எண்பதுகளின் மத்தியில் நடந்த படுகொலைக்கும் முன்னும் பின்னுமான  வாழ்வை தான் நாவல் பேசுகிறது. 

Thursday, January 8, 2026

‘காந்தியும் ஜவஹரும்’- முன்னுரை

பரிசல் புத்தக நிலையம் வெளியீடாக வெளிவந்திருக்கும் ‘காந்தியும் ஜவகரும்’ எனும் வெ. சாமிநாத சர்மா எழுதிய சிறுநூலுக்கு எழுதிய முன்னுரை. 


“என்ன செய்ய? இந்தியாவை அமிழ்த்தி அழிக்கத் துடிக்கும் இந்தத் தோல்வி மனப்பான்மையும் வறுமையுமான புதைகுழியிலிருந்து இந்தியாவை எவ்வாறு மீட்பது? எம்மக்களின் வரலாற்றில் வெகு சில காலம் மட்டுமே நம்பிக்கையும், உற்சாகமுமாகக், கவலையின்றிக் கழிந்தது, அந்த நாட்களைத் தவிர்த்து எத்தனையோ தலைமுறைகளாக எம் மக்கள் தங்கள் உதிரத்தையும் வியர்வையையும், கண்ணீரையும் இந்த நிலத்திற்காக சிந்தி இருக்கிறார்கள். ஆனால் இந்த செயல்பாடுகள் இந்தியாவின் ஊனுடலையும் ஆன்மாவையும் ஆழமாக ஊடுருவி முழுமையாக அரித்துக் கொண்டிருக்கிறது. நுரையீரலில் மெல்ல பரவி இறுக்கி ஆளைக் கொல்லும் புற்றுநோய் போல எங்கள் நிம்மதியான வாழ்வை அணுவணுவாகப் பரவிய நஞ்சு அழித்துக் கொண்டிருந்தது. சில நேரங்களில் காலரா போலோ பிளேக் போலோ ஏதோ ஒரு நோய் பீடித்து வேகமாகப் பரவி இந்த அவதிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தால்கூட நல்லது என்று எண்ணத் தோன்றியது. எனினும் அது  மனதைக் கடந்து சென்ற ஓர் எண்ணம் மட்டுமே ஏனெனில் முரட்டு சாகசங்கள் நம்மை எங்கும் அழைத்துச் செல்வதில்லை, மேலும் ஆழமாக ஊடுருவி பரவும் நோய்க்கு அதிரடியான போலி வைத்தியம் எந்தவித தீர்வையும் தராது.




Monday, January 5, 2026

சொப்பனங்கள் நிஜமாகும் சொர்ண பூமி - பால பாஸ்கரன் - நூல் அறிமுகம்


4.1.2026 அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் ஆற்றிய உரையின் விரிந்த வடிவம்.




அறிஞர் பால பாஸ்கரன் பற்றிய அறிமுகம் என்பது அவரது நேர்காணல் வழியாக ஏற்பட்டது. மீண்டு நிலைத்த நிழல்கள் எனும் தொகுப்பை வல்லினம் நவீன் வெளியிட்டார். அதில் அவரது நேர்காணலை வாசித்த பொழுது ஒரு அசலான அறிஞரின் குரலை கேட்க முடிந்தது. தமிழின் முதல் சிறுகதை எது என்பது குறித்து நா கோவிந்தசாமி முன்வைத்த மகதும் சாயபு எழுதிய  வினோத சம்பாஷனை சிறுகதையை முதல் சிறுகதையாக ஏன் கொள்ள முடியாது என்று தர்க்கபூர்வமாக முன்வைப்பதோடு, 1924 ஆம் ஆண்டு எழுதியவர் பெயரின்றி வெளியான இன்னொரு கதையை தான் மலாயாவின் முதல்  சிறுகதை என வாதிடுகிறார்.