Sunday, January 11, 2026

முனை காந்திய யாத்திரை ஒரு வாழ்த்து




சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் ‘முனை’ இளையோர் அமைப்பினர் வாக்குக்கு பணம் பெறக்கூடாது எனும் செய்தியை தாங்கி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள காந்தியவாதி லட்சுமண ஐயர் விடுதியில் இருந்து  சென்னைக்கு நடைபயணம் தொடங்கியுள்ளனர். இது தேர்தல் ஆண்டு. தலைநகரம் நோக்கிய பயணம் என்பதால் கூடுதல் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். கவனமும் கூடுதலாக கிடைக்கும். சென்ற ஆண்டு பயணம் சென்ற சிபி, அனு ஸ்ரீ, சௌமியா ஸ்ரீ, கௌதம், அர்ச்சனா மற்றும் லைலா பானு ஆகிய அறுவரோடு தீபிகாவும் இணைந்துள்ளார். காரைக்குடியில் இருந்து நானும் நாராயணனும் கிளம்புவதாக இருந்தோம். சென்ற ஆண்டு இவர்களை சுதிரும் சந்தித்திருந்ததால் தானும் வர பிரியப்பட்டான். 


காலை 10.0 மணிக்கு புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு வந்து சேர்ந்தோம். கோவை விஷ்ணுபுரம் விழா தொடங்கி தொடர்ந்து பயணங்களில் உள்ளேன். உடலும் உள்ளமும் சற்று சோர்ந்திருந்தது. ஆனால் இந்த நடை பயணம் எங்களது மாணவர்கள் முன்னெடுப்பது என்பதால் நிச்சயம் தவறவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். நாங்கள் சென்று சேர்ந்தபோது  அங்கே நிறைய நண்பர்கள் கூடியிருந்தார்கள். மொத்தம் 12 மணிநேரம் வரப்போக பயணம். அங்கிருந்தது என்னவோ ஒருமணி நேரம் தான். இன்னும் கொஞ்ச நேரம் அவர்களோடு செலவிட்டிருக்க வேண்டும் என  தோன்றியது. இந்த வருடம் உணரும் கடுங்குளிரை இதற்கு முன்பு உணர்ந்ததில்லை. கிருஷ்ணன் வெள்ளிமலை வகுப்பு முடித்துவிட்டு நேராக அங்கே வந்திருந்தார். ஈஸ்வரமூர்த்தி, அழகுவேல், லோகமாதேவி, பாலு, கதிரேசன், சரண்யா, மாணவர்களுடைய பெற்றோர்கள், உள்ளூர் காரர்கள் என நாற்பது ஐம்பது பேர் வந்திருந்தார்கள். ஐந்து நிமிடம் ஒரு சிற்றுரை ஆற்றினேன். நான்கு முழ வேட்டியில் வாக்குக்கு பணம் பெற மாட்டோம் என கையால் எழுதி இருந்தார்கள். அதில் கைரேகை பதித்தேன். ஃப்ளெக்ஸ் போன்றவை சுமை அதிகமாக இருந்திருக்கும், இந்த யோசனையின் எளிமை என்னை கவர்ந்தது. அங்கே கூடியிருந்த பலரும் கைரேகை வைத்தனர். சிறிது தூரம் அவர்களோடு நடந்தேன். பிறகு அங்கிருந்து புறப்பட்டு இரவு வீடு வந்து சேர்ந்தேன். எங்களுடன் கதிரேசனும் திண்டுக்கல் வரை வந்தான். 


திரும்பி வரும்போது ஏதேதோ யோசனைகள்.  நடைப்பயணத்தின் நோக்கம் முக்கியமானது. இவர்கள் செல்லும் தடத்தில் எல்லாம் மாற்றம் நிகழ்ந்து விடுமா? இவர்கள் சந்திக்கும் மனிதர்கள் எல்லாம் பணம் வாங்காமல் விட்டுவிடுவார்களா?  நோக்கம் நிறைவேறுமா? சாத்தியமா? எந்த அளவிற்கு பயன் தரும்? போன்ற கேள்விகளை பலர் எழுப்பக்கூடும். எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் ஃபேஸ்புக்கில் காந்தி இத்தகைய பயணத்திற்கு கிளம்பி இருப்பாரா என்றொரு கேள்வி எழுப்பி இருந்தார். கிளம்பி இருப்பார், ஆனால் அதற்கு முன்பு கட்சிகளுக்கு கடிதம் எழுதி இருப்பார் என்று எழுதி இருந்தார். பெருந்தலையூரில் வாக்குக்கு பணம் பெறுவதற்கு எதிராக இந்த மாணவர்கள் பிரச்சாரம் செய்தபோது அங்கே அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடினார்கள். கட்சிகளுக்கு கடிதம் அனுப்புவது நல்ல யோசனை தான். முடிந்தால் நேரில் சந்திக்கலாம். 


காந்தியத்தின் மிக முக்கியமான இயல்பென்பது ‘பொறுப்பேற்றல்’. நாம் குற்றம் காணும் குறைகூறும் சமூகமாக இருப்பதில் ஒருவித நிம்மதியை அடைகிறோம். அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பார்கள். மக்கள் எவ்வழியோ அரசனும் அவ்வழி தான். நாம் சீர்கேடுகள் என அடையாளம் காண்பவை யாவும் நம்மிலிருந்து உருவாகுபவை. காந்திய அரசியல் செயல்பாடை கொள்கையற்ற ‘செயற்தள’ அரசியல் என விமர்சிப்பவர்கள் உண்டு. கொள்கை என்றால் என்ன என்று துழாவி பார்த்தால், இறுதியில் நீங்கள் யாருக்கு எதிராக அரசியல் செய்வதற்கு இங்கே வந்திருக்கிறீர்கள் என்பதாகத்தான் சென்று முடியும். காந்திய அரசியல் செயல்பாடு எவருக்கும் எதிரானது அல்ல என்பதே அதன் பலம், பலவீனம். அதன் அர்த்தம் அச்சத்தால் அநீதிக்கு முன் கண்மூடிக்கொள்வது அல்ல. எதிர்தரப்பின் அநீதிகளை சுட்டிக்காட்டும் போதே தன் தரப்பின் பலவீனங்களை பகிரங்கமாக ஒப்புக்கொள்வது. அயராத உரையாடல் தான் காந்தியத்தின் சாரம். வேறொரு நண்பர் சங்கர் பட பாணியிலான முதிரா முயற்சி என்று என்னிடம் விமர்சனம் செய்தார். சில வருடங்களுக்கு பின் இதே உற்சாகத்தோடு இருப்பார்களா என்று கேட்டார். லட்சியவாதங்களில் ஒரு வித அசட்டு பிடிவாதம் இருக்கத்தான் செய்யும். சில வருடங்களுக்கு பின் என்னவாகும் என்பதை பற்றி இப்போது என்ன கவலை.  மாணவர்கள் பொது சமூகத்துடன் நிகழ்த்தும் உரையாடலே இந்த யாத்திரை. விளைவுகள் என்னவாகவும் இருக்கலாம். இங்கே எல்லா செயல்களுக்கும் ஏதோ ஒரு விளைவும் பொருளும் இருக்கக்கூடும் என்று நம்பலாம் அல்லது எவற்றுக்கும் எந்த பொருளும் இல்லை என்று நம்பலாம். நான் இரண்டுக்கும் இடையே எப்போதும் ஊசலாடிக் கொண்டிருப்பவன். ஆகவே தான் எனக்கு காஃப்காவும் காந்தியும் ஆதர்சம். லட்சியவாதத்திற்கு தோல்வியில்லை. எங்கோ ஏதோ ஒன்றை அது மாற்றும். எல்லா செயல்களும் பொருள் பொதிந்ததே என்று நம்ப விரும்பினேன். முழுக்க நேர்மறை நோக்கோடு மாற்றம் என தாங்கள் நம்புவதை நோக்கி அடியெடுத்து  பயணிப்பதே முக்கியம். 


காந்தியை நான் முதன் முதலாக அந்தரங்கமாக சந்தித்தது அரசியல் தளத்தில் அல்ல. இயேசுவை போல மகத்தான துன்பியல் காவிய நாயகனாகத்தான் அவர் எனக்கு அறிமுகம். தன் வாழ்வில் எந்த லட்சியங்களுக்காக நின்றாரோ அவை எல்லாம் கண்முன்னே கலைந்து போய் மரணத்தை யாசிக்கும் மனிதராக, சொந்த மக்களாலேயே வெறுக்கப்பட்டு, கொல்லப்பட்டவராக தான் காந்தி எனக்கு நெருக்கம். Grand Inquistor பகுதியில் தாஸ்தாயேவ்ஸ்கி கண்டடையும் கிறிஸ்து தேவாலயங்களின் கிறிஸ்து அல்ல. கலைஞனின் கிறிஸ்து. காந்தியும் எனக்கு அப்படிதான். அரசியல் காரணிகள் எல்லாம் பிறகு தான். ஆகவே தான் அவரது அரசியல் சரி தவறுகள் குறித்தான மயிர்பிளக்கும் விவாதங்களில் எனக்கு பெரிய ஆர்வமில்லாமல் போனது. அவரது போதாமைகளை சிக்கல்களை இயல்பென ஏற்றுக்கொள்ள முடிகிறது.  கடக்க முடிகிறது. அதற்கப்பால் அவரது கனவுகளையும் லட்சியங்களையும் தொட்டறிய முடிகிறது. 



 பெற்றோர் அல்லது மூத்தோருக்கான பதட்டம் என்னை தொற்றி கொண்டபோது அதிகாரபூர்வமாக பூமர் பருவத்திற்குள் அடியெடுத்து வைத்துவிட்டோம் என தோன்றியது. அவர்களுக்கு நன்மை நிகழ வேண்டும் என  வேண்டிக்கொள்கிறேன். சற்றே மனதை விலக்கிவைத்து கொள்ள வேண்டும். தனி மனிதர்களாக அவர்களுக்கு இத்தகைய ஒரு பயணம் இந்த வயதில் ஒரு பேரனுபவமாக இருக்கும். விதவிதமான நிலப்பரப்புகள், மனிதர்கள், உணவுகள் என கொண்டாட்டமாக இருக்கும். சென்ற ஆண்டு வேதாரண்யத்தில் நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் கௌதம் ஒரு மூலையில் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்ததை நினைவுக்கூர்கிறேன். நட்பும், பிரிவும் என கலவையான உணர்வுகள் அவர்களை ஆட்கொண்டிருக்கும். இந்த பயணம் அவர்களை அவர்களுக்கே இன்னும் நெருக்கமாக காட்டித்தரும். தன் நிழலை கண்டு அஞ்சாத திண்மை அவர்களுக்கு வாய்க்கட்டும்.   


1 comment:

  1. சிறப்பான பதிவு. தெளிவான நோக்கம் இந்த இளம் வயதில்
    தொடர்ந்து சரியானதை சொல்வதும் ஒரு வேள்வி

    ReplyDelete