சில வருடங்களாக வாசிக்க விரும்பிய நாவல். தற்போது அச்சில் இல்லை என்பதால் கிடைப்பதற்கு அரிய நாவலும் கூட. யூமா வாசுகி தன் கையெழுத்து போட்டு நண்பர் காளி பிரசாத்திற்கு அளித்த அவருடைய பிரதியை கடன் பெற்று வாசித்து முடித்தேன்.
தமிழ் நாவல் வரிசையில் 'ரத்த உறவிற்கு' மிக முக்கியமான இடமுண்டு. இயல்புவாத எழுத்தில் ஒரு மைல்கல். எனது வாசிப்பின் எல்லையில் தமிழில் குடும்ப வன்முறையை இத்தனை அப்பட்டமாக இந்நாவல் சித்தரித்த அளவிற்கு வேறு எந்த நாவலும் சித்தரித்ததில்லை. ரத்த உறவுடன் ஒப்பிடத்தக்க நாவல் என்றால் பைரப்பாவின் ' ஒரு குடும்பம் சிதைகிறது' நாவலை சொல்லலாம். எனினும் கதாபாத்திரங்களின் பன்முகத்தன்மை காரணமாக குடும்பம் சிதைகிறது ரத்த உறவை காட்டிலும் மேம்பட்ட நாவலாக மதிப்பிடுவேன்.
ஒன்றாக வசிக்கும் மூன்று சகோதரர்களின் குடும்பத்தில், இரண்டாமவரின் குடும்ப கதை ரத்த உறவு. தினகரனின் மூத்த மகனின் காமாலை மரணத்துடன் துவங்குகிறது நாவல். மகனின் மரணத்திற்கு தந்தையின் அசட்டைத்தான் காரணம் என கொந்தளிக்கிறாள் அன்னை. தினகரன் குடியும் வன்முறையுமாக சீரழிகிறான். மகளை துரத்தி துரத்தி அடிக்கிறான், தம்பியுடன் சேர்ந்து மனைவியின் புடவையை உருவி அடித்து மண்டையை பிளக்கிறான், மகனை ஆல மரத்தில் கட்டிபோட்டு சாத்துகிறான், சிறிய மகனை வெயிலில் பிரட்டுகிறான், திருக்கை எலும்பை கொண்டு ரத்த விளாரை ஏற்படுத்துகிறான். இதே தீனன் தான் தன் மகன்களை கைபிடித்து அலுவலக விழாவிற்கு அழைத்து செல்கிறான். சாராயக்கடையில் தன் மகளையொத்த வயதுடைய பெண்ணை பார்த்து மருகுகிறான், அவளுக்கு மாமன் சடங்கு செய்கிறான். எல்லோரின் மரியாதைக்குரியவனாகவும் இருக்கிறான். அவ்வகையில் தீனன் நமது தந்தைகளின் பிரதிநிதி. இந்திய ஆண்களின் விந்தையான இரட்டை நிலையின் சான்று. அவன் மீது அத்தனை வெறுப்பு பொங்கினாலும் அவனுடைய மரணம் நம்மை வதைக்கிறது. ஓட ஓட விரட்டி அடித்தாலும், முகத்தில் காறி உமிழந்தாலும் கூட சாலையில் விழுந் கிடக்கும் அவனை மகள் சுமந்து வருகிறாள். அழாமல் விளையாடிக்கொண்டிருக்கும் தம்பியிடம் அழ சொல்லி வற்புறுத்துகிறாள்.
தீனனுக்கு எதிர்மாறாக அவருடைய அண்ணனின் பாத்திரம். பொறுப்பற்ற குடிகாரனாக மனைவியிடம் மிதிபட்டு புண்பட்டு இறக்கிறார். குழந்தைகளுக்கு பிரியமானவர். அவருடைய வீழ்ச்சி மனதை வதைக்கிறது. சித்தப்பா குடிக்காதவர் (ஒரேயொரு முறை குடிக்கிறார்) கிராம கணக்குபிள்ளை. அவருக்கும் அவருடைய மனைவிக்குமான உறவு சுமூகமாகவே செல்கிறது.ஆனால் அண்ணனின் பலவீனத்தை பயன்படுத்திகொள்ளும் சந்தர்ப்பவாதியாக இருக்கிறார். கடன் கணக்கை பொய்யாக எழுதி வீட்டை எழுதி வாங்குகிறார். போதையின் துணை இல்லாமலேயே அவரால் அடித்து துன்புறுத்தவும் முடிகிறது. பூடகமாக தீனனுக்கும் அவருடைய தம்பி மனைவிக்கும் இடையிலான உறவு சொல்லப்படுகிறது. மனைவியின் ஆதிக்கம், இணக்கம், கணவனின் ஆதிக்கம் என மூன்று சகோதரர்களின் குடும்பங்களின் வழியாக மூன்று விதமான குடும்ப இயல்பை காட்டுகிறார் யூமா. நியாயமாக இணக்கமான தம்பதிகளின் மீது நேர்மறை பார்வை எழ வேண்டும் ஆனால் அவர்கள் சூழ்ச்சி மிகுந்தவர்களாக, சுரண்டுபவர்களாக இருக்கிறார்கள் எனும் போது இந்த தேர்வுகள் பொருளற்றவையாக ஆகின்றன. ஒழுக்க நடத்தைக்கும் உள்மன விரிவுக்குமான தொடர்பு கற்பிதம் என்பது இலக்கியத்தின் வலுவான பேசுபொருள்.
ஒவ்வொரு அத்தியாமும் பெரும் பதைப்புடனே கடக்க முடிந்தது. எப்போது யார்? என்னவிதமான துன்புறுதலுக்கு ஆளாவார்கள் என பதறியது? வாசுகியோ, சின்னவனோ, பெரியவனோ அல்லது ரமணி அம்மாளோ இப்போது இறந்து விடுவார்களோ எனும் அச்சத்துடனே வாசித்தேன். சின்னவனின் கனவுப் பகுதிகள் கவித்துவமானவை, அபார கற்பனைகளால் நிறைந்தவை. நாவலின் மைய ஓட்டத்திற்கு இது தேவையற்ற தடை என்றொரு விமர்சனம் உள்ளதை அறிகிறேன். நேர்மாறாக எனக்கு இவை நாவலின் மிக முக்கியமான, உயிர்த்துடிப்பான அங்கமாக தோன்றியது. பிள்ளைகளின் உளநிலையில் குடும்ப வன்முறை செலுத்தும் பாதிப்பை வேறு எப்படி சொல்லிவிட முடியும்? வேறொன்றையும் அந்த கனவுகள் நிகழ்த்தின, தொடர் குரூரங்களில் இருந்து தேவையான பெரும் ஆசுவாசத்தையும் அளித்தன. மேலும் இந்த கனவு பகுதிகள் நாவலை யதார்த்தவாத தளத்திலிருந்து வேறு தளங்களுக்கு உயர்த்தி செல்கின்றன. நாவலின் இறுக்கத்தை மீறி பீறிடும் அபத்த நகைச்சுவை பகுதிகள் என பாட்டி மொட்டையிடம் குறி கேட்கும் பகுதி, சித்தப்பா தற்கொலை முயற்சியின் போது அண்டைவீட்டு பாய் கிணற்றில் குதித்து தடுக்க முயலும் கூத்து, பஞ்சாயத்தை குலைக்க பாட்டி முன்னெடுக்கும் யுத்தி, போன்ற பகுதிகளை சொல்லலாம்.
இந்த குடும்ப வன்முறை சுழலை எப்படி உடைக்க முடியும்? யாரேனும் மனம் திருந்தி விடுவார்களா? மரணம் மட்டுமே மீட்பளிக்க முடியும் என்பதும் புரிகிறது. சீக்கிரம் வந்து தொலைந்து இவர்களை மீட்டு தொலைக்க கூடாதா என்று கூட தோன்றியது. நாவலின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று ரமணி அம்மாள் காவல்துறையை நாடும் இடம். காவலர் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த பிறகு சகோதரர்களின் உடல்மொழி முழுதும் மாற்றம் அடைகிறது. வெறுப்பும் கூட உடல்ரீதியான துன்புறுத்தலாக வெளிபடாமல் மட்டுபடுகிறது. ஆனால் அண்டைவீட்டார் அவர் மீது கொண்ட பரிவு சுத்தமாக காணாமல் போகிறது. அவர் மீதான வன்முறையை எவ்வித தயக்கமும் இன்றி, 'போலீஸ் ஸ்டேஷன் போனவ' எனும் ஒற்றை புள்ளியில் புறம் தள்ளுகிறது. ஏனெனில் ரமணி அம்மாள் அங்கு ஒரு முன்மாதிரியை வைக்கிறார். குடும்ப வன்முறைக்கு காவல்துறையை நாடுவது என்பது அந்த கிராமத்தில் இல்லாத வழக்கம். அந்த புள்ளியில் அவரை அத்தனை ஆண்களும் எதிரியாக வரிந்து கொள்கிறார்கள். வாசுகி அக்காவும் ரமணியம்மாவும் எனக்கு குடும்பம் சிதைகிறது நாவலின் பார்வதியையும் நஞ்சம்மாவையும் நினைவுபடுத்தினார்கள். மனித உறவுகளின் வினோத நடத்தைகளை தீர்ப்பெழுதாமல் யதார்த்த தொனியில் சொல்லி செல்கிறார் யூமா. பெரியம்மாவின் வன்மமும் அவளுடைய மாறுதலும், அத்தனை அவமானத்திற்கு பின்னும் தீனன் மீது வாசுகியும், அம்மாவும் கொண்டிருக்கும் பற்றும், அந்த வீட்டிலேயே இருக்க வேண்டும் என விழைவது ஆச்சரியம் தான்.
குறிப்பிட்டு கவனப்படுத்த வேண்டியது பாட்டியின் பாத்திர சித்தரிப்பு. முழுக்க சுயநலவாதியாக உலவுகிறார். இந்த சித்தரிப்பும் கூட என ஒரு குடும்பம் சிதைகிறது கங்கம்மாவை நினைவுபடுத்தியது. ஆனால் இவர் அவரை விடவும் ஈரமற்றவர். சொந்தமகன் இறந்த போதும் கூட அவன் விட்டு சென்ற சிறிய கடனை எப்படி வசூலிப்பது என மருகிக் கொண்டிருப்பார். பேரன் பேத்திகளின் மீது அணுவளவும் ஈர்ப்போ பாசமோ அற்றவர். மகன்களுக்கு சமமாக அமர்ந்து குடித்து அவர்களை தூண்டிவிடுபவர். தமிழ் இலக்கிய உலகில் பெண்களின் வழமையான தாய்மை, கருணை சித்தரிப்பை உடைத்த முதல் படைப்பு என்று ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாவை குறிப்பிடுவார்கள். எதிர்மறைத்தன்மை கொண்டவரை நாவலின் முக்கிய பாத்திரமாக ஆக்கி எழுதப்பட்ட நாவல். ரத்த உறவில் பாட்டி மைய பாத்திரம் அல்ல. அவரிடம் கனிவோ அல்லது இனிமையோ புலப்படும் தருணம் வராதா என மனம் துழாவி சலித்தது. நாவலின் மீதான விமர்சனமாக இந்த ஒற்றைப்படைத்தன்மை வாய்ந்த சித்தரிப்புகளை சொல்லலாம். மொத்த குடும்பமும் தீணனின் மனைவி மக்களை மட்டும் வஞ்சிப்பதாக உள்ளது. ஒருவகையில் தீணனின் தந்தையின் மரணத்திற்கு ரமணியம்மாவின் சகோதரர் காரணம் எனும் வன்மம் தான் இவர்களின் இந்த வஞ்சத்தின் முதல் கங்கு என தோன்றியது. இப்படி ஒரு சமநிலை பேணப்பட்டாக வேண்டுமா? அப்படி இருந்தால் தான் மேம்பட்ட இலக்கியமாகுமா? என்றொரு துணை கேள்வியை கேட்டுகொண்டால், அவசியமில்லை, அத்தகைய நிர்பந்தங்கள் ஏதுமில்லை. வலிய எழுதி அடையப்படும் சமநிலையை காட்டிலும் அகசான்றுக்கு நேர்மையாக திகழும் ஒற்றைப்படைத்தன்மை மேலானது. நாவலின் இறுதி பகுதி அளிக்கும் நிம்மதி அலாதியானது.
அன்பிற்கான ஏக்கத்தை கலையாக்கிய மிக முக்கியமான நாவலாக ரத்த உறவை குறிப்பிடலாம். விரைவில் மறுபிரசுரம் வரும் என எதிர்பார்க்கிறேன்.

No comments:
Post a Comment