Monday, May 5, 2025

வனம் - சிறுகதை

 

எனது சிங்கப்பூர் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஒரு கதை தொடர் எழுதலாம் என்றிருக்கிறேன். ஃபிப்ரவரி சிராங்கூன் டைம்ஸ் இதழில் வெளிவந்த முதல் கதை/ நாவல்  பகுதி.

Image generated by Grok AI 




“அரிபுரத்தில்  இப்படியான ஒரு இடத்தை நீ  பார்த்திருக்கவே மாட்டாய்” வூ தூண்டிலை இறுகப் பற்றியபடி சொன்னார். இது அவர் அடிக்கடி சொல்வது தான்.  நாங்கள் இருவரும் யின் யாங் ஏரியில் மீன்பிடித் துறையில் அமர்ந்திருந்தோம். விடுவிடுவென மொய்க்கும்  பொன்னிற கொய் மீன்களுக்குள் எவ்வித ஒழுங்கும் இல்லை. கருப்பு நிற  கொழுத்த கெளுத்தி மீன்கள் நிதானமாக, வரிசையாக நீந்தின. தூண்டில் இரை அவற்றை பரபரக்கச் செய்யவில்லை. வூ பொறுமையாக்க் காத்திருந்தார். “எப்படியும் சிக்குவாய்.. உன் கட்டுப்பாடு  எவ்வளவு நேரம் என்பதை பார்க்கத்தானே போகிறோம்” என்றபடி ஹைனிகன் பியரை ஒரு மிடறு அருந்தினார். வெயிலும் இல்லாத மழைக்கு முந்தைய புழுக்கமும் இல்லாத மாலைப் பொழுது. இங்கே அது மிகவும் அரிது என்பதை என் குறுகியகால வாசத்தில் உணர்ந்து கொண்டேன். அத்தகைய காலநிலை என்றால் வூ பீர் புட்டிகளுடன் என் வீட்டு கதவை தட்டி விடுவார். “நாளை நம் வனத்தில் வேட்டை” என்று நேற்றே சொல்லிவிட்டுத்தான் சென்றார். “இப்போது நாம் நம் வனத்திற்கு செல்வோம் வா” என்று சொன்னபடி மாலை வீட்டிற்கு வந்தார்.  ஏரியையொட்டிய மரம் செடி செறிவுதான் அவருக்கு வனம். நான் அமைதியாக பார்த்ததைக் கவனித்தவர்  “தெரியும் நீ இதை வனம் என ஒப்புக்கொள்ளமாட்டாய். ஆனாலும் .. “

“மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். வனத்தை எவரும் வளர்க்க முடியாது. இது  தோட்டம்”. 

“சரி சரி..ஏதோ ஒன்று. எனக்கு வனம் உனக்கு தோட்டம்.” பொதுவாக நீர்த்துறையில் போடப்பட்ட பெஞ்சுகளில் அமர்ந்தபடியே நீர்வீழ்ச்சியை பார்த்தபடி எங்கள்  மாலை பொழுதுகள் கழியும். பேசுவதற்கு ஏதுமற்ற போது ஆளுக்கொரு புத்தகத்துடன் அமர்ந்து விடுவதும் உண்டு.  


  வூ மிங் லி, அதுதான் வில்லியமின் சீனப் பெயர். ஆனால் அவர் எனக்கு வில்லியமாகவே அறிமுகம் ஆனார். வூ என்கிற வில்லியம் எனக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் மேல்தளத்தில் வசிப்பவர். நான் டி ஷர்ட் ஜீன்ஸ் சகிதம் வகுப்பிற்குப் புறப்படும் போது அவர் பளபளவென தேய்த்த தோல் சப்பாத்துக்கள் கோட்டு சூட்டு சகிதம் தனது சைக்கிளில் கல்லூரிக்குக் கிளம்புவார். முதல் முறை அவரை அப்படிப் பார்த்த போது  வினோதமாக உணர்ந்தேன். சிநேகத்துடன் புன்னகைத்தார். மாலை நடைக்கு எங்கள் குடியிருப்புக்கு எதிரேயுள்ள செயற்கை ஏரியை சுற்றி நடக்கும் போது காதில் ஹெட்போன் மாட்டியபடி கையில்லா பனியனை போட்டுக்கொண்டு என்னைக் கடந்து ஓடுவார். ஏரிக்கு நடுவே உள்ள மரப் பாலத்தில் நின்று கீழே செல்லும் மீன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.   சூரியன் மறைந்து செந்நிற கீற்றாக மறையும் வரை வானத்தை வெறித்திருப்பேன். அடுத்த வகுப்புக்கான திட்டம் மனதிற்குள் உருப்பெறும். அப்படியான ஒரு மாலைப் பொழுதில் என்னருகே வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார். “வில்லியம் லி, நான் வரலாற்றுப் பேராசிரியர்.. நீங்கள் தமிழ் எழுத்தாளர் என ஜான் சொன்னார். தொன்மையும் தொடர்ச்சியும் உள்ள அபாரமான மொழி” என்ற போது சற்றுப் பெருமிதமாக உணர்ந்தேன். என்னை அறிமுகம் செய்து கொண்டேன். நீரில் நீந்திய நட்சத்திர ஆமையை அவர்தான் எனக்கு முதலில் சுட்டிக் காண்பித்தார். அதை பார்த்ததும் வீடு குறித்த வினோத ஏக்கம் என்னுள் எழுந்தது. பிள்ளைகளின் அன்மையை மனம் விழைந்தது.  “இங்கே நீர் நாய்கள் கூட வரும். அதிர்ஷ்டம் இருந்தால் காண்பீர்கள். கோவிட் காலத்தில்தான் அரிபுரத்தில் இத்தனை நீர்நாய்கள் உள்ளதைக் கவனித்தேன். அரசு கணக்கெடுத்து வைத்திருந்ததை விட அதிகம் என ஸ்ட்ரெயிட் டைம்ஸில் செய்தி வந்திருந்தது ” நீர்நாயின் படம் வரைந்து அவற்றுக்கு உணவிடக் கூடாது எனும் எச்சரிக்கைப் பதாகைகள் ஏரியை ஒட்டிய நடைபாதை பகுதியில் ஆங்காங்கு தென்பட்டன. திடீரென்று சைரன் ஒலித்தது. “அது அப்படித்தான், இடிக்கான எச்சரிக்கை. ஆனால் எதுவும் ஆகாது” என்றார் நிதானமாக. 


ஏரி முடியுமிடத்தில் ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி. அதைக் காண்பதற்கென்று ஒரு பாலம் உண்டு. நான் அங்குதான் பெரும்பாலான மாலைப் பொழுதுகளைக் கழிப்பேன். நீர்வீழ்ச்சி தினமும் மாலைகளில் மட்டும் தான் விழும். யின் யாங் பல்கலைக்கழகக் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு ஏரியாகவும் நீர்வீழ்ச்சியாகவும் பராமரிக்கப்படுகிறது. எரியும் நீர் வீழ்ச்சியும் கூட கழிவு நீர் மறு சுழற்சியின்  ஒரு பகுதி தான். வில்லியமை நாள்தோறும் காண்பேன். ஒருநாள் மாலை நான் எங்கேனும் வெளியே சென்றாலும் இரவு எத்தனை மணி ஆனாலும் கதவைத் தட்டி “இங்கே உனக்கொரு பெண் கிடைத்துவிட்டால் போல” என்று கேலி செய்யவில்லை என்றால் அவருக்கு  உறக்கம் வராது. முதல் மாதம் முடிவதற்குள்ளேயே வில்லியம் எனக்கு நல்ல நண்பராக ஆனார். எங்கள் முதல் பியர் சந்திப்பின்போது தான் தனது சீனப் பெயரைக் கூறினார். அப்படித் தன்னை அவர் வெளிப்படுத்துவது மிகவும் அரிது என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன்.  


 “இங்கே சீனர்கள் பலருக்கும்  இரண்டு பெயர்கள். ஒன்று சீனப் பெயர்” என நெற்றிச் சுருக்கங்கள் தெரிய சிரித்தார்.  “எனக்கு என்ன வயதிருக்கும் என்று எண்ணுகிறாய்?” என்றார் புன்னகைத்தபடி. நான் அரிபுரத்தை வந்தடைந்த புதிதில் எப்போதும் எனக்கு இந்தக் குழப்பம் இருக்கும். சீனர்கள், அதிலும் பெண்களின் வயதை என்னால் ஊகிக்க முடிந்ததே இல்லை. நாற்பது ஐம்பது வயதுடையவர்கள் கூட இருபது முப்பது வயது மதிக்கத்தக்கவர்கள் போலத் தோன்றுவார்கள். என் கண் பழகவில்லை என்பதால் ஏற்பட்ட குழப்பமாகவும் இருக்கலாம். அல்லது அரிபுரத்துப் பெண்கள் உடலைப் பேணும் விதம் காரணமாகவும் இருக்கலாம். காலப்போக்கில் அவர்கள் அணியும் உடைகளை வைத்தும் பேச்சுக்களை வைத்தும் ஓரளவு வயதை ஊகிக்க முடிந்தது. கல்லூரி செல்லும் மகள், கண் ஓரம் தெரியும் சுருக்கங்கள், வூ வின் மனைவி அமண்டாவின் தோற்றம் இவற்றையெல்லாம் கொண்டு  வூவிற்கு என் கணிப்பில் எப்படியும் 55 வயதிருக்கும். ஆனாலும் அவர் கேட்க விரும்பும் பதிலைச் சொன்னேன். “நாற்பத்தைந்து இருக்குமா?” கண்களில் ஒளி மின்னச் சிரித்தார். “எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்கு அறுபது” என்றார் பெருமிதம் பொங்க.  என் புன்னகை அவருக்கு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும். “நீ பொய் தானே சொன்னாய்?” என்றார். “எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரின் மேற்கோள் இது. கதைகள் தான் என்றாலும் அவை எத்தனை அற்புதமானவை!” என்றதும் இருவரும் சிரித்தோம். “வா நாம் நம் வனத்தைச் சுற்றி நடந்துவிட்டு வருவோம்” என அழைத்துச் சென்றார். இருவருமாக யின் யாங் ஏரியின் சுற்றுவட்டப் பாதையில் நடந்து வந்தோம். இரவு விளக்கு மஞ்சள் நிறத்தில் பழைய கால அரிக்கேன் விளக்கு போல அழுது வடிந்தது. நெருங்கி வரும் தோறும் ஒளி கூடியது. ஏதோ ஒரு இயந்திரச் சத்தம் கேட்டது.  “அது ஒன்றுமில்லை. மாதம் இருமுறை சாலைக்கு நீளும் கிளைகளை வெட்டி விடுவார்கள். ஒரு காலத்தில் இங்கே மலைப்பாம்புகளைப் பார்த்திருக்கிறேன் தெரியுமா?” “பல்கலைக்கழகத்திலா?” “ஆம் இங்குதான். இது ஒரு மழைக்காடு தானே. இப்போதும் சில உடும்புகள் மேற்குப் பக்கம் திரியும். சூழலியல் துறை கணக்குப்படி  மொத்தம் பதிமூன்று உடும்புகள் நம் வளாகத்தில் உள்ளன” “அவற்றுக்கு பல்கலைக்கழக அடையாள அட்டையும் பயண அட்டையும்  உண்டா?”   என்றதும் சிரித்து பியர் புரைக்கேறி துப்பினார். அன்றிரவு நெடுநேரம் மரக்கிளைகள் அறுபடும் மின் ரம்ப ஓசை என் காதிற்குள் கேட்டபடி இருந்தது. படுக்கையில் புரண்டுக்கொண்டே இருந்தேன். வரிசை மாறாமல் நடப்பட்ட தைல மரங்கள் ஊடாக ஊரில் நான் சைக்கிளில் பள்ளிக்கு சென்றது நினைவில் எழுந்தது. தைல மர தோப்பு என சொல்வதில்லை. தைல காடுதான். அதன் சீர்மை அச்சுறுத்தும். அங்கே வேறு செடிகளை காணவே முடியாது. ஏதேதோ நினைவுகள். மனதை உடல் வென்று நான் உறங்கும் போது விடிகாலை நான்கு மணி. ஒன்பது மணிக்கு மேல் எழுந்தேன். மதியம் தான் என் வகுப்பு என்பதால் எனக்கு எந்தப் பரபரப்பும் இல்லை. வாசல் கதவில் வூ சிறிய ஒட்டும் தாளில் குறிப்பை ஒட்டிவிட்டுச் சென்றிருந்தார். “உனக்கு மீன் பிடிக்க வருமா? அடுத்த வாரத்தில் நம் ஏரியில் மீன் பிடிக்க வேண்டும். வா” என்று எழுதி இருந்தது. மூக்கு அடைத்துக் கொண்டிருந்தது. காற்றில் ஈரப்பதம் கூடி அன்று மழை வரும் என்று அதற்குப் பொருள். ஏரி அசைவின்றி ஆகாயத்தின் துல்லிய நீலத்தில் வெளிப்பட்ட வெண்பஞ்சு மேகங்களையும் சுற்றியிருந்த பசுமைகளையும் பிரதிபலித்து கொண்டிருந்தது. சாலையோரக் கிளைகள் எல்லாம் வெட்டப்பட்டு வெளிச்சம் கண்ணைக் கூசியது. அரிபுரத்து கட்டாய ராணுவ சேவை இளைஞர்களின் தலை போல என்று தோன்றியதும், இந்த உவமையை மனதில் குறித்து கொண்டேன்.  புற்கள் ஒரே சீராய் வெட்டப்பட்டிருந்தன.  ஏரியிலிருந்து கீழே இறங்கினால் வெவ்வேறு நாட்டுத் தாவர வகைகள் உள்ள ஃபூனான் தோட்டம் வரும். மைய மண்டபத்தில் சென்று அமர்ந்தேன். மஞ்சள் நிறப் பட்டாம்பூச்சி என்னை கடந்து சென்றதை பார்த்ததும் மனம் பெரும் உவகை அடைந்தது. வில்லியமிடம் பல்கலைக்கழகத்தில் பட்டாம்பூச்சிகளைக் கணக்கெடுத்திருக்கிறார்களா என்று கேட்க வேண்டும். அவர் பதில் என்னவாக இருக்கும் என்பதையும் அறிவேன். அதற்கான ஆராய்ச்சியில் உள்ளோம் என்பார். இத்தனை மரச் செறிவுக்கு நான் குரங்குகளையோ பறவைகளையோ பார்க்கவில்லை என்பது சட்டென்று உதித்தது. 


ஏதோ ஒன்று உந்த கைப்பேசியில் ஒரு கவிதை எழுதினேன்.



முறையீடு 


நேற்று 

இருந்த முன்னூற்றி முப்பத்தி நான்கு 

பட்டாம் பூச்சிகளில் 

முப்பதைக் காணவில்லை 

புதிதாய் பூத்த முப்பது மலர்களில் 

ஒன்று கூட 

மஞ்சளாய் இல்லை 

என்பதுதான் 

 முறையீடு 


கவிதையை அப்போதே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வில்லியமிற்கு அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.  மழை பிடிப்பதற்குள் தரைத்தளத்தில் இருக்கும் என் குடியிருப்புக்குள் புகுந்துவிட்டேன். பெரும் இடியோசைகளுடன் ஏரியின் மீது மழை ஆவேசமாக இறங்கியது. கண்ணாடிச் சாளரத்தின் அருகே அமர்ந்து அம்புகள் போல நீரில் பாய்ந்திறங்கிய மழையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 


மழைக்கு பின் சாலையில் மழையின் சுவடுகள் மறைந்துவிட்டன. மாலை மீண்டும் எல்லாம் இயல்பிற்கு திரும்பியிருந்தது. காலையில் எழுதி ஒட்டிய குறிப்பை வாசித்தாயா என்று மாலை சந்திக்கும்போது கேட்டார். நான் மீன் பிடித்ததில்லை. எனினும் வருகிறேன் என்று சொல்லி வைத்தேன். “இந்த  வனம் உனக்கொரு கவிதையைத் தந்திருக்கிறது போலும். வனம் படைப்பூக்கத்தை பெருக்கும் என்பார்கள்.”   “அரிபுரத்தின் இலக்கியத்தின் சிக்கல் என்னவென்று தெரியாமல் இருந்தேன். இன்று தெரிந்து கொண்டேன்.” 

“என்ன?” 

“தோட்டம் தான் உங்கள் வனம். ஜாடிக்கு ஏற்ற மூடி தானே இருக்க முடியும் ”  என்றதும் சிரித்தார். 

“நீ இதை விடவே மாட்டாய்.”


 அன்றைய நாளுக்கு பிறகு  பார்க்கும்போதெல்லாம் மீன் பிடிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். சனிக்கிழமை எந்த வேலையும் வைத்துக் கொள்ளாதே. அன்று உனக்கு வகுப்பு இல்லைதானே? எனத் திரும்பத் திரும்பக் கேட்டார். எனக்கு அவரது ஆர்வம் மிகவும் வினோதமாக இருந்தது. வருகிறேன் என ஒப்புக் கொண்டாலும்  நாளெல்லாம் அவரருகே அரிபுரத்து வெயிலில் அமர்ந்திருப்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. வகுப்பில் மாணவர்கள் எழுதிய கதைகளை வாசித்து அவற்றுக்கு கருத்துரை இடவேண்டும். ஏரிக்கரையில் அமர்ந்து அதைச் செய்ய வேண்டியது தான் என்று முடிவு செய்து கொண்டேன்.   


சனிக்கிழமை காலையிலேயே வாயில் மணியின் ஓசை கேட்டு விழித்து கொண்டேன். “இன்று காலையுணவு ஏதாவது லேசாக எடுத்துக் கொள். மதியம் நாம் பிடித்த மீனை கொண்டு சமைத்து விருந்து உண்ணலாம். அமண்டாவிடம் சொல்லிவிட்டேன். அவள் சீன முறையில் மீன் சமைத்து தருவதை நீ சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்.  ஒருமணி நேரத்தில் தயாராகி விடு” என்றார். நான் இன்று அவருடன் மீன்பிடித் துறைக்கு வரும்போது இன்னும் பல முகங்கள் தூண்டிலுடன் ஆங்காங்கு அமர்ந்திருந்ததைக் கண்டேன். “நாங்கள் எல்லோரும் பல்கலைக்கழக தூண்டில் இடுவோர் சங்க உறுப்பினர்கள்…இன்று 76  மீன்கள் வரை நாங்கள் பிடிக்கலாம். எடை மிகுந்த மீன்களைப் பிடிப்பதுதான் இங்கே முக்கியம், கல்லூரிப் பையன்கள் அதிக எண்ணிக்கையில் பிடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் வலுவான போராடும் ஆற்றல் உடைய மீன்களைப் பிடிப்பது தான் உண்மையான வேட்டை. சென்ற முறை நான் பிடித்த மீன் பன்னிரண்டு கிலோ.” “அது என்ன 76 மீன்கள்? ஏதும் புனித எண்ணா?” “புனிதமும் இல்லை ஒன்றும் இல்லை. கடந்த கணக்கெடுப்பில் இருந்து அதிகரித்திருக்கும் மீன்களின் தோராயமான எண்ணிக்கை” விழி விரிய நோக்கினேன் “இங்குள்ள மீன்களுக்கு கணக்கா?” “ஆம் தோராயமான கணக்கு என்று சொன்னேனே. அதை துல்லியப்படுத்த ஒவ்வொரு மீனுக்குள்ளும் ஏதேனும் மின்னணு சிப்பைப் பொருத்தலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். நூறு நாட்களுக்கு மேலான மீன்கள் மேலிருந்து சிப்புகள் ஒளிவிடும். பிடிப்பது சுலபம். நம் மாணவர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றார் பெருமிதம் போங்க. “எனக்கொரு யோசனை தோன்றுகிறது”

 “சொல்” 

“நீங்கள் ஏன் நூறு நாட்களில் வெடிக்கும் ஒரு சிறிய மின்னணு வெடி குண்டை சிப்புடன் சேர்த்து பொருத்த கூடாது? தானாக மீன்கள் வெடித்துச் சிதறி இறந்து விடும்.”

 “நீ சொல்வதை புரிந்து கொள்கிறேன். உன்னால் நம்ப முடியவில்லை இல்லையா? இங்கே கொசுக்கள் இல்லை என்பதைக் கவனித்தாயா?” “ஆம். கவனித்தேன்.” 

“இது ஒரு மழைக்காடு என்பதை நினைவில் கொள். மலேரியாவால் இங்கே செத்தவர்கள் ஏராளம்.” “ஒவ்வொரு கொசுவிற்குள்ளும் சிப் வைத்து 10 நாட்களில் அவற்றை வெடிக்க வைத்தோம் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்” வாய் விட்டு சிரித்தார். 

“நான் எதுவும் சொல்லவில்லை. மரபணு அறிவியலைக் கொண்டு அரிபுரத்தில் எப்படிக் கொசுவை ஒழித்தோம் என்பதைப் படித்துப் பார்த்து நீயே தெரிந்து கொள்.” என்று சொல்லி முடிப்பதற்குள் அவரது கரங்கள் இறுகின. தூண்டில் பயங்கரமாக இழுபட்டது. “இதோ ஒருவன் சிக்கிவிட்டான்..” பெரிய மீன் சிக்கிவிட்டது என்பதை தூண்டில் இழுபடும் வேகத்தை கொண்டு கணிக்க முடிந்தது. அத்தனை ஆற்றலையும் கொண்டு தூண்டிலை இழுத்துப் பிடித்தார். “என்னைக் கொஞ்சம் தாங்கிக் கொள்” என்றார். “வில்லியமுக்கு ஏதோ ஒன்று சிக்கிவிட்டது. கமான் வில்” என எதிர் சாரியில் குரல்கள் எழுந்தன. நான் வேட்டைக்காரனைக் கண்டதில்லை. ஆனால் கற்காலத்தில் வேட்டையாடி தனது இரையை வென்றடைந்த பிறகு அவன் முகம் என்னவாக இருந்திருக்கும் என்பதை வூ முகத்தில் நான் கண்டுகொண்டேன். 


இருபது கிலோ. நம் பல்கலைக்கழக சாதனை என்று நாளெல்லாம் அரற்றியபடி இருந்தார். “மான், சிறுத்தை, புலி, யானை என தலைகளை பழையகால வேட்டைக்காரர்கள் மாட்டி வைப்பார்கள். அப்படி இந்த மீன் மண்டையை பாடம் செய்து மாட்டி வைக்க வழியில்லாமல் போனதே” என்று கண் சிமிட்டினார். விரிந்த உள்ளங்கையை விட பெரிதாக இருந்த மீன் மண்டையில் திறந்திருந்த விழியை நோக்கிக் கொண்டிருந்தேன். அமண்டா அபாரமாக சமைத்திருந்தார். எங்கள் வளாகத்தில் எல்லோருக்கும் அமண்டா சமைத்த மீனை  பகிர்ந்து  கொடுத்துவிட்டு வந்தார்  வில்லியம். 


இரவு  “வா நம் வனத்திற்குச் செல்வோம்” என்று  ஹைனிக்கனோடு வந்தார்.  இரவுவொளியின் மஞ்சள் வெளிச்சத்தில் அவர் முகத்தில் மிளிர்ந்த மிடுக்கைப் பார்த்தேன். சில்வண்டுகள் கூட இல்லாத நிசப்தம் இரவை நிறைத்தது. ஏரியைக் கடந்து  ஃபூனான் தோட்ட மண்டபத்திற்கு சென்று அமர்ந்து கொண்டோம். அங்கே இரவு விளக்கு கிடையாது.  “அரிபுரத்தில் எங்கும் இப்படியான ஒரு இடத்தை நீ பார்த்திருக்கவே மாட்டாய்” என்றார். “உலகத்திலேயே நான் பார்த்ததில்லை..” என்றேன் எரிச்சலுடன். அவருக்கு தமிழ்நாட்டு கார வகைகள் என்றால் பிடிக்கும். “கொண்டு வந்திருக்கிறாயா?” என்றதும் அடையார் ஆனந்தபவனின் மிளகு தட்டையை நீட்டினேன். “உனக்கு தெரியுமா? மனித குலத்தின் இத்தனை நூற்றாண்டு போராட்டம் எதற்கென்று?” “பாதுகாப்பான வாழ்விற்கு” “சரி தான். அதற்கு அவன் இயற்கையை வெல்ல வேண்டும். இயற்கை என்பது என்ன. தன்னால் கட்டுப்படுத்த முடியாத பிரம்மாண்டமான தற்செயல். இந்த நிச்சயமற்ற தன்மையை கணிப்பதற்கு தான் நாம் இத்தனை ஆண்டுகளாக போராடி வருகிறோம். கணிப்பது பத்தாது. அதை கட்டுப்படுத்தவும் வேண்டும். வருங்கால மனித நாகரீகத்திற்கு அரிபுரம் அவ்வகையில் ஒரு வழிகாட்டி. முன்னோடி..” என்றார். நான் மவுனமாக இருந்தேன். “காலையில் நீ சொன்னதை யோசித்து பார்த்தேன்” “எதைப்பற்றி?” “கணக்குகள் மீது இருக்கும் தீரா விழைவை பற்றி..அது தான் அரிபுரத்தை பிற தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா நாடுகளில் இருந்து தனித்து காட்டுகிறதோ?” “புரியவில்லை..” “கணக்கு என்பது என்ன, நேர்த்தி. ஆனால் இப்படி சொல்வதால் நீ தப்பாக எடுத்துக் கொள்ள கூடாது…” என்று நிறுத்தினார். “சொல்லுங்கள்” என்றேன். ஒரு மிடறு பியரை அருந்திய பிறகு  தொடர்ந்தார் “உங்கள் தேசத்தவர்களுக்கு பொதுவாக ஒழுங்கு மீது எந்த நம்பிக்கையும் இல்லை. அது தான் உன்னை சீண்டுகிறதோ என்று தோன்றுகிறது” என்றார். கோபம் தலைக்கு ஏறியது. “எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கிறது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து  உடனே எழுந்து சென்றேன். அவர் என்னை நிறுத்த முயன்றார். ஆனால் வார்த்தை எழவில்லை. பின் தொடர்ந்து வருகிறாரா என்று கவனித்தேன். வரவில்லை. குடியிருப்பிற்குள் விடுவிடுவென்று சென்று கதவை அடைத்துக் கொண்டேன். தொலைக்காட்சியில் டோரா காட்டிற்குள் பயணித்து கொண்டிருந்தாள். இதோ இந்த காடு தான் உங்கள் காடு. கார்ட்டூன் காடு என்று கத்த வேண்டும் போலிருந்தது. உடலெல்லாம் அவமானத்தால் எரிந்தது. அமண்டா அழைத்தார். “வில் உன்னோடு இருக்கிறாரா? அவர் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அவருடைய கைபேசியை இங்கேயே விட்டு சென்றுள்ளார் என்பதால் உனக்கு அழைக்கிறேன்” என்றார். நான் அங்கிருந்து வந்து ஒரு மணிநேரத்திற்கு மேலாகி இருக்கும். இவ்வளவு நேரமாக அவர் வரவில்லை என்பது எனக்கு சரியாக படவில்லை. அமண்டாவிடம் “வர சொல்கிறேன்” என சொல்லிவிட்டு கைவிளக்கை எடுத்துக்கொண்டு ஃபூனான் தோட்டத்தை நோக்கி நடந்தேன். வானில் நட்சத்திரங்கள் ஏதுமின்றி இருண்டு இருந்தது. அவர் சொன்னதில் அப்படி என்ன தவறு? ஒழுங்கீனத்துடனான சமரசம் தானே சராசரி இந்தியனின் வாழ்க்கை. மண்டபத்தில் அவரது உருவத்தை கண்டதும் மனம் அமைதி அடைந்தது.   



 அவர் அதே மண்டபத்திலேயே அமர்ந்திருந்தார். மூன்றாவது பியர் டின் அவர் கையில் இருந்தது. “அமண்டா உங்களை வீட்டிற்கு வர சொன்னார்” என்று ஒருவிதமான கறாரான குரலில் சொன்னேன். “இங்கே உட்கார். உனக்கு இன்னும் கோபம் தணியவில்லை.. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, நீ புரிந்துகொள்வாய் என்று..” என அவர் பேசி முடிக்கும் முன்னரே எங்கள் மண்டபத்திற்கு பின் இலைகளின் சரசரப்பை கேட்டோம். “காதல் ஜோடிகளாக இருப்பார்கள்..பாவம்” என்று சொல்லிவிட்டு பேச்சை தொடர முயன்றார். சைகையால் அவரை அமைதிப்படுத்தினேன். சரசரப்பு எங்களை நெருங்குவதை இருவருமே கேட்டோம். என் பரபரப்பை பார்த்ததும் அவருக்கு சிரிப்பாக வந்தது. “இங்கே என்ன புலியா வரப்போகிறது? ஏன் உனக்கு இவ்வளவு பரபரப்பு” என்றபடி என்னிடமிருந்த கைவிளக்கை வாங்கி  ஓசை வந்த திசையை நோக்கி அடித்தார்.  பிரம்மாண்டமான சர்ப்பம் எங்கள் முன் படமெடுத்து நின்றது. அதன் தலை என் இரு உள்ளங்கை அகலம். விளக்கொளியில் அதன் மஞ்சள் நிறம் பொன் போல மின்னியது.  “ஓ ஷிட். ..ஓ ஷிட்” என பதறி எழுந்தார். “இது எங்கே…இங்கே” என்று குழம்பினார். அதன் சீரான சீற்றத்தை கேட்டதும் இதயம் தாறுமாறாக படபடத்தது. அவர் வலக்கரத்தை இறுக பற்றினேன். பத்தடி தூரத்தில் எங்களை நோக்கி நின்றது சர்ப்பம். அத்தனை வசீகரம். சவுந்தர்யம். ஆம் அதுதான் சரியான சொல். சவுந்தர்யம். கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஏதோ ஒரு ஓசை கேட்டது. விடுக்கென்று தவம் கலைந்தது போல  திரும்பி புதர் சரசரப்புக்குள் மறைந்தது.  காலியான  ஹைனிக்கென் புட்டி சற்று தொலைவில் உருண்டு கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் அங்கிருந்து திரும்பி பார்க்காமல் ஓடி வந்தோம். எரிக்கரையை வந்தடையும் வரை அதன் சீறல் ஒலி எங்களை பின்தொடர்வது போலொரு பிரமை. இதய துடிப்பு சீரடைவதற்கு நெடுநேரம் ஆனது. எனது குடியிருப்புக்குள் நுழைந்து குளிர்நீர் அருந்திய பிறகு தான் சற்று அமைதியானோம். பிராணிகள் வாரியம்  அவசர எண்ணை தேடி எடுத்து அதில் புகாரை பதிவு செய்தார். நிமிடத்திற்கு ஒரு முறை “ஷிட்” என்று அரற்றிக்கொண்டே தலையை இல்லை இல்லையென்று  அசைத்தபடி இருந்தார். “அது என்ன என்று தெரியுமா?” என்று தனது கைபேசியில் ஒரு படத்தை காட்டினார். மலேயா ராஜநாகம். “இன்று என்னால் உறங்க முடியாது போலிருக்கிறது”. அமண்டா அவரை மெதுவாக அழைத்துக்கொண்டு சென்றார். எனக்கு புரியாத மொழியில் அவர்கள் ஏதோ பேசியபடி மாடிக்கு சென்றார்கள். அவர் கண்ட காட்சியை பரவசத்துடன் விவரித்து கொண்டிருக்க வேண்டும். இரவு கண் மூடினால் அந்த நாகம் கண் முன் தோன்றியது. ஆனால் ஏனோ அது என்னை அச்சுறுத்தவில்லை. அதன் இமையா விழியின் கீழ் நெடுநாட்களுக்கு பின் நிம்மதியாக உறங்கினேன். ‘விடமேறிய கனவு’ எனும் சொற்றொடர் மனதில் உதித்தது. குணா  கவியழகனின் நாவலின் பெயர். படைப்பாளிகள் காண்பவை எல்லாம் விடமேறிய கனவுதான். விடத்தின் இனிமையை தான் அவன் பகிர்ந்தளிக்கிறான். 


Image generated by Chat Gpt 


காலை ஃபூனான் தோட்டம் மூடப்பட்டது. சீருடை அணிந்த இருவரை பார்த்தேன். இன்னும் சிலர் கவச உடைகள் அணிந்து நீண்ட கழிகளுடன் உள்ளே நடமாடிக்கொண்டிருந்தார்கள்.   காலை தளர்வான காற்சட்டையும் கைவைக்காத பனியனுடன் வாசலில் வந்து நின்றார் வூ. மிகவும் சோர்வாக காணப்பட்டார். “பாம்பை பிடிக்கும் வரை யாருக்கும் அங்கே அனுமதியில்லை” என்றார். அவரை பார்த்ததும் நாலைந்து பேர் என்ன நடந்தது என்று விசாரித்து அவரை சூழ்ந்து கொண்டார்கள்.  அவர் ஆர்வத்துடன் எல்லோரிடமும் பார்த்ததை விவரித்து கொண்டு இருந்தார். நான் வகுப்புக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது என்பதால் உள்ளே சென்றுவிட்டேன். வகுப்புக்கு கிளம்பும்போது ஏரிக்கரையில் மீன்கள் அசையும் நீரை நோக்கியபடி தனித்து அமர்ந்திருந்தவரிடம் சென்றேன். “இனி இதை நீங்கள் வனம் என குறிப்பிடுவதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.” சன்னமான குரலில்   “ஆனால் இனி நான் அப்படி சொல்லமாட்டேன்” என்றார் நீரை வெறித்தபடி .


No comments:

Post a Comment